ஒன்றுக்கொன்று நேர் விகித்தில் தொடர்புடைய பல புள்ளிகள் இணைந்து தொடராக அமைந்திருக்குமாயின், அதனை நேர் கோடு எனலாம். அது போல, ஒரு இயங்கு அமைப்பில், பல உறுப்புகள் தொடர்ச்சியாக அமைக்கப் பட்டுச் செயல் படுமாயின், அதனை நேர் கோட்டு இயங்கமைப்பு (straight line mechanism) எனலாம். எந்திரங்கள் நேர் கோட்டு இயங்கமைப்பு முறையின் அடிப்படையிலேயே செயல் படுகின்றன. எ–டு: நாள் தண்டு பிணைப்பு (four bar linkage) என்னும் அமைப்பின் செயல் முறை. இதனை முதன் முதலாக, ஜேம்ஸ் வாட் என்னும் அறிவியலார் 1784ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தினார். பிறகு, இதனைச் செங்குத்து உருளைப் பொறியுடன் (vertical cylinder engine) பொருத்தி இயங்க வைத்தார். நேர் கோட்டு இயங்கமைப்பு கண்டு பிடிப்பதற்கு முன்னர், உந்து தண்டின் கீழ் முனை, உருளையினுள் உள்ள உந்து மூலமாக வழிப் படுத்தப் பட்டது. அது போல, உந்து தண்டின் மேல் முனை (upper end) அமைப்பில் உள்ள சங்கிலித் தொடருடன் இணைக்கப் பட்டிருக்கும். படம் 1 (அ) இல் வாட்டின் நேர் கோட்டு இயங்கமைப்பு காட்டப் பட்டுள்ளது. இதில் உந்தினை இயக்குவதில் நேர் மறைச் செயல்பாடு பெறப் படுகிறது. மேலும், இவ்வமைப்பு இரட்டைச் செயல் வகை உருளைப் பொறியில் (double acting cylinder engine) பயன் படுத்தப் படுகிறது. இதில் உருளையின் முன்னும், பின்னும் நகருதல் நடை பெறுகிறது. அது போல, இரட்டைச் செயல் வகையில் ஓர் உருளையினுள் முன்னோக்கி நகரும் போது, பிறிதோர் உருளையினுள் பின்னோக்கி நகரும். இந்த இரண்டு நகர்வின் போதும், பொறியினால் பணி நடை பெறும். ஆனால், ஒற்றை வகை உருளையினுள் அவ்வாறு இருப்பதில்லை. இவ்வாறே, நேர் கோட்டு இயங்கமைப்பின் தத்துவம், நீராவிப் பொறிகளில் மிகவும் இன்றியமையாமை பெறுகிறது. அண்மைக் காலத்தில் நீள் வட்ட (elliptic) நேர் கோட்டு இயங்கமைப்பு, வாட்டின் நேர் கோட்டு இயங்கமைப்பிலிருந்து சற்று வேறுபாட்டுடன் அமைக்கப் பட்டுள்ளது. இதில், உந்து தண்டின் முனை பற்சக்கத் தொடரின் நடு வட்டத்தின், இயக்க அல்லது ஆதார மையத்தில் (pivot) அமைக்கப் பட்டிருக்கும். இந்தச் சிறிய பற்சக்கரத் தொடர் பெரிய பற்சக்கரத் தொடரின் மேல் நகரும் வகையில் அமைந்திருக்கும். இதன் அமைப்பைப் படம் 2-இல் காணலாம். மேற்கூறிய இவ்வமைப்பு தொடக்கத்தில், சில நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தியது. இதற்குப் பல முக்கிய காரணங்கள் இருந்தன. அவற்றுள், பற்சக்கரத்தின் குறைபாடுகளும் ஒன்றாகும். மேலும், தொடரில் உள்ள புள்ளி ‘p’ யின் செயல்பாடு ஓர்இயல்பான (real) நேர் கோட்டு அமைப்பின் செயல்பாட்டைக் கொண்டதாக இருக்கவில்லை. மற்றொரு வகை, வெட்டுக் கிளி நேர் கோட்டு இயங்கமைப்பு முறையாகும். இதனைப் பொதுவாக வெட்டுக் கிளி இணைப்புத் தொடர் (grasshopper linkage)என்றும் கூறுவர். இதில் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. இவை படம் 3 (அ), 3 (ஆ) ஆகியவற்றில் காட்டப் பட்டுள்ளன. படம்3 (அ)இல் உள்ள அமைப்பு தொடக்கக் காலத்தில் கண்டு பிடிக்கப் பட்டது. இவ்வமைப்பு குறிப்பாக, ஆலிவர் இவான் என்னும் அறிவியலார் கண்டு பிடித்த பொறியில் பயன் படுத்தப் பட்டது. மேலும், இவ்வமைப்பு ஜார்ஜ் ஸ்டீபன்சன் கண்டு பிடித்த நேர் கோட்டு இயங்கமைப்பிலிருந்து சற்று மாறுபட்டு அமைந்துள்ளது. ஜார்ஜ் ஸ்டீபன்சன் நேர் கோட்டு இயங்கமைப்பு, அமெரிக்காவில் முதல் முதலாகக் கண்டு பிடிக்கப் பட்ட தொடர் வண்டிப் பொறியில் (locomotive engine) பயன் படுத்தப் பட்டது. பிறகு, சில நிலையில் பொறிகளிலும் மேற்சொன்ன அடிப்படைத் தத்துவம் பயன் படுத்தப் பட்டது. இதனால், இவ்வமைப்புகள் வெட்டுக் கிளி நேர் கோட்டு இயங்கமைப்புகள் என்று குறிக்கப் பட்டன. இவை படம் 3 (அ), (ஆ) ஆகியவற்றில் காட்டப் பட்டுள்ளன. அதாவது, இவ்வமைப்புகள் வெட்டுக் கிளியின் வடிவத்தில், அதன் செயலமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. படம் (3) (ஆ) இல் ஒழுங்கு படுத்தப் பட்ட அல்லது சீரமைக்கப் பட்ட வெட்டுக் கிளி நேர் கோட்டு இயங்கமைப்பின் செயல் வடிவம் காட்டப் பட்டுள்ளது. நேர்கோட்டு இயங்கமைப்பின் பரிமாணங்கள், ஜார்ஜ் தொழில் நுட்பக் கல்லூரி என்னும் நிறுவனத்தில் வரையறுக்கப் பட்டன. பிறகு 1817ஆம் ஆண்டு ரிச்சர்டு ராபர்ட் என்னும் அறிவியலார் முதன் முதலில் உலோகத் தளமாக்கி (metal plane) என்னும் கருவியை வடிவமைத்தார். அது நேர் கோட்டு இயங்கமைப்புப் பற்றிய ஆய்வின் தொகுப்பிற்கும் அடிப்படையாக அமைந்தது. இவ்வமைப்பு இயல்பு நேர் கோட்டு இயங்கமைப்பு ஒரு வெட்டுக் கிளி நேர் கோட்டு இயங்கமைப்பின் செயல்பாடுகளை முற்றிலும் ஒத்திருக்கும். திருப்பு இணைகளை 1864ஆம் ஆண்டு வி.என்.பிச்செல்வியர் என்னும் அறிஞர் கண்டு பிடித்தார். எனினும், இதன் செயல் விளைவு குறைந்த பயனையே அளித்தது. இதற்கு அதன் சிக்கலான செயல் முறை அமைப்பே காரணமாகும். அறுதியிடப்பட்ட செயலமைவு. மற்றொரு பயன் மிகுந்த நேர் கோட்டு இயங்கமைப்பு பாட்டட்ஜ் செபிசேன் என்பாரால் கண்டு பிடிக்கப் பட்டதாகும். மேற்கூறியவற்றைத் தவிர, நவீன காலத்திற்கேற்ப கே. ஹொகென் என்னும் அறிவியலார் கண்டு பிடித்த அமைப்பு நேர் கோட்டு வெட்டுக் கூறு (straight line segment) தளத்திற்கு இணையாக அமைக்கப் பட்டுள்ளது சிறப்பாகும். அது போல், ஹர்ட்ஹெயின் என்பார் கண்டு பிடித்த நேர் கோட்டு இயங்கமைப்பும் குறிப்பிடத் தக்கது. தற்காலத்தில் வடிவமைக்கப் படும் அனைத்து வகை நேர் கோட்டு இயங்கமைப்புகளும் கணிப்பான்களைக் (computers) கொண்டு செயல் படுகின்றன. இவ்வாறு, கணிப்பான்களைப் பயன் படுத்துவதற்கு, அவற்றின் நுட்பமான செயல் முறைகளும், செயல் முடிவுகளுமே காரணமாகும். அவை முடிவுகளைத் துல்லியமாகவும், விரைவாகவும் தருகின்றன. இதற்கு ஜார்ஜ் கல்லூரியின் செயல் முறைகள் முன் மாதிரிகளாக அமைந்தன. ஏனெனில், இந்நிறுவனமே முதன் முதலாக வயங்கமைப்புகளுக்குப் பரிமாணங்களைத் தரக் கணிப்பான்களைப் பயன் படுத்தியது. இதனால் நேர் கோட்டு இயங்கமைப்புகள் மிகவும் சீர் படுத்தப் பட்டன. பிறகு, கண்டு பிடிக்கப் பட்ட அமைப்புகளில் ஹர்ட் ஹெயின் கண்டு பிடித்தவை மேம்பட்ட வையாகும். இவை கணிப்பான்கள் மூலம் ஆய்வு செய்வதற்கு மிகவும் ஏற்றவையாக இருந்தன. —கே. ஆர். கோவிந்தன்