பொதுவாக மக்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதனை உற்று நோக்கினால், ஒவ்வொரு ஆடவரும் பெண்டிரும் தத்தமக்கு வேண்டிய நன்மைகளைத் தங்கள் விருப்பப்படி பெறவே வாழ்கிறார்கள் என்பதனைக் காணலாம். இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் தாம் விரும்பியபடியே அவர்களுடைய விருப்பங்களை நிறைவு செய்து கொள்வதற்கு முடிவதில்லை என்பது உண்மையாகும். எல்லோரும் தன்மை பெறவேண்டுமாயின் பொது நலனை (Common Good) மையமாகக் கொண்ட நேர்மையான ஒரு சமுதாய அமைப்பை எல்லோரும் விரும்பி ஏற்படுத்திக் கொண்டு, நல்வாழ்வு (Good Life) வாழவேண்டும். இதுவே அரசியல் வாழ்வு (Political Life) என்று சிறப்பாகக் கூறப்படுவதாகும். அவ்வகையான சமுதாய அமைப்பைக் கொண்ட அரசியல் வாழ்வு மக்களிடத்தில் அமையப் பெற்றதால் அவ்வகையான சமுதாய அமைப்பைக் கொண்ட அரசியல் வாழ்வு மக்களிடத்தில் அமையப் பெற்றால் தான் அனைவரும் நல்வாழ்வு பெறமுடியும். அப்போதுதான் அவர்கள் மக்கள் (People) என்று பொதுவாகவும், குடிமக்கள் (Citizens) என்று சிறப்பாகவும் சொல்லப்படுவதற்குத் தகுதி பெறுவர். இல்லையேல், அவர்களை ஓர் கூட்டம் என்றுதான் கூறமுடியும். எனவே அரசியல் வாழ்வு என்பது, குடிமக்களின் ஒருங்கிணைந்த உறுதியான வாழ்வு மட்டுமன்று; உயர்தரமான வாழ்வும் ஆகும். அவ்வுயரிய வாழ்வை நாடுபவர்களே உயர்ந்த, நாகரிகமான மக்கள் எனப்படுவர். இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமென்றால், மனிதனை மனிதனாக்குவது மக்கள் சமுதாய அமைப்பே. மக்கள் சமுதாயம் என்பது, சில ஒழுங்கு முறைகளை அமைத்துக்கொண்டு, அவற்றை முறைப்படி பின்பற்றி ஒன்றுபட்டு வாழ்வதாகும். அவ்வாறு அனைவருக்கும் பயன்தரும் ஒழுங்கு முறைகளைக் கட்டிக்காப்பது அரசின் கடமையுமாகும். இவ்வாறான அமைப்புகளைக் கொண்ட மக்கள் அரசியல் வாழ்வு வாழ்பவர்கள் என்றும், அவர்கள் வாழும் இடம் பொருள் முதலியனவற்றின் தொகுப்பே ‘நாடு’ (State) என்றும் சொல்லப்படும். அரசியல் தோற்றம், ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றது. எவ்வாறெனின், மக்களின் கூட்டு வாழ்க்கை அமையப்பெறாமல் அரசியல் வாழ்வு தோன்றுவது இயலாது. அதைப் போலவே பொதுவான நேர்மையான அரசியல் ஒழுங்கு முறைகள் இல்லையேல் சமூக வாழ்க்கை பயனற்றதாகிவிடும். இக்கருத்தினைச் சிறிது விளக்கமாகவே விரித்துக்கூறலாம். மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுவதற்கு அவனுடைய சிந்திக்கும் திறமையே காரணமாகும். இருந்தபோதிலும் பெரும்பாலான ஆடவரும் பெண்டிரும் தங்களுடைய சிந்தனையைச் செம்மையாக வளர்க்காமலும் தம்மைப் பயன்படுத்தாமலும் வாழ்நாள்களை வீணாக்கிவிடுகிறார்கள். அதன் காரணமாகப் பெறுதற்கரிய வாழ்க்கைப் பயன்களை அவர்கள் இழக்கிறார்கள். மக்கள் தம் சிந்தனையைச் செம்மையாக வளர்த்து, வாழ்க்கைப் பாதையிலே ஏற்படும் நன்மை தீமைகளை ஆராய்ந்து, தீமைகளைக் களைந்து, நன்மையையே நாடுதல் வேண்டும். அந்நிலையில்தான் அவர்களும் நல்வாழ்வினைப் பெற்று, மற்றவர்களுக்கும் நல்வழிகாட்டிட இயலும், அவ்வாறான உயர்ந்த கருத்தினை அறிஞர்கள் காலங் காலமாகக் கூறிச் சென்றுள்ளனர். அரிசுடாட்டிலும் திருவள்ளுவரும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாவர். பொது நோக்கினையையும் (Altruism) பொது நலனையும் (Common Good) மையமாகக்கொண்ட முயற்சிகளினால் தான், சிறந்த அரசியல் வாழ்வை மட்டுமன்றி, பல பொது நன்மைகளாகிய இயல், இசை, பிற கலைகள் ஆகியவற்றையும் மக்கள் அடையமுடியும். இத்தகைய உயர்ந்த கோட்பாடுகளை மக்கள் தங்கள் வாழ்வில் பெற்று இன்புறுவதில் இன்னல்களும் ஏற்படுவதற்குரிய வாய்ப்பிருக்கிறது. அவ்வின்னல்களை நீக்குவதற்குரிய வழிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியதும் இன்றியமையாதது. ஆங்கில அரசியல் அறிஞர் எர்னசுட்டு பார்க்கர் (Ernest Barker), அரசியல் வாழ்வில் ஏற்படும் சில இன்றியமையாத சிக்கல்களைத் தெளிவுபடுத்துகிறார். அவர் ஒரு தனிப்பட்ட ஆணோ பெண்ணோ தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுவதும் வெளியிட்டு அவற்றிற்கு முழு மன நிறைவினைப் பெறச் சமுதாயத்திலே வாய்ப்பு உண்டா? அத்தகைய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் சமுதாயச் சட்ட திட்டங்களின் வரையறை என்ன? தனிப்பட்டவரின் உரிமைக்கும் மக்களின் பொது உரிமைக்கும் ஏதாவது இடையூறு உண்டா? அவ்வாறு ஏற்படுவதாயிருந்தால் அனைவரின் சொந்த உரிமைகள் பாதிக்கப்படுமா? அவ்வாறில்லையேல், அரசுரிமைக்கும் மக்கள் உரிமைக்கும் வரையறுக்கப்படும் ஒழுங்கு முறைகள் யாவை? என்பன போன்ற பொருள் பொதிந்த வினாக்களை எழுப்பி, அவற்றிற்கு விடைகளைத் தேடுவதன் வாயிலாக அரசியல் வாழ்வு, அரசின் அதிகார வரம்பு, நாட்டின் உரிமை, மக்களின் கடமை, தனி மனிதனின் உரிமை போன்ற தலையாய அரசியல் சிக்கல்களை முறைப்படுத்தி வகுத்து விளக்கித் தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல் வாழ்வின் தோற்றத்தைப் பற்றி ஆராயும் பொழுது குறிப்பாகக் கவனிக்க வேண்டியன அரசியலின் கோட்பாடுகளும் அவற்றின் வரையறைகளுமேயாகும். இவற்றையே ஒரு நாட்டின் உரிமைச் சிக்கலாகவும் எடுத்துக் கொள்ளலாம். அரசு அல்லது அரசாங்கத்தின் மூலமாகத்தான், ஒரு நாட்டின் உரிமைகளும் சட்ட திட்டங்களும் வெளியிடப்படுகின்றன; நிறைவேற்றப்படுகின்றன. இதனையே அரசியல் அமைப்பு என்றும் கூறலாம். இவ்விளக்கங்களிலிருந்து, அரசியல் வாழ்வும் அரசியல் அமைப்பும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன என்பதும் நன்கு விளங்கும். எனவே அரசியல் வாழ்வையும் அரசியல் அமைப்பையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகக் கருதலாம். வரலாற்று அடிப்படையில் நோக்கினால், அரசாங்கம் அல்லது ஆட்சி முறை பல்வேறு முறைகளிலே நெடுங்காலமாகவே மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. எடுத்துக்காட்டாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று விளங்கிய கிரேக்க நாட்டிலும் தமிழ் நாட்டிலும் முடியாட்சி–மன்னர் ஆட்சி - (Monarchy) தான் பெரும்பாலும் வழக்கில் இருந்தது. பன்னெடுங்காலம் வாழ்ந்த பின்பு மக்களிடத்திலும் மன்னர்களிடத்திலும் இயற்கையாக ஏற்பட்ட மாறுதல்களுக்கேற்ப, முடிஆட்சி சிதைந்து உயர்குடி அல்லது பெருஞ்செல்வர் ஆட்சியும் அதன் பின்பு வல்லாட்சியும், அரசியல் கொந்தளிப்பும் குமுறல்களும் அடக்கு முறைகளும் ஏற்பட்ட பின்பு இறுதியாக, மக்கள்–ஆட்சி அமைந்தது. வரலாற்று உண்மைகளை உற்றுநோக்கும் பொழுது, மக்களாட்சி எவ்வாறு அமைந்தது? மக்களுக்கு எவ்வாறு பயன்பட்டது? எவ்வாறு பழுதுபட்டது? என்பன போன்ற உண்மைகளும் நன்கு தெரிய வருகின்றன. அவ்வுண்மைகள் ஓர் உயரிய படிப்பினையாகவும் உள்ளன. அப்படிப்பினையால் எவ்விதம், இன்றைய உலகத்தின் பல பாகங்களில் இயங்கிவரும் மக்கள் ஆட்சியை நன்னெறியில் நடத்தி நலங்கள் பல பெறமுடியுமென்று அறிந்து கொள்ளலாம். மேலும், மேலே குறிப்பிட்ட அரசியவ் வாழ்வின் தோற்றம், ஆட்சிமுறை ஆகிய இரண்டும் இணை பிரியாதவை என்பதும் நன்கு புலனாகிறது. அப்பிரிவுகளும் மக்கள் தம்முடைய நலன் கருதி அமைத்துக் கொண்டவையாகும். ஏனெனில், அவ்விரு பிரிவுகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போதுதான் முழு உண்மை தெளிவாகப் புலப்படுகிறது. அந்த உண்மைதான் நாடு என்று குறிப்பிடப்படுகிறது. அதன் காரணமாகத்தான் அரிசுடாட்டில் ‘மக்களின் அடிப்படைத் தேவைகளை அமைத்துக் கொடுப்பதற்கே நாடு தோன்றுகிறது’ என்று கூறினார். இந்த அடிப்படை உண்மையையே தெளிவாகக் கூறுகிறார் திருவள்ளுவர். “குன்றாத விளையுளைச் செய்வோரும், அறவோரும், கேடில்லாத செல்வமுடையோரும் ஒருங்கு வாழ்வதே நாடாகும்” (குறள் 731) என்கிறார். புகழ்மிக்க அரசியல் அறிஞர்களான அரிசுடாட்டில், திருவள்ளுவர் போன்றவர்கள் கூறியுள்ள அடிப்படைக் கருத்துகள், இக்காலத்திலும் அரசியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறிய அரசியல் கருத்துகளைத் தத்துவ முறையிலே ஆராயும்பொழுதுதான் அரசியல் தத்துவம் பெறப்படுகின்றதென்றும் சுருக்கமாகக் கூறலாம். எனினும், தத்துவம் என்பது என்னவென்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்; அப்போதுநான் தத்துவ முறையில் அரசியல் விளக்கம் அமைவதும் அதன் சிறப்பும் எளிதில் விளங்கும். மெய்ப்பொருளியல் (Philosophy) என்பதும் தத்துவம் என்பதும் ஒருபொருட் சொற்களே, அவற்றில் முதலில் குறிப்பிட்ட மெய்ப்பொருளியல் என்பது, மிகவும் தெளிவாக அதன்பொருளை விளக்கி நிற்பதாகும். மெய்ப்பொருள் என்பது, என்றும் நிலைத்து நிற்பதும் அழியாத்தன்மை பெற்றதுமாகிய தன்னிகரில்லாத் தனிப்பெரும் பொருளாகும். இதனையே தொல்காப்பியர் கடவுள் என்றும் கந்தழி என்றும் கூறுகிறார். அந்தக் கருத்தினையே மேலும் விளக்கமாக விரித்துக் கூறுகிறார் திருவள்ளுவர். ‘மொழிகளின் எழுத்துகளெல்லாம் எவ்வாறு அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றனவோ அவ்வாறே உலகமும் இறைவனை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது’ (குறள் 1). கிரேக்கப் பேரறிஞர் அரிசுடாட்டில் இறைவனையே உலக இயக்கத்தின் முதல் இயக்குநர் (Prime Mover) என்று குறிப்பிட்டுள்ளார். பலகோடி உயிரினங்களும் அவற்றிலே முதன்மை பெறும் மனித இனமும் அவர்களின் இடம், பொருள், காலம் முதலியவற்றின் தொகுப்பாக விளங்கும் உலகமும் இதனைச் சார்ந்தமற்ற அண்டங்களும் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டதாயும், அவை யாவும் முறையோடு செயற்பட இயக்குவதாயும் ஒரு பெரும்பொருள் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது விளங்கும். அவ்வொப்பற்ற உயரிய பழம்பொருளை வாழ்த்தி, வணங்கிப் போற்றுவதே மனித வாழ்வின் தலையாய பணியாகவும் பேறாகவும் கருதப்படுகிறது. அப்பெரும்பொருளால் அளிக்கப்படுவதே பெரு வாழ்வாகும். அதனை மக்களினம் பெற்று வாழ்வதற்கு அரசியல் வாழ்வும் உதவியாக அமைய வேண்டும். இக்கருத்தினை வலியுறுத்தி, அரசியல் வாழ்வு அறவாழ்வின் அடிப்படையில்தான் அமையவேண்டும் என்று அறிவுறுத்தினார் அரிசுடாட்டில். அந்த உயரிய அடிப்படையின் கீழ் அமையும் அரசியல் வாழ்வின் தொகுப்பினையே ‘அரசியல் தத்துவம்’ (Political Philosophy) என்று கூறுகின்றனர். ஒரு கவிஞன், மலரின் அழகை வருணிக்கும்போது எவ்வாறு அதனை முழுமையாக எடுத்துக் கொள்கிறானோ அவ்வாறே தத்துவப் பேராசிரியரும் அரசியலை மக்கள் சமுதாயம், அரசு, நாடு என்று பாகுபாடின்றி அனைத்தையும் முழுமையாக எடுத்துக் கொண்டு, தம்முடைய சிந்தையில் அதனுடைய நன்மை தீமைகளை எடைபோடுகிறார். அதன் விளைவாக, அரசு எவ்விதம் இயங்குகிறது என்பதை விட அரசு ஏன் இயங்குகிறது என்ற முதல் வினாவை எழுப்புகிறார். மக்களின் தன்மைக்காகவும் அவர்களின் நல்வாழ்வுக்காகவும்தான் அரசு அமைகிறது, அமைய வேண்டும் என்ற பேருண்மை சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்விளக்கங்களின் மூலமாக மக்கள் நன்மை பெறுவதும் நலமடைவதுந்தான் அரசின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதும் அரசியல் தத்துவத்தின் அடிப்படைக் கூறாகும். அவ்வாறில்லையேல், மக்கள், மாக்களாக – ஆகிவிடுவார்கள்; நாடு, காடாகிவிடும். இவ்வுண்மையைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார் அரிசுடாட்டில். ‘நாடு நிலைபெற்று வாழவேண்டுமென்றால், மக்கள் வாழ்வை நல்ல முறையிலே அடைவதற்கு அமைப்புகள் ஏற்படவேண்டும்’. ‘மக்களின் அடிப்படைத் தேவைகளை நல்ல முறையில் அமைத்துக் கொடுப்பதற்கே நாடு தோன்றுகிறது’. பொதுவாகக் கூறினால், மக்களின் அடிப்படைத் தேவைகள், உண்பதும் உடுப்பதுமாகியவைகளாகும். இவற்றினை மட்டும் மக்கள் பெற்றுவிடுவதால், அவர்கள் பெருவாழ்வு பெற்றவர்கள் என்று சொல்லவே முடியாது. ஏனெனில், அடிப்படைத் தேவைகளையும் அமைத்துக் கொண்டு, அதற்கு மேலும் சிந்தனையால் சிறப்புற்று வாழ்வதற்குரிய வழிமுறைகளை அமைத்துக் கொடுத்தால்தான் நாடு நிலைத்து வாழமுடியும் என்பது அரிசுடாட்டிலின் சிறந்த கருத்தாகும். மக்களின் அன்றாடத் தேவைகளின் இன்றியமையாமையினை எவரும் புறக்கணிக்கவியலாது; கூடாது. ஆனால், உடம்பின் தேவைகளை மட்டும் பேணிப் பாதுகாப்பதுடன் மனித வாழ்வின் எல்லையை எட்டிப் பிடித்துவிட முடியாது. ஏனெனில், மனிதன் உடம்பை மட்டும் பெறவில்லை; உள்ளத்தையும் சிந்தனையையும் பெற்றிருக்கிறான். அச்சிந்தனையைச் செம்மையாக வளர்ப்பதில்தான் மனிதன் மனிதனாகிறான். அப்பொழுதுதான் நன்மை, தீமை, நலிவு, பொலிவு, அழகு, அழகின்மை, நீதி, அநீதி, உண்மை, பொய் என்பன போன்ற மனித வாழ்க்கையின் இரு வரையறைகளையும் உணரமுடியும். இவை யாவும் உணர்ந்து உய்யும்பொழுதுதான் மனிதன் மனிதனாகிறான். அதற்காகத்தான் மக்களுடன் சேர்ந்து நாட்டில் வாழ்கிறான். எனவே, நல்ல பல அமைப்புகளை ஏற்படுத்துவதும் அவற்றிற்கு இடையூறாகத் தோன்றும் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் வீழ்த்துவதும் அழிப்பதும் நாட்டின், அரசின் தலையாய கடமையும் பணியுமாகும் என்ற உண்மையை அரசியல் தத்துவம் அறிவுறுத்துகிறது. அறிவுப் பாதையிலேயே அரசு நடத்தப்படுவதே நாட்டின் முன்னேற்றத்திற்கும் மக்களின் நல்வாழ்விற்கும் என்றும் துணை புரிவதாக அமையும். அவ்விதமான உயரிய சூழ்நிலைகள் நல்ல முறையிலே அமைந்தால், அது அந்நாட்டு மக்களின் பெருவாழ்வு மட்டுமன்று. அந்நாட்டின், பேரழகுமாகும் என்பதனைத் திருவள்ளுவர், ‘நோயின்மை, செல்வம், பொருள் வளம், இன்ப வாழ்வு, நல்ல காவல் ஆகிய இவ்வைந்தும் நாட்டிற்கு அழகு செய்வன’ என்று தம் திருக்குறளில் விளக்கியுள்ளார். (குறள் 738).மு.மு.