அஞ்சல் வழித் தொடர் கல்வி
añcal vaḻit toṭar kalvi
அஞ்சல் மூலம் அளிக்கப்படும் கல்வி அஞ்சல் வழிக் கல்வி எனப்படும்.
அஞ்சல் மூலம் அளிக்கப்படும் கல்வி அஞ்சல் வழிக் கல்வி எனப்படும். இக்கல்வி தனி மனித முயற்சியின்பாற் பட்டதாகும். தனியொருவரின் தேவையை அடிப்படையாகக் கொண்டு, எவ்வித வெளிக்கட்டுப்பாடும் இன்றி, தன் விருப்பத்தின் பேரில், தன் நிலை, வயது, சூழ்நிலை, வேலை நிலை, வாழுமிடம் முதலியவற்றுக்குக் கட்டுப்படாது, தனது கல்வி முன்னேற்றத்திற்காக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவும் கல்வியே அஞ்சல்வழிக் கல்வியாம் (Correspondence Education).
கல்வி என்பது குறிப்பிட்ட சில ஆண்டுகட்கு, குறிப்பிட்ட வயதினர்க்கு, அதற்கென்றே அமைந்த நிறுவனங்களின் கற்பித்தல் என்ற பழங்கொள்கையை மாற்றி, திறமைகளையும் அடங்கிக் கிடக்கும் ஆற்றல்களையும் வாழ்நாள் முழுவதும் வெளிக் கொணர்ந்து மலர வைப்பது என்ற கருத்து, இன்று வளர்ச்சியடைந்துள்ளது.
வாழ்நாள் முழுதும் கற்றல், பள்ளியில் கற்றல், பள்ளிக்கு வெளியே கற்றல், முறையாகக் கற்றல், முறைசாராமல் கற்றல், தொடர்ந்து கற்றல், பொது நிலையில் கற்றல், தொழில் நுணுக்கம் கற்றல், தொடர்ந்து மீளக் கற்றல் (Continuous and Recurrent Education) ஆகிய பல வழி முறைகளிலும் ஒருவர் தம்முடைய அறிவையும், திறமையையும் வளர்க்க வழிவகுப்பது கல்வியாம்.
வள்ளுவர் கூறியது போல், ‘சாந்துணையும் கற்றல்’ என்பதே இன்றைய கல்விக் கருத்தாகும். இந்தக் கண்ணோட்டத்தின் பொருள், கற்போர் தேவையானவற்றைத் தமது வசதிப்படி, தம் வேகத்தில் கற்கலாம் என்பதாகும். கற்கும் முறையும் அவரவர்க்கு ஏற்றபடி அமைய முடியும் என்பதே இன்றைய கல்வியின் அணுகு முறையாகும்.
பல இடர்ப்பாடுகளால் கற்றலை இடையில் நிறுத்தி, மீண்டும் கல்வியைத் தொடர விரும்புகின்றவர்களும், கல்விக்கூடங்கள் இல்லாத சிற்றூர்களில் வாழ்பவர்களும், ஆர்வமின்மையால் கற்பதை விடுத்துப் பின்னர் ஆர்வம் கொண்டு மீண்டும் கல்வி கற்க விழையவர்களும், மேற்படிப்பைத் தொடர விருப்பம் இருந்தும், அடிப்படைத் தகுதிகள் இருந்தும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயில இடமும் வாய்ப்பும் கிடைக்காதவர்களும், கல்வி, வாழ்வு முழுவதற்கும் உரியது என்ற கொள்கைக்காகத் தொடர்ந்து கற்க விரும்புபவர்களும், அறிவை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளவிரும்புபவர்களும், கல்வி கற்பதால் அதிகப்படியான வருவாய், ஊக்குவிப்புத் தொகை முதலியவை பெற இயலும் என்ற நிலையில் உள்ளவர்களும், தமது தொழில் முன்னேற்றம் கருதித் தொடர்ந்து படிக்க நினைப்பவர்களும், தாம் பணியாற்றும் பொறுப்புகட்குத் தக்கவாறு தம்மை ஆயத்தப்படுத்திப் பட்டங்கள் பெற எண்ணுபவர்களும், ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்க விரும்புபவர்களும், ஆர்வம் காரணமாகத் தாம் விரும்பும் பாடத்தை மேன்மேலும் படிக்க எண்ணுபவர்களும் விரும்பக்கூடிய ஒருவகைக் கல்வி முறையே அஞ்சல்வழிக் கல்வி முறையாகும்.
பணியாற்றிக்கொண்டே கற்க விரும்புவோர், தாம் விரும்பும் துறைகளில் அறிவுவளர்ச்சி அடைய விரும்புவோர், பொருளாதார, சமூக, கல்வி முன்னேற்றங் காண விழைவோர், வேலையின்றி இருக்கும் காலங்களில் தமது தகுதியை வளர்த்துக் கொள்ள நினைப்போர், மற்றும் பணியாற்றாத பெண்டிர், விதவையர், உடல் ஊனமுற்றோர், வயதான, ஓய்வு பெற்ற பிரிவினர் அனைவர்க்கும் கல்வி பயில வழி செய்வது அஞ்சல்வழிக் கல்வியாகும்.
இந்திய மைய அரசில் கல்வி அமைச்சராக இருந்த கே.எல். சிரிமாலி (Shri Mali) மக்களின் பெருகிவரும் உயர் கல்வித் தேவைகளை உணர்ந்து, அஞ்சல்வழிக் கல்வித் திட்டத்தின் மூலம்தான் மக்களின் கல்வித் தேவைகளை நிறைவு செய்ய இயலும் எனத் தெரிந்து, கோத்தாரியின் தலைமையில் 1969-இல் அஞ்சல் வழிக் கல்வி பற்றி ஆய்ந்திட ஒரு குழு நியமித்தார். அக்குழு, நாட்டின் உயர் கல்வித் தேவைகளை நிறைவு செய்ய அஞ்சல் வழிக் கல்வி முறை இன்றியமையாதது எனத் தீர்மானித்தது. இதையொட்டி, தில்லிப் பல்கலைக்கழகம் 1962–ஆம் ஆண்டு அஞ்சல் வழிக்கல்வித் துறையைத் தொடங்கியது. இதன் பின், பஞ்சாபு, மைசூர், இமாசலப் பிரதேசம், பம்பாய், மதுரை, வேங்கடேசுவரா, ஆந்திரா, மூரத்து, குருச்சேத்திரா, அண்ணாமலை, சென்னைப் பல்கலைக்கழகங்கள் அஞ்சல்வழிக் கல்வித்துறையைத் தொடங்கி நடத்தி வருகின்றன.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வித் துறை, 1971–ஆம் ஆண்டு டாக்டர் மு. வரதராசனார் அவர்களால் 1054 மாணாக்கர்களுடன் தொடங்கி வைக்கப்பட்டது. 1972 முதல் புகுமுகவகுப்புத் தொடங்கப்பட்டதன் விளைவாக மாணாக்கர்களின் எண்ணிக்கை பன்மடங்கானது. பாடங்களைத் தமிழ் வழியிற் கற்க ஏற்பாடுகள் செய்த பின்னர், பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 70 விழுக்காடு மிகுதியானது. 1977 முதல் 1982 வரை தமிழ், வரலாறு, ஆங்கிலம், பொருளாதாரம் வணிகவியல், அரசியல், அறிவியல் ஆகிய பாடங்களில், முதுநிலை வகுப்புகள் தொடங்கப்பட்டு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகள் வாயிலாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.
புகுமுக வகுப்புகள் 1978–இல் கல்லூரிகளிலிருந்து நீக்கப்பட்டு, மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டன. அம்மேல்நிலைப் பள்ளிகளில் பணியேற்று. ஆசிரியப்பட்டம் பெறாத முதுநிலைப் பட்டதாரிகளின் தேவைகளை நிறைவு செய்ய, பி.எட்., எம்.எட். வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி “காந்தியக் கொள்கை”யை முதன்மைப் பாடமாகக் கொண்ட முதுநிலைப் பாடப்பிரிவு 1982–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் திறந்த வெளிப் பல்கலைக்கழகத் திட்டத்தின் மூலம் (Open University) பட்ட முன்படிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று நிலைகளில் இப்படிப்புத் திட்டம் அமைந்துள்ளது. அறிமுக நிலை ஆறு மாதங்கட்கும், தொடக்க நிலை ஓர் ஆண்டிற்கும், அடிப்படை நிலை ஈராண்டுகட்கும் எனப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
பத்தாண்டுப் பள்ளியிறுதி வகுப்பிற்குச் சமமாகத் தொடக்கநிலையும், பழைய 11 ஆண்டும் பள்ளியிறுதி வகுப்பிற்குச் சமமாக, அடிப்படை முதலாம் ஆண்டும், பழைய புகுமுக வகுப்பிற்கும், புதிய 12–ஆம் வகுப்பிற்கும் சமமாக அடிப்படை இரண்டாம் ஆண்டும் எனப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் இக்கல்வித் திட்டத்தில் சேரலாம். அறிமுகநிலையில் சேர்பவர்கள் குறைந்தது 14 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலப் பாடம் தவிர அனைத்துப் பாடங்களும் தமிழ் வழியிற் கற்பிக்கப்படுகின்றன.
மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணாக்கர்கட்கு வானொலி மூலம் பாடங்கள் ஒலிபரப்பப்படுகின்றன. திருச்சி, சென்னை, கோயமுத்தூர், திருநெல்வேலி வானொலி நிலையங்கள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. மாணாக்கர்கட்கு முதற்பாடத் தொகுதி அனுப்பும்பொழுது ஒலிபரப்புப் பட்டியலும் அனுப்பப்படுகிறது.
அஞ்சல்வழிக் கல்வியில் ஒப்படைகள் (Assignments), மீள்விடைத் தாள்கள் (Response Sheets) ஆகியவை சிறப்பான கூறுகளாகும். பாடங்களோடு அனுப்பப்படும் ஒப்படைகள், வினா விடைப்பகுதிகள், மீள்விடைத்தாள்கள் முதலியவற்றிற்கு மாணாக்கர்கள் விடை அனுப்ப வேண்டும். அவ்வாறு மாணாக்கர்களால் அனுப்பப்பட்ட விடைப் பகுதிகள் ஆசிரியர்களால் திருத்தப்பட்டுத் தேவையான விளக்கங்களோடு மாணாக்கர்கட்கு மீண்டும் அனுப்பப்படுகின்றன. இவ்வாறாக மாணாக்கர்கட்கு எழுத்துப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்த அளவு இத்தனை மீள் விடைத் தாள்கள் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களால் அனுப்பப்பட வேண்டும் என்ற விதி உண்டு.
ஆசிரிய, மாணாக்கர்களிடையே நல்லுறவு ஏற்படவும், பாடங்கள் தொடர்பாகத் தங்கள் ஐயங்களைக் களையவும், மாணாக்கர்கட்குப் பாடங்களைக் குறைந்த நேரத்தில் விளக்கமாக மனத்தில் பதியும் வண்ணம் எடுத்துக் கூறவும், தொடர்பு வகுப்புகள் (Contact Classes) பல மையங்களில் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாள்களில் நடத்தப்படுகின்றன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழிக் கல்வி இயக்ககம் பி.எட்., எம்.எட் போன்ற கல்வித்துறை வகுப்புகளையும், சமூகவியல், உளவியல், பொருளாதாரம், தமிழ், ஆங்கிலம், வணிகனியல், வரலாறு, இயற்பியல், வேதியல், கணிதம் என்பவற்றை முதன்மைப் பாடங்களாகக் கொண்ட முதுகலைப்பட்ட வகுப்புகளையும் நடத்துகிறது. மேலும், இளங்கலையில் அனைத்துப் பாடப்பிரிவுகளும், சட்டத்துறைச் சான்றிதழ் வகுப்புகளும், அடிப்படைநிலை வகுப்புகளும், அஞ்சல்வழிக் கல்வி மூலம் நடத்தப்படுகின்றன.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், தமிழ், வரலாறு, பொருளாதாரம் ஆகிய முதன்மைப் பாடங்களைக் கொண்ட இளங்கலை வகுப்புகளும் முதுகலை வகுப்புகளும் அஞ்சல்வழிப் பயிற்றுவிக்கப்படுகின்றன. பல்வேறு மையங்களில் தொடர்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி பற்றி ஓர் ஆய்வு அப்பல்கலைக்கழகக் கல்வித் துறையால் மேற்கொள்ளப்பட்டது.
அஞ்சல் வழியில் பயிலும் மாணாக்கர்களில் பெரும்பாலோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தோராவர். ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கினர் மாத வருமானம் ரூ. 500–க்கும் குறைந்தோராவர். அஞ்சல்வழிக் கல்வித்துறையில் படிக்கும் மாணாக்கர்களில், 20–30 வயதுப் பிரிவினரே மிகுதியாகப் பயில்கின்றனர் என்றும், அடுத்தபடியாக 30-40 வயதுப் பிரிவினர் என்றும், ஐந்து விழுக்காட்டினர் 40 வயதிற்கு மேற்பட்டவர் என்றும் அறியப்பட்டது.
இந்த ஆய்வில், அலுவலர், பணியாளர், படை வீரர், வங்கியில் பணிபுரிவோர், தொழில் துறையினர், கல்வி நிறுவனத்தினர், பொறியாளர், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர், சுயதொழில் செய்வோர், குடும்பப் பெண்டிர், வேலையற்றிருப்போர், சிறையில் வாடுவோர் எனச் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் இவ்வஞ்சல்வழிக் கல்வி மூலம் பயன் பெறுகின்றனர் என அறியப்பட்டது. பயன் பெறுவோருள் ஆசிரியர், வேலையின்றி இருப்போர் ஆகியோரின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது.
அஞ்சல்வழிக் கல்வி மூலம் படித்தல், மாணாக்கரின் வாழ்வில் ஏற்படுத்திய விளைவுகளைக் கணக்கிட்டுள்ளனர். சமுதாயத்தில் தம் நிலை உயர்ந்துள்ளது என ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினரும், கல்விப் பயன்கள் விளைந்துள்ளன என நான்கில் ஒரு பங்கினரும், தொழில் பயன்கள் விளைந்துள்ளன என ஆறில் ஒரு பங்கினரும், கற்றுள்ளோம் என்ற மன உணர்வு சிறக்கின்றது என ஒன்பதில் ஒரு பங்கினரும், பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளோம் எனப் பதினொன்றில் ஒரு பங்கினருமாக மாணாக்கர் தாம் பெற்ற பயன்களைத் தெரிவித்துள்ளனர்.
அஞ்சல்வழிக் கல்வி முறையை மேலும் வளப்படுத்த வேண்டுமானால், பாடக் குறிப்புகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனுப்புதல், பாடங்களை நிரலாக-வரிசையாக அனுப்புதல், தேர்வு நேரங்களில் மொத்தமாக அனுப்புவதைத் தவிர்த்தல் ஆகியன இன்றியமையாதனவாகும். மேலும், மிகுதியான மாணாக்கர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இருப்பதால், ஐயங்களை நீக்க வழியில்லை; தனிக் கவனம் செலுத்தவும் வழியில்லை. ஆகையால் தொடர்பு வகுப்புகளில், ஒவ்வொரு பிரிவிற்குமுரிய மாணாக்கரின் எண்ணிக்கையை வரையறுத்தல் வேண்டும். ஜெ.கோ.பி.
துணை நூல்கள்
Bhatia, S.C., “Continuing Education - Status and Direction”, Indian University Association for Continuing Education, Delhi, 1982.
Gupta, S.k., “Evaluation of Students performance in Correspondence Education”, 1980.
Pillai, J.K., “Pedagogy to Methetics”, “Sarvodaya Illakkiya Pannai” Madurai, 1982.
Pillai, J.K., Mohan, S., “Impact and Performance of Correspondence Education Programme of Madurai Kamaraj University”, Department of Education, Madurai Kamaraj University, 1983.
Ron Glutter Wedell, B.G., “Study by Correspondence”, Longman Group Ltd., London, 1971.
Sukdev Singh Chib, “Teaching by Correspondence in India”, Light and Life Publishers, New Delhi, 1977.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 197)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gsfy58cc/
தமிழ்“அஞ்சல் வழித் தொடர் கல்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gsfy58cc/APA
Oliyon Research. (2026). அஞ்சல் வழித் தொடர் கல்வி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gsfy58cc/MLA
"அஞ்சல் வழித் தொடர் கல்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gsfy58cc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment