இராமகிருட்டிண சங்கம்
irāmakiruṭṭiṇa caṅkam
பல படையெடுப்புகளை இந்திய நாடு சந்தித்திருந்த போதிலும் ஆங்கிலேய ஆதிக்கத்தினால்தான் இந்நாட்டின் சமயம், பண்பாடு, தத்துவம் முதலியன மிகுதியாக அழியத் தொடங்கின எனலாம்.
பல படையெடுப்புகளை இந்திய நாடு சந்தித்திருந்த போதிலும் ஆங்கிலேய ஆதிக்கத்தினால்தான் இந்நாட்டின் சமயம், பண்பாடு, தத்துவம் முதலியன மிகுதியாக அழியத் தொடங்கின எனலாம். அக்காலத்தில் தோன்றி ஆங்கில ஆட்சியின் மயக்கத்திலிருந்து மக்களை மீட்க முயன்றவர் இராமகிருட்டிணர். தொண்டு புரிவதில் புத்த சமயக் கொள்கையும் (போதிசத்துவக் கொள்கை) வேதாந்தத்தின் கொள்கையும் இவரிடம் ஒருங்கிணைந்திருந்தன. இவ்வேதாந்தியின் மாணவரே விவேகானந்தர் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட நரேந்திரநாத் தத்து ஆவர். இவர் மேலை நாடுகளில் ஆற்றிய உரைகள் இந்திய நாட்டின் சிறப்பையும் சமயங்களின் ஒற்றுமையையும் எடுத்தியம்புகின்றன. இவர் தாய்நாடு திரும்பியவுடன் தம் குருவின் பெயரில் நிறுவிய நிறுவனங்கள், தொண்டாற்றுவதே இறைவழிபாடு என்ற கருத்தை வலியுறுத்தி, நடைமுறை வேதாந்தத்திற்கு (Practical Vedanta) வழி வகுத்தன.
இராமகிருட்டிணர் கி.பி. 1886-இல் மறைந்தார். அவர் மறைவுக்குப் பின் சுவாமிவிவேகானந்தர் மற்ற மாணவர்களான துறவிகளின் துணையுடன் தம் குருவின் பெயரில் இரு பெரும் நிறுவனங்களை நிறுவினார். அவற்றுள் ஒன்று இராமகிருட்டிண மடம் (The Ramakrishna Math) ஆகும். இது வங்காளத்தில் ஔரா (Howrah) மாவட்டத்தில் பேலூர் என்னுமிடத்தில் கி.பி. 1899–இல் பின்வரும் குறிக்கோளை அடைய விவேகானந்தரால் அமைக்கப்பட்டது.
இராமகிருட்டிணர் தம் சிந்தனைகளாலும் வாழ்க்கையாலும் ஊக்குவிக்கப்பட்டு, அவற்றின் விளைவாக ஆசையறுத்த, தூய்மையான, ஆன்மிக வாழ்க்கை நடத்தும் துறவிகளைத் தோற்றுவிக்க வேண்டும். அவர்களை ஆசிரியர்களாகவும் வேறுபல தொழிலாளர்களாகவும் பயிற்றுவித்து, பலவழிகளில் உலகுக்குத் தொண்டாற்ற அனுப்ப வேண்டும்.
விவேகானந்தர் தோற்றுவித்த மற்றொரு நிறுவனம் இராமகிருட்டிண சங்கம் (The Ramakrishna Mission) எனப்படும். இது கி.பி. 1897–இல் மே மாதத்தில் தோன்றியதாகும். இவ்வமைப்பிற்குச் சட்ட முறையிலமைந்த தகுதி வழங்க, கி.பி. 1860–ஆம் ஆண்டின் சங்கங்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இருபத்தொன்றின் கீழ் (Societies Regulation Act XXI) இது 1909–இல் பதிவு செய்யப்பட்டது. இதை நிருவகிக்கும் பொறுப்பு பேலூர் மடத்தின் காவலர்களால் (Trustees) ஆன ஆட்சிக் குழுவிடம் விடப்பட்டது. இச்சங்கம் பின்வரும் குறிக்கோளையடைய அமைக்கப்பட்டதெனலாம்.
சாதி, சமய, தேசிய வேறுபாடுகாணாது மனிதர்கள் அனைவரும் இறைவனின் தோற்றங்களே என்னும் உண்மையைச் செவ்வனே உணர்ந்து கொண்ட துறவிகள், துறவறம் பூணாத தொழிலாளர்களுடன் (Lay Workers) சேர்ந்து கொண்டு, சமய, மனிதாபிமான அறச் செயல்களைத் தன்னலம் கருதாது செய்ய வேண்டும்.
இச்சங்கத்தை நன்கு புரிந்து கொள்ள இராமகிருட்டிண சங்கத்தின் குறிப்பேட்டிலிருந்து (Memorandum of Association of the Ramakrishna Mission) சில பகுதிகளைக் குறிப்பிடலாம். 1. இராமகிருட்டிணர் போதித்துத் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்த வேதாந்தத்தைப் படிப்பதை ஊக்குவிப்பதும், அதனைக் கற்பிப்பதும் மட்டுமல்லாமல் பல்வேறு சமயங்களை ஒப்பிட்டும் அறிய வேண்டும். 2. கலைகளையும் (Arts) அறிவியல் நூல்களையும் தொழில்களையும் கற்பிக்கவும் வளர்க்கவும் வேண்டும். 3. மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லாக் கல்வித் துறைகளிலும் ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் 4. பாமர மக்களுக்குக் கல்வி புகட்டும் வேலையை மேற்கொள்ள வேண்டும். 5. பள்ளிகள், கல்லூரிகள், திக்கற்றோர் விடுதிகள், தொழிற்கூடங்கள், அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் (Laboratories), மருத்துவமனைகள், வலிகுன்றியோர் – ஊனமுற்றோர் இல்லங்கள் முதலியவற்றையமைத்துப் பேணிக்காத்து, வளர்த்து நல்ல முறையில் தொண்டாற்ற வேண்டும். மேலும், பஞ்ச நிவாரண வேலைகளையும் செய்ய வேண்டும். 6. இச்சங்கம் தன் குறிக்கோளை அடையத் தேவையான நூல்களையும், பத்திரிகைகளையும், சிறு வெளியீடுகளையும் அச்சிட்டு இலவசமாகவோ விலைக்கோ கொடுக்க வேண்டும். 7. தன் குறிக்கோளையடைய வழிவகுக்கும் என்று எதைக் கருதுகிறதோ அதை இவ்வமைப்பு ஏற்று நடத்த வேண்டும்.
இவ்வாறான இராமகிருட்டிண இயக்கத்தின் கொள்கைகளுக்கு அடித்தளமாக அமைந்திருப்பவை உபநிடதங்களும் பகவத் கீதையும் இராமகிருட்டிணர் தம் அனுபவங்களும் போதனைகளும் மட்டுமல்லாமல், புத்தர், இயேசு ஆகியோர்தம் வாழ்க்கையும் அவர்களுடன் தொடர்புடைய இயக்கங்களின் முன் மாதிரிச் செயல்களும் ஆகும். உபநிடதங்கள் உலகின் ஆன்மிக ஒருமைப்பாட்டினை வலியுறுத்துகின்றன; ஆனால், உலகில் சராசரி மனித அனுபவம் பன்மையைக் காட்டுகிறது. இருவேறு அனுபவங்களின் முரண்பாடுகளைக் களைய வேண்டிய தேவையை விவேகானந்தர் உணர்ந்திருந்தார். எவ்வாறு வேதாந்தத்தை நடைமுறையாக்குவது, பரமார்த்த நிலைக்கும் வியவகார நிலைக்கும் எப்படிப்பாலம் அமைப்பது, ஆன்மிகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் எவ்வகையில் ஒற்றுமைப்படுத்துவது என்று விவேகானந்தர் பலமுறை நினைத்ததுண்டு. அதன் விளைவாக எழுந்த சுருத்துதான் மக்கள் தொண்டாகும். உயிர்களும் இறைவனும் அடிப்படையில் வேறுபட்டவர்களல்லர் என்றுணர்ந்து, எல்லா உயிர்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்ற கோட்பாட்டின் மூலம் விவேகானந்தர் தம் நடைமுறை வேதாந்தம் (Practical Vedanta) என்னும் கொள்கைக்குத் திட்டவட்டமான வடிவம் கொடுத்தார். இதில் இவரது மதிநுட்பமும், இவர் உயிர்கள் பால் கொண்டுள்ள பேரன்பும், ஈரநெஞ்சமும் தெரிகின்றன. இந்நோக்கின் மூலம் ஆன்மாவின் நலனும் (Good) உலக நல்வாழ்வும் (Welfare) ஒன்றுபடுத்தப்படுகின்றன. உயிரினங்களுக்குத் தொண்டாற்றுவதே இறைவழிபாடாகும் என்ற உண்மையை இந்நோக்குச் சுட்டுகிறது. இதனால் வாழ்க்கையே சமயமாகிறது. இக்கொள்கை தெய்விகத்தையும் (Sacred) சமயச்சார்பற்றவை (Sacular) என்று எண்ணப்பட்டவற்றையும் இணைக்கிறது எனலாம்.
இராமகிருட்டிண இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தீவிர இந்து சமயப் பற்றுடையவர்களாயினும் மற்றச் சமயங்களை மதிப்பதுடன், அவற்றின் தலைவர்களிடமும் மதிப்பும் அன்பும் கொண்டுள்ளார்கள். இந்திய நாட்டைப் பற்றியும், அதன் பரந்த (Catholic) நோக்கையும் பண்பாட்டையும் வேதாந்தத் தெளிவையும் வெளிநாடுகளில் இவ்வமைப்புப் பரப்பி வருகிறது. ஆயினும் மற்றச் சமயத்தவரை இந்து சமயத்திற்கு மாற்ற முயலுவதில்லை. முறையான வேதாந்த தத்துவம் கிறித்தவர்களை மேலும் சிறந்த கிறித்தவர்களாகவும் சிறந்த இந்துக்களாகவும் ஆக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடையது.
இராமகிருட்டிண சங்கம் மிக எளிய நிலையில் தொடங்கி எண்பத்தெட்டு ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியெய்தி, இன்றைய புதிய உலகில் நியூயார்க்கு (New york). போசுட்டன் (Bosten), சிகாகோ (Chicago) முதல் இலாசுஎஞ்சல்சு (Los Angles} சான் பிரான்சிசுகோ (San Francisco) வரையும், பாரிசு (Paris), இலண்டன் (London) ஆகிய மாநகரங்களிலும் இந்தியாவிலும் வேறுபல நாடுகளிலும் பல்கி, வேதாந்தக் கொள்கைகளைப் பரப்புவதுடன் பல்வேறு வகைகளில் பணிபுரிந்து கொண்டும் இருக்கிறது. வெள்ளத்தாலோ பஞ்சத்தாலோ பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், நில அதிர்ச்சியுற்ற இடங்களிலும் (Earthquake), தொற்று நோய் பரவி வரும் பகுதிகளிலும் இச்சங்கத்தவர் மக்களின் துயர் துடைக்க உழைப்பதைக் காணலாம். மேலும். இச்சங்கம் பள்ளிகள், கல்லூரிகள், திக்கற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகள் முதலியன நடத்தி வருகிறது. உலகெங்குமுள்ள மக்கள் இச்சங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் மதிப்பும் இதற்கு அவர்கள் தரும் உதவியும் ஒத்துழைப்பும் இவ்வமைப்பின் வெற்றிக்கு இன்றியமையாத காரணங்கள் எனலாம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 96)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gs4wum8j/
தமிழ்“இராமகிருட்டிண சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gs4wum8j/APA
Oliyon Research. (2026). இராமகிருட்டிண சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gs4wum8j/MLA
"இராமகிருட்டிண சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gs4wum8j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment