இது உணவுக் கலப்படத்தைத் தடுப்பதற்கான செய் ஒரு சட்டமாகும். இதன்கண் 1) கலப்படஞ் செய்பொருள், 2) கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பண்டம், 3) உணவு பற்றிய பொதுவான வகை முறை, 4) உணவு ஆய்வாளர் 5) வழக்கு நடைமுறை, போன்றவை ஆராயப்படுகின்றன. கலப்படஞ் செய்பொருள் கலப்படம் செய்யும் பொருட்டுப் பயன்படுத்தப்படுகிற அல்லது பயன்படுத்தப்படக்கூடிய எந்தப் பொருளும் கலப்படஞ் செய்பொருள் எனப்படும். கலப்படம் செய்யப்பட்ட உணவுப்பண்டம் அ) ஒரு விற்பனையாளரால் விற்கப்படும் பண்டம். விலைக்கு வாங்குகிறவர் கோரிய தன்மையோ ஊட்டச்சத்தோ தரமோ இல்லாதிருக்கும்போது; அல்லது ஆ) அதன் தன்மை, சத்து அல்லது தரம் வேறு ஏதேனும் ஒரு பொருளால் பாதித்திருக்கும்போது; அல்லது இ) அந்தப் பண்டத்தின் தன்மை, சத்து அல்லது அதன் தரத்துக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் அதைவிட மட்டமான அல்லது மலிவான பொருள் ஏதேனும் முழுவதுமாகவோ பகுதியாகவோ கலக்கப்பட்டிருக்கும்போது; அல்லது ஈ) அதன் தன்மை, சத்து அல்லது தரத்துக்குக் கேடு விளைவிக்கும் வகையில் அந்தப் பண்டத்தின் அமைப்பான எதுவும், முழுவதுமாகவோ பகுதியாகவோ பிரித்தெடுக்கப்பட்டிருக்கும்போது; அல்லது உ) அந்தப் பண்டம் சுகாதாரமற்ற சூழ்நிலையில் தயாரிக்கப்பட்டோ சிப்பமாகக் கட்டப்பட்டோ குறைபாடுற்றதாகவோ உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய- தாகவோ இருக்கும்போது; அல்லது ஊ) அந்தப் பண்டம் அழுக்கான, நாற்றமுள்ள, அழுகிய, சிதைவுற்ற நோயுற்ற பிராணியை அல்லது தாவரப் பொருளை முழுமையாகவோ பகுதியாகவோ கொண்டிருக்கும்போது; அல்லது பூச்சி பிடித்திருக்கும்போது; அல்லது மனிதர் அருந்துவதற்குத் தகுதியற்றதாக இருக்கும் போது; அல்லது எ) அந்தப் பண்டம் நோயுற்ற ஒரு பிராணியிடம் இருந்து பெறப்பட்டிருக்கும் போது; அல்லது ஏ) அந்தப் பண்டம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கிற நச்சுப் பொருள் அல்லது வேறுபொருள் எதையும் உட்கொண்டிருக்கும் போது; அல்லது (ஐ) அந்தப் பண்டத்தின் கொள்கலனானது முழுமையாக உடல் நலத்திற்குக்கேடு விளைவிக்கக் கூடியதாகச் செய்யும் நச்சுப் பொருள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள் எதையும் கொண்டு ஆக்கப்பட்டிருக்கும்போது; அல்லது (ஒ) அந்தப் பண்டத்தில் அதற்கென விதிக்கப்பட்ட நிறமூட்டும் பொருள் தவிர வேறு எதுவும் இருந்தால், அல்லது அந்தப் பண்டத்திலுள்ள விதிக்கப்பட்ட நிற மூட்டும் பொருளின் அளவுகள் விதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இல்லாமலிருக்கும்போது; அல்லது (ஓ) அந்தப் பண்டமானது, தடை விதிக்கப்பட்ட பதனச் சரக்கு எதையும் கொண்டிருக்கும்போது; அல்லது அனுமதிக்கப்பட்ட பதனச் சரக்கு எதையும் விதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மிகையாகக் கொண்டிருக்கும்போது; அல்லது (ஔ) அந்தப் பண்டத்தின் தரமோ தூய்மையோ விதிக்கப்பட்ட அளவைத் திட்டத்துக்குக் குறைவாக இருக்கும்போது அல்லது அதன் அமைப்பான்களின் அளவுகள் விதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இல்லாதிருந்து, உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கும்போது அது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பண்டமாகக் கருதப்படும். ஆனால், அந்தப் பண்டம் அடிப்படை உணவுப் பொருளாக இருந்து, அந்தப் பண்டத்தின் தரம் அல்லது தூய்மை விதிக்கப்பட்ட அளவைத் திட்டங்களுக்குக் குறைவாக இருக்குமிடத்து அல்லது அதன் அமைப்பான்களின் அளவுகள் விதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இல்லாதிருக்குமிடத்து, இரண்டில் எந்த நிலையும், இயற்கைக் காரணங்களால் மாத்திரமே ஏற்பட்டதாகவும் மனித முயற்சியின் செயலுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்குமேயானால், அப்போது அத்தகைய பண்டம் இந்த பொருளின்படி கலப்படம் செய்யப்பட்டதாகக் கொள்ளப்படுதல் ஆகாது. ‘உணவு’ என்பது, மருத்துச் சரக்குகளும் நீரும் நீங்கலாக, மனிதர் அருந்துவதற்கான உணவாக அல்லது பருகுவதாகப் பயன்படுத்தப்படும் எவ்வகைப் பண்டங்களையும் குறிக்கும். மேலும், (அ) மனித உணவை அமைப்பதில் அல்லது தயாரிப்பதில் சாதாரணமாகச் சேருகிற அல்லது பயன்படுத்தப்படுகிற பண்டம் எதையும், (ஆ) நறுஞ்சுவையூட்டும் பொருள் அல்லது மசாலை எதையும், (இ) அதன் பயன், தன்மை, சத்து அல்லது தரத்தைக் கவனத்தில் கொண்டு இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக மத்திய அரசு, உணவுப் பொருள் என அரசிதழில் அறிவிக்கை வாயிலாக விளம்புகிற வேறு பண்டம் எதையும் உள்ளடக்கும். போலியான உணவுப் பொருள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருளென்று பொய்யாகக் கூறுதல், மாற்றுப் பெயரில் விற்றல், ஒரு பண்டம் உண்மையில் இருப்பதைவிட மேலானதாகவோ மிக்க மதிப்புடையதாகவோ இருப்பதாகத் தோன்றுமாறு செய்தல், அதைப்பற்றிப் பொய்க் கூற்றுகள் கூறுதல் ஆகியவையும், சிப்பங்களில் அடைக்கப்பட்டிருந்தால். ஒவ்வொரு சிப்பத்தின் உள்ளடக்கமும் அதன் வெளிப்புறத்தில் எடுப்பாகவும் சரியாகவும் குறிப்பிடப்படாதிருந்தால், அதன் உள்ளடக்கம் ஏமாற்றும் தன்மையதாய் இருந்தால், அதன் மீதுள்ள குறிப்புச் சீட்டு ஒரு பொய்யான முகவரியினைக் கொண்டிருக்குமானால், அதன் உயிர்ச் சத்து. கனிமம் அல்லது உணவு சம்பந்தமான குணநலன்கள் சம்பந்தமாக விதிக்கப்படலாகும் விவரங்களை அதன் குறிப்புச்சீட்டுக் கொண்டிருக்கவில்லை யென்றால் அதுவும், செயற்கையான நறுஞ்சுவையூட்டும் பொருள், செயற்கையான நிறமூட்டும் பொருள் அல்லது இரசாயன பதனச் சரக்குகன் ஆகிய செய்திகளைக் குறிப்பிடுகின்ற குறிப்புச் சீட்டு இல்லாமலிருந்தால் அதுவும் தப்புக்குறியிடப்பட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும். உணவு அளவைத் திட்டங்களுக்கான கடமைகளை ஆற்றுவதற்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனை கூறுவதற்கும் மத்தியகுழு ஒன்றினை அமைத்தல் வேண்டும். மத்திய உணவு ஆய்வுக்கூடம் ஒன்றினை அரசு நிறுவுதல் வேண்டும். உணவு பற்றிப் பொதுவான வகை முறை எவரும் (அ) கலப்படம் செய்யப்பட்ட உணவு எதையும் (ஆ) தப்புக்குறியிடப்பட்ட உணவு எதையும் (இ) எந்த ஓர் உணவுப் பண்டத்தை இறக்குமதி செய்ய உரிமம் விதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த உரிமத்தில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிராமல் உள்ள உணவுப் பண்டம் எதையும்; (ஈ) இந்தச் சட்டத்தின் வேறெந்த வகை முறைளையும் மீறும் வகையில் உள்ள உணவுப் பண்டம் எதையும் இறக்குமதி செய்தல் கூடாது. கலப்படம் செய்யப்பட்ட உணவு, தப்புக் குறியிடப்பட்ட உணவு, பொதுமக்களின் உடல்நலனைப் பாதிக்கும்படியான தடை செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள், கலப்படஞ் செய்பொருள் எதையும் விற்பனைக்காக உற்பத்தி செய்தலோ சேகரித்தலோ விற்றலோ கொடுத்தலோ கூடாது. இச்சட்டத்தின்படி பணி அமர்த்தம் செய்யப்பட்டிருக்கும் உணவு ஆய்வாளர்களின் அதிகாரங்கள் உணவுப் பண்டங்களின் மாதிரிகளை எடுக்கவும் கலப்பட உணவுப் பண்டங்களின் விற்பனையைத் தடை செய்யவும் உரிமைபெற்றவராவார். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் எழும் வழக்கொன்றை ஒரு முதல் வகுப்பு நடுவர் அல்லது அவருக்கு இணையான அதிகாரம் பெற்ற ஒரு நீதித்துறை நடுவர் குறுகிய கால நடைமுறையில் விசாரித்து முடிவு கூறுவார்.