சிதைப்பவை
citaippavai
இறந்து போன தாவரங்களையும், விலங்குகளையும் சிதைத்து அழிக்கும் உயிரிகளுக்குச் சிதைப்பவை அல்லது சிதை மாற்றம் செய்பவை என்று பெயர்.
இறந்து போன தாவரங்களையும், விலங்குகளையும் சிதைத்து அழிக்கும் உயிரிகளுக்குச் சிதைப்பவை அல்லது சிதை மாற்றம் செய்பவை என்று பெயர். இவை பாக்டீரியா, பலவகைப்பட்ட காளான் (fungi), பூஞ்சை (mould), ஈஸ்ட் போன்ற சாறுண்ணிகள் ஆகும். இவை கரிமப் பொருள்களை வேதி முறையில் சிதைத்து, கரையும் பொருள்களாக மாற்றுகின்றன. இவை மற்றொரு வகைப் பாக்டீரியாவால் ஒளிச் சேர்க்கைக்குத் தேவையான உணவூட்டப் பொருள்களாக மாற்றப்படுகின்றன.
சிதை மாற்றம் செய்யும் உயிரிகள். பாக்டீரியா, காளான்களை விட விலங்குகள் சிதை மாற்றத்தில் பெரும் பங்கு கொள்கின்றன. திண்மப் பொருள் விழுங்கிகளான (phagotrophs), ஒற்றைச் செல் உயிரி, நில வாழ் உண்ணி (soil mite), நூற்புழு (nematode), தகட்டுச் செதிலி, நத்தை போன்ற சிறிய விலங்குகளும் சிதை மாற்றத்தில் ஈடுபடுகின்றன. பாக்டீரியா, ஈஸ்ட், பூஞ்சை முதலியன இணைந்தும் சிதை மாற்றத்தில் ஈடுபடலாம். பாக்டீரியா, விலங்கின் புலாலைச் சிதைக்கிறது. காளான்கள் மரத்தைச் சிதைப்பதில் செயல் மிக்கவை. பாக்டீரியாக்கள் ஈர மண்ணையும், நீரையும் சிதைக்கின்றன. இந்நுண்ணுயிரிகள் திண்மப் பொருள்களின் மீது காணப்படுவன அல்லாமல் கரைந்துள்ள கரிமப் பொருள்களிலும் கலந்து தாக்கும் தன்மை உடையவை.
மீதேன் பாக்டீரியா கரிமப் பொருள்களைச் சிதைத்து, மீதேன வளிமத்தைத் தோற்றுவிக்கிறது. இவ்வளிமம் சதுப்பு நில வளிமம் எனப்படும். இது மேற்பரப்பிற்கு வந்து ஆக்சிஜனேற்றம் அடையலாம் அல்லது நெருப்பைத் தோற்றுவித்துக் கண்டறிய முடியாத பறக்கும் பொருளாகவும் மாறலாம். ஏரோ பாக்டர் என்னும் பாக்டீரியா ஆக்ஸிஜன் முன்னிலையில் குளுக்கோசைப் பாக்டீரியாவின் புரோட்டோபிளாசம் (bacterial protoplasm) ஆகவும், கார்பன் டைஆக்சைடாகவும் மாற்றுகிறது. ஆக்ஸிஜன் வளிமம் இல்லாத போது, சிதை மாற்றம் முழுமை அடைவதில்லை. ஈஸ்ட், தாவரப் பொருள்களைச் சிதை மாற்றம் செய்வதில் பெரும் பங்கு கொள்கிறது.
உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளால் சிதை மாற்றம் நிகழ்கிறது. புல்வெளிகளிலும், காடுகளிலும் மட்கிய உணவு சிதை மாற்றம் அடைந்து, மிகு கார்பன் டைஆக்சைடு போன்ற வளிமங்களை வளிமண்டலத்திற்கும், தாது உப்புகளை நிலத்திற்கும் அளிக்கும். சிதை மாற்றம், உயிரினுள்ளும் உயிரிகளிடையிலும் ஏற்படும் ஆற்றல் மாற்றத்தால் நிகழ்கிறது. இது ஓர் உயிர்ச் செயல் (vital process) ஆகும். இல்லையெனில், எல்லா ஊட்டச் சத்தும் இறந்த உயிரிகளில் கட்டுண்டு போய் விடும். புதிய உயிரி, புதிய ஆற்றலுடன் தோன்ற முடியாது. பாக்டீரியாவின் செல்களும், காளானின் மைசீலியமும் குறிப்பிட்ட வேதி வினைகளுக்குத் தேவையான நொதிகளைச் சுரக்கின்றன. இந்நொதிகள் இறந்த பொருள்களைச் சிதைக்கின்றன. இவ்வாறு சிதைவுற்ற சில பொருள்கள் இவ்வுயிரிகளின் உணவாக, எஞ்சியவை சூழலில் தங்கி விடுகின்றன. எந்தச் சாறுண்ணியும் முழுமையான சிதை மாற்றத்தைச் செய்வதில்லை. ஆனால், சிதை மாற்றம் செய்யக் கூடிய பல உயிரிகள் படிப்படியாக முழுமையான சிதை மாற்றத்தைச் செய்கின்றன.
கொழுப்பு, சர்க்கரை, புரதம் ஆகியன உடனடியாகச் சிதை மாற்றம் அடைகின்றன. கார்போ ஹைட்ரேட்டுகள், கார்பன் டைஆக்சைடாகவும், நீராகவும், கொழுப்புப் பொருள்கள் பாஸ்ஃபேட்டாகவும் சிதைக்கப்படுகின்றன. புரதம், புரோட்டியோஸ், பெப்டோன் பாலிபெப்டைடு ஆகச் சிதைவுற்றுப் பின்பு, அமினோ அமிலமாகவும், அமோனியாகவும், கார்பன்டைஆக்சைடாகவும், நீராகவும் சிதைக்கப்படுகிறது. செல்லுலோஸ், கைட்டின், அகர் எலும்பு, லிக்னின், மயிர் ஆகியவற்றில் சிதை மாற்றம் மெதுவாக நடைபெறும்.
மட்குண்ணிகள் (detritivores), செல்லுலோஸ், லிக்னின் என்பன சிதை மாற்றத்தைப் பின் வரும் வகைகளில் விரைவு படுத்துகின்றன. மட்கிய உணவுப் பகுதியைச் சிறு சிறு துண்டுகளாகச் சிதைத்து, நுண்ணுயிரிகளின் வினைகளுக்கு வேண்டிய மேற்பரப்பை மிகுதியாக்கும் புரதத்தையோ, வளரும் பொருள்களையோ சேர்ப்பதால், நுண்ணுயிரிகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது. சில, பாக்டீரியாக்களை உண்டு அவற்றின் வளர்ச்சியையும், வளர்சிதை மாற்றத்தையும் தூண்டுகின்றன. சிதை மாற்றமடையாத மிகு அளவு கரிமப் பொருள்கள், நீர் நிலைகளில் படிவுகளாக மாறுகின்றன.
சிதைத்தல் நடை பெறும் இடம். நிலத்தின் மேலும், கீழும் கரிமப் பொருள் சிதைவு நடைபெறுகிறது. சிதைக்கப்பட்ட பொருள்கள் உயிரிகளாலும், மழை நீராலும், சூழ்நிலையின் பிற காரணிகளாலும் நிலத்திற்கடியில் கொண்டு செல்லப்படுகின்றன. இப்பொருள்கள் நீரின் விசையால் வடி கட்டப்பட்டு, மேலே எடுத்துச் செல்லப்படுகின்றன.
போதுமான தாவரங்களும், மிதமான மழையும் இருந்தால் சிதைவுற்ற பொருள்கள் நிலத்தில் சேர்த்து வைக்கப்படுகின்றன. ஆனால் சில வேளைகளில் தாது உப்புகள் மறைந்து போகின்றன. நிலம் அமிலத் தன்மையுடையதாக இருந்தாலும், அதிக மழை பெய்தாலும், ஒவ்வாத சூழ்நிலையில் நிலத்திலுள்ள மதிப்புள்ள உணவுப் பொருள்கள் அகற்றப் படுகின்றன. வயல் வேலைகளாலும், காடுகள் அழிக்கப் படுவதாலும் மண் அரிப்பு ஏற்பட்டு, நிலத்தின் தாது உப்புகளும், தழை உரமும் அகற்றப்பட்டு இழப்பை உண்டாக்குகின்றன. நீர் நிலைகளில் இறந்த உயிரிகள் நீருக்கடியில் செல்கின்றன. இவ்வாறு கீழே இறங்கும் போது, சிதைவுற்ற பொருள்கள் நீரோட்டத்தின் விளைவாகக் கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் குறிப்பிடத் தக்க தொலைவு வரை பரவுகின்றன.
ஆழமான ஏரிகளிலும், கடல்களிலும் இறந்து போன தாவரங்களும், விலங்குகளும் ஒளி புகு பகுதிக்குக் (cuphotic) கீழே சென்று, சிதை மாற்றம் அடைகின்றன. சிதை மாற்றத்திற்குப் பின்பு தோன்றும் பாஸ்ஃபேட், நைட்ரேட்டு ஆகியன நீரின் மேற்பகுதிக்குச் செங்குத்து இடப் பெயர்ச்சி (vertical transport) மூலம் வந்து சேர்கின்றன. மேலும் ஆறுகளின் மூலம், தாது உப்புகள் தொடர்ச்சியாகக் கடலை வந்தடைகின்றன. இங்ஙனம் நிலத்தில் ஊட்டப் பொருள்களின் இழப்பு ஏற்படுவதுடன், மிகுதியான பொருள்கள் ஆழ்கடலில் சேர்கின்றன. இவற்றில் சிறிய அளவே செங்குத்து நீரோட்டத்தின் (vertical circulation) மூலம் நீரின் மேற்பரப்பை அடைய முடியும். நிலத்திலும், நீர் நிலைகளிலும் உள்ள கரிமப் பொருள்களில் காணப்படும் ஊட்டச் சத்தில் நிலையில்லாத் தேக்கம் (temporary stagnation) ஏற்படலாம். இக்கரிமப் பொருள்கள் சிதை மாற்றம் அடைவதாலேயே, தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச் சத்தைப் பெற முடியும்.
புவியின் வளி மண்டலத்தில் மிகுதியான நைட்ரஜன் வளிமம் உள்ளது. இதிலிருந்து மெதுவாக இயற்பியல் மற்றும் உயிரியல் காரணிகள் மூலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. புவியின் மேற்பரப்பில் எழுநூறில் ஒரு பங்கு பாஸ்ஃபரஸ் உள்ளது. உயிரிகளின் சிதை மாற்றத்தின் மூலம் பாஸ்ஃபரஸ் இழப்பு ஏற்படுகிறது. இதனால் உணவு உற்பத்தியும் தாக்கமடையலாம். மனித நாகரிக உயிர்ச் சங்கிலியின் (vital chain) இணைப்பு பாஸ்ஃபரசால் ஏற்படுகிறது.
காரணிகள். வெப்பமும், நீரும் சிதை மாற்றம் செய்பவையின் வினையைச் சீரமைக்கின்றன. இவ்விரு காரணிகளும் நீரை விட நிலத்தில் மிகுதியாக மாறும் தன்மை உடையன. ஆகையால், சிதை மாற்றம் நிலத்தில் அவ்வப்பொழுது மிகுதியாக நடைபெறுகிறது.
—சு. செல்லம்மாள் நூலோதி. George L. Clarke, Elements of Ecology, John Wiley & Sons Inc. New York, 1954.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 234)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gjjxkjga/
தமிழ்“சிதைப்பவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gjjxkjga/APA
Oliyon Research. (2026). சிதைப்பவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gjjxkjga/MLA
"சிதைப்பவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gjjxkjga/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment