பல அசையும் உறுப்புகள் உள்ள தண்டுப் பொறியுடன் ஒப்பிடும் போது, சுழல் வகை வேங்கெல் ( wankel) உள் எரி பொறியை ஓர் எளிய கருவி எனலாம்., ஒரு சுழலி, ஒரு குழல் ஆகிய இரு பெரும் அசையும் உறுப்புகளே உள்ள, ஒரு நீள் அறையே அதன் அடிப்படைக் கட்டுமானமாகும். ஊடாடு பொறிகள் போல இணைப்புக் கோல், தண்டு, கபாடம் ஏதும் வேங்கெல் சுழல் பொறியில் இல்லை. குறைந்த எண்ணிக்கை அசையும் உறுப்புகள் குறைந்த எடை தவிர, வேங்கெல் சுழல் பொறியில் பல நன்மை உண்டு. அதன் அளவுடைய பெரும்பாலான தண்டுப் பொறிகளை விடக் கூடுதலான குதிரைத் திறன் ஏற்படும். இதன் ஓட்டத்தில் அதிர்வுகள் இல்லை. தண்டுப் பொறிகளை விட, வேங்கெல் பொறியின் எளிய வடிவமைப்பு உற்பத்தி செலவைக் குறைக்கிறது. ஈயம் கலவா பெட்ரோல் மற்றும் குறை ஆக்டேன் பெட்ரோல் போல பல எரி பொருளும் கொண்டு, வேங்கெல் பொறி இயங்கும் தண்டுப்பொறிகளில் வெளிவரும் காற்று அளவே மாசுப் பொருள் வகையிலும் காணப்படும். ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்தலும் ஒப்பு நோக்குதலும் எளியவை. வேங்கெல் பொறியின் கற்கலம், தனிப்பட்ட முறையில் இரட்டைக் கோளக வடிவில் சிறப்புற அமைந்திருக்கும். இந்த அறையின் நடுவில் மையம் விட்டு விலகி உள்ள குழலில், முக்கோண வடிவுள்ள சுழல் பொருந்தியுள்ளது. அறைச் சுவரின் ஒரு புறம் உள் நுழை துளை மற்றும் வெளியேற்றுத் திறப்புகள் உண்டு. சுற்றும் சுழலியால் துளைகள் மாறி, மாறி மூடித் திறக்கப்படும். இதனால், குறித்த காலத்தில் எரி பொருள் உள் வருதலும், எரிந்த வளி வெளிச் செல்லுதலும் நடக்கின்றன. அறையில் சுழலி சுற்றும் போது, அறைச் சுவருக்கு ஊடே உள்ள இட அளவு மாறுவதால், எரி பொருள் உள் இழுக்கப்படும். பின் அழுத்தம், எரிதல் இறுதியில் எரி வளிமங்கள் வெளித் தள்ளப்படும். உள் இழுத்தல், அழுத்தல், திறன், வெளியேற்றம் ஆகிய முழுச் சுற்றுப் பொறி இயக்கம் அறைச் சுவரிலும், சுழலி முகங்கள் இடையுள்ள ஒவ்வோர் இடைவெளியிலும் சுழலியின் ஒரு சுற்றில் முற்றுப் பெறும், ஆகவே, சுழலியின் ஒவ்வொரு சுழற்சியிலும் மூன்று முழுச் சுற்று (பொறி இயக்கம்) நிகழ்கிறது. சுழலி திறன், குழலுக்குச் செலுத்தப்படுகிறது. இக்குழல் வழியே, சுழலியிலிருந்து திறன் செலுத்தப்படுகிறது. ஜெர்மனி நாட்டுக் கண்டு பிடிப்பாளரான ஃபெலிக்ச்வேங்கெல் 1950இல் இப்பொறியை வடிவமைத்தார். இதைப் படகுகளுக்கும், பொறிகளுக்கும் உடனடியாக ஏற்றுக் கொண்டனர். முதல் வடிவமைப்பு ஒற்றைச் சுழலி கொண்டது. ஆனால், இப்போது இரண்டு மூன்று சுழலியின் மாதிரிகளும் செய்யப் படுகின்றன. இதைப் பல அளவிலும், வகைகளிலும் செய்வது எளிது. குதிரைத் திறன் மாறுபட்ட பல்வேறு அளவிலும் இவை செய்யப்படலாம். பல்வேறு தொழிற்பொறிப் பயனுக்கு வேங்கெல் பொறி பொருத்தமானது. சுற்றுப் பொறி. இவ்வகைப் பொறிகளில் நீர், ஆவி, வளி போன்ற இயங்கு நீர்மங்களின் திறன் நேராக ஒரு குழலின் சுழல் அசைவு மாறுதலில் நிகழும். வாளிகள் என அறியப்படும் ஒன்று அல்லது கூடுதல் வரிசை அலகுகளுக்கு நேராக நீர்மம் செலுத்தப் படும். வாளிகள் சுழலி அல்லது சுற்றுப் பொறிச் சக்கர நுனியில் உள்ளமையால், சுழலி சுற்றப்படுகிறது. சுழலியைச் சுற்றி உள்ள வட்டமைப்பில் செலுத்திகள் உள்ளன. அல்லது ஓவ்வொரு வரிசைச் சுழலி அலகுகளுக்கு நேரே ஒரு வரிசை நிலைத் தடுப்புகள் உள்ளன. இந்தச் செலுத்தி அல்லது தடுப்பால் அலகு வரிசைக்கு வரும் நீர்மத்தின் திசை வேகம் முடிவு செய்யப்படும். மின்சாரம் பெற உற்பத்திப் பொறிகளைச் சுழற்றச் சுற்றுப் பொறிகள் பெரும்பாலும் பயன்படும். கப்பல்களைச் செலுத்த, சுற்றுப் பொறிகள் உதவுகின்றன. சுமையுந்துகளுக்கும், தொடர் வண்டிகளுக்கும் சில சுற்றுப் பொறிகள் பயன்படும். வான ஊர்திச் சுற்று இயல் பொறியில் சுற்றுப் பொறி, காற்றழுத்தியை இயக்குகிறது. இதிலிருந்து, இயக்குப் பொறியின் எரி அறைக்கு அழுத்தப்பட்ட காற்றுச் செலுத்தப் படுகிறது. உயர் அழுத்தக் காற்றால் பொறியின் திறன் கூடுகிறது. சுற்று விசிறிப் பொறி உள்ள வான ஊர்தியில் சுற்றுப் பொறி, காற்றழுத்தியை இயக்குவதுடன், காற்றோட்டியையும் செலுத்துகிறது. நீர், பால், எண்ணெய்க் குழாய்ப் பாதைகளில் நீர்ம அழுத்தத்தை நிலை நிறுத்தச் சுற்றுப் பொறிகள் பயன்படும். பொறிகளை இயக்கவும், மின்சாரம் பெறவும் பல உற்பத்தித் தொழிற்கூடங்களில் சுற்றுப் பொறிகள் பயன் படுகின்றன. பிற வகைப் பொறிகளை விடச் சுற்றுப் பொறிகளில் சில நன்மைகள் உள்ளன. சுற்றுப் பொறிகள் அளவில் சிறியவை; டீசல் அல்லது வழக்கமான பெட்ரோல் பொறிகளை விடக் கூடுதல் திறன் உண்டாக்க வல்லவை. சுமையின் பல நிலையிலும், மிகுந்த செயல் திறன் உடையவை. ஆற்றல் எடை விகிதம் சுற்றுப் பொறிகளில் மிகுதி, அவற்றின் எடைக்கு மிக்க ஆற்றலை உண்டாக்குகின்றன. வழக்கமாகச் சுற்றுப் பொறிகளை உந்தல் அல்லது எதிர் வினைச் சுற்றுப் பொறிகள் என்பர், உந்தல் சுற்றுப் பொறியில் அசையும் நீர்மங்களின் தள்ளலால், சுழலி திரும்புகிறது. உந்தல் சுற்றுப் பொறியின் எளிய மாதிரி நீர்ச் சக்கரம். எதிர் வினைச் சுற்றுப்பொறிக்கு எடுத்துக் காட்டு தோட்ட நீர்த் தெளிப்பான். இதில், செலுத்தி வழி வரும் நீரின் மறு செயலால், தெளிப்பான் சுற்றுகிறது. பெரிய சுற்றுப் பொறிகளில் பெரும்பாலும் அசையும் செலுத்தி இருப்பதில்லை. மாறாக, இவற்றில் அசையா செலுத்திகள் வரிசையாக உள்ளன. இவை சுழல் அலகு வடிவில் அவற்றிற்கு எதிரில் உள்ளன. இரு வரிசை அலகுகளும் சுழலும் செலுத்திகள் போல் செயல்படுகின்றன. அதாவது, சுழலியில் மோதும் அலகுகளின் ஊடே ஏற்படும் பாதையில் செல்லும் நீர்மத்தின் தள்ளலால், சுழலி சுற்றுகிறது. பயன்படு ஊடகத்தால் பொதுவான வகைப் பிரிவுப் பெயர் தரப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்கவை: நீராவி, வளி, நீர் ஆகியன. நீராவிச் சுற்றுப் பொறி ஆற்றல் இயக்கி. ஒரு கொதி கலன் மற்றும் சுற்றுப் பொறி நீராக்குவான் ஆகியவற்றைக் கொண்டது நீராவிச் சுற்றுப் பொறி ஆற்றல் இயக்கி ஆகும். கொதி கலனில் நீர் சூடாகிறது. உருவாகும் நீராவி, சுற்றுப் பொறிக்குக் குழாய் வழி கொண்டு செல்லப்படும். சுற்றுப் பொறியிலிருந்து வெளி வரும் நீராவி நீராக்குவானில் நீராகக் குளிர்விக்கப்படுகிறது. இந்த நீர் பின்னர், கொதி கலனுக்கு அனுப்பப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யச் சுற்றுப் பொறி பயன்படுகையில், நீராவி சுற்றுப் பொறியின் வெளி வரும் ஆற்றல் கிலோ வாட் அல்லது மெகா வாட்டில் கணக்கிடப்படுகிறது. கப்பல் செலுத்துவது போன்ற பிற பணிகளுக்கு உதவும் போது, குதிரைத் திறனில் கணக்கிடப்படும். சிறு நீராவிச் சுற்றுப் பொறிகளில், ஓரிரு வரிசை சுழலி அலகுகள் இருக்கும். பெரிய பொறிகளில், சுழலிகள் வரிசை இணைக்கப் படும். நீராவி நுழையும் இடத்தில் அழுத்தம் மிகுந்தும், நீராவி அடர்ந்தும் இருப்பதால், சுழலி விட்டம் சிறுத்தும், அலகுகள் குட்டையாகவும் உள்ளன. நீரை ஆவியாக்கக் கொதி கலனுக்குப் போதிய வெப்பம் கொடுக்கும் எந்த வழக்கமான எரி பொருளும் நீராவிச் சுற்றுப் பொறி இயக்கத்திற்குப் பயன்படும் ஆற்றலை கொடுக்கும். வளி சுற்றுப் பொறி. சுழல், எரிப்பான், காற்றமுத்தி உள்ள கூடு ஒன்றுள், எளிய வளி சுற்றுப் பொறி அடங்கும். வளி மண்டலத்திலிருந்து காற்று அழுத்தப்பட்டு, எரிப்பானுள் செலுத்தப்படுகிறது. இங்கு எரி பொருளுடன் கலக்கிறது. கலவைப் பொருள் எரிக்கப்படும். எரிதலால் விளையும் வளிகள் சுழலிக்குச் செலுத்தப்பட்டு, அதைச் சுற்றுகின்றன. சுற்றுப் பொறியில் உண்டாகும் திறனில் ஒரு பகுதி, காற்றமழுத்தியில் பயன்படுகிறது. சுழலியின் குழலிலேயே அழுத்தியும் வைக்கப்படுவது வழக்கம். எஞ்சிய திறன் கொண்டு, மின்சாரம் உற்பத்தியாகிறது. மேலும், இணைக்கப்பட்ட பொறி இயங்கவும், வண்டிகள் செலுத்தவும் சுற்றுப் பொறி உதவுகிறது. எளிய வளி சுற்றுப் பொறி திறந்த சுற்று என்பர். வளி மண்டத்திலிருந்து இழுத்துச் சுடு வளியை வளி மண்டலத்திற்கே திரும்ப விடுவதாலேயே, இதற்கு இப்பெயர் வந்தது. எளிய வளி சுற்றுப் பொறி மிகவும் எடை குறைந்தது. ஆனால், எரி பொருளில் உள்ள சுடு திறனில் பெரும் பகுதி ஆற்றலைப் பயன் படுத்துவதில்லை. இருக்கும் திறனை மேலும் பயன் படுத்த கூடுதல் பொறிப் பகுதி தேவை. —அ. சேதுநாராயணன் நூலோதி. P. L. Ballaney, Theory of Machines, Fifteenth Edition, Khanna Publishers, New Delhi, 1987.