தமிழகத்தில் அரிகதா காலட்சேபக்கலை தோன்றி வளருவதற்கு அடிப்படையாக விளங்கிய மராட்டிய பாகவதர். இவர் மோர்கூர் இராமச் சந்திர பாவா என வழங்கப்பெற்றார். இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மகாராட்டிரப் பகுதியில் வாழ்ந்தவர். இவர் குவாலியர் சமசுத்தானத்தில் அக்காலத்தில் நடைபெற்று வந்த ‘கீர்த்தனாலயா’ என்னும் காலட்சேபப் பள்ளியில் படித்துக் ‘கீர்த்தனாச்சாரிய’, ‘கீர்த்தனகேசரி’ முதலிய பட்டங்களைப் பெற்றார். தென்னாட்டில் அரிகதைக் காலட்சேபம் எனப்படுவது வடநாட்டில் கீர்த்தனம் எனப்படும். அதனை நிகழ்த்துவதில் இவர் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் இராமேசுவரப் பயணம் மேற்கொண்ட போது கி.பி. 1864–ஆம் ஆண்டு தஞ்சையில் தங்கினார். அப்போது தஞ்சையை ஆண்ட காமாட்சிபாயி சாகிபு என்னும் அரசியின் விருப்பப்படி சிலநாள் அரிகதை நிகழ்த்தினார். நிகழ்ச்சி வேற்றுமொழியில் இருந்தாலும், அதன் இசை இன்பத்தால் தஞ்சை மக்கள் அதில் பெரிதும் ஈடுபட்டனர். அரசியின் வேண்டுகோளுக்கிணங்கி இவர் தஞ்சையிலேயே தங்கி அரிகதைக் காலட்சேபத் தொண்டினை ஆற்றினார். இவர் 40 ஆண்டுக் காலம் தஞ்சையில் இருந்துள்ளார். தஞ்சையில் இவருக்கென ஒரு மடம் கட்டப்பட்டது. இவருக்குப் பின் இவருடைய மகன் விட்டுணுபாவா இத்தொண்டினைத் தொடர்ந்து புரிந்து வந்தார். அப்போது தஞ்சை அரசில் அமைச்சராக விளங்கிய பெரியண்ணா ஓர் அந்தணச் சிறுவனைக் கல்வியோடு இசைக்கலை, பிடில், மிருதங்கம் ஆகியன இசைக்கும் கலை முதலியவற்றைக் கற்கச் செய்தார். நிருத்தமும் அவனுக்குக் கற்பிக்க ஏற்பாடு செய்தார். இவை அனைத்திலும் வல்லவனாகத் திகழ்ந்த அச்சிறுவன், இராமச்சந்திர பாவாவிடம் அரிகதை காலட்சேபக் கலை நுணுக்கங்களை அறிந்துகொண்டான். மராட்டிரம், தெலுங்கு முதலிய பலமொழிகளையும் சுற்றுத் தானே அரிகதை நிகழ்ச்சியை நிகழ்த்த முற்பட்டான். வடநாட்டுப் பாவா வழியையும் தென்னாட்டு வழியையும் இணைத்துப் புதிய முறையில் அரிகதை காலட்சேபத்தினை நிகழ்த்திப் பெயர் பெற்றான். இச்சிறுவனே தமிழ் நாட்டின் இன்று திகழும் அரிகதை காலட்சேபக் கலைக்கு முன்னோடியாக விளங்கிய தஞ்சாவூர் கிருட்டிண பாகவதராவர்.