உலக வரலாற்றில் கி.மு. 1500க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்ட காலம் இரும்புக்காலம் எனக் கூறப்படுகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைத் (Pre history) தொல்லியல் அறிஞர்கள் மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு மூன்று காலங்களாகப் பிரித்துள்ளனர். அவை, 1. கற்காலம் (Stone Age). 2. செம்புக்காலம் (Copper Age), 3. இரும்புக்காலம் (iron Age) என்பனவாம். மனிதன் இரும்பினைப் பற்றி கி.மு. 3000 ஆண்டளவிலேயே அறிந்திருந்தான். எனினும் அதனுடைய பெரும்பயன்பாட்டை கி.மு. 1500 ஆண்டளவில்தான் முழுவதுமாக அறிந்தான். இக்காலத்தில் உலகம் முழுவதும் இரும்பின் பயன்பாடு வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது என்றே சொல்லலாம். அர்மினியாவில் மிடானி (Mitanni) என்ற அரசுக் காலத்தில் இரும்பினைப் பெருமளவில் பயன்படுத்தினர். இரும்பு பயன்பாட்டை இட்டைட்டுகள் (Hittites) கி.மு. 1370–இல் மிடானியரின் பகுதியைக் இரும்பு அரிவாள் (நார்வே–கி.மு. 500) கைப்பற்றியபொழுது அறியலாயினர். இட்டைட்டுப் பேரரசர் மூன்றாம் ஆட்டுசிலிசு (Hattusilis III) என்பவர் (கி.மு. 1348–1339) எகிப்திய அரசர் துதங்கமன் (Tutankhamen) என்பவருக்கு இரும்பினாலான வாள் ஒன்றை அன்பளிப்பாக அளித்தார் என்று சொல்லப்படுகிறது. எகிப்திலுள்ள துதங்கமன் கல்லறையை அகழாய்வு செய்த பொழுது ஒரு பெரிய இரும்பு வாள் ஒன்று கிடைத்தது. அவ்வாளே இட்டைட்டுப் பேரரசர் பரிசாக அளித்ததாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இட்டைட்டுகளுக்கும் எகிப்தியர்களுக்கும் ஏற்பட்ட போர்களின் விளைவாக இரும்பின் பயன்பாடு பிற இடங்களுக்கு எளிதில் பரவத் தொடங்கியது. இரும்பு வேலை செய்யும் கருமார், கருங்கடலின் தெற்குக்கரைப்பகுதியில் வாழ்ந்தனர் எனக் குறிப்புகள் உள்ளன. இட்டைட்டுகளின் வரலாற்றுக் குறிப்பேடுகளில் இரும்பினைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. இரும்புப் போர்க் கருவிகளைப் பயன்படுத்திய இட்டைட்டுகள் அவற்றைச் செய்யும் முறைகளை யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தனர். இரும்பினை முற்றுரிமை பெற்ற ஒரு பொருளாக இவர்கள் அறிவித்தனர். இட்டைட்டுகளின் வீழ்ச்சிக்குப் பின்னரே இரும்பின் பயன் பிற பகுதிகளில் மிக விரைவில் பரவியது. கிரீசிலும் (Greece), கிரீட்டிலும் (Crete) உள்ள பிணக்குழிகளில் அகழாய்வுகள் செய்தபொழுது. இரும்புக் கருவிகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இக்கருவிகள் கி.மு. 1100 ஆம் ஆண்டைச் சார்ந்தவை எனக் கணித்துள்ளனர். இத்தாலியிலிருந்த வில்லநோவன் (Villanovan) மக்கள் கி.மு. 900 ஆம் ஆண்டில் இரும்புப் பொருள்களைப் பயன்படுத்தினர். ஆசியாமைனரில் குடியேறிய எட்ருசுகர்களின் (Etruscans) மூலமே இரும்பின் பயனை இவர்கள் அறிந்தனர் என மரபுவழிச் செய்திகள் குறிக்கின்றன. ஆசுத்திரியாலிலுள்ள ஆல்சுடாட்டு (Hallstat) நகரமே இரும்பு உற்பத்தியில் தலைசிறந்த நகரமாக அக்காலத்தில் விளங்கியது. இதனால், அப்பகுதியில் ஒரு புதிய நாகரிகமே ஏற்பட்டது. ஆல்சுடாட்டு, சால்சுபர்க்குப் (Salzburg) பகுதிக்கு அருகில் உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பினால் செய்யப்பட்ட மிக நீளமான கத்தியைப் பயன்படுத்தினர். கெல்ட்டு இன மக்களின் வெற்றிக்கு மிகச் சிறப்பான காரணமாக விளங்கியது அவர்கள் பயன்படுத்திய இரும்புப் போர்க்கருவிகளே. இரும்பு வாள் (ஆசுத்திரியா–கி.மு. 700) செருமனியிலும், இசுகாண்டி நேவியாவிலும் இரும்பு பற்றி, கி.மு. 500–ஆம் ஆண்டளவில் அறிந்திருந்தனர். ஆப்பிரிக்காவில் நூபியாவிலுள்ள (Nubin) மிரோ (Meroe) பகுதியில் வசித்த மக்கள் கி.மு. 700–ஆம் ஆண்டில் இரும்பைப் பயன்படுத்தினர். இங்கிருந்து எகிப்திற்கும் இரும்பின் பயன் பரவியது, இந்தியாவில் இரும்பு பற்றி வேதகால ஆரியர்கள் அறிந்திருந்தனர். கி.மு. 2000–ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவிலிருந்து காகசக (Caucasus) மலைதொடர் வழியாக இந்தியாவிற்கு வந்த ஆரியர் இரும்பின் பயனை அறிந்திருந்தனர். இந்தியாவில் நடந்த அகழாய்வுகளில் இரும்புப் பொருள்கள் வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மண்கலன்களுடன் (Painted Grey Ware) கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி.மு. 900க்கும் கி.மு. 800க்கும் இடைப்பட்ட காலம் ஆகும். சீனமக்கள் இரும்பு பற்றி, கி.மு. 6–ஆம் நூற்றாண்டளவில் அறிந்தனர். இரும்புக் காலத்தில் மக்களின் பண்பாடு பெருமளவு வளர்ச்சியடைந்திருந்தது. இரும்பு பெருமளவில் கிடைத்ததால் எளிய மக்களும் இரும்புப் பொருள்களைப் பயன்படுத்தினர். இரும்பின் பயனாக இராணுவத்தின் வலிமை பெருக்கப்பட்டது. நாடோடிகளாக வாழ்ந்த மனிதன் இரும்புக் காலத்தில் நிலையான இடங்களில் வாழ முற்பட்டு, நாகரிக வளர்ச்சியடைந்ததுடன் பொருளாதார வளர்ச்சியும் அடைந்தான். நாடோடிகளாகத் திரிந்த பாரசீகர், பிரிசியர் (Phrygians), சித்தியர் (Scythians), கெல்ட்டுகள் (Celts), எட்ருசுகர் (Etruscans), கிரேக்கர், உரோமானியர் போன்றோர் புதிய அரசுகளை இரும்புக் காலத்தில்தான் உருவாக்கினர். இரும்பு உற்பத்தி செய்வதில் குறைந்த செலவும் மிகுந்த பயன்பாடும் ஏற்பட்டது. இரும்பினால் கோடரிகளும் கலப்பைக் கொழுவும் செய்யப்பட்டன. இதனால் வேளாண்மை வளர்ச்சியுற்றது. உலக வரலாற்றில் செம்பினால் கலப்பைக் கொழு செய்யப்பட்டதற்கான சான்று நமக்கு இதுவரை கிடைத்திலது. கப்பல் கட்டவும் மரம் அறுக்கவும் இரும்புக் கருவிகள் பயன்பட்டன. இரும்புக்காலம் மனிதனின் வளர்ச்சியில் ஒரு சிறந்த இடத்தைப் பெறுகிறது.