அசை
acai
அசை என்பது மொழியின் மிகச் சிறிய ஒலி அல்லது அலகு ஆகும்.
அசை என்பது மொழியின் மிகச் சிறிய ஒலி அல்லது அலகு ஆகும். அறிவு வளர்ச்சி, செயல் எளிமை ஆகியவற்றின் காரணமாக அசைகளையும் விடச் சிறிய ஒலி வடிவம் எண்ணிப் பார்க்கப்பட்டது. இதுவே, இன்றைய நெடுங்கணக்கு (Alphabet) எழுத்துகளாகும். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க அறிஞர்கள், செமித்திக் மொழியில் தோன்றியிருந்த எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு, அசையின் உறுப்புகளாகிய உயிர், மெய்களைக் குறியீடு செய்தனர். இதனை அடுத்து, அராமிக்கு, ஈபுரு, அரபு, மற்றும் இந்திய மொழிகளில் நெடுங்கணக்கு எழுத்துகள் தோற்றுவிக்கப்பட்டன. அசைகள் உயிர்மெய்களாக உணரப்பட்ட போதிலும், எல்லா மொழிகளிலுமே இவை தனி எழுத்துகளால் குறிப்பிடப்படவில்லை. சில மொழிகளிலேயே இவற்றைக் குறிக்கும் தனி எழுத்துகள் தோன்றின. இன்று உள்ள ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழி எழுத்துகள் இவ்வகையைச் சாரும். தமிழ் போன்ற இந்திய மொழிகளில் உயிர் மெய்களைக் குறிக்கத் தனி எழுத்துகள் இருந்தபோதிலும், மெய்யும் உயிரும் அடுத்தடுத்துத் தோன்றினால் அவற்றை இணைத்து, உயிர்மெய் என்ற ஒரே வடிவாகக் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
அசையுணர்வு
மொழியின் எழுத்து வரலாற்றில் மிகவும் இன்றியமையாத இடத்தைப் பெறும். அசை, ஒவ்வொரு மனிதனாலும் மிகவும் தெளிவாக உணரப்படும் ஒன்றாகும். எனினும், இதனை முறையாக விளக்கி வரையறை செய்ய இயலவில்லை. ஒருவர் தாம் பேசும் சொற்களில் எத்தனை அசைகள் உள்ளன என்று மிக எளிதில் கூறிவிடலாம்; அவற்றைப் பகுத்தும் காட்டிவிடலாம்; ஆனால் அவ்வாறு பகுத்துக் காட்டுவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிவியல் அடிப்படையில் விளக்குவது மிகவும் கடினம்.
அசை, மனிதனின் உணர்வு (Feeling) அடிப்படையிலானது. எனவேதான் எல்லைகளைக் குறிப்பிடுவதில், தெளிவான கொள்கையை வகுப்பதில் இடர்ப்பாடு உள்ளது. இதன் விளைவாக ஒரு சொல்லில் உள்ள அசைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுவதிலும், சிலபோது வேறுபாடு தோன்றுகிறது. எனினும் அசைகள் ஒவ்வொரு மனிதனாலும் உணரப்படும் உண்மைக் கூறுகளாகும்.
அசையும் எழுத்தும்
அசைகள் உயிர் அல்லது உயிர் மெய்களால் ஆனவை. ‘ஆ’, ‘ஆல்’, ‘வா,’ ‘வாய்’ என்பவை ஓரசைச் சொற்கள், முதலில் உள்ள சொல் உயிர் மட்டும் உள்ள ஓரசையால் ஆன சொல்; பின்னவை மூன்றும் முறையே உயிர் மெய், மெய்–உயிர், மெய்–உயிர்–மெய் என்னும் உறுப்புகளைக் கொண்ட ஓரசைச் சொற்கள்,
மொழியின் மிகப்பெரிய அலகு தொடர்களாகும். தொடர்கள் அசைகளாக உணரப்படுகின்றன. அசைகள் உயிர், மெய் ஆகிய ஒலிகளாக உணரப்படுகின்றன. ஒன்று அல்லது பல அசைகளை இணைத்து இலக்கண அடிப்படையில் சொற்கள் உண்டாக்கப்பட்டுள்ளன. தனிநிலை மொழி (Isolating language) சொற்கள் குறைந்த அளவு அசைகளை உடையவை. ஒட்டு நிலை மொழிச் (Agglutinative language) சொற்கள் அதிக அளவு அசைகளை உடையவை. தமிழ்ஒட்டு நிலை மொழிவகையைச் சார்ந்த மொழி. இதன்கண் பல அசைகளைக் கொண்ட நீண்ட சொற்கள் உள.
‘ஆ’, ‘ஆல்’, ‘கா’, ‘கால்’, ‘அல்’, ‘கல்’ போன்றவை ஓரசைச்சொற்கள், ‘எடு’, ‘எட்டு’, ‘எட்டில்’, ‘வெடி’, ‘வெட்டி’, ‘வெட்டில்’, ‘ஆடு’, ‘ஆட்டு’, ‘ஆட்டின்’, ‘பாடு’, ‘பாட்டு’ ‘பாட்டின்’ போன்றவை ஈரசைச் சொற்கள். இவ்வாறு தமிழ் மொழிச் சொற்கள், மூவசை, நாலசை என்று விரிந்து கொண்டே போகும். ‘வந்து கொண்டிருந்த பொழுதிலா’ என்னும் தொடரில் உள்ள சொற்களில் பல அசைகள் வருதலைக் காணலாம். சொற்களின் அசைகள், ஒரு மொழியின் இலக்கண விதியையும் யாப்பமைதியையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவை.
அசை உறுதிசெய்தல்
ஒரு சொல்லின் அசைகளின் எல்லையை வரையறுப்பதிலும் எண்ணிக்கையை உறுதி செய்வதிலும் ஒரே மொழி பேசும் மக்களிடையே கூட ஒத்த கருத்து நிலவுவதில்லை. எடுத்துக் காட்டாகத் தமிழில் சொல்லிடையில் மெய்க்குமுன் வரும் ரகர மெய், சில வட்டார வழக்கில் உயிரேற்றி ஒலிக்கப்படும். இதனால் அச்சொல்லின் அசை எண்ணிக்கைக் கூடும். ‘ஆர்வம்’, ‘பார்வை’, ‘சோர்வு’ போன்ற சொற்கள் ‘ஆருவம்’, ‘பாருவை’, ‘சோருவு’ என்று ஒலிக்கப்படும். இங்கு ஈரசைச் சொற்கள் மூவசையாக ஒலிக்கப்படுதலைக் காணலாம். இவ்வாறே ‘கூறுவான்’, ‘வாருவான்’ போன்ற சொற்கள் ‘கூற்வான்’, ‘வார்வான்’ என்று ஓரசை குறைவாக ஒலிக்கப்படுகின்றன. வேறு மொழிகளிலும் இத்தகைய வேறுபாடுகள் உள்ளன. ஆங்கில மொழியில் Predatory என்ற சொல், t, r, ஆகிய ஒலிகளுக்கு இடையே உயிரின்றி மூவசைச் சொல்லாகவும், உயிரிட்டு நாலசைச் சொல்லாகவும் ஒலிக்கப்படுகிறது. Bottling brightening போன்ற சொற்களில் உள்ள லகர, னகரங்களைச் சிலர் தனி அசைகளாக ஒலிக்கின்றனர். எனவே அவர்கள் உச்சரிப்பின்படி இவை மூவசைச் சொற்களாகின்றன.
அசை எல்லை
சொற்களில் உள்ள அசைகளின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது போன்றே, அவ்வசைகளின் எல்லைகளை வரையறை செய்வதிலும் வேறுபாடு உள்ளது. தமிழில் ‘ய்’, ‘ர்’, ‘ழ்’ ஆகிய மெய்களை அடுத்து வரும் இரட்டித்த அடைப்பொலி மும்மெய் வரிசையை உண்டாக்கும். இவ்விடங்களில் அசை எல்லையை வரையறுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். சிலர் அடைப்பொலிகளுக்கு இடையில் வரவேண்டிய எல்லையை இடையினத்தை அடுத்து இருப்பதாக உணர்வர். ‘வாய்ப்பு’, ‘வார்ப்பு’ ‘வாழ்த்து’ போன்ற சொற்கள், ‘வாய்ப்-பு’, ‘வார்ப்-பு’, ‘வாழ்த்-து’ என்று பகுக்கப்படுதற்கு மாறாக ‘வாய்-ப்பு’, ‘வார்-ப்பு’, ‘வாழ்-த்து’ என்று தவறாகப் பகுத்துணரப்படுகின்றன. இவ்வாறு பார்க்கும்போது சொற்களின் அசை எண்ணிக்கையில், அசையாகும் ஒலியில், அசையின் எல்லையில் கருத்து வேறுபாடு இருப்பதை உணரலாம். எவ்வாறு இருப்பினும் ஒரே மொழி பேசும் மக்களிடையே சொற்களின் அசை எண்ணிக்கையைப் பொறுத்தவரை வேறுபாடு மிகவும் அருகியே காணப்படும். இது, மொழியில் அசைகள் உண்மையானவை, அவை ஏதோ ஒரு கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளன என்பவற்றை வலியுறுத்துகிறது.
அசைச் சொற்கள்
அசையை விளக்கத் தெளிவானதொரு கொள்கையைப் படைக்கவேண்டுமெனில் முதலில் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட அசை எண்ணிக்கை, எல்லை ஆகியவற்றை உடைய சொற்களை எடுத்துக்கொண்டு அவற்றின் அசைகளை உறுதி செய்யும் விதிமுறைகள் யாவை என்று ஆராய வேண்டும். பிறகு வேறுபாடு உடையனவாகக் கருதப்படும் அசைகளை உடைய சொற்களை எடுத்துக் கொண்டு, அவ்வேறுபாட்டிற்குக் காரணம் என்ன என்று ஆராய வேண்டும். இவ்வாறு பார்க்கும்போது அசைகளை வரையறை செய்வதில் ஒலிகளில் இயல்பாகவே உள்ள ஒலிமுழக்கம் (Sonority) இன்றியமையாப் பங்கினைப் பெறுதலைக் காணலாம். ஒலிமுழக்கம் என்பது, ஓர் ஒலியின் ஒப்புமைச் சத்தம் (Relative loudness) ஆகும். அதாவது ஓர் ஒலி அதே போன்ற நெடிற்றன்மை, அழுத்தம் (Stress), தாயி (Pitch) ஆகியவற்றைக் கொண்ட மற்ற ஒலிகளுடன் ஒப்பிடும் போது அவ்வொலிக்கு உள்ள சத்தத்தின் அளவாகும்.
ஒலி முழக்கக் கொள்கை
‘அ’, ‘இ’, ‘உ’, ‘எ’, ‘ஒ’, ஆகிய உயிர்களை ஒப்பிட்டுப் பார்த்தால், ‘அ’ மற்ற உயிர்களை விட அதிக முழக்கம் உள்ளதை அறியலாம். சற்றுத் தொலைவில் உள்ள ஒருவரை இவ்வுயிரொலிகளை ஒரே சீராக ஒலிக்கச் சொல்லிக் கூர்ந்து கேட்டால், ‘அ’ மற்ற உயிரொலிகளை விடத் தெளிவாகக் கேட்பதை உணரலாம். பிறகு ‘எ’, ‘ஒ’,க்களும், அடுத்து ‘இ’, ‘உ’க்களும் தெளிவு பெறும். இது அவ்வவ்வொலிகளின் உணர்வுரப்பினைப் (Acoustic intensity) பொறுத்துள்ளது. ஒலிகளின் முழக்கத்தை அவற்றின் உணர்வுரப்பின் அடிப்படையில் கருவிகளின் உதவியால் கண்டறியலாம். ஒரேமாதிரியான நெடுமை, அழுத்தம், தாயி ஆகியவற்றைக் கொண்ட பேச்சொலிகளின் ஒப்பீட்டு முழக்கத்தை அடியில் உள்ள பட்டை வரைபடத்தில் காணலாம்.
பேச்சொலி முழக்கம் - ஒப்பீடு
உயிரொலிகள், மெய்யொலிகள் அனைத்தையும் விட முழக்கமுடையவை. மெய்யொலிகளில் லகர, ரகரங்களே அதிக முழக்கமுடையவை. அவற்றை அடுத்து மூக்கொலிகள் வருகின்றன. இம்மெய்யொலி முழக்கம் ஓரளவிற்கு ஒத்தநிலையுடையது. எஞ்சியவற்றில் உரசொலிகள் தவிர மற்ற ஒலிகளின் முழக்கம் மிகமிகக் குறைவு. அடைப்பொலிகளில் குரலொலியே மிகக் குறைந்த முழக்கம் கொண்ட ஒலியாகும்.
முழக்கத்தின் அடிப்படையில் அசைகளை வரையறை செய்வது முழக்கக் கொள்கை (Sonority theory) எனப்படும். இதன்படி இரு மிகக் குறைந்த முழக்கமுடைய ஒலிகளுக்கு இடையில் அமையும் ஒலித் தொகுப்பே அசையாகும். இக்கொள்கை பெரும்பாலான சமயங்களில் ஒத்துவந்தாலும் ஒருசில இடங்களில் தடுமாற்றத்தை விளைக்கிறது. எடுத்துக்காட்டாக ‘ஸ்பா’ என்று ஒரு சொல் இருப்பதாகக் கொள்வோம். இச்சொல்லில் ‘ல’கரத்தை அடுத்து ஒலிமுழக்கம் குறைந்த பகரம் இருக்கிறது. எனவே ‘ஸ’கரம், அகரம் இரண்டும் தனித்தனியாக இரண்டு ஒலிமுழக்கம் உள்ள ஒலிகளாகக் கொள்ளப்படவேண்டி உள்ளன. எனவே, இக்கொள்கைப்படி இதை ஈரசைச் சொல்லாகக் கருதவேண்டும். ஆனால் நடைமுறை வழக்கின்படி இஃது ஓரசைச் சொல்லாகவே உள்ளது. இவ்வகை எதிர்ப்பாட்டினைத் தவிர்க்க மூச்சுத் துடிப்புக் (Chest pulse theory) கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மூச்சுத் துடிப்புக் கொள்கை
இக்கொள்கையின்படி நாம் பேசும்போது வெளியிடும் மூச்சுக் காற்றில் விளையும் அளவு மாற்றம் ஒவ்வொன்றும் ஒவ்வோர் அசையை உண்டாக்கக் காரணமாக உள்ளது என்பது கூறப்படுகிறது. ஆர்.எச். இசுடெட்சன் என்பவர் இக்கொள்கையை வெளியிட்டார். ஒவ்வோர் அசை உண்டாகும் போதும் விலா எலும்புகளுக்கு இடையே உள்ள தசைகள் ஒருமுறை சுருங்கி, மூச்சுக் காற்றின் வெளியேற்றத்தைத் தனித்தனிப் பந்துகள் உருண்டு வருவதைப்போல் செய்கின்றன. அல்லது இவ்வுருண்டைகளே அசைகளின் தோற்றத்திற்குக் காரணமாக உள்ளன. எனினும் இக்கொள்கையை வலுப்படுத்தும் அளவிற்கு ஆய்வு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
மேலே கண்டவற்றிலிருந்து அசைகளை வரையறை செய்ய இரு கொள்கைகள் உள்ளன என அறியலாம். அவற்றில் ஒன்று ஒலியின் முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இஃது ‘ஒலிமுழக்கக் கொள்கை’ எனப்படும். மற்றது மூச்சுக்காற்று வெளிப்படும் போது விலாத்தசைகளின் இயக்க மாறுபாட்டின் அடிப்படையிலானது. இது ‘மூச்சுத்துடிப்புக் கொள்கை’ எனப்படும். இவ்விருகொள்கைகளும் சேர்ந்தே அசைகளை வரையறை செய்ய உதவுகின்றன.
அசை உறுப்புகள்
அசைகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒலிகளால் ஆனவை. அசையின் முதன்மையான உறுப்பு அசைமுகடு (Peak) அல்லது கரு (Nucleus) எனப்படும். இதுவே அசையின் அதிக முழக்கமுள்ள ஒலியாகும். இது பெரும்பாலும் உயிரொலியாகயே இருக்கும். ஒரு மூச்சுத்துடிப்பின்போது உண்டாக்கப்படும் ஒலிக்குழுவில் உயிரொலி இல்லை எனில், அக்குழுவில் உள்ள அதிக அளவு முழக்கம் உள்ள மெய்யொலி அசை முகடாக இருக்கும். இம்மெய்யொலி அசை மெய் (Syllabic consonant) எனப்படும். ஒரே மூச்சுத் துடிப்பின்போது ஒன்றிற்கு மேற்பட்ட உயிரொலிகள் உண்டாக்கப்பட்டால், இவற்றில் அதிக முழக்கம் உள்ளது அசை முகடாக இருக்கும். மற்ற உயிரொலி(கள்) அசையில் உயிர்(கள்) (Non-syllabic vowel) எனப்படும். அசை முகட்டிற்கு முன் ஒலிகள் அசைமுன்னி (Onset) என்றும், அசை முகட்டிற்குப் பின் உள்ள ஒலிகள் அசை முடிப்பி (Coda) என்றும் சொல்லப் பெறும். ஓர் அசையில் முகடு கட்டாயமாக இருக்கும். முன்னி, முடிப்பிகள் அசையில் இன்றியமையா உறுப்புகளல்ல. இவை இல்லாமலும் அசைகள் காணப்படும். முடிப்பியோடுள்ள அசை மூடசை (Closed syllable) என்றும், முடிப்பி இல்லாத அசை திறந்த அசை (Open syllable) என்றும் வழங்கப் பெறும். கீழே சில சொற்கள் அசை பிரித்துக் காட்டப் பெற்றுள்ளதைக் காணலாம். ::{|
மரபிலக்கணம் அசையைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் குறிப்பிடும். இஃது எழுத்துகளால் ஆக்கப் பெற்றுச் சீருக்கு அடிப்படையாக அமைவது. எழுத்து- கள் ஒன்றோடொன்று சேர்க்கப்படுவதால் - அசைக்கப்படுவதால் - அசை என்பது காரணப் பெயராகும்.
அசை, நேரசை நிரையசை என இரண்டு வகைப்படும். குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் அமையுமாதலின் நேரசை நான்கு வகையில் உருவாகும். ழி, ஆ, வெள், வேல் என்பன முறையே நேரசை வகை நான்கனுக்கும் எடுத்துக்காட்டுகளாகும். குறில் இணைந்தும், குறில் இணைந்து ஒற்றடுத்தும். குறில் நெடில் இயைந்தும், குறில் நெடில் இயைந்து ஒற்றடுத்தும் அமையுமாதலின் நிரையசையும் நான்கு வகையில் உருவாகும். வெறி, நிறம், சுறா, விளாம் என்பன முறையே நிரையசை வகை நான்கனுக்கும் எடுத்துக் காட்டுகளாம்.
சொல்லின் முதலில் குறில் தனித்து நின்று நேரசையாகாது. வெறி என்பதில், வெ தனியே நேரசையாகாது. அது அடுத்துள்ள குறிலைச் சேர்ந்து நிரையசையாகும். சொல்லின் முதலில் நின்ற எழுத்துக் குறிலாக அமைந்து, அடுத்த எழுத்து ஒற்றெழுத்தாக இருந்தால், அப்போது குறில் ஒற்றடுத்து வந்த நேரசையாகும். தொடக்கத்தில் ‘விட்டிசை’ அமைந்தால், அப்போது தனிக்குறில் பின்வரும் எழுத்தோடு சேராது நேரசையாகும். ‘அ, ஆ இழந்தான் என்று எண்ணப்படும்’ என்பதன்கண், அ, ஆ நேர், நேர் என அலகிடப்பெறும்.
அலகிடுங்கால் செய்யுளில் ஒற்றும் குற்றுகரமும் அலகு பெறமாட்டா. அவ்வகையில் நேரசை நிரையசைகளில் வரும் ஒற்றினை நீக்கிக் காண, நேர் ஓரெழுத்தசையாகவும் நிரை ஈரெழுத்தசையாகவும் அமையும்.
நேர் நிரையாகிய அசைகள் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் கூடச் சீர் என்றும் செய்யுளுறுப்பு உண்டாகிறது. ஈரசைச்சீர் முதலாகச் சீர்கள் அமைகின்றபோது, அவற்றிற்குத் தேமா முதலான வாய்பாடுகளால் பெயர்கள் குறிக்கப்படுகின்றன, ஒரே எழுத்து சொல்லாவது போல, ஒரே அசை சீராக அமையும் இடமும் உண்டு. அஃது அசைச்சீர் எனப்படும். வெண்பாவின் ஈற்றிலும், ஒரோவழி ஆசிரியப்பாவின் இடையிலும் ஓரசைச் சீர் இடம்பெறும். வெண்பா ஈற்றில் ஓரசைச்சீர் வருங்கால் நேராயின் ‘நாள்’ என்றும், நிரையாயின் ‘மலர்’ என்றும் வாய்பாடு கொள்ளப் பெறும்.
தொல்காப்பியர் அசையினை விளக்கும்போது நேர்நிரை என்பவற்றோடு, அவற்றின் வேறாக நேர்பு நிரைபு என்னும் இரண்டு அசைகளைக் குறிப்பிட்டுள்ளார். நேரசை நிரையசைகளுக்கு இயலசை எனவும், நேர்பசை நிரைபசைகளுக்கு உரியசை எனவும் வேறு பெயர் சுட்டியுள்ளார். குறி்ல் தனித்து வரும் நேரசை வகை நீங்க, எஞ்சிய மூன்றினோடும், நிரையசை வகை நான்கினோடும் குற்றியலுகரம் அல்லது முற்றியலுகர எழுத்து தனித்தனியே சேர்வதால் நேர்பு நிரைபு அசைகள் உண்டாகின்றன. யாப்பருங்கலம் யாப்பருங்கலக் காரிகை தோன்றிச் செல்வாக்குப் பெற்ற பின்னர், இவ்வாறு யாப்பில் நேர்பு, நிரைபு என்று அசை கொள்ளும் தொல்காப்பிய மரபு அருகியது. பிற்கால யாப்பிலக்கணங்கள், நேர் நிரை என்னும் இருவகையாக அசை கொள்ளும் முறையினையே பெரிதும் போற்றி வந்துள்ளன.
துணை நூல்கள்
Abercrombie, D., “Elements of General Phonetics”. Edinburgh, 1967.
Bell, A. and Hoope, l.B., “Syllable and Segment”, New York, 1978.
Ladefoged. P., “A course in General Phonetics”, New York, 1975.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 190)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gfxzftaq/
தமிழ்“அசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gfxzftaq/APA
Oliyon Research. (2026). அசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gfxzftaq/MLA
"அசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gfxzftaq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment