இது உடற்குழியற்ற (acoelomatic) இரு பக்கச் சமச் சீருடைய (bilaterally symmetrical) தட்டையான, கண்டப் பகுப்பற்ற (unsegmented) விலங்கினச் சிறுபான்மைத் தொகுதியைச் சேர்ந்த புழுவாகும். இது பொதுவாக ரிப்பன் புழு அல்லது துதிக்கைப் புழு என்றும் குறிக்கப் படும். குளிர்ச்சியான பகுதிகளில் மிகுந்து காணப் படும் இப்புழு, பெரும்பாலும் கடலிலேயே காணப் படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இப்புழுவிற்குத் தனியான தலை இல்லை. முன் முனை கூர்மையாகவும், பின் முனை சற்றுக் குறுகியும் இருக்கும். உடல் கண்டப் பகுப்பற்று இருப்பினும், உள் பகுதி போலிக் கண்டப் பகுப்புடன் (pseudo metamerism) காணப்படுகிறது. முன் முனை தலைக் கண்களையும், தலைப் பள்ளங்களையும் கொண்ட தலைக் கதுப்பு (head lobe) எனப் படும். தலைக் கதுப்பில் 200 அல்லது மேற்பட்ட பக்க வாட்டில் அமையப் பெற்ற கண்கள் உள்ளன. வாய்க்கு மேல் புறத்தில் உள்ள ஒரு துளை வழியாக, துதிக்கை போன்ற உறுப்பு வெளியே வரக் கூடிய அமைப்பைப் பெற்றுள்ளது. ஒரு குழியில் அமைந்துள்ள இது தொடு உணர்ச்சி உறுப்பாகவும், இரையைப் பிடிக்கவும், தற்காப்பிற்கும் பயன் படுகிறது. இதன் முன் முனை திறந்தும், பின் முனை மூடியும் உள்ளன. நெமர்டீனியாப் புழுவிற்கு உண்மையான உடற் குழியும், சுவாச உறுப்புகளும் இல்லை. உடல் வெற்றிடங்கள் ஜெல்லி போன்ற மீசன்கைமாவினால் (mesenchyma) நிரப்பப் பட்டுள்ளன. குடல் நேராகவும், முழுமையாகவும், பக்க வாட்டுப் பிதுக்கங்களைப் பெற்றும், உள்ளது. இதன் பின் முனையில் மல வாய் உள்ளது. மூடிய குருதி ஓட்ட மண்டலம் ஒரு நடு முதுகுப் பக்கக் குழாயையும், இரண்டு பக்க நீள் வாட்டுக் குழாயையும் பெற்றுள்ளது. ஆங்காங்கு, குறிப்பிட்ட இடங்களில் உள்ள குழாய்களைப் பெற்ற கழிவு நீக்க மண்டலம் உள்ளது. இக்குழாய் ஒவ்வொன்றும் சுடர்ச் செல்களில் (flame cells) முடிவடையும். நரம்பு மண்டலம் 4 கதுப்புகளை உடைய முனையையும், துதிக்கையைச் சுற்றியுள்ள நரம்பு வளையத்தையும், இரண்டு நீள் வாட்டு நரம்புகளையும் பெற்றுள்ளது. மூளையுடன் இணைந்து, ஓர் இரட்டைக் குறு இழைப் பள்ளங்கள் உள்ளன. இவை தொடு உணர்ச்சி உறுப்பாகவும், வேதி உணர்வு உறுப்பாகவும் செயல் படுகின்றன. நெமர்டீனியா வகைப் புழுவில் ஆண், பெண் உயிரிகள் தனித் தனியாக உள்ளன. சில உயிரிகளில் இரு பாலிகளாக (hermaphrodite) உள்ளன. இன உறுப்புகள் மீசன்கைமாவிலிருந்து உண்டாகி, குடல் பிதுக்கங்களுக்கிடையில் வட்டமான பைகளாக உள்ளன். இவ்வுறுப்புகள் நாளங்களற்றுக் காணப் படுகின்றன. இப்புழுவிற்கு நேர்முக வளர்ச்சி உண்டு. சில சமயங்களில் இதன் வாழ்க்கையில், நீர் மேற்பரப்பில் நீந்தி வாழும் வேற்றிளவுயிரி இடம் பெறுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> துண்டாக்கப்பட்டு (fragmentation), அவற்றிலிருந்து முழு உயிரி வளரும் முறை (asexual reproduction) பொதுவாக நடை பெறுகிறது. 700 இனங்களாகப் பரவி இருந்தாலும், அவை அனைத்தையும் உள்ளடக்கி 2 வகுப்புகளாகவும், 4 வரிசைகளாகவும் இப்புழு பிரிக்கப் பட்டுள்ளது. அனோப்லா (Anopla) என்னும் முதல் வகுப்பில் அடங்கும் உயிரிகளில் துதிக்கை, குத்தூசி போன்ற துணை அமைப்புகள் இல்லை. வாய், மூளைக்குப் பின்னால், குடல் பிதுக்கங்களற்றுக் காணப் படுகிறது. உள், வெளித் தசை அடுக்கு நீளமாகவும், நடு அடுக்கு வட்ட இழைகளை உடையதாகவும் இருக்கின்றன. இவ்வகுப்பில் கீழ் வரும் பாலியோ நெமர்ட்டினி என்னும் வரிசையில் அடங்கும் உயிரிகளில், உடல் சுவர்த் தசைகள் 2 அல்லது 3 அடுக்குகளைப் பெற்றுள்ளன. உள் அடுக்கு வட்ட இழைகளை உடையது. பொதுவாகக் கண்கள் இருப்- பதில்லை. எ–டு: டியுபுலானஸ் (Tubulanus), செபலோதிரிக்ஸ் (Cephalothrix), காரினோமா (Carinoma). ஹெட்டிரோ நெமர்ட்டீனி எனும் இரண்டாம் வரிசையில் அடங்கும் உயிரிகளில், கீழ்த் திசை அடுக்கு நீள் இழைகளைப் பெற்றது. இவ்வுயிரிகளில் கண்கள் இருக்கும். எ.கா. லினியஸ் (Leneus), மைக்ரூரா (Micrura), செரிப்ராடுலஸ் (Cerebratulus). இரண்டாம் வகுப்பான இநோப்லாவில், துதிக்கையுடன் குத்தூசிகள் போன்ற அமைப்புகள் இருக்கும். வெளியே வட்ட இழைகளையும், உள்ளே நீள் இழைகளையும் உடைய தசை அடுக்கு காணப் படும். இவற்றின் குடலில் பிதுக்கங்கள் இல்லை. இவ்வகுப்பில் ஹாப்லோ நெமர்ட்டீனி என்னும் வரிசையும், டெல்லோ நெமர்ட்டீனி என்னும் வரிசையும் அடங்கும். ஹாப்லோ நெமர்ட்டீனி வரிசையில் உள்ள உயிரிகளுக்குக் குத்தூசி அமைப்புடன், துதிக்கை உள்ளது. குடல் நேராகவும், இணையான பக்கவாட்டுப் பிதுக்கங்களைப் பெற்றுமுள்ளது. வாய், மூளைக்கு முன் புறம் அமைந்துள்ளது. எ–டு: புரோஸ்டோமா (prostoma), பாராநெமர்ட்டீஸ் (Paranemertes) டெல்லோ நெமர்ட்டீனி என்னும் வரிசையில் அடங்கும் உயிரிகளுக்குத் துதிக்கையில் குத்தூசி போன்ற அமைப்பு இல்லை. குடல் பிதுக்கங்களற்றுக் காணப்படும். இவை அனைத்தும் ஒட்டுறுப்புகளைக் கொண்ட ஒட்டுண்ணிகளாக உள்ளன. ௭–டு: மாலக்கோ டெல்லா (Malacodella). நெமர்ட்டீன் பொது அமைப்பில் தட்டைப் புழுவை ஒத்திருக்கிறது. ஆனால், மல வாய், துதிக்கை, குருதிக் குழாய் மண்டலம் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் தன்மையில் இது தட்டைப் புழுவை விட உயர் நிலையில் காணப் படுகிறது. லினியஸ் (leneus) என்னும் உயிரி அனைத்து நாடுகளிலும் வாழும். இதன் உடல் மிக மிக நீளமாக நாடா போன்று சுருங்கும் தன்மையுடையது. இதன் தலை சற்று அகலமாகவும், கண்களைப் பெற்றும், ஓர் இரட்டைப் பக்கவாட்டு உயர் பள்ளங்களைப் பெற்றும் இருக்கும். இவ்வுயிரியினால் நீந்தி வாழ முடியாது. ஆனால், இதன் உடல் ஒழுங்கற்ற முறையில் முறுக்கிக் கொண்டிருக்கும். இதற்கு வியத்தகு முறையில் இழப்பு மீட்டல் தகுதி அமைந்துள்ளது. மேலும், மிதமான தட்ப வெப்ப நிலையில் துண்டாக்கப் படுதல் மூலம் இனப் பெருக்கம் நடை பெறுகிறது. செரிப்ராடுலஸ் (cerebratulus) என்பது அனைத்துக் கடலிலும் வாழும் புழுவாகும். இது நீளமான, தட்டையான பக்க விளிம்புகளையுடைய உடலமைப்பைப் பெற்றது. இதனால், நீந்துவது எளிதாகிறது. பொதுவாகக் கண் இருப்பதில்லை. வெற்றிடமாக, மெல்லுடலிகளின் ஓட்டில் அடிக்கடி இது தங்கும். இதன் தலைப் பகுதி 3 முன் பக்க உறுப்புகளையும், தலைப் பக்கப் பள்ளங்களையும் பெற்றுள்ளது. துதிக்கை மிக நீளமாக இருக்கும். மூளை நரம்புச் செல் திரள் பெரியதாக இருக்கும் —வெ. கிரிஜாபாய்