தேவையான பொருள்களை வெளியிலிருந்து பெறுவதும், உண்டாக்கும் பொருள்களை வெளியேற்றுவதும், செல்லின் பணியாகும். இவ்விதம் செல்லுக்கும், அதைச் சூழ்ந்துள்ள பகுதிக்கும் ஏற்படும் பரிமாற்றம் செல்லின் பிளாஸ்மா சவ்வின் வழியாகவே நடை பெற வேண்டியுள்ளது. இதை, செல் ஊடுருவல் (cell permeability) என்பர். இவ்விதப் பரிமாற்றம் பல வழிகளில் நடை பெறுகிறது. பரவுதல். பரவுதல் (diffusion) மூலம் கரைந்துள்ள பொருள் அடர்வு மிகுந்த பகுதியிலிருந்து, அடர்வு குறைந்த பகுதிக்குத் தானாகவே நகர்கிறது. நீர், ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு போன்றவை இவ்வாறு செல்லினுள் அல்லது அதற்கு வெளியே பிளாஸ்மா சவ்வில் புகுந்து செல்கின்றன. பரவுதல் மூலம் ஒரு பொருள் செல்லின் உட்புக, செல் தன் ஆற்றலைப் பயன் படுத்தத் தேவையில்லை; ஆனால், தன்னைச் சுற்றியுள்ள திசு நீர்மத்தில் அப்பொருள் அடர்வு மிகுந்திருக்க வேண்டும். இவ்விதம் பிளாஸ்மா சவ்வின் வழியாகப் பரவுதல் மூலம் புகுவதற்குப் பொருளின் பல பண்புகள் காரணமாகின்றன. 1. சவ்வின் வழியாகப் பரவுவது பொருளின் மூலக் கூறு எடையைப் பொறுத்தது; கூடுதலான எடை இருப்பின், குறைந்த விகிதத்தில் ஊடுருவும்; 2. அப்பொருள் எண்ணெய், கொழுப்பு போன்றவற்றில், கரையும் தன்மை கொண்டது. அது மிகுதியாகக் கரையுமெனில், மிக எளிதாகச் செல்லின் உள்ளேயோ, வெளியேயோ நகரும். சான்றாக, எத்தனால் (சாராயம்), யூரியா இரண்டுமே அதிக வேறுபாடு அற்றவை; ஆயினும், யூரியாவை விட 100 மடங்கு மிக விரைவில் செல்லும்; 3. அயனியின் மின் திறன் உள்ளவற்றை விட மிக எளிதில் உட்புகும்: 4. இறுதியாக மூலக் கூற்றின் வடிவம், உட்புகும் விகிதத்தை அறுதியிடுகிறது; உருண்டை வடிவ மூலக் கூறுகள், மிகவும் சமச் சீர்மையற்ற (asymmetric) மூலக் கூறுகளை விட, மிக விரைவில் சவ்வின் ஊடே பரவும். பிளாஸ்மா சவ்வின் உள்ளே அமைந்திருக்கும் பரிமாற்ற அமைப்புகள், பொருள்களின் இயக்கத்தை மிகவும் தேர்ந்தெடுத்த முறையில் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு போக்குவரத்து அமைப்பும், ஒரு செல்லின் ஆக்கச் சிதை மாற்றத்துக்கு மிகவும் இன்றியமையாத, குறிப்பிட்ட தனிம அயனி அல்லது கரிம மூலக் கூறு அல்லது கரிம மூலக் கூறுகளின் தொகுதிகள் இவற்றுக்குப் பொருத்தமாக இருக்கும். சவ்வின் உட்பகுதியில் இத்தேர்ந்தெடுக்கும் திறன் அடங்கியுள்ளது. பரிமாற்றம் என்பது பொதுவாகச் செல்லின் செயல்பாடு (active) அல்லது எந்த வித முயற்சியும் இல்லா நிலைமையிலேயே (passive) நிகழும். தானாகவே நடைபெறும் பரிமாற்றம். இதுவும் பரவுதலைப் போன்று அடர்வு மிகுந்த பகுதி பிளாஸ்மா சவ்வின் ஒரு புறத்திலும், அதை விட அடர்வு குறைந்த பகுதி மற்றொரு புறத்திலும் இருப்பதால் நிகழ்கிறது. இது பரவுதலை விடக் கீழ்க் காணும் வகைகளில் வேறு படுகிறது: 1. தானாக நடைபெறும் பரிமாற்றம் பரவுதலை விட மிக விரைவாக நிகழ்கிறது. பிளாஸ்மா சவ்வில் அமைந்துள்ள சில சுமை தூக்கி (carrier) அமைப்புகளே இத்தகைய கூடுதலான இயக்கத்துக்குக் காரணம் ஆகும். சுமை தூக்கிகள் என்பவை பிளாஸ்மா சவ்வின் உள் அமைப்பின் ஒரு பகுதியான புரதங்கள் ஆகும். இவை எவ்விதம் பணியாற்றுகின்றன என்பது சரியாகப் புலனாகவில்லை. இப்புரதங்கள், தம் வழியாகக் கால்வாய்களை உண்டாக்கி, கொழுப்பு இரட்டை அடுக்கு (lipid bilayer) அமைந்த சவ்வைக் கடக்க உதவும் கொள்கை, இப்போது குறிப்பிடப் படுகிறது. இத்தகைய பரிமாற்றம் உள்ளேயும், வெளியேயும் நிகழ்கிறது. 2. மேலே கூறிய வகையில் அடர்வு மிகுந்த புறத்திலிருந்து, அடர்வு குறைந்த புறத்திற்குப் பொருள் நகர்கிறது. அடர்வு அதிகரிக்க, பொருளின் போக்குவரத்தும் விரைந்து கூடுகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அடர்வு அதிகரித்தால், பரிமாற்றம் அதிகரிப்பதில்லை. ஏனெனில், சுமை தூக்கிகள் அனைத்தும் இப்பணியில் ஈடுபடுத்தப் பட்டு விட்டதால், மேன்மேலும் பொருளை எடுத்துச் செல்லத் தூக்கிகள் இருப்பதில்லை. 3. சுமை தூக்கிகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டுமே எடுத்துச் செல்லும், சான்றாக, குளூக்கோசை எடுத்துச் செல்லும் தூக்கி, ஓர் அமினோ அமிலத்தைக் கொண்டு போகாது. ஆனால், அதுவே குளூக்கோஸ் போன்ற வேதி அமைப்புள்ள (மூலக் கூறு அமைப்புள்ள) காலக்டோஸ் அல்லது ரிபோஸ் போன்ற சர்க்கரைப் பொருள்களை எடுத்துச் செல்லும், அதாவது, ஒரே வகையான வேதி அமைப்புள்ள பொருள்கள் சுமை தூக்கியின் பற்றும் இடங்களுக்குப் (binding sites) போட்டியிடுகின்றன. செல்லின் செயல்பாட்டால் நிகழும் பரிமாற்றம். முன் கூறியவை போன்று அல்லாமல், இதில் செல் தனக்குத் தேவையான குறிப்பிட்ட மூலக் கூறுகளை திசு நீர்மத்தில், அவை மிகக் குறைந்த அடர்வில் இருந்த போதும் கூடத் தனக்குள் எடுத்துக் கொள்கிறது. அதாவது, அடர்வு குறைந்த பகுதியிலிருந்து, அடர்வு மிகுந்த பகுதிக்குப் பொருள் எடுத்துச் செல்லப் படுகிறது. இதன் மூலம், செல் தன் புரோட்டோப்பிளாசத்தில் சில வகை அயனிகள், உணவு மூலக் கூறுகள் போன்றவற்றின் அடர்வை எப்போதும் ஒரே அளவில் வைத்திருக்க முடிகிறது. தானாகவே நடை பெறும் பரிமாற்றத்தைப் போலவே, செல்லின் செயல்பாட்டால் நிகழும் பரிமாற்றமும் சுமை தூக்கிகளாலேயே நடை பெறுகிறது. ஆயினும், பின் கூறப்பட்டதற்குச் செல் தன் ஆற்றலைப் பயன் படுத்த வேண்டியுள்ளது. ATPஐக் கொண்டே, சுமை தூக்கிகளின் மூலம், இவ்வகைப் பரிமாற்றம் நிகழும். ATPஐத் தடுப்பான்களாக (inhibitors) ஃபுளூரைடு, ஆர்செனேட், சயனைடு போன்றவற்றைப் பயன்படுத்தி, ATP உண்டாவதைத் தடுத்தால், செயல்பாட்டால் நிகழும் பரிமாற்றம் நடை பெறுவதில்லை. பெரும்பாலும் ATP வடிவில், ஆற்றலைப் பயன் படுத்தும் சுமை தூக்கி அமைப்புகள், செல்லினுள் இருக்கும் பொருள் அடர்வு குறைந்திருப்பின், அடர்வு மிகுந்ததாக்கி விடும். சான்றாக, சூழ்ந்துள்ள நீர்மத்திலிருப்பதைப் போல் அமினோ அமிலங்களின் அடர்வு 300 மடங்கு கூடுதலாகச் செல்லுக்குள் இருக்கும் போதும் கூடச் சில வகைச் செல்கள் மேன் மேலும், அமினோ அமிலங்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதைக் காண முடியும். தானாகவே நடை பெறும் பரிமாற்றத்தைப் போல் அல்லாமல், செயல்பாட்டால் நிகழும் பரிமாற்றத்தின் போது, மூலக் கூறுகளும், அயனிகளும் பிளாஸ்மா சவ்வின் ஊடே ஒரே திசையில் மட்டுமே நகர்கின்றன. இது ஏற்றி இறக்கல் (pumping) எனப்படும். பெரும்பாலும், ஏற்றி இறக்கல் செல்லின் வெளிப் புறத்திலிருந்து உள்ளே செல்லும் திசையில் இருப்பினும், எதிர்த் திசையில் வேலை செய்கின்றன. சோடியம் அயனி இவ்விதம் சோடியம் அயனிகளைச் செல்லிலிருந்து வெளியேற்றுகிறது. செயல்பாட்டால் நிகழும் பரிமாற்றத்தில் அனைத்து அமைப்புகளும், மூன்று பகுதியாக உள்ளன. அவை: எடுத்துச் செல்ல வேண்டிய பொருள் பிளாஸ்மா சவ்வின் பரப்பில் உள்ள ஒரு புரதத்துடன் இணைதல், பிளாஸ்மா சவ்வின் குறுக்கே அப்பொருள் எடுத்துச் செல்லப் படுதல், ஆற்றல் இணைப்பு (energy coupling) மூலமாக ஆக்கச் சிதை மாற்றத்திலிருந்து பெறப் படும் ஆற்றலைப் (metabolic energy) பயன் படுத்தி, அடர்வு வேறுபாட்டுக்கு எதிராக, ஒரே திசையில் பரிமாற்றம் ஏற்படச் செய்தல் என்பன. —சோம. பேச்சிமுத்து