சட்டமியற்றும் அதிகாரம் சட்ட மன்றத்திற்குத்தான் உண்டு என்ற போதிலும் நடைமுறையில் ஆட்சிநிருவாக அங்கங்களுக்குச் சட்டம் இயற்றும் பணியை மேற்கொள்ளவேண்டிய இன்றியமையாமை ஏற்படுகிறது. சட்டமியற்றும் அதிகாரத்தைச் சட்டமன்றம், அதனால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலமாக, அரசுக்கும் அரசு ஆட்சி நிருவாக அங்கத்திற்கும் மற்றும் மேலாண்மைத் துறை முகவர்களுக்கும் வழங்குகிறது. அவ்வாறு சட்டமன்றம், ஆட்சி நிருவாக அங்கத்திற்கும் மற்றைய நிருவாகத்துறை முகவர்களுக்கும் சட்டத்தின்மூலம் சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்குதல், அதிகார அளிப்பு (Deligation of Power) எனப்பெயர் பெறும். தொடக்கக் காலத்தில் மக்கள் மிக மோசமான சூழ்நிலையில் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி வாழ்ந்து வந்தார்கள். தங்கள் உடைமைகளையும் உயிர்களையும் பாதுகாக்க வேண்டி, அவற்றைப் பாதுகாக்கும் தகுதி படைத்த ஒருவரிடம் சமூதாய ஒப்பந்தம் (Social Contract) செய்துகொண்டனர். அவ்வொப்பந்தப்படி, அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கினர். அதிகாரம் பெற்ற அவர் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஒப்பந்தப்படி அவர் அதிகாரம் எல்லையற்றது; முடிவில்லாதது; எல்லா வல்லமையும் பெற்றது. இவ்வாறு ஆப்சு (Hobbes Thomas, 1588–1679), அதிகாரம் மக்களால் சமுதாய ஒப்பந்தத்தின் மூலமாக ஒரு ஆற்றல் வாய்ந்த மனிதனுக்கு அளிக்கப்பட்டதென்று கூறுகிறார். இலாக்கு (Locke, John, 1632–1704) என்பவர் மக்கள், அதிகாரத்தை ஆற்றல் பெற்றவரிடத்தில் ஒப்படைத்தாலும் அவர் தகுதியற்ற நிலையை அடைவாரானால் அவரை நீக்கும் உரிமையை மக்களே பெற்றிருந்தார்கள் என்று கூறுகிறார். உருசோ (Rousseau, Jean Jacques, 1712–78), ‘ஒவ்வொரு மனிதனும் அவனே ஆட்சி செய்பவனும், ஆளப்படுபவனுமாவான்’ என்று கூறுகிறார். மேலும், தனிப்பேரரசாண்மை மக்களிடமே உறைந்து இருந்தது என்றும், அதை மக்கள் தங்களைப் பாதுகாக்கும் ஒருவரிடம் சமுதாய ஒப்பந்தத்தின் வாயிலாக அளித்தார்கள் என்றும் அவர் கூறுகிறார். ஒப்பந்தத்தின் வாயிலாக அவருக்கு அனைத்து அதிகாரங்களும் அளிக்கப்பட்டன. ஆனால், அவர் தம் கடமைகளை நிறைவேற்றத் தவறினால் அவரை நீக்கும் அதிகாரத்தை மக்கள் தங்களிடமே வைத்திருந்தார்கள் எனக் கூறுகிறார், இம்மூன்று அறிஞர்களின் கருத்துப்படி, மக்கள் எவரிடம் சமுதாய ஒப்பந்தம் செய்து கொண்டார்களோ, அவரிடம் மக்களிடமிருந்த தனிப் பேரரசாண்மை ஒப்படைக்கப்பட்டது முதல் அவர் மக்களை ஆளத் தலைப்பட்டார்; தலைவரெனப்பட்டார்; பின்னர் அரசர் எனப்பட்டார். ஆனால் ஆசுடினும் (Austin), பெந்தமும் (Bentham) இந்தத் தனிப் பேரரசு அதிகாரம் எல்லையற்றது என்றும் பிரிக்க இயலாததென்றும் சமுதாயத்தில் இன்றியமையாததென்றும் கூறுகிறார்கள். மக்கள் அரசனுக்கு அளித்த அதிகாரம், அதிகார ஒப்படைப்பு என்று இடைசி (Dicey) கூறுகிறார். நாளடைவில் தனிமனிதனின் அரசாட்சி மறைந்து மக்களாட்சி தொடங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையாளர் சட்டமன்றத்தில் அமர்ந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். அதிகார ஒப்படைப்பு அரசனுக்குக் கொடுக்கப்பட்டது என்ற நிலை மாறிச் சட்டமன்றத்திற்குக் கொடுக்கப்பட்டது என்ற நிலை உருவாயிற்று. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் வழங்கப்பட்ட அதிகாரத்தை அவர்கள் மீட்டளிக்க இயலாது; ஆகவே அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை ஆட்சி நிருவாகப் பிரிவுகளிடம் ஒப்படைத்தல் கூடாது. சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்ட சட்டம் இயற்றும் அதிகாரத்தை ஆட்சி நிருவாகப்பிரிவு ஏற்கக் கூடாது. ஆட்சி நிருவாகப் பிரிவு, சட்டமியற்றும் அதிகாரத்தை மேற்கொள்ளுமானால் அது அதிகாரங்களின் பிரிவிற்கு மாறானதாகும். சட்டம் இயற்றுவதைச் சட்டமன்றமே செய்துவருதல் வேண்டும். அவ்வதிகாரத்தைச் சட்டமன்றம், நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கக்கூடாது. முதலாவதாக, அவ்வாறு அதிகார ஒப்படைப்புச் செய்வதற்கு மக்கள் அதற்கு அதிகாரம் கொடுக்கவில்லை; இரண்டாவதாக, அவ்வாறு அதிகார ஒப்படைவுசெய்தல் அதிகாரங்களின் பிரிவிற்கு முரணானதாகும். நிருவாகத்துறை முகவர்களுக்குச் சட்டம் இயற்றும் அதிகாரம் அளிக்கப்பட்- டால், அவை தன்னதிகாரப் போக்கில் செயல்படத் தொடங்கிச் சட்டத்தின் ஆட்சியை அழித்து மக்களைத் துயரத்திற்கு ஆளாக்கிவிடும். சட்டமன்றங்களும் நிருவாகத்துறை முகவர் நிலைகளும் தனித்தனி அதிகாரங்களோடு உரிமையுடன் செயல்பட வேண்டும். சமுதாய அமைப்பில் சட்டமன்றத்தின் பணி நாளும் பெருகிவருகிறது. மக்கள் அரசு, குடியாட்சி வழியில் சட்டங்கள் பல இயற்றி, மக்கள் அனைத்துத் துறைகளிலும் மேம்பாடு அடைய வழிகாண வேண்டி உள்ளது. இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் பொருந்துமாறு இருத்தல் வேண்டியுள்ளது. அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் பொருந்துமாறு சட்டம் இயற்றுதல் இயலாது. ஆகவே சட்டமன்றம் அனைத்துச் சூழ்நிலைக்கும் ஏற்பச் சட்டம் இயற்ற இயலுவதில்லை. முதலாவதாகச் சட்டமன்றத்திற்கு நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்துச் சட்டங்களையும் முழுமையாகச் செய்வதற்குரிய நேரமில்லை. இரண்டாவதாக, எல்லாச் சட்டங்களையும் செய்வதற்குச் சட்ட மன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான தொழில் நுட்ப அறிவு இருப்பதில்லை. மூன்றாவதாக, அமைதிக் காலங்களில் இயற்றப்படும் சட்டங்கள், அவசர காலச் சூழ்நிலைக்குப் பொருந்துவதாக அமைவதில்லை; அவசரகாலச் சூழ்நிலையை நிருவகிப்பதற்குச் சட்டமன்றம் உடனடியாகக் கூடிச் சட்டம் இயற்ற இயலாது; மேலும் அவசரகாலச் சூழ்நிலைகளை நிருவகிக்கச் சட்டமன்றம் முன்கூட்டியே சட்டங்களை இயற்றிவைத்தல் இயலாது; இறுதியாக மாறிவரும் சூழ்நிலைகளுக்கு வளைந்து கொடுக்கும் முறையில் சட்டம் இயற்ற இயலாது. இக்காரணங்களால் சட்டமன்றம், அனைத்துச் சட்டங்களையும் தானே இயற்ற முடியாத நிலையில் உள்ளது. ஆனால், இம்மன்றம் சமுதாயத்தில் தேவைகளைப் புறக்கணிக்கவும் இயலாது. தேவைக்கேற்பச் சட்டங்கள் செய்து சமுதாயத்தை மேம்பாடு அடையச் செய்வது சட்டமன்றத்தின் கடமையாகவும் உள்ளது. இந்நிலைமையை நிருவகிக்கச் சட்டமன்றம், சட்டமியற்றும் அதிகாரங்கள் சிலவற்றை நிருவாகத் துறை முகவர்களுக்கு வழங்க நேரிட்டது. பொதுக் கோட்பாடுகள் சட்டமன்றம் இயற்றும் அனைத்து அதிகாரங்களையும் நிருவாகத் துறை நிலைகளுக்கு வழங்கலாம் என்றால், சட்டமன்றம் தன் பணியை முழுமையாகச் செய்வதாகாது. சட்ட மன்றம், தன் பணியினைச் செம்மையாக ஆற்ற இயலாத நிலையில், தன் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டிய தேவை இல்லாத நிலைவில், சில சட்டம் இயற்றும் அதிகாரங்களை மட்டும் நிருவாகத்துறை முகவர்களுக்கு வழங்கலாம். மிக இன்றியமையாத சட்டங்களும் சிறப்புச் சட்டங்களும் சட்டமன்றத்தினாலேயே இயற்றப்படுதல் வேண்டும். நிருவாகத் துறை முகவருக்கு வழங்கப்பட்ட பணியைச் சில சூழ்நிலைகளில் அவர் தாமே செய்யாமல் வேறு ஒருவர் மூலம் நிறைவேற்றலாம். சட்டமன்றம், அதிகார ஒப்படைப்பினை நிருவாகத் துறை முகவர்களுக்கு வழங்க வேண்டுமானால், சட்டங்கள் இயற்றி அவை மூலமாக அதிகாரத்தை ஒப்படைத்தல் வேண்டும். இயற்றப்பட்ட சட்டங்கள், அவற்றின் இலக்கு, கொள்கை, திட்டங்கள் முதலியவற்றுடன் வழிகாட்டும் நெறிகளையும் தெளிவுபடக் கூறி இருக்க வேண்டும். சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள், நிலைமுறைச் சட்டங்கள் (Substantive Laws), அரசின் வருவாய்க்குரிய சட்டங்கள் (Fiscal Laws), நடைமுறை பற்றிய துணைச் சட்டங்கள் (Adjective Laws), மற்றும் நலச் சட்டங்கள் (Welfare Laws) என்று பல வகைப்படும். விதிகள் செய்தல் சட்டமன்றம், சட்டமியற்றும் அதிகாரங்கள் சிலவற்றை நிருவாகத்துறை முகவர்களுக்கு வழங்குகிறது. அவ்வாறு சட்டமன்றம், சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்கும்பொழுது அது சில பொதுக் கோட்பாடுகளுக்கு (General Principles) உட்பட்டே வழங்குகிறது. நிருவாகத்துறை முகவர் நிலைகளும் சட்டமன்றத்திடமிருந்து பெற்ற சட்டமியற்றும் அதிகாரங்களைக் கொண்டு, சட்டங்களைத் தோற்றுவாய்ச் சட்டத்தின் கீழ் (Parent Act) இயற்றுதல் வேண்டும். நிருவாகத் துறை முகவர்கள் தோற்றுவாய்ச் சட்டத்தின்கீழ்ச் செய்யும் சட்டங்களுக்கு, ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களின்படி செய்யப்பட்ட விதிகள் (Delegated Legislation) என்பது பெயர். ஆட்சி நிருவாகப் பிரிவுகள் இயற்றும் விதிகள், தோற்றுவாய்ச் சட்டத்தை முழுமை பெறச் செய்கின்றன. சூழ்நிலைக்கேற்பவும் மாறி வரும் தன்மைக்கேற்பவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சட்டமன்றம், பொதுக் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சட்டத்தில் குறித்துவிட்டு, அதன்படி மற்ற விதிகள் செய்யும் அதிகாரங்கள் யாவற்றையும் அதன்கீழே உள்ள நிருவாகத்துறை முகவர்களுக்கு அளித்துவருகின்ற நிலைதான் அவைத்துக் குடியரசு நாடுகளிலும் மிகுந்த அளவில் காணப்படுகிறது. சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட அனைத்துச் சட்டங்களும் இன்று இவ்வாறு விதிகள் செய்யும் அதிகாரங்களை நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கின்றன. விதிசெய்தலும், நிபந்தனைக்குக் கட்டுப்பட்டுச் சட்டமாக்கலும் தோற்றுவாய்ச் சட்டத்தின் மூலம் சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற நிருவாகத்துறை முகவர்கள் விதிகளைச் செய்கின்றனர். இச்சட்டம், நிருவாகத்துறை முகவர்களால் இயற்றப்பட்ட விதிகளினால் முழுமை பெறுகிறது. பல்வேறு வகைப்பட்ட விதிகள் செய்யும் அதிகாரங்கள், நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. நிருவாகத்துறை முகவர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கேற்ப விதிகளை இயற்றுகின்றனர். இவ்வாறு செய்யப்படும் விதிகள், கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுச் சட்டமியற்றலிலிருந்து வேறுபட்டனவாகும். கட்டுப்பாட்டின் மீது சட்டமாக்குதலுக்கு எந்த விதக் கட்டுப்பாடும் சட்டமன்றம் விதிப்பதில்லை, தோற்றுவாய்ச் சட்டம், சட்டமன்றத்தை விட்டு வெளிவரும்பொழுதே முழுமைபெற்று விளங்குகிறது. அதனுடன் விதிகள் செய்து எதையும் விளக்க வேண்டிய தேவையில்லை. நிருவாகத்துறை முகவர், தோற்றுவாய்ச் சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள செயல் இலக்கிற்கு ஏற்பவும், கொள்கைக்கு ஏற்பவும் வழிகாட்டும் நெறிகளின்படியும் தரத்திட்டங்களின்படியும் விதிகள் செய்யவேண்டும். ஆக, கட்டுப்பாட்டுக்குட்பட்டுச் சட்டமியற்றலும் (Conditional Legislation) விதிகள் செய்யும் அதிகாரமும் (Delegated Legislation) ஒன்றல்ல; வெவ்வேறாகும். இங்கிலாந்து நாட்டில் அதிகார ஒப்படைப்பு இங்கிலாந்து நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் எழுதா அரசியலமைப்புச் சட்டமெனக் (Unwritten Constitution) கூறுவர். அரசியலமைப்புச் சட்டம் என்று ஒன்று இல்லாததால், நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கேற்ப இருக்கின்றனவா என்று உறுதி செய்யக்கூடியது எதுவும் இல்லை. நாடாளுமன்றத்தின் நடப்புமுறையினையும் சட்டம் செய்யும் போக்கினையும் கட்டுப்படுத்தச் சட்டம் எதுவும் இல்லை. நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் செய்யலாம்; எவ்வாறு வேண்டுமானாலும் செய்யலாம். அது, எல்லையற்ற-கட்டுப்பாடற்ற அதிகாரத்தோடு சட்டம் செய்யும் உரிமையைக் கொண்டு விளங்குகிறது. நாடாளுமன்றம் செய்யும் சட்டங்களை நீதிமன்றம், நீதிமுறை மறுஆய்வு (Judicial Review) செய்தல் இயலாது. நாடாளுமன்றம் இயற்றும் எத்தகைய சட்டமும் செல்லும். அவை நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறாக இங்கிலாந்து நாடாளுமன்றம் எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டு சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற மன்றமாகத் திகழ்கிறது. இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் இயற்றி, எவ்வாறு வேண்டுமானாலும் நிருவாகத்துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்யலாம். நாடாளுமன்றம் எந்த அதிகாரத்தை வேண்டுமானாலும் நிருவாகத் துறை முகவர்களுக்கு அளிக்கலாம். நிருவாகத்துறை முகவர் தோற்றுவாய்ச் சட்டத்தின் மூலம் எந்த விதியை வேண்டுமானாலும் ஆக்கலாம். இவ்விதிகள் தோற்றுவாய்ச் சட்டத்திற்குட்பட்டிருந்தாலோ தோற்றுவாய்ச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டிருந்தாலோ அவை செல்லும்; நீதிமன்றம் தலையிட இயலாது. ஆனால், நடைமுறையில் இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்றம், சட்டங்களின் பொதுக் கோட்பாடுகளை விவரித்த பின்னரே, அச்சட்டங்களின் கீழ் மற்ற விவரங்களை இணைக்கும் அதிகாரங்களை நிருவாகத்துறை முகவர்களுக்கு வழங்குகிறது. இம்முறையே, தொன்று தொட்டு நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. பொதுவாக எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தால் முழுமையாகச் செய்யப்படுவதில்லை. சட்டங்கள் அனைத்தும் நிருவாகத்துறை முகவர்களால் செய்யப்பட்ட விதிகள் மூலமே முழுமை பெறுகின்றன இதனால் நாடாளுமன்றத்தால் செய்யப்பட்ட சட்டங்களின் அளவைவிட, நிருவாகத்துறை முகவர்களால் செய்யப்பட்ட விதிகளின் அளவே மிகுதியாக அந்நாட்டில் இருந்து வந்தது. இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல், மேற்கூறிய பழக்கத்தில் சிறிது மாறுதல் ஏற்பட்டது. நாடாளுமன்றம் பெயரளவில் சட்டங்கள் இயற்றத் தொடங்கியது. அவ்வாறு இயற்றிய சட்டங்கள் மூலம் அனைத்து அதிகாரங்களும் நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்பட்டன. தோற்றுவாய்ச் சட்டத்தையே திருத்துவதற்கும் மாற்றுவதற்குமான அதிகாரங்களும் நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்பட்டன. நிருவாகத்துறை முகவர்கள், செய்யும் விதிகள் மூலம் தோற்றுவாய்ச் சட்டத்தையே குறைக்கவும் கூட்டவும் மாற்றவும் திருந்தவும் முடியும், தோற்றுவாய்ச் சட்டத்தின் விதிக்கூறு, அச்சட்டத்தையே திருத்தும் அதிகாரத்தை நிருவாகத்துறை முகவருக்கு வழங்குமாயின், அதனை ‘எட்டாம் என்றி (Henry) விதிக்கூறு’ எனக் கூறுவர். சட்டங்கள் செய்யும் அதிகாரமும் அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் நிருவாகத்துறை முகவர்கள் பெற்றிருந்ததால், அது தன்னதிகாரப் போக்கிற்கு வழி வகுத்தது. இந்த அதிகாரம் பற்றி ஈவர்ட்டு (Lord Hewart), இடைசி (Dicey) முதலியவர்கள் தங்களுடைய நூல்களின் மூலம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இவ்வெதிர்ப்புகளின் விளைவாகக் குறைகளைக் கண்டறிய, 1939–ஆம் ஆண்டு தானோமோர் குழு (Donoughmore Committee) அமைக்கப்பெற்றது. இக்குழு, நிருவாகத்துறை முகவர்களுக்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட அதிகார ஒப்படைப்புக் குறித்தும் விதிகள் செய்யும் அதிகாரம் குறித்தும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் நடைமுறைத் தன்மையை ஆராய்ந்து ஓர் அறிக்கையினைக் கொடுக்குமாறு பணிக்கப்பட்டது. இக்குழு தன்னுடைய அறிக்கையில், அதிகார ஒப்படைப்போ விதிகள் செய்யும் அதிகாரமோ இன்றி ஆட்சி நடைபெற இயலாதெனக் கருத்தறிவித்தது. நிருவாகத்துறை முகவர்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரங்கனை அளித்ததன் வாயிலாக நாடாளுமன்றம் தவறு செய்யவில்லை என்றும், ஆனால் அதிகாரங்களை ஒப்படைக்கையில் நாடாளுமன்றம் அதிகக் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், நிருவாகத்துறை முகவர்கள் இயற்கை நியதிக்கு ஏற்பச் செயல்படவேண்டும் என்றும் இக்குழு கூறிற்று. அதன் அடிப்படையில், இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கியது. நாடாளுமன்றம் தோற்றுவாய்ச் சட்டத்தில் பொதுக் கோட்பாடுகளைத் தெள்ளத் தெளியக் கூறி, மற்ற விதிகளை விதிகளின் மூலம் சேர்க்கும் அதிகாரத்தை நிருவாகத்துறை முகவர்களுக்கு வழங்கலாயிற்று. ஆனால், இன்றும் நாடாளுமன்றம் செய்யும் அதிகார ஒப்படைப்பின் மீது நீதிமன்றம் நீதி முறை மறு ஆய்வினை மேற்கொள்ள இயலாது. அமெரிக்க நாட்டில் அதிகார ஒப்படைப்பு அமெரிக்க நாட்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்புச் சட்டம் இலாக்கு (Locke), மாண்டெசுக்கியூ (Montesquieu) போன்றவர்களின் கருத்திற்கேற்பவும் அதிகாரங்களின் பிரிவுக் கோட்பாட்டிற்கு இசைந்தும் இயற்றப்பட்டது ஆகும். இவ்வரசியலமைப்புச் சட்டத்தில் சட்டமியற்றும் அதிகாரம், நீதிவழங்கும் அதிகாரம், மேலாண்மை அதிகாரம் ஆகிய மூன்றும் தனித் தனியே மூன்று அரசியல் பிரிவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திடமும், நீதிமுறை நீதி மன்றத்திடமும் மேலாண்மை அதிகாரம் ஆட்சி நிருவாக அங்கத்தினர்களிடமும் ஒப்படைவு செய்யப்பட்டுள்ளன, ஒரு பிரிவு மற்றோர் பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக, ஆட்சி நிருவாகப் பிரிவின் மற்ற இரு பிரிவின் அதிகாரங்கன் குவித்திருக்குமாயின் அந்தப் பிரிவு, தன் அதிகாரப் போக்கில் செயல்பட வழி வகுக்குமென அமெரிக்க மக்கள் கருதினார்கள். இதனை மனத்தில் கொண்டு, நீதிபதிகளும் சட்டவியல் அறிஞர்களும் அமெரிக்காவில் அதிகார ஒப்படைப்புக் கூடாது என்றும், அவ்வாறு செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் கூறி வந்தார்கள். ஆனால், நாளடைவில் அதிகார ஒப்படைப்புச் செய்யாமல் அரசின் பணிகளை நிறைவேற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றமே அனைத்துச் சட்டங்களையும் இயற்றுவதென்பது இயலாததொன்றாயிற்று, சட்டமன்றம் நிருவாகத்துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்தால்தான் ஆட்சி தடையின்றிச் செயல்படும் என்ற நிலை உருவாயிற்று. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் நிருவாகத்துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்யத் தொடங்கிற்று. இந்தியாவில் அதிகார ஒப்படைவு வாணிக நோக்கத்தோடு இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர் பின்னாளில் அரசியலில் ஈடுபட்டனர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் கி.பி. 1833-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியச் சட்ட மன்றச் சட்டம் (The Indian Council Act of 1833), இந்திய ஆட்சி முறையிலும் கிழக்கிந்தியக் கம்பெனியின் அமைப்பிலும் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து வந்த இந்திய ஆட்சி, இங்கிலந்து நாட்டு மன்னரின் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய அரசின் பொறுப்புரிமை அமைப்பாக மாற்றப்பட்டது. தலைமை ஆளுநர் சட்டமன்றத்தில் இருக்கையில் அவரிடம் இந்திய அரசின் சட்டமியற்றும் அனைத்து அதிகாரங்களையும் ஒப்புவித்ததும், ஆட்சி நிருவாகத்தலைவரான அவர் சட்டங்கள் (1833–ஆம் ஆண்டுச் சட்டம்) செய்தார். இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்றத்தால் செய்யப்பட்ட சட்டங்களின்கீழ் விதிகள் இயற்றினார்; சட்டங்களைத் திருத்தினார்; மாற்றினார். இவ்வாறாகச் சட்டமியற்றும் அனைத்து அதிகாரங்களும் அவரிடமே இருந்தன. சட்டங்கள் செய்யும் அதிகாரமும் அவற்றைச் செயற்படுத்தும் அதிகாரமும் அவரிடமே இருந்தன. இவ்வாறாகத் தலைமை ஆளுநரிடமே அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த அதிகார ஒப்படைவு எந்தக் கோட்பாட்டிற்கும் உட்பட்டிருக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950–ஆம் ஆண்டு சனவரி 26–ஆம் நாள் செயல்முறைக்கு வருகையில், அதிகார ஒப்படைவு பற்றி நீதிமன்றங்களின் தெளிவான கருத்து எதுவுமில்லை. இந்தியாவில், அதிகார ஒப்படைவு பற்றி உரிய விளக்கம் பெற இந்தியக் குடியரசுத் தலைவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 143–ஆம் பிரிவின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றத்தைக் கருத்து வழங்குமாறு தில்லிச் சட்டங்கள் வழக்கில் (In Re Delhi Laws Act Case A.I.R. 1951, S.C. 332) கேட்டுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களுடைய கருத்துகளை தனித்தனியே அளித்தார்கள். இவ்வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்: :: அதிகார ஒப்படைவு செய்யப்படாமல் மேலாண்மை, ஆட்சி நடத்துதல் இயலாதது. :: இந்தியச் சட்டமன்றங்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ்ச் செயல்படுவதால் ஒரு வரம்பிற்குட்பட்டே அதிகார ஒப்படைவு செய்ய இயலும், இந்தியச் சட்டமன்றங்கள், தங்கள் விருப்பப்படி அனைத்து அதிகாரங்களையும் அதிகார ஒப்படைவு செய்ய இயலாது. :: இந்தியச் சட்டமன்றங்கள் இன்றியமையாத சட்டமியற்றும் அதிகாரங்களை நிருவாகத் துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்தல் கூடாது; அவ்வாறு செய்தால் அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதாகும். :: இன்றியமையாத சட்டமியற்றும் சட்டமியற்றும் அதிகாரங்களைத் தவிர மற்றச் சட்டமியற்றும் அதிகாரங்களை நிருவாகத்துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, தோற்றுவாய்ச் சட்டத்தில் நிருவாகத் துறை முகவர்கள் செயல்படக் கொள்கை, தரத் திட்டம், வழிகாட்டும் நெறிகள் ஆகியவை அவர்களுக்குக் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அவ்வதிகார ஒப்படைவு அரசியல் சட்டத்திற்கு முரண்பட்டதாகும். :: கட்டுப்பாட்டுக்குட்பட்டுச் சட்டமியற்றல் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதன்று. தோற்றுவாய் சட்டத்தில் கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டிருந்தால், அக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விதிகள் செய்யலாம். :: ஓரிடத்தில் நிலவிவரும் சட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் அதை மற்றோர் இடத்திற்கு, அவ்விடத்திற்கேற்ற மாறுபாடுகளுடனோ வரையறைகளுடனோ விரிவாக்கம் செய்யும் அதிகாரமும் நிருவாக முகவர்களுக்கு, சட்டமன்றம் வழங்கலாம். விதிகள் செய்யும் அதிகாரத்தின்மீது நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்யவும், சட்டமன்றங்களை நீதி முறை மறு ஆய்வு மூலம் கட்டுப்படுத்தும் விதிகள் செய்யவும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன. விதிகள் செய்யும் அதிகாரம் தோற்றுவாய்ச் சட்டத்தினால் நிருவாக அரசுக்கு ஒப்படைக்கப்படலாம். அவ்வதிகாரத்தைப் பெற்ற அரசு, அதை விதிகள் மூலம் நிருவாகத்துறை முகவர்களுக்கு ஒப்படைக்கலாம். நிருவாகத்துறை முகவர் நிலையும், தான் இயற்றும் துணை விதிகளினால் அதன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரத்தையும் அவற்றை நிறைவேற்றும் அதிகாரத்தையும் அளிக்கலாம். இவ்வாறாக விதிகள் செய்யும் அதிகாரம் படிப்படியாக நிருவாக அரசின்கீழ் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுவது, விதிகள் செய்யும் அதிகாரத்தின் உள் ஒப்படைவு எனப்படும். துணை நூல்கள் திருமலை, பு.சு., “இந்திய அரசியலமைப்புச் சட்டம்”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1975. கிருஷ்ணசாமி, ச., “நிருவாக முறைச் சட்டம்”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1979. Jain Kagzi, M.C., “The Constitution of India”, 2nd Vol., Metropolitan Book Co., Private Ltd., New Delhi, 1984.