இராட்டிரகூடர்
irāṭṭirakūṭar
இந்தியாவில் பெரும்புகழுடன் ஆட்சிபுரிந்த ஓர் அரச மரபினராவர், இரு நூற்றாண்டுகளுக்கு மேல் தக்காணத்தில் பேராசைப் பெற்றிருந்த இவர்கள் அக்காலத்து இந்திய அரசியலில் தலையாய இடத்தைப் பெற்றிருந்தனர்.
இந்தியாவில் பெரும்புகழுடன் ஆட்சிபுரிந்த ஓர் அரச மரபினராவர், இரு நூற்றாண்டுகளுக்கு மேல் தக்காணத்தில் பேராசைப் பெற்றிருந்த இவர்கள் அக்காலத்து இந்திய அரசியலில் தலையாய இடத்தைப் பெற்றிருந்தனர். இவர்கள் படைவலிமையைக் கண்டு அஞ்சாத மன்னர் வடக்கிலுமில்லை; தெற்கிலுமில்லை. திறமைமிக்க மன்னர்களை எண்ணிக்கையில் மிகுதியாகத் தோற்றுவித்த பெருமை இராட்டிரகூட மரபினைச் சாரும்.
இராட்டிரகூடரின் (Rashtrakutas) தோற்றத்தைப் பற்றி வரலாற்றாசிரியரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இராட்டிரகூட மன்னர் தம்மை யதுகுல வழியினராகக் கூறிக்கொண்டனர். ஆனால், வரலாற்றாசிரியர் பலர் இதனை உண்மையென்று ஏற்றுக் கொள்வதில்லை. இராட்டிரகூடர் இராசபுதனத்தில் வாழ்ந்த இரதர்களின் (Rathors) வழியினர் என்று சிலரும் இரெட்டி (Reddi) குலத்தின் முன்னோர் என வேறு சிலரும் கருதுகின்றனர். ஆனால், இக்கருத்துகளுக்குத் தெளிவான சான்றுகள் இல்லை. அசோகன் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இராட்டிரிகரின் (Rasthtrikas) வழியினரே இராட்டிரகூடர்கள் என்று பேராசிரியர் சத்தியநாதய்யர் கூறுகிறார். இது பொருத்தமான கருத்தாகத் தெரிகிறது. இராட்டிரிகர் மகாராட்டிரத்திலும் கன்னட நாட்டிலும் இருந்தனர். இராட்டிரகூடர் போற்றியது கன்னட மொழியே; மராத்தி அன்று. இராட்டிரகூடர் தொடக்கத்தில் வாழ்ந்த ஊர் உசுமானபாது மாவட்டத்து (மகாராட்டிரம்) இலட்டூர் (Latur) ஆகும். அங்கு இப்பொழுதும் கன்னட மொழிதான் பேசப்- படுகிறது. பிறகுதான் இவர்கள் பீரார் (Berar) மாவட்டத்திலுள்ள எலிச்சபூருக்குச் (Etlichpur) சென்று குடியேறினர். அங்குத்தான் இவர்கள் செல்வாக்கு வளர்ச்சியுற்றது. இவர்களின் முதல் தலைநகர் எதுவென்று தெரியவில்லை. மானியகேடம் (Manyakheta) கி.பி. 9–ஆம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டது.
தந்திதுர்க்கன் (Dantidurga)
இராட்டிரகூட மரபை நிறுவிய தந்திதுர்க்கன் முதலாம் இந்திரனின் புதல்வன், இவன் தந்தை வாதாபிச் சாளுக்கிய குலத்துடன் கொண்டிருந்த மண உறவு அவனுடைய செல்வாக்கிற்கு ஒரு காரணமாகும். இரண்டாம் விக்கிரமாதித்தன் என்ற வாதாபிச் சாளுக்கிய வேந்தன் காலத்தில் தந்திதுர்க்கன் சிற்றரசனாக வாழ்க்கையைத் தொடங்கினான். சிறந்த போர் வீரனான தந்திதுர்க்கன் குசராத்துமீது அராபியர் படையெடுத்தபொழுது அவர்களை எதிர்த்துக் கடும் போரிட்டுப் பெருவெற்றி பெற்றான். அதனைப் போற்றிய சாளுக்கியம் பெருவேந்தன் இவனுக்குப் பிரிதிவிவல்லபன் (Prithivivallabha), கட்காவலோகன் (Khadgavaloka) என்ற விருதுகளை வழங்கினான். பின்னர் இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிமீது படையெடுத்தபொழுது தந்திதுர்க்கன் அவனுக்கு உறுதுணையாக இருந்தான். இரண்டாம் விக்கிரமாதித்தன் கி.பி. 747–ஆம் ஆண்டில் இறந்தபிறகு தந்திதுர்க்கன் தன் அரசியல் குறிக்கோளை அடையும் வாய்ப்புக் கிட்டியது. குசராத்தில் ஆட்சிபுரிந்துவந்த சாளுக்கியர்களை வென்றதுடன் கூர்சரர் நாட்டையும் தந்திதுர்க்கன் கைப்பற்றினான். பின்னர் அவன் மாளவ நாட்டைக் கைப்பற்றி அதன் தலைநகரில் இரணிய கருப்பதானம் (Hiranyagarbhadana) செய்தான். அடுத்து, கிழக்கு மத்திய பிரதேசத்தின் மீது படையெடுத்து அதைத்தன் கட்டுப்பாட்டின்கீழ்க் கொணர்ந்தான். வாதாபியில் இரண்டாம் விக்கிரமாதித்தனுக்குப் பிறகு பட்டத்திற்கு வந்த இரண்டாம் கீர்த்திவர்மன் (Kirthivarman II) தந்திதுர்க்கனின் மேற்கூறிய வெற்றிகள் தனக்குத் தீங்காகும் என்பதை உணர்ந்து, அவனுடன் போருக்கு ஆயத்தமானான். போர் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இருப்பினும் அதில் தந்திதுர்க்கன் வெற்றி பெற்றான் என்றும் அதன் விளைவாக அவன் தனக்கு மகாராசாதிராசன், பரமேசுவரன், பரமபட்டாரகன் என்றெல்லாம் பட்டப்பெயர் சூட்டிக் கொண்டான் என்றும் தெரிகிறது. இப்போருக்குப் பிறகு தந்திதுர்க்கன் நீண்டநாள் வாழவில்லை. அவன் கி.பி. 758க்குள் இறந்து விட்டான் என்பது திண்ணம். தந்திதுர்க்கன் காஞ்சி மன்னன் இரண்டாம் தந்திவர்மனுடன் நல்லுறவு கொண்டிருந்தான்; தன் மகளை அப்பல்லவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். அவன் மகன் தான் பல்லவ தந்திவர்மன்.
முதலாம் கிருட்டிணன்
தந்திதுர்க்கனுக்குப் பிறகு பட்டத்திற்கு வந்த முதலாம் கிருட்டிணன் முன்னவனின் சிற்றப்பன். முன்னர்த் தோல்வியுற்ற சாளுக்கிய வேந்தன் இரண்டாம் கீர்த்திவர்மன் மீண்டும் போரிட வந்தான். கிருட்டிணன் அவனை இறுதியாகத் தோற்கடித்ததுடன் சாளுக்கியர் செல்வாக்கை முற்றிலும் அழித்துவிட்டான். சாளுக்கிய வேந்தனுக்கு உதவி புரிந்த மேலைக் கங்க (Western Ganga) மன்னன் நாட்டின் மீது படையெடுத்து அவனையும் ஒடுக்கினான். அடுத்து, தன்னிடம் பகைமை கொண்ட கீழைச் சாளுக்கியர் நாடான வேங்கிமீது படையெடுத்து வெற்றிபெற்றான். தோல்வியுற்ற நான்காம் விட்டுணுவர்த்தனன் (Vishnuvardhana IV) இராட்டிரகூடர் தலைமையை ஏற்றுக்கொண்டதுடன் தன் மகளைக் கிருட்டிணன் மகனான துருவனுக்குத் திருமணம் செய்துவைத்தான். கிருட்டிணன் இறுதியாக வென்றது தென்கொங்கணம் (South Kongan). இவன் காலத்தில் இராட்டிரகூடப் பேரரசு மும்மடங்கு வளர்ச்சிபெற்றது. கிருட்டிணன் காலத்தில்தான் எல்லோராக் (Ellora) கைலாசக் கோவில் உருவாகியது. இந்தியாவில் உள்ள குகைக் கோவில்கள் அனைத்திலும் அதுவே பெரியதும் வனப்பில் சிறந்ததுமாம். இராட்டிரகூடர் கலைச்சிறப்பிற்கு அது சிறந்ததொரு சான்றாக உள்ளது. முதலாம் கிருட்டிணன், சுபதுங்கன், அகாலவருடன் என்ற பட்டங்களைக் கொணடிருந்தான்.
இரண்டாம் கோவிந்தனும் துருவனும்
கிருட்டிணன் கி.பி. 773–இல் இறந்தபின் அவன் மூத்த மகனான இரண்டாம் கோவிந்தன் அரியணை ஏறினான். இவன் பிரபூதவருடன், விக்கிரமாவலோகன் என்ற பட்டங்களைப் பெற்றிருந்தான். சிறந்த போர் வீரனான இவன் பதவிக்கு வந்த பின் சில போர்களில் வெற்றிபெற்றதாகத் தெரிகிறது. ஆனால், இவன் போக்கு விரைவில் மாறியது. ஆட்சிப் பொறுப்பைப் புறக்கணித்த இம்மன்னன் அந்தப்புர இன்பத்திற்கு இரையானான். இளவலான துருவன் அரசைத் தன் போக்கில் நடத்த முற்பட்டான். அதனையுணர்ந்த கோவிந்தன் தன் தம்பியை ஆட்சிப் பொறுப்பினின்று நீக்கினான். செயற்றிறம் இழந்த கோவிந்தனின் அப்போக்கால் அரசியலில் குழப்பம் தோன்றியது. சிற்றரசர்கள் கலகம் செய்யத் தொடங்கினர். அச்சூழ்நிலையில் துருவனும் தன் தமையனுக்கு எதிராகக் கிளம்பினான். கோவிந்தன் தன் நிலையை உணர்ந்து காஞ்சி, கங்கவாடி, வேங்கி, மாளவம் முதலிய நாட்டு மன்னர்களின் உதவியை நாடினான். அத்தகைய உதவியைக் கோவிந்தன் பெறும் முன்னர், துருவன் அவனைப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு அரியணை ஏறினான். இது நிகழ்ந்தது கி.பி. 780–ஆம் ஆண்டு.
துருவன் நிருபமா, கலிவல்லபன், தாராவருடன், சிரீவல்லபன் முதலிய விருதுகனைப் பெற்றிருந்தான். பட்டத்தை அடைந்த பிறகு துருவன் தன் தமையனுக்கு உதவிய மன்னர்களுக்குத் தக்க பாடங் கற்பித்தான். மேலைக் கங்கர் நாட்டின்மீது படையெடுத்து அதன் மன்னனைப் போரில் தோற்கடித்ததுடன் அவன் மகனையும் சிறையிலடைத்தான். மேலும், அந்த நாட்டைத் தன் பேரரசுடன் இணைத்துக்கொண்டான். பிறகு துருவன் காஞ்சிமீது படையெடுத்தான். அப்பொழுது காஞ்சி மன்னனாக இருந்த தந்திவர்மன் துருவனுக்குப்போர் யானைகள் பலவற்றை அளித்து உடன்படிக்கை செய்துகொண்டான். மேற்கூறிய வெற்றிகளால் துருவன் தென்னிந்தியாவில் இணையற்ற பெருவேந்தனாக விளங்கினான்.
தெற்கே தன் செல்வாக்கை நிலைநிறுத்தியபின் துருவன் வடஇந்தியாவின் மீது கவனம் செலுத்த முற்பட்டான். அப்பொழுது கன்னோசி நாட்டை ஆண்டுவந்த இந்திராயுதன் என்பவன் ஆற்றலற்றவன், அதைப் பயன்படுத்திக்கொண்டு கூர்சர பிரதிகார மன்னனான வத்சராசனும் வங்காளத்தில் ஆட்சி புரிந்துவந்த பாலமன்னனான தருமபாலனும் கன்னோசி நாட்டைத் தத்தம் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப் போட்டியிட்டுப் போர் புரிவாராயினர். இராட்டிரகூடர் செல்வாக்கை வடஇந்தியாவில் நிலை நாட்ட அது தக்க வாய்ப்பென்பதை உணர்ந்த துருவன், தக்க ஏற்பாட்டுடன் வடக்கே படையெடுத்துச் சென்றான். அதனை அறிந்த வத்சராசன் போருக்கு ஆயத்தமானான். சான்சி (Jhansi) அருகே நிகழ்ந்த அப்பெரும் போரில் வத்சராசன் தோல்வியுற்றதுடன் மீண்டும் போர் புரிவதற்கஞ்சி இராசபுதனத்திற்கு ஓடிவிட்டான். அடுத்து, துருவன் தருமபாலனுடன் போர் செய்து அவனையும் போர்க்களத்தினின்று விரட்டினான். இவ்வெற்றிகளுக்குப் பிறகு துருவன் கன்னோசியை நோக்கிப் படையைச் செலுத்தாது தன் நாட்டிற்குத் திரும்பிலிட்டான். துருவனின் வடநாட்டுப் படையெடுப்புப் பயனற்றதெனக் கூற முடியாது. ஏனெனில், அவன் தன் தலைநகருக்கு மிகுதியான கொள்ளைப் பொருள்களைக் கொணர்ந்தான். இப்போர் நிகழ்ந்த காலம் கி.பி. 790.
துருவனுக்குப் பல பிள்ளைகள் இருந்தனர். அவர்களுள் மூன்றாம் மகனான கோவிந்தன் ஆற்றல் மிக்கவன். துருவன் அவனை இளவரசனாக நியமித்ததுடன், சிறிதுகாலம் சென்றபின் தன் அரச பதவியைத் துறந்ததாகவும் கூறப்படுகிறது.
மூன்றாம் கோவிந்தன்
மூன்றாம் கோவிந்தன் கி.பி. 793–ஆம் ஆண்டு அரியணையேறினான். இவன் தமையன் இசுதம்பன் (Sthambha) மேலைக் கங்கர் நாட்டில் அரசப் பேராளராகத் தொடர்ந்து இருந்துவந்தான். சிறிதுகாலம் பேரரசில் அமைதி நிலவிற்று. பின்னர் இசுதம்பன் அரியணையைக் கோவிந்தனிடமிருந்து கைப்பற்றத் திட்டமிட்டான். அதற்கு உதவச் சில சிற்றரசர்களும் அண்டை நாட்டு மன்னர்களும் முன்வந்தனர். அவர்களுடன் சேர்ந்து இசுதம்பன் செய்த கலகத்தைக் கோவிந்தன் அடக்கினான். தோற்ற தன் தமையனைக் கோவிந்தன் பெருந்தன்மையுடன் நடத்தினான்; மீண்டும் அவனை மேலைக் கங்கர் நாட்டிற்கு அரசப் பேராளராக இருந்துவருமாறு செய்தான். அதன்பின் இறுதிவரை அவன் எவ்விதத் தொல்லையையும் அளிக்கவில்லை. பின்னர் மேற்கூறிய கலகத்தில் ஈடுபட்ட மேலைக் கங்கன் நாட்டின்மீது கோவிந்தன் படையெடுத்தான். சிவமாரன் என்ற அந்த மேலைக் கங்கன் துருவனால் சிறையில் வைக்கப்பட்டான். கோவிந்தன் பட்டத்திற்கு வந்ததும் அவனிடம் தன் நட்பினைக் காட்டும் வழியாகச் சிறையினின்றும் அவனை விடுவித்தான். நன்றி மறந்த சிவமாரன் இசுதாபனுடன் சேர்ந்துகொண்டு கோவிந்தனுக்கெதிராகக் கிளம்பியதால், கோவிந்தன் அவனுக்குத் தக்க பாடம் புகட்ட முடிவு செய்தான். அதன் காரணமாக ஏற்பட்ட போரில் இசுதம்பனும் கோவிந்தனுக்கு உதவி புரிந்தான். கோவிந்தன் போரில் வெற்றிபெற்றதுடன் சிவமாரனைப் பிடித்து மீண்டும் சிறையிலடைத்தான் அதன்பின் கோவிந்தன் தனக்கெதிராக இருந்த நந்திவர்ம பல்லவன் நாட்டின்மீது படையெடுத்தான். இராட்டிரகூட வேந்தனின் ஆற்றலையும் படைவலிமையையும் உணர்ந்த அப்பல்லவன் அவனுக்கு அடி பணிந்தான். அதன்பின் கோவிந்தனை எதிர்க்கக் கூடிய மன்னர் தெற்கே எவருமிலர். அப்பொழுது வேங்கி மன்னனாக இருந்த நான்காம் விட்டுணுவர்த்தனன் கோவிந்தனுக்குத் தாய்வழிப் பாட்டன் ஆவான். இருவருக்கும் நல்லுறவு இருந்தது.
இவ்வாறு தென்னகத்தில் தன் வலிமையை நிலைநாட்டிய பிறகு கோவிந்தன் வட இந்திய அரசியலில் தன் கவனத்தைச் செலுத்தினான். துருவன் கி.பி. 790–இல் வட இந்தியாவிலிருந்து வெற்றியுடன் திரும்பிய பிறகு அங்குப் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன. தருமபாலன் மீண்டும் கன்னோசிமீது படையெடுத்து வெற்றி பெற்றான். அங்குத் தனக்கு வேண்டிய சக்கராயுதன் என்பவனை அந்நாட்டரசனாக அமர்த்தினான். அதனால், வெகுண்ட கூர்சர பிரதிகார மன்னனான இரண்டாம் நாகபட்டன் தருமபாலனையும் சக்கராயுதனையும் போரில் வென்று கன்னோசியைத் தன் கட்டுப்பாட்டின்கீழ்க் கொணர்ந்தான். அந்நிலையில்தான் கோவிந்தன் வடக்கே படையெடுத்துச் செல்ல முடிவுசெய்தான். அதற்கான ஏற்பாடுகள் தக்கவாறு செய்யப்பட்டன. அதனை உணர்ந்த நாகபட்டனும் போருக்கு ஆயத்தமானான். பண்டல்கண்டில் இருபடைகளுக்கும் நிகழ்ந்த போரில் நாகபட்டன் தோல்வியுற்றுப் போர்க்களத்தைவிட்டு ஓடிவிட்டான். அப்போர் முடிவினைக் கேட்ட தருமபாலனும் கோவிந்தனுக்கு அடிபணிந்தான். அதேபோல் வேறு சில வடநாட்டு மன்னரும் செய்தனர். எனவே, கோவிந்தன் கன்னோசிக்குச் செல்லாமலேயே நாடு திரும்பிவிட்டான். இப்போர் கி.பி. 800–இல் நிகழ்ந்ததாகக் கருதபடுகிறது. அதன் பின்னர்த்தான் முதலாம் அமோகவருடன் பிறந்தான்.
வேங்கி நாட்டில் நான்காம் விட்டுணுவர்த்தனனுக்குப் பிறகு பட்டத்திற்கு வந்த இரண்டாம் விசயாதித்தன் கோவிந்தனுடன் பகைமை பாராட்டியதால், இராட்டிரகூட மன்னன் அவனுடன் போரிட்டு வென்று அவனை அரியணையினின்றும் அகற்றித், தன்னுடன் ஒத்துச்சென்ற வீமன் சாளுக்கியை (Bhima–Salukki) அரசனாக்கினான். மேலும், கோவிந்தன் வடக்கே போரிடச் சென்றிருந்த பொழுது தெற்கே பல்லவ, பாண்டிய, கேரள, மேலைக் கங்க மன்னர்கள் அவனுக்கெதிராக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தினர். எனவே, கோவிந்தன் அவர்களுடன் போரிட முனைந்தான். அவன் படை பல்லவன் தலைநகரான காஞ்சியைக் கைப்பற்றியது. இலங்கை மன்னன் கூட அவனுக்கஞ்சி அடிபணிந்தான் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு கோவிந்தன் வடக்கேயும் தெற்கேயும் நிகரற்ற பெருவேந்தனாகத் திகழ்ந்தான். அவன் காலத்தில் இராட்டிரகூடர்களின் புகழ் பெரு நிலையை எட்டியது.
முதலாம் அமோகவருடன்
மூன்றாம் கோவிந்தனின் மகனான அமோகவருடன் கி.பி. 814–ஆம் ஆண்டு அரியணையேறினான். அவன் நிருபதுங்கன், மகாராசசண்டன், வீரநாராயணன் முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தான். பதவிக்கு வரும்பொழுது அவனுக்கு வயது பதினான்கு. எனவே, அவன் தக்க வயதை அடையும் வரை கர்க்கன் (Karkka) என்பவனை ஆட்சியை நடத்திவருமாறு கோவிந்தன் ஏற்பாடு செய்திருந்தான். தொடக்கத்தில் இவ்வேற்பாடு பயனுடையதாக இருந்தது. ஆனால், சில ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. அமோகவருடனுக்குப் பகையான உறவினரும் அதிகாரிகளும் சிற்றரசர்களும் சேர்ந்து ஒரு பெரும் கலகத்தை உண்டு பண்ணினர். அது தலைநகருக்கும் பரவியதால் இளைஞனான அமோகவருடன் வேறு இடத்திற்குச் செல்லும்படி நேரிட்டது. இருப்பினும் அரசை நடத்தி வந்த கர்க்கன் நிலைமையைத் தன் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டு வந்துவிட்டான். அதற்குச் சில ஆண்டுகள் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது. அமோகவருடனின் நிலைமை கி.பி. 821–இல் வலுப்பெற்றது. அடுத்த சில ஆண்டுகள் அவன் நாட்டில் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டுவதில் ஈடுபட்டிருந்தான்.
பின்னர்த் தன் தொல்லைகளுக்குப் பெரும் காரணமாக இருந்த வேங்கி நாட்டரசனான விசயாதித்தனைப் பழிவாங்க அவன் நாட்டின்மீது படையெடுத்தான். அங்கு நிகழ்ந்த போரில் அமோகவருடன் விசயாதித்தனைத் தோற்கடித்ததுடன் அவன் நாட்டைக் கைப்பற்றிப் பன்னிரண்டு ஆண்டுகள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கி.பி. 845க்குள் வேங்கிநாடு இராட்டிரகூடர்களின் ஆட்சியினின்று விடுபட்டுவிட்டது.
அதேபோன்று தன்னுடன் முரண்பட்ட மேலைக் கங்கர்களுடன் அமோகவருடன் இருபதாண்டுகள் போர்புரிந்தும் பயனில்லாமற் போயிற்று. இராட்டிரகூடர் படை அந்நாட்டின் பலலிடங்களில் தோல்வியுற்றது. இறுதியில் அமைதியை விரும்பிய அமோகவருடன் தன் மகளை முதலாம் பூதுகன் (Butuga I) என்ற மேலைக்கங்க இளவரசனுக்குத் திருமணம் புரிந்துவைத்ததன் மூலம் பகையை நீக்கினான். அதன் பின் மேலைக்கங்கர்களுக்கும் இராட்டிரகூடர்களுக்கும் நல்லுறவு தொடர்ந்து இருந்தது.
அமோகவருடனுக்கு அங்க, வங்க, மகத, மாளவ, வேங்கி மன்னர்கள் கட்டுப்பட்டிருந்தனர் என்பது ஓரளவே உண்மையாகும். வேங்கி நாடு அவனுக்குச் சிறிதுகாலம் கட்டுப்பட்டிருந்தது உண்மை. ஆனால் அவன் மாளவத்திற்காகப் பிரதிகார மன்னனுடன் செய்த போரில் வெற்றியடையவில்லை. முதலில் குறிப்பிட்ட மூன்று நாடுகள் அமோகவருடனின் பகைவனான தேவபாலனின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தன. அவனுடன் அமோகவருடன் போர் செய்தானா? வெற்றிபெற்றானா? என்பனவெல்லாம் அறியச் சான்றுகன் இல்லை.
அமோகவருடன் ஆட்சியின் பிற்பகுதியிலும் நாட்டில் அமைதியில்லை. குசராத்தில் ஆட்சிபுரிந்து வந்த தன் உறவினர்களுடன் அமோகவருடன் சற்றேறக்குறையக் கால் நூற்றாண்டுக்காலம் போரிடும்படி நேரிட்டது. இறுதியில், கூர்சரப்பிரதிகாரர் படையெடுக்கும் சூழ்நிலை தோன்றியபொழுது, இரு சாராரும் உடன்பாட்டிற்கு வந்தனர். இவ்வாறு அமோக வருடனின் ஆட்சியில் கலவரங்களும் போர்களும் மிகுந்திருந்தன.
அமோகவருடன்தான் மானியகேட நகரைக் கட்டியவன். அது சோழர் கல்வெட்டுகளில் மண்ணைக் கடக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமோகவருடனுக்குப் போரைவிட இலக்கியத்தில்தான் மிகுந்த ஈடுபாடிருந்தது. அவன் கன்னடம், வடமொழி போன்ற மொழிகளில் மிகுந்த பயிற்சி பெற்றிருந்தான். கவிராசமார்க்கம் என்ற நூல்தான் கன்னடத்தில் யாப்புப் பற்றி முதன்முதல் எழுதப்பட்ட நூலாகும். அதை இயற்றியவன் அமோகவருடனே, பிரசனோத்தர ரத்னமாலா என்ற வடமொழி நூலும் இவனால் இயற்றப்பட்டதென்பர். மேலும், ஆதிபுராணத்தை இயற்றிய சினசேனரும் (Jinasena) கணித சாரசங்கிரகாவை இயற்றிய மகாவீராச்சாரியாவும் அமோகவிருத்தியை இயற்றிய சாகடாயானனும் சிரீவிசயனும் இவன் அவையில் வீற்றிருந்தனர்.
இவன் வைதிக இந்துசமயத்தைப் பின்பற்றிய போதிலும் பிற சமயங்களை நன்கு போற்றி ஆதரித்துள்ளான். சமண சமயத்தில் இவனுக்கு மிகுந்த ஈடுபாடிருந்தது. இவன் அவையிலிருந்த சினசேனன் குறிப்பிடத்தக்க சமண அறிஞன் ஆவான். இராட்டிரகூட நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் சமண சமயத்தைப் பின்பற்றினார்கள் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. மேலும், அங்கு வந்த அராபியர்கூட எவ்வகைக் கட்டுப்பாடுகளின்றியும் தம் சமயத்தைப் பின்பற்றினர்.
இரண்டாம் கிருட்டிணன்
அமோகவருடனுக்குப் பின் அவன் மகன் இரண்டாம் கிருட்டிணன் பட்டத்திற்கு வந்தான். இவன் அகாலவருடன், சுபதுங்கன் முதலிய விருதுகளைப் பெற்றிருந்தான். இவன் காலத்தில் கூர்சரப் பிரதிகாரர்களின் ஆதிக்கம் ஓங்கத் தலைப்பட்டது. அதனைத் தடுக்க இவன் பெரும் போர் ஒன்றைப் புரிந்தான். குசராத்தில் ஆட்சிபுரிந்த இவன் உறவினர்கள் அப்போரில் இவனுக்குப் பேருதவி புரிந்தனர். இறுதியில் கிருட்டிணன் வெற்றி பெற்றான்.
வேங்கிநாட்டு மன்னனான மூன்றாம் விசயாதித்தன் இராட்டிரகூட மன்னனை எளியவன் என்றெண்ணி அவன் நாட்டின் வட, தென்பகுதிகளில் படையெடுத்து அதில்வெற்றியும் பெற்றான். எதிர்பாராது ஏற்பட்ட அத்தாக்குதலை இரண்டாம் கிருட்டிணன் முறியடித்ததுடன் விசயாதித்தனுக்குப் பிறகு பட்டத்திற்கு வந்த வீமனைச் சிறைபிடித்தான். பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டின்படி வீமன் விடுதலையாகி வேங்கியில் அரசாளத் தொடங்கினான். சிறிதுகாலம் கழித்து மீண்டும் அவன் கிருட்டிணனுடன் முரண்பட்டபொழுது மீண்டும் அவன் போரில் தோற்கடிக்கப்பட்டான்.
இரண்டாம் கிருட்டிணன் பிற்காலச் சோழருடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான். தன் மகளை முதலாம் ஆதித்த சோழனுக்குத் திருமணம் செய்து வைத்தான். அவளுக்குப் பிறந்த கன்னரதேவனுக்கு அரசபதவி கிடைக்காத காரணத்தால், இரண்டாம் கிருட்டிணனுக்கும் முதலாம் பராந்தக சோழனுக்கும் பகை ஏற்பட்டது.
இவன் சமயத் துறையில் தன் தந்தையைப் போல் விளங்கினான். சமண சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான்.
மூன்றாம் இந்திரன்
இரண்டாம் கிருட்டிணன் கி.பி. 914–இல் இறந்தபிறகு அவன் பேரனான மூன்றாம் இந்திரன் பதவிக்கு வந்தான். பேராற்றல் மிக்கவனான அவன் நித்தியவருடன், இரட்டகந்தர்ப்பன், கீர்த்திநாராயணன், இராசமார்த்தாண்டன் முதலிய விருதுகளைப் பெற்றிருந்தான். அவன் முதலில் பரமார உபேந்திரனைத் தோற்கடித்ததாகக் கூறப்படுகிறது. அடுத்து, கூர்சரப் பிரதிகார மன்னனான மகிபாலனை எதிர்த்து இந்திரன் கன்னோசி மீது படையெடுத்தான். இராட்டிரகூடப் படையைக் கண்டு அஞ்சிய மகிபாலன் தலைநகரைவிட்டு ஓடிவிட்டான். மூன்றாம் இந்திரன் கன்னோசியைக் கைப்பற்றி வட இந்தியாவில் இராட்டிரகூடர் பெருமையை மீண்டும் நிலைநாட்டினான். இந்திரன் வேங்கி நாட்டுடன் நீண்ட காலம் போர் செய்த போதும் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. எதிர்பாரா வகையில் மூன்றாம் இந்திரன் கி.பி. 922–இல் இறந்துவிட்டான். அதற்குப் பிறகு அவன் இளவலான இரண்டாம் அமோகவருடன் பட்டத்திற்கு வந்தான். விரைவில் அவன் தன் இளவலான நான்காம் கோவிந்தனின் சூழ்ச்சிக்கு இரையானான். அடுத்துப் பட்டத்தை அடைந்த நான்காம் கோவிந்தன் முதலாம் பராந்தக சோழன் மகளை மணந்தவன். அவன் கொடுங்கோலனாகவும் முறைகெட்ட வாழ்க்கையையுடையவனாகவும் இருந்ததால் எல்லோருடைய வெறுப்பிற்கும் ஆளானான். அவனை விரும்பாத சிற்றரசர் அவன் உறவினனான மூன்றாம் அமோகவருடனை அரியணை ஏறும்படி கேட்டுக் கொண்டனர். அதன்விளைவாக நிகழ்ந்த மோதலில் கோவிந்தன் தோல்வியுற்றுத் தன் மாதுலன் பராந்தகச் சோழனிடம் வந்து தங்கியிருந்தான் எனவும், பின்னர் கி.பி. 939–இல் இரண்டாம் அமோகவருடன் இறந்தவுடன் மீண்டும் அரியணையைக் கைப்பற்ற அவன் முயற்சி செய்தும் பயனில்லாமற்போயிற்று எனவும், அவனுக்கு உதவியதால் பராந்தக சோழன் மூன்றாம் கிருட்டிணனின் தீராப் பகைக்கு ஆளாயினன் எனவும் வரலாற்றாசிரியர் சதாசிவ பண்டாரத்தார் கூறுவது உண்மையே.
மூன்றாம் கிருட்டிணன்
மூன்றாம் கிருட்டிணன் கி.பி. 939–இல் பதவிக்கு வந்தபோது அகாலவருடன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தான். தொடக்கத்திலிருந்தே அவன் தனக்கெதிராகச் செயற்பட்ட சோழப் பெருவேந்தனான முதலாம் பராந்தகனுக்குத் தக்க பாடம் கற்பிக்க முடிவுசெய்து போருக்கு ஆயத்தமானான். அதில் அவனுக்கு உறுதுணையாக விளங்கியவன் அவன் மைத்துனனும் மேலைக் கங்க மன்னனுமான பூதுகனே. இராட்டிரகூட மன்னனின் பகையைக் கருதிப் பராந்தகன் தொண்டை மண்டலத்தில் தன் படைகளைப் பெருக்கியதுடன் தன் மூத்த மகனான இராசாதித்தனை அங்கிருக்கச் செய்தான். தக்கோலப் போருக்கு முன்னரே தொண்டை மண்டலத்தில் இரு சாராருக்கும் சில மோதல்கள் ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், அவை பற்றிய செய்திகளை அறிய இயலவில்லை. வடார்க்காடு மாவட்டத்துத் தக்கோலத்தில் கி.பி. 940–இல் இராட்டிரகூடர்களுக்கும் சோழர்களுக்கும் ஒரு பெரும் போர் நிகழ்ந்தது. அதில் சோழர் படை தோற்றதுடன் இராசாதித்தனும் பூதுகன் எய்த அம்பினால் இறந்தான். அதன்பின் மூன்றாம் கிருட்டிணன் தொண்டைமண்டலம் முழுவதையும் தன்னாட்சியின் கீழ்க் கொணர்ந்தான். அவன் தன் படையைத் தெற்கே இராமேசுவரம் வரை செலுத்தியதாக அல்டேகர் (Alteker) என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார். ஆனால், அதற்குத் தக்க சான்றுகள் இல்லை. எனினும், மூன்றாம் கிருட்டிணன் தன்னைக் ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னரதேவன்’ என்று தன் கல்வெட்டுகளில் கூறிக்கொள்கிறான். போரில் தனக்குதவிய பூதுகனுக்கு மூன்றாம் கிருட்டிணன் வனவாசி நாட்டையும் வேறுசில இடங்களையும் அளித்தான்.
பின்னர் மூன்றாம் கிருட்டிணன் பண்டல்கண்டுமீது படையெடுத்து வெற்றியுடன் திரும்பினான். அதனையடுத்து அவன் மாளவத்தின் மீது படையெடுத்து, அதன் தலைநகரான உச்சயினியைக் கைப்பற்றிப் பரமார மன்னனின் செல்வாக்கை ஒடுக்கினான். மேலும் வேங்கிநாடு, மூன்றாம் கிருட்டிணன் ஆட்சியின் பிற்பகுதியில் இராட்டிரகூடர் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. சுருங்கக் கூறுமிடத்து அக்காலத்தில் மூன்றாம் கிருட்டிணன் தென்னகத்தின் இணையற்ற பெருவேந்தனாய் விளங்கினான்.
சாந்தி புராணத்தை இயற்றிய பொன்னா என்ற கன்னடப் புலவரை மூன்றாம் கிருட்டிணன் ஆதரித்தான். ஆதி புராணத்தையும் பம்பபாரதத்தையும் இயற்றிய முதலாம் பம்பா இவன் காலத்தில் வாழ்ந்தவரே. அவரை ஒரு குறுநில மன்னன் ஆதரித்தான். இவ்விரு கன்னடப் புலவர்களும் சமண சமயத்தைப் பின்பற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொட்டிகனும் இரண்டாம் கர்க்கனும்
மூன்றாம் கிருட்டிணன் கி.பி. 969–இல் இறந்தபின் அவன் இளவலான கொட்டிகன் அரியணை ஏறினான். இவனது திறமையின்மையை நன்குணர்ந்த மாளவ மன்னன் சீயகன் (Siyaka) கி.பி. 972–இல் இராட்டிரகூட நாட்டின்மீது படையெடுத்துத் தலைநகரான மானிய கேடத்தைக் கைப்பற்றிக் கொள்ளையடித்துச் சென்றான். அதே ஆண்டில் மனமொடிந்து கொட்டிகனும் இறந்து விட்டான். அடுத்து, பட்டத்திற்கு வந்த இரண்டாம் கர்க்கன் கொட்டிகனினும் ஆற்றல் குறைந்தவன். அதனால், அரசியல் குழப்பம் மிகுந்தது. அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு சாளுக்கிய குலத்தைச் சேர்ந்த இரண்டாம். தைலன் (Taila II) என்பவன் கலகம் செய்தான். அதனை அடக்கச் சென்ற இரண்டாம் கர்க்கன் கடும் போரிட்டும் இறுதியில் முழுத் தோல்வியடைந்து வேறிடம் சென்றுவாழ நேரிட்டது. இவ்வாறு கி.பி. 973–இல் இராட்டிரகூடர்களின் ஆட்சி முடிவுற்றது. எம்.எஸ்.கோ.
துணை நூல்கள்
Yazdani, G., The Early History of Deccan, Oriental Books Reprint Corporation, New Delhi, 1985.
Nilakanta Sastri, K.A., A History of South India Oxford University Press, Delhi, 1983.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 62)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gbtfhfyn/
தமிழ்“இராட்டிரகூடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gbtfhfyn/APA
Oliyon Research. (2026). இராட்டிரகூடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gbtfhfyn/MLA
"இராட்டிரகூடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gbtfhfyn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment