தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கக் கடலில் அமைந்துள்ள இராமேசுவரம் என்னும் தீவில் அதன் வடபகுதியில் அமைந்துள்ள நகரம். இது இந்துக்களின் புனிதத் தலமாக விளங்கி வருகிறது. இந்நகரம் மதுரையிலிருந்து 144 கி.மீ. (90 மைல்) தொலையில் உள்ளது. இந்நகரைச் சென்னை — இராமேசுவரம் இருப்புப் பாதை வழிச் சென்றடையலாம். இத்தீவையும், தமிழகக் கரைப் பகுதியையும் பிரிக்கும் நீர்ப் பகுதியைக் கடக்கப்புகைவண்டி செல்லும் இருப்புப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. படகு செல்லுங்கால் திறந்து மூடும் பொறியியல் அமைப்புடைய அருமை கொண்டது இப்பாலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பையும் பெற்று விளங்குவது சேது என்று சிறப்பிக்கப்படும் இராமேசுவரம். இங்குள்ள கோயில் தொன்மையும் தெய்வத் தன்மையும் புகழும் மிக்கது ஆகும். இராமன் மனித வடிவம் எடுத்து இராமநாதரை நிலைநாட்டி வழிபட்ட தலம் இராமேசுவரம் எனக் கூறுவர். இராமன் இராவணனையும் அரக்கர்களையும் கொன்று, சீதையை மீட்டு வந்த போது அவர்களைக் கொன்ற பாவம் தீரச் சிவ வழிபாடு இயற்ற எண்ணிச் சிவலிங்கத்தைக் கோயில் கொள்ளுவிக்க. அனுமனைக் காசிக்கனுப்பி இலிங்கம் கொண்டுவர ஆணையிட்டான். அனுமன் திரும்பி வரக் காலக் கழிவு ஏற்பட்டதால் சீதையால் செய்யப்பட்ட இராமேசுவரம் திருச்சுற்று மண்டபம் இலிங்கத்தை நிறுவிப் பூசை செய்தான். அந்த இலிங்கமே இராமலிங்கம். இராமநாதர், அக்காரணத்தாலேயே இராமேசுவரர் எனப்பட்டார். அதன் காரணமாகவே இவ்வூருக்கு இராமேசுவரம் எனப் பெயர் வந்தது என்பது கூறப்படுகிறது. இங்குள்ள இராமலிங்கசாமித் திருக்கோயில் இராமநாதபுரம் சேதுபதிகளால் கட்டப்பட்டது. இது கிழக்கு மேற்கில் 285 மீட்டர் நீளமும் தெற்கு வடக்கில் 215 மீட்டர் அகலமும் கொண்டதாக விளங்குகிறது. கோபுரம் அடித்தளம் முதல் உச்சிவரை கல்லாலும் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. கிழக்கிலுள்ள ஏழுமாடக் கோபுரம் கி.பி. 1897–இல் தொடங்கப்பட்டு 1904–இல் கட்டி முடிக்கப்பெற்றதாகும். இக்கோவிலின் மேற்கு வாயில் 25 மீட்டர் உயரமுடையதாகவும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இக்கோயிலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்தரங்கள் 49 அடி நீளமுள்ளவை. இவை கற்களினால் அமைந்தவை. கருவறை செதுக்கி மெருகிடப்பட்ட ஒருவகைக் கறுப்புக் கல்லால் அமைக்கப் பெற்றது. எல்லாவற்றிற்கும் மேலாக இக்கோயிலில் காணப்படும் சுற்று மதில்கள் 4000 அடி நீளமுள்ளவை. இந்தியாவிலேயே இக்கோயிலின் சுற்று மதில்களே நீளமானவை. தலச்சிறப்பு இராமலிங்கத்தைக் கோயில் கொள்ளுவிப்பதற்கு முன்னரே இராமேசுவரம் கந்தமாதான பருவதம் என்ற பெயரில் இருந்திருக்க வேண்டுமென்று கருதப்படுகிறது. முதல் சுற்றுமதிலில் அகத்தியலிங்கத்திற்கு எதிரிலுள்ள கந்தமாதானேசுவரர் என்ற இலிங்கம் இராமலிங்கத்திற்கு முன்னரே இருந்தது எனக் கூறுவாருமுளர். இராமேசுவரம் காசியைப் போன்று ஒரு புண்ணிய பூமி, இந்திய மக்கள் காசியையும் இராமேசுவரத்தையும் இணைத்தே பேசுவது நாடறிந்த ஒன்றாகும். காசிக்குப் போகும் பயணிகள் இராமேசுவரம் வருவதும் இராமேசுவரம் போகும் பயணிகள் காசிக்குப் போவதும் மரபாகும். சீக்கியர்களின் புனிதத்தலம் இராமேசுவரம். குருநானக்கு கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் இலங்கை செல்லும் வழியில் இங்குத் தங்கியிருந்ததற்கு அடையாளமாக ஒரு குருத்துவாரம் இங்குக் காணப்படுகிறது. இங்குக் கி.பி. 1885–இல் கட்டப்பேற்ற பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகத்தில் கிடைத்த கல்வெட்டொன்று இதனை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவிற்கு வெளியிலுள்ள நேப்பாளமும் இராமேசுவரத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இங்கு நேப்பாளிகளுக்கெனத் தனியே ஒரு புரோகிதர் இருந்து வருவதும், இக்கோயில் கருவறைக்குள் நேப்பாள சென்று வழிபாடு செய்யும் உரிமை நாட்டு மன்னருக்கு உண்டு என்பதும், நேப்பாளப் பிரதமர் குடும்பத்தைச் சார்ந்த திருமதி சாந்தினி இராமேசுவரம் கோயிலில் வாரக் கட்டளை நிறுவியுள்ளார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கன. இங்கு 64 தீர்த்தங்கள் உள்ளன. இந்நாள் 54 தீர்த்தங்களே உள்ளன என்று கூறுவாருமுளர். சேது தீர்த்தம், அக்கினித் தீர்த்தம் இரண்டும் சிறப்பு வாய்ந்தவை எனக் கருதுகின்றனர். இராமன் இலங்கைக்குச் செல்லுங்கால் கடல் கடக்கக் கட்டிய அணை சேது எனப்படும். அவ்விடத்தில் அவன் தன் வில் முனையால் தோண்டிய தீர்த்தம் தனுக்கோடி என்று கூறப்படுகிறது. இது இராமேசுவரத்திலிருந்து தெற்கே சில கல் தொலைவில் உள்ளது. முன்பு இங்குச் செல்வதற்குப் புகைவண்டி வழி இருந்தது. மணல் மேவுதலிலிருந்து புகைவண்டி வழியினைக் காக்கும் அருமையாலும், புயலாலும் இப்பொழுது இங்கு இவ்வழி நீக்கப்பட்டது. பல கல் தொலைவு மணலில் நடந்து செல்வதன் அருமை நோக்கி இங்குத் தீர்த்தமாடச் செல்வது அருகியது. இராமேசுவரத்திலுள்ள இலிங்கமாகிய இராமநாதசுவாமி மணலால் ஆனது. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இப்பதியினைப் போற்றிப் பாடித் தேவாரத் திருமுறைகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இறைவன் பெயர் இராமநாதர், இறைவி பெயர் பர்வதவர்த்தினி என்னும் மலை வளர் காதலி. இராமேசுவரத்தில் அனுமன், சேதுமாதவர், பைரவர் போன்றோர்களுக்குத் திருக்கோயில்கள் உள்ளன. கிழக்குவாயில் வழியாகக் கோயிலுக்குள் நுழையும்போது காணப்படும் முதல் மண்டபம் சேதுபதி மண்டபமாகும். இதன் நீளம் 62 அடி; அகலம் 23 அடி; உயரம் 16 அடி. இதைக் கட்டி முடிக்க உருபாய் 2,29,500 செலவாகியுள்ளது. இதில் 16 தூண்கள் உள்ளன. 64 திருவுருவங்கள் இவற்றில் காணப்படுகின்றன. பாசுகர சேதுபதியின் திருவுருவம் ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளது. அக்கினித் தீர்த்தக் கரையில் சிரீசங்கர மண்டபம் காணப்படுகிறது. இது காமகோடி பீடாதிபதி சகத்குரு சங்கராச்சாரியார் சுவாமிகளால் அமைக்கப்பட்டது. சுமார் 50 அடி உயரமுள்ள இம்மண்டபம் மூன்று தளங்களுடன் அமைந்துள்ளது. இம்மண்டபத்திற்கு எதிரில் உள்ள சுற்று மதிலினுள் நுழைந்ததும் தோன்றுவது ஆஞ்சநேயர் உருவமாகும். இந்தச் சிலை 500, 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது. துவாதசி மண்டபத்தில் பாரத நாட்டிலுள்ள 12 சோதிலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இராமேசுவரம் 12 சோதிலிங்கத் தலங்களுள் ஒன்றாகும். திருக்கோயிலின் மூன்றாம் சுற்று மதிலுக்குச் சொக்கட்டான் மண்டபம் என்பது பெயர். இதனைப் போன்ற மதில் உலகில் வேறு எங்கும் இல்லை. இதன் மொத்த நீளம் ¾ கல் ஆகும். இது உலக அதிசயங்களுள் ஒன்று. இது தமிழரின் கட்டடக் கலைக்குச் சிறந்த ஒரு சான்று. இதனைக் கட்டி முடிக்க 30 ஆண்டுகள் ஆயின. இம்மண்டபத்தில் 1212 தூண்கள் வரிசையாகப் பலரும் வியக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்பு இராமேசுவரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதோர் பதியாகும், பல மன்னர்கள் இதன் மேல் படையெடுத்து இதனைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்பினர் என்பதைச் சில கல்வெட்டுகள் தெரிவிக்கினறன. இராட்டிரகூட மன்னனான மூன்றாம் கிருட்டிணன் கி.பி. 910–இல் இலங்கைச் சோழ மன்னனை வென்று, இராமேசுவரத்தைக் கைப்பற்றியதுடன் வெற்றித் தூணையும் நிறுவினான் என அவன் கல்வெட்டொன்று கூறுகிறது. கிருட்டிணேசுவரர் கோயிலையும் காண்ட மார்த்தாண்டதித்யேசுவரர் கோயிலையும் அவன் கட்டினான் என உரிமை கொண்டாடியிருக்கிறார்கள். ஒய்சல நாட்டு மன்னனான விட்டுணுவர்த்தனன் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் இராமேசுவரத்தின்மீது படையெடுத்து வந்ததாகவும், பராக்கிரம பாண்டியனின் மகனான வீரபாண்டியனை மதுரை அரியணையில் அமர்த்துவதற்காகச் சிங்களப்படை இலங்கை தண்ட நாயகனின் தலைமையில் இராமேசுவரத்தில் இறங்கியதாகவும் ஆர்ப்பாக்கம் கல்வெட்டுக் கூறுகிறது. இலங்கையரசன் பராக்கிரமபாகுவின் மகன் நிசங்கமல்லா என்பவன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான் என்றும், அவன் இராமேசுவரத்தைப் புதுப்பித்தான் என்றும் செங்கற்பட்டுக் கல்வெட்டொன்று உறுதிப்படுத்துகிறது. இவன் இத்தலத்தைப் புதுப்பிக்கப் பெருந்தொகை செலவிட்டதால் இது நிசங்கமல்லேசுவரம் எனப் பெயர் பெற்றதென வரலாறு கூறுகிறது. ஒய்சல நாட்டு மூன்றாம் வல்லாளன் இராமேசுவரத்தையடைந்ததுடன் பாலத்தின் நுழைவாயிலில் தூண் ஒன்றையும் நிறுவினான். இலங்கை வேந்தன் பராக்கிரமபாகு கி.பி. 1170–இல் பாண்டிய அரசனான பராக்கிரமனுக்கு உதவப் பெரும்படை திரட்டி வந்தான். அச்சமயம் சிவன் கோயில் ஒன்றைக் கட்ட இலங்கை மன்னன் ஏற்பாடு செய்தான் என்பதும், சிங்களப் படைவீரனான இலங்கா புரத்தண்டநாயகன் புத்தக் கோயிலும் அமைக்க அடிகோலினான் என்பதும் கூறப்படுகின்றன. மதுரையில் சுல்தானியர் ஆட்சியினைச் சிதறடித்து, இந்து அரசினை நிலைநிறுத்திய விசயநகரப் படைத்தலைவரான குமாரகம்பன்னன் கி.பி. 1371–இல் இராமேசுவரம் சென்று வணங்கினான் என வரலாறு கூறுகிறது. இவன் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்புல்லாணி விட்டுணு ஆலயத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளாள் என்றும் தெரியவருகிறது. பேரரசர் கிருட்டிண தேவராவர் வருகை தந்த புனிதப் பதிகளுள் இராமேசுவரமும் ஒன்று. ஏறத்தாழக் கி.பி. 1549–இல் போர்ச்சுகீசியர் இராமேசுவரத்திற்கருகில் மண்ணாலான கோட்டையொன்றை எழுப்பியதுடன் இந்துசமயப் புனிதப் பயணிகளை அவ்வாலயத்திற்குள் செல்லவிடாது தடையும் செய்துள்ளனர். இராமநாதபுரம் சேதுபதிகள் இவ்வாலயத்தின் பாதுகாவலர்களாக இருந்து வந்திருக்கின்றனர். அவர்கள் பல கோடி உரூபாயை வாரி வழங்கியுள்ளனர். அவர்கள் கி.பி. 1606–ஆம் ஆண்டுச் செப்பேட்டின்படி இராமேசுவரத்திற்கு ஐந்து கிராமங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும், அவர்கள் கி.பி. 1607–இல் பாம்பனுக்கருகில் கோயில் பூசை, படையல் முதலியவற்றிற்காக ஏழு கிராமங்கனையும் வழங்கியுள்ளனர். திருமலை உடையான் சேதுபதி கி.பி. 1608–இல் கிடைத்த செப்பேடு ஒன்றில், சேதுவின் காவலன் என்றும் அறநிலையத்தின் பாதுகாவலனென்றும் தன்னைத்தானே குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இவன் காலத்தில்தான் இராமலிங்கேசுவரர் ஆலயம் பழுதுபார்த்தல், கோடிதீர்த்த மண்டபம் கட்டுதல் ஆகிய பணிகள் செவ்வனே நடைபெற்றன. இன்றும் அவர்கள் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இத்தலத்திற்கு நிரம்ப அழகிய தேசிகரால் இயற்றப்பட்ட சேதுபுராணம் என்னும் ஒரு தல புராணம் உள்ளது. இத்தலம் இமயம் முதல் சேது வரை பரவி விளங்கும் பாரத நாட்டின் ஆன்மீக ஒற்றுமையை உணர்த்தி, நிறுவும் தலமாகத் திகழ்கிறது. க.பு.சீ.