நெகிழ்வு உரு மாற்றம் (உலோகம்) ஒவ்வோர் உலோகத்திற்கும் ஒரு மீட்சியியல் எல்லை (elastic limit) உண்டு. அந்த மீட்சியியல் எல்லைக்குள், அவ்வுலோகத்தின் மேல் செயல் படும் தகைவு (stress), உலோகத்தினைத் தற்காலிக உரு மாற்றம் அடையச் செய்கிறது. இந்தத் தகைவு அல்லது புற விசை நீக்கப் படுமானால், அவ்வுலோகப் பொருள் தன் பழைய உருவத்தை மீண்டும் பெறுகிறது. ஆனால், மீட்சியியல் எல்லைக்கு மேல் தகைவுக்கு உட்படுத்தப் பட்ட உலோகம், ஒரு நிலையான உரு மாற்றத்தைப் பெறுகிறது. தகைவு நீக்கப் பெற்ற போதிலும், உலோகம் பழைய வடிவத்தைப் பெறுதில்லை. இந்த நிலையான உரு மாற்றம் நெகிழ்வு அல்லது குழைம உரு மாற்றம் எனப் படுகிறது. உலோகத்தின் இந்த அடிப்புறப் பண்பு அதனை அழுத்தத்தால் உருட்டுதல் (rolling) , அடித்து வடித்தல் (forging), வளைத்தல் (bending), நீட்டல் (drawing), தகடாக்கல் (flattening), வட்டு உருவாக்கல் (coining) போன்ற பல்வேறு உலோக வடிவமைப்பு முறைகளுக்கு உட்படுத்தப் பயன் படுகிறது. குழைம உருமாற்ற நுட்பம். உலோகங்களில் குழைம உரு மாற்றம், உலோக நழுவு (slip), முறுக்கு (twinning) ஆகிய செயல்பாடுகளினால் நிகழ்கிறது. நழுவு. உலோகப் படிகத்தின் ஒரு பகுதி, மற்றொரு பகுதியைப் பொறுத்து நிலையாக இடம் பெயர்வது, நழுவு எனப் படுகிறது. இந்த இடப் பெயர்வு, அணுக்களின் தளமொன்று (plane of atoms), மற்றொரு தளத்தின் மீது நகரும் போது நினழ்கிறது. இந்த நகருதல் நிகழும் தளங்கள் நழுவு தளங்கள் (slip planes) என்றும், நழுவுவதல் நிகழும் திசை, நழுவு திசை (direction of slip) என்றும் குறிப்பிடப் படும். நழுவு தளத்திற்கு மேலும், கீழும் உள்ள அணுத் தொகுப்பு (block of crystals) எவ்வித உருக் குலைவையும் அடைவதில்லை. நழுவு நிகழும் தளத்தில் அணுத் தொகுப்புகள் மேலும் அதிக அளவில் நகரும் போதோ, புதிய நழுவு தளங்கள் தோன்றும் போதோ உலோகம் மேலும் உருமாற்றம் அடைகிறது. பொதுவாக உலோகங்கள் அவற்றின் அணுக்கள் அமைந்திருக்கும் நிலையைப் பொறுத்துப் பல்வேறு படிக அமைப்பைப் (Crystallographic structures) பெறுகின்றன. எந்த ஒரு படிக அமைப்பிலும், ஒரு குறிப்பிட்ட தளத்தில், ஒரு குறிப்பிட்ட திசையிலேயே நழுவுதல் நிகழ்கிறது. ஒவ்வொரு படிக அமைப்பிற்கும், நழுவு தளங்களும், நழுவு திசைகளும் நன்கு வரையறுக்கப் பட்டுள்ளன. அவை எண்ணிக்கையில் ஒன்றோ, மேற்பட்டோ இருக்கும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> முறுக்கு. தகைவிற்கு உட்படுத்தப்பட்ட பகுதி உருக் குலைவு பெற்று, உருக் குலைவு பெறாத மற்றொரு பகுதியைப் பொறுத்துக் கண்ணாடிப் பிம்பம் போன்ற அமைப்பைப் பெறுமாறு, அணுக்கள் இடம் பெயர்வது நிகழ்ந்தால், அது முறுக்கு எனப் படுகிறது. கண்ணாடிப் பிம்பம் பெறப் படும் தளம், முறுக்குத் தளம் எனப் படுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நிலை மாறு வெப்ப நிலை அல்லது மறு படிகமாக்கு வெப்ப நிலை. உலோகத்தை வெப்பப் படுத்திக் குழைம உருமாற்றத்தை ஏற்படுத்தினால், புற விசை குறைந்த அளவு இருந்தாலே போதுமானது. ஆனால், அறை வெப்ப நிலையில் சற்று அதிகளவில் புற விசை அளிக்கப் பட வேண்டும். வெப்பப் படுத்தும் போது, உலோக அணுக்கள் இடம் பெயர்வது நிகழ்கிறது. அணுக்கள் இடம் பெயர்ந்து, பழைய படிக அமைப்பு மறைந்து, ஒரு புதிய படிக அமைப்பு உண்டாகும். இவ்வெப்ப நிலை நிலை மாறு வெப்ப நிலை (Critical temperature) அல்லது மறு படிகமாக்கல் வெப்ப நிலை (recrystallization temperature) எனப் படும். சில உலோகங்களை வெப்பப் படுத்தும் போது, அவற்றின் படிக அமைப்பு மறைந்து, வேறு புதிய அமைப்பு உண்டாகிறது. இது அவ்வுலோகத்தின் இயல்பாகும். மீண்டும் குளிர்விக்கும் போது, அவ்வுலோகங்கள் பழைய படிக அமைப்பிற்குத் திரும்புகின்றன. இந்நிகழ்ச்சி மறுபடிகமாக்கல் (recrystallization) எனப் படுகிறது. குளிர்–பணி. மறு படிகமாக்கு வெப்ப நிலைக்குக் கீழாக ஓர் உலோகப் பொருளின் மேல் செய்யும் பணி குளிர்–பணி (cold working) எனப் படுகிறது. இந்தக் குளிர் பணி திரிபு கடினத் தன்மையை (strain hardening) உலோகத்தில் உண்டாக்கும். மேலும் அணுத் துகள்கள் (Grains) உருக் குலைவு அடைந்து, அணுத் துகளின் அமைப்பு பாதிக்கிறது. எனவே, குளிர் பணியில் நெகிழ்வு உரு மாற்றத்திற்கு உட்படுத்தப் பட்ட உலோகம் வெப்பச் செயல்பாட்டிற்கும் (heat treatment) உட்படுத்தப் படுகிறது. மிகு வெப்பப் பணி. உலோகத்தின் மீது பணி செய்யும் போதே, நிலை மாறு வெப்ப நிலையை உலோகம் அடையுமானால், அவ்வகைப் பணி மிகு வெப்பப் பணி (hot working) எனப் படுகிறது. இவ்வகைப் பணிகள் உலோகங்களின் நிலை மாறு வெப்ப நிலை அல்லது மறு படிகமாக்கு வெப்ப நிலைக்கும் மேலாகக் கொண்டு சென்று குளிரச் செய்வது, சூடாக்கிப் பதப் படுத்துதல் எனப் படுகிறது. வெப்பச் செயல்பாட்டு முறைகளில் சூடாக்கிப் பதப்படுத்துதல் எனப் படுகிறது. வெப்பச் செயல்பாட்டு முறைகளில் சூடாக்கிப் பதப்படுத்துதலும் ஒரு வகையாகும். எனவே, மிகு வெப்பப் பணியல் உலோகத்தினை நெகிழ்வு உரு மாற்றம் அடையச் செய்தால், தனிப் பட்ட வெப்பம் தேவையில்லை. —கோ. நாகேஸ்வரன்