இழை வடிவில் வளர்ந்துள்ள தனிப் படிகங்களே படிகப் படலங்கள் (Crystal whiskers) எனப் படும். வளைவுச் சோதனைக்கு இப்படிகங்களை உட்படுத்தும் போது, இவற்றின் வலிமை மிக உயர்ந்து இருப்பது கண்டறியப் பட்டது. படிகங்களின் வலிமை சாதாரணமாக, 0.0001G–0.001G என்னும் நெடுக்கத்தில் அமைந்திருக்கும். படிகப் படலங்களின் வலிமை 0.06G அளவாகக் கூடச் சில நேரங்களில் காணப் படும். இங்கு G என்பது படிகத்தின் விறைப்புக் குணகம் ஆகும். படிகப் படலங்களின் வலிமை, குறைகளற்ற ஒரு படிகத்திற்குக் கணக்கிடப் பட்ட வலிமைக்கு மிக அருகில் உள்ளமை அண்மையில்தான் அறியப் பட்டிருப்பதால், படிகப் படலங்கள் பற்றி மேலும் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. படிகப் படலங்கள் நிறை தெவிட்டு நிலையிலுள்ள ஊடகங்களில் (super saturated media) வளர்க்கப் பட்டுப் பெறப் படுகின்றன. இவ்வகையில் பெறப் பட்ட படிகப் படலங்கள் சில மில்லி மைக்ரான்கள் விட்டமும், பல செ.மீ. நீளமும் கொண்டவையாக இருக்கின்றன. இம்முறையில் பெறப் பட்ட சில வகைப் படலங்கள் வளைவுச் சோதனைகளின் போதும், இழுவைச் சோதனைகளின் போதும், அதிக வலிமை உடையனவாகக் காணப் பட்டன. சில வகை உலோகப் படிகப் படலங்களை, அவற்றின் அரைத் திண்ம நிலையிலுள்ள சூடான அல்லது குளிர்ந்த குழம்பிலிருந்து தன்னிச்சை வெளித் தள்ளல் முறை மூலம் பெறலாம். இவ்வாறு, வெளித் தள்ளப் பட்ட படிகங்கள் ஒன்று முதல் இரண்டு மைக்ரோ மீட்டர் விட்டமுடையனவாகவும், ஏறத் தாழ 1 மி.மீ. நீளமுடையனவாகவும் இருக்கின்றன. இம்முறையில் பெறப் பட்ட படிகப் படலங்களும், அதிக வளைவு வலிமை பெற்றிருக்கின்றன. ஆனால், அதிக இழுவை பெற்றுள்ளனவா என்பது இன்னும் நிறுவப் படவில்லை. பொதுவாக, இப்படலங்கள், அதிக வலிமையைத் தவிர, தனித் தன்மை வாய்ந்த மின், காந்த மற்றும் புறப் பரப்புப் பண்புகளையும் பெற்றுள்ளன. படலங்களின் இப்பண்புகளுக்கும், அவற்றின் படிக அமைப்பிற்கும் உள்ள தொடர்பு இன்னும் தெளிவாக அறியப் படவில்லை. —கோ. மணிவண்ணன் துணை நூல். C.Kittel, Introduction to Solid State Physics Fifth Edition, John Wiley and Sons, New York, 1983.