உம்மாக் கட்சி
ummāk kaṭci
நடு ஆப்பிரிக்க நாடாகிய சூடான் நாட்டில் (Sudan) 1943–ஆம் ஆண்டில் தோன்றிய நடுத்தரப் போக்குடைய தேசிய கட்சியே உம்மாக் (Ummah) கட்சியாகும்.
நடு ஆப்பிரிக்க நாடாகிய சூடான் நாட்டில் (Sudan) 1943–ஆம் ஆண்டில் தோன்றிய நடுத்தரப் போக்குடைய தேசிய கட்சியே உம்மாக் (Ummah) கட்சியாகும். உம்மா என்பதற்கு நாடு அல்லது தேசம் என்பது பொருளாகும்.
சூடானின் பழைய வரலாறும், உம்மாக் கட்சி தோன்றிய சூழ்நிலைகளும்
பண்டைக் காலத்தில் நுபியா (Nubia) என்று சொல்லப்பட்ட சூடான் நிலப் பகுதியில் நீக்கிரோ இனத்தைச் சேர்ந்த மக்கள் வேட்டையாடிப் பிழைத்தனர். சிறிது சிறிதாக நாகரிக வளர்ச்சி பெற்ற இம்மக்கள் கி.மு. 3000–இல் எகிப்தின் படை எழுச்சிகளுக்கு உள்ளாயினர். எகிப்திலிருந்தும் இலிபியாவிலிருந்தும் புதிய மக்கள் குடியேறினர். அடிக்கடி எகிப்திய–நுபியப் போர்கள் நடந்தன. நைல் ஆற்றின் தென்பகுதியில் இந்நாடு இருந்ததால் இதில் வேளாண்மையும், தங்கம் முதலிய உலோகத் தொழில்களும் வளர்ந்தன. இந்நாட்டை ஆளுதற்காக எகிப்திய அரசர்களாலமர்த்தப்பட்ட அதிகாரிகள் நாளடைவில் சுதந்திர அரசர்களாயினர். வடக்கே எகிப்திலும், பாரசீக, கிரேக்க, உரோமானிய அரசியலாதிக்கத்துக்கு உட்பட்ட இடத்திலும் நுபியா தனது நாகரிகத்தைப் பாதுகாத்தது. இந்- நாட்டிற்கு கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் கிறித்தவக் குருமார் வந்து கல்வி, மருத்துவப் பணிகள் செய்து, சிறிது சிறிதாகச் சூடானிய மக்களை மேனாட்டு நாகரிகத்தை ஏற்றுக் கொள்ளுவதற்குத் தகுதி உடையவராகச் செய்தனர். இதை அடுத்து, அராபியர் வந்து வட சூடானில் வாணிகம் செய்து தங்கினர். துருக்கியர்கள் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றத் தென் சூடானில் அராபியர் பரவினர். பல்வேறு இனமக்கள் சிறு சுதந்திர அரசுகளை நிறுவினர். புஞ்சு (Funj) என்ற இனத்தார் சூடானை ஆட்சி செய்தபோது, அவர்களுடைய படைகளில் அடிமைகளே பணி புரிந்தனர்; இதனால், வலுலிழந்த அரசர்களுடைய காலத்தில், இசுலாமிய நீதிபதிகளும் கலைஞர்களும் (உலாமாக்கள்) ஆதிக்கம் பெற்றனர். எகிப்தை ஓட்டோமான் துருக்கியத் தலைவரான முகமதுஅலி ஆட்சி செய்தபோது, அவர்தம் மகன் இசுமாயில் (Ismail) சூடானை வென்று அதை எகிப்தோடு கி.பி. 1821–இல் இணைத்தார். இதனை எதிர்த்த சூடானியர் ஒடுக்கப்பட்டுக் கடும்வரி விதிப்புக்கு உள்ளாயினர். சிறிது சிறிதாக வரி குறைக்கப்பட்டு, வணிக வழிகளும் திறக்கப்பட நாடு சிறிது வளம் பெற்றது. கார்ட்டும் (Khartoum) நாட்டின் தலைநகரமாயிற்று. பல சூடானியக் குழுக்களின் தலைவர்கள் (Shayks) எகிப்தினாட்சிக்கு ஆதரவளித்தனர். கப்பல் போக்குவரவு வசதிகள் ஏற்படுத்தப்பட வாணிகம் பெருகிற்று. இசுமாயில் 1863–இல் எகிப்தின் தலைமை ஆளுநராக வந்து, எகிப்திலும் சூடானிலும் மேலைநாட்டுத் தொழில் முறைகளையும், கல்வி முறையையும் புகுத்தி அவற்றை நவீன நாடுகளாக்க முயன்றார். இவர் நாட்டைத் தெற்கில் விரிவாக்கி, அடிமை நிலையையும் ஒழிக்க முயன்றார். பல்வேறு காரணங்களால் எகிப்தில் ஆங்கில அதிகாரியின் கட்டுப்பாட்டில் அரசாங்கம் வரலாயிற்று. சூடானில் கி.பி. 1881–இல் முகமது அகமது என்பவர் கடவுளால் அமர்த்தப்பட்டவர் என்று தம்மைக் கூறியதோடு, மகதி (Mahadi) என்றும் கூறிக் கொண்டு, அடிமை வணிகர்களுடைய ஆதரவைப் பெற்று, மக்களுடைய தலைவராகி படைதிரட்டிப் பிரிட்டிசுத் தளபதி கார்டனைத் தோற்கடித்துக் கொன்று, கி.பி. 1885–இல் கார்டூமைக் கைப்பற்றினார். மக்கள் பல துன்பங்களுக்கு உள்ளாயினர். மகதியின் ஆட்சியைச் சூடானிய மக்கள் ஏற்றனர். எகிப்தில் அயலவருக்கெதிராகத் தோன்றிய கலகத்தை அடக்கவும், மற்ற ஐரோப்பிய அரசுகளின் தலையீட்டைத் தடுக்கவும், பிரிட்டிசுப் படைகள் கி.பி. 1882–இல் எகிப்தின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றின. பின்னர் கி.பி. 1896–இல் பிரான்சு நைல் ஆற்றின் குறுக்கே அணைகட்டி அவ்வாற்றின் நீர் எகிப்துக்குக் கிடைத்தலைத் தடுக்க முயலவே, எகிப்துக்கு அவ்வாற்றின் நீர் கிடைக்கச் செய்வதற்காகப் பிரிட்டிசார் சூடானையும் கைப்பற்றுதல் தவிர்க்க முடியாததாயிற்று. ஓர் ஆங்கிலோ எகிப்தியப் படை கி.பி. 1897–இல் சூடானில் படையெடுத்துச் சென்று 1898–இல் ஆம்டூர்மானில் (Omdurman) சூடானியப் (மகதியின்) படையைத் தோற்கடிக்கவே சூடான் பிரிட்டிசார் வசமாயிற்று; பிரெஞ்சுத் தலையீடும் தவிர்க்கப்பட்டது. சூடானில் எகிப்து நடத்திய கடுமையான ஆட்சியே மகதியின் எழுச்சிக்கு வழி வகுத்ததென்று ஆங்கிலேயர் அறிந்து, தாம் வென்ற சூடானை எகிப்துக்கு அளிக்காமல், சூடானின் மீது ஆங்கிலோ–எகிப்திய இணைப்பாட்சியை (Anglo–Egyptian Condominium) கி.பி. 1899–இல் ஏற்படுத்தினர்.
இந்த ஏற்பாட்டின்படி சூடானுக்கு ஒரு தனியான அரசியல் நிலை அளிக்கப்பட்டது; அதன் மீதான இறைமை அதிகாரம் (Sovereignty) எகிப்தியத் தலைவராலும் கெடிவ் (Khedive) என்ற ஆங்கில அரசாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. நாட்டின் இராணுவ ஆட்சியும் குடிமை அரசாங்கமும் ஆங்கில அரசால் பெயர் குறிப்பிடப்பட்டு, ஒரு நியமனத் தலைமை ஆளுநரிடம் (Nominated Governor General) ஒப்படைக்கப்பட்டது. சூடானை வென்ற ஆங்கிலத் தளபதி கிச்சனர் பிரபு சூடானின் முதல் பிரிட்டிசுத் தலைமை ஆளுநராக கி.பி. 1899–இல் ஆனார். அவருக்குப் பின்னர் வந்த விங்கேட்டு (Wingate) என்பவருடைய ஆட்சிக் காலத்தில் சூடானில் அமைதியும் செழிப்பும் நிலவின. இரயில்வே, தந்தி, கப்பல் போக்குவரவு முதலியவை கொண்டு வரப்பட்டன. பருத்தி விளைச்சலுக்கு ஊக்கமளிக்கப்பட்டது தொடக்கப் பள்ளிகளும் தொழிற் பள்ளிகளும் கார்டன் நினைவுக் கல்லூரியும் நிறுவப்பட்டன. மேனாட்டு முறையில் கல்விப் பயிற்சி பெற்ற வல்லுநர் கூட்டம் ஒன்று உருவாயிற்று; இதனைப் பிரிட்டிசு அதிகாரிகள் புறக்கணிக்கவே, இவர்கள் எகிப்திய தேசிய வாதிகளைச் சார்ந்திருந்தனர். இவர்களிடையே இருந்துதான் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சூடானியத் தேசிய உணர்வு தோன்றிற்று.
சூடானில் தேசிய உணர்வு செயல்படுதலும் உம்மாக் கட்சி தோன்றுதலும்
சூடானில் அலி அபுதல் வத்தீபு என்பவர் ஐக்கியக் கூட்டக் கழகம் (United Tribes Society) என்பதை 1921-இல் நிறுவினார்; இவர் நடத்திய தேசிய கிளர்ச்சிக்காகச் சிறைபிடிக்கப்பட்டார். பிரிட்டிசாரைச் சூடானிலிருந்து வெளியேற்றுவதற்காக இவர் 1924-இல் வெண்கொடிக் கழகம் (White Flag League) என ஒன்றைத் தொடங்கினார். கார்ட்டுமில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்பட்டன. பிரிட்டிசுத் தலைமை ஆளுநர் சர் லீ இசுடாக்கு (Sir Le Stack) 1924–இல் கொல்லப்பட, பிரிட்டிசார் எகிப்தியரைச் சூடானிலிருந்து வெளியேற்றி, எகிப்த்தியருக்கு ஆதரவாகக் கலகம் செய்த ஒரு சூடானியப் படையை அழித்தனர். இதனால் பிரிட்டிசாருடைய ஆட்சிக்குச் இரண்டாம் உலகப் போரினிறுதிவரை சூடானில் எதிர்ப்பு ஏற்படவில்லை.
ஆங்கிலோ – எகிப்திய உடன்படிக்கையின்படி (Anglo–Egyptian treaty of 1936) எகிப்திய அலுவலர் சூடானில் மீண்டும் பணி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த உடன்படிக்கை செய்யப்படுவதற்கு முன்னர், தங்களுடைய கருத்துகளைக் கேட்டறிவதற்குப் பிரிட்டனோ எகிப்தோ சிறிதும் முயலவில்லை என்று கற்றுவல்ல சூடானியர் குறைகூறினர். அவர்கள் பட்டதாரிகள் பொதுமன்றம் (Graduates General Congress) என்ற ஒரு குழுவின் வாயிலாகத் தம் குறைகளை எடுத்துரைத்தனர். இம்மன்றம் கார்டன் கல்லூரியின் பழைய மாணவர்களால் அமைக்கப்பட்டதாகும். இதில் கற்றுவல்ல எல்லாச் சூடானியரும் இருந்தனர். முதலில் சமூக, கல்வி, முன்னேற்றச் செயல்களிலீடுபட்டிருந்த இந்த மன்றம் பின்னர், எகிப்தியருடைய தூண்டுதலால் சூடானியருடைய தேசிய உணர்வை வெளிப்படுத்துதற்குத் தான் ஒன்று தான் தகுதிபெற்ற பிரதிநிதி என்று தன்னைப் பிரிட்டிசார் ஒப்புக் கொள்ளுதல் வேண்டுமென்று வற்புறுத்திற்று. இதற்குச் சூடான் அரசாங்கம் மறுக்கவே, மன்றம் இருபகுதிகளாகப் பிரிந்தது; ஒரு பகுதியில் பெரும்பாலானவர்கள் இருந்து, நடுத்தரப் போக்குடையவர்களாகவும் அரசாங்கத்தை ஆதரித்தும் இருந்தனர்; மற்றப் பகுதியில் எகிப்தைச் சார்ந்திருந்தோர் சிறுபான்மையினராக இருந்தனர்; சிறிய பகுதியின் தலைவர் இசுமாயில் அல் அசாரி (Ismail al Azhari) மன்றத்தைக் கட்டுப்படுத்தி, அதை 1943–இல் அசிகா (Ashiqqa) என்ற அரசியல் கட்சியாக நிறுவினார். இதுவே சூடானில் உருவாகிய முதல் அரசியற் கட்சியாகும். இகற்கெதிராகவே நடுத்தரப் போக்குடையோர் (Moderates) உம்மா (Ummah) என்ற தேசியக் கட்சியை சயித் அப்தார் ரகுமான் அல்மகதியின் தலைமையில் அமைத்தனர். இதனுடைய நோக்கம் சூடான் நாளடைவில் சுதந்தரம் பெறும் பொருட்டுப் பிரிட்டிசாருடன் ஒத்துழைத்தலே ஆகும். இதனுடைய தலைவராகிய சையித்து என்பவர் முன்னை நாள் மகதியின் மகனாகையால் அவருடைய தலைமையைப் பெருமளவில் சூடானியர் ஆதரித்தனர்.
உம்மாக் கட்சியும், சூடானிய அரசியலும்
உம்மாக் கட்சியின் தலைவர் சையித்து தமக்குக் கிடைத்த ஆதரவை உம்மாக் கட்சியின் கோட்பாடுகளோடு இணைக்க எண்ணினார். அசிகாக் கட்சிக்குக் காட்மியா என்ற கூட்டத்தார் ஆதரவளித்தனர். இருகட்சிகளுக்கும் இடையே ஐயுறவும் பூசலும் தோன்றின. அசிகாக் கட்சி தேசிய ஐக்கியக் கட்சியாக வளர்ந்தது. இதற்கும் உம்மாக் கட்சிக்கும் நல்லுறவு ஏற்படாததால் சூடானில் பாராளுமன்ற அரசாங்க முறை ஏற்படுவது தடைப்பட்டது. பிரிட்டிசார் கற்றுவல்ல சூடானியர்களை ஆட்சித் துறையிலீடுபடுத்தும் நோக்கத்துடன், அவர்களுடைய தேசிய உணர்வை ஒப்புக் கொண்டனர். ஆயினும் அவர்கள் வட சூடானுக்கு மட்டும் 28 சூடானியரும் ஒரு தலைமை ஆளுநரும் கொண்ட ஓர் ஆலோசனை மன்றத்தை நிறுவினர். வட சூடானிலிருந்த முசுலிம் அராபியர்களைத் தென் சூடானிலிருந்த கிறித்தவ ஆப்பிரிக்கர்களிடமிருந்து பிரித்தற்காகச் செய்த சூழ்ச்சியே இதுவாகும். ஆனால் இதனை நன்குணர்ந்த சூடானிய தேசியவாதிகள் ஆலோசனை மன்றத்தைத் தென் சூடானியரையுமுடைய ஒரு சட்டமன்றமாக மாற்றுதல் வேண்டுமென்று கிளர்ச்சி செய்தனர். கடைசியில் பிரிட்டிசார் பிரித்தாளும் கொள்கையை விடுத்து 1947–இல் ஒரு சட்ட மன்றத்தை நிறுவி, சூடான் முழுவதற்கும் பிரதிநிதிகளாக அதில் தென் சூடானியரும் இருத்தற்கு ஏற்பாடு செய்தனர். இதனை எகிப்து எதிர்த்தது; எகிப்திய அரசாங்கம் 1951 அக்டோபரில் பிரிட்டனைக் கலந்துகொள்ளாமல் ஒருதலையாக 1936–ஆம் ஆண்டின் ஆங்கிலேய–எகிப்திய உடன்படிக்கையைத் தள்ளுபடி செய்தது; மேலும், அது சூடானின் மீது எகிப்திய ஆட்சியை நிறுவி ஓர் அறிக்கையை விடுத்தது. பின் விளைவுகளை எண்ணிப்பாராமல் எகிப்து செய்த இச்செயல் சூடானியரை எகிப்திடமிருந்து பிரிக்கவே செய்தது. எகிப்தில் 1952–இல் நாசரும் நெகுபும் நடத்திய புரட்சியின் விளைவாகச் சூடானியருடைய தேசிய உணர்வை மதிக்கக் கூடியவர்கள் எகிப்தில் ஆட்சிக்கு வந்தனர். அவர்களுடைய முயற்சியின் விளைவாகச் சூடானில் எகிப்தின் செல்வாக்குப் பரவிற்று. அவர்கள் 3 ஆண்டுகளுக்குள் சூடானுக்குத் தன்னாட்சி வழங்குவதென்றும், சூடானியருக்குத் தன்தேச உரிமையை உறுதி செய்யும் உரிமையையும் (Right of SelfDetermination) வழங்குவதென்றும் பிரிட்டனோடு 1953 பிப்பிரவரியில் ஓர் ஒப்பந்தத்தைச் செய்தனர்.
ஒரு பிரதிநிதித்துவப் பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுத்தற்காக 1953 நவம்பரில் தேர்தல்கள் நடைபெற்றன. நைல் பள்ளத்தாக்கினர் யாவரும் இணைதல் வேண்டுமென்று எகிப்தியர்கள் குரலெழுப்பி, அசிகாக் கட்சியின் (தேசிய ஐக்கியக் கட்சி) தலைவர் அசாரிக்கு உதவி செய்தனர். உம்மாக் கட்சியின் நோக்கம் ஒன்றுபட்ட நைல் பள்ளத்தாக்கு அன்று; அது தெற்குச் சூடானின் தனித் தன்மை பாதுகாக்கப்படுதல் வேண்டுமென்று விரும்பிற்று; அதற்குப் பிரிட்டிசாரின் ஆதரவு இருந்தும், அசாரியின் தேசிய ஐக்கியக் கட்சியே வென்று, ஆறு ஆண்டுகளாகச் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியாக இருந்து ஆட்சி செய்த உம்மாக் கட்சியை நீக்கிற்று. தேசிய ஐக்கியக் கட்சித் தலைவர் அசாரி சூடானை எகிப்தோடு இணைத்தலைத் தமது நோக்கமாக வைத்துப் போட்டியிட்டுத் தேர்தலில் வென்றாலும், தென் சூடானில் இணைப்புக்கு எதிராகத் தோன்றிய கலகங்களும், பெரும் ஆட்சிப் பொறுப்புகளும் தமது நோக்கத்தைக் கைவிடும்படி அசாரியைத் தூண்ட, அவர் சூடானை 1956 சனவரி முதலாம் நாள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவப் பாராளுமன்றத்தையுடைய ஒரு சுதந்திரக் குடியரசாக அறிவித்தார்.
பிற்கால அரசியல் நிலை
முதலில் சூடானில் தாராளப் பாராளுமன்றக் குடியாட்சி முறை வரவேற்கப்பட்டாலும், நாளடைவில் அந்தமுறையானது உட்கட்சிப் பூசல்களினாலும், தலைவர்களுடைய அதிகார, பொருள் விருப்பங்களினாலும் வலுவிழந்தது. அவர்களுக்குப் பழக்கமான சருவாதிகார ஆட்சி முறை மீண்டும் தோன்றிற்து. இராணுவத் தளபதி அபுத்து 1958–இல் அரசாங்கத்தைக் கைப்பற்றினார். இவர் அரசியற் கட்சிகளைக் கலைத்தார் இவருடைய ஆட்சியும் வீழ, 1965–இல் ஒரு கூட்டணி அரசாங்கம் உம்மாக் கட்சித் தலைவர் முகமது அகமது மசூபியின் தலைமையில் அமைக்கப்பட்டது. உம்மாக் கட்சியில் இருபிரிவுகள் தோன்றின; இரண்டையும் இணைக்கக் கூடிய பொது நோக்கங்களில்லை; பொருளாதார, சமூக, அரசியலமைப்புக் கேள்விகளைப் பாராளுமன்றத்தால் தீர்க்க இயவில்லை. மீண்டும் இராணுவ ஆட்சி 1969–இல் நுமெய்ரியின் (Numayri) தலைமையில் ஏற்பட்டு உம்மாக் கட்சி ஒடுக்கப்பட்டது. பொதுவுடைமையர் நுமெய்ரியை எதிர்த்துக் கலகம் செய்தனர். அயலவர் ஆதரவுடன் மீண்டும் 1971–இல் ஆட்சிக்கு வந்த நுமெய்ரி ஓர் அரசியலமைப்பை ஏற்படுத்தி தேசிய மன்றத்தையும் அமைத்தார். தென் சூடானுடன் 1972–இல் அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டது; அதற்கு உள்ளாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டன; கலகங்கள் ஓய்ந்தன. பிரதேச தன்னாட்சிச் சட்டத்தின்படி கார்ட்டுமிலுள்ள நடுவண் அரசாங்கம் பாதுகாப்பு, அயல்நாட்டுக் கொள்கை, குடிமை உரிமை, அயல்வாணிகம், பொருளாதாரச் சமூகத் திட்டங்கள், நிதி, செய்தித்துறை, கல்வி முதலியவற்றிற்குப் பொறுப்பேற்றது. தென் சூடானியப் பிரதேச மக்கள் சட்டமன்றத்தின் தலைவர் நாட்டின் துணைத் தலைவராக ஆனார். ஒரு புதிய அரசியலமைப்பு 1973–இல் வரையப்பட்டது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 929)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g9x4btm5/
தமிழ்“உம்மாக் கட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g9x4btm5/APA
Oliyon Research. (2026). உம்மாக் கட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g9x4btm5/MLA
"உம்மாக் கட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g9x4btm5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment