மகப் பேறின்மை நிலையைப் போக்கப் பெண்ணிற்குச் செய்யப்படும் மருத்துவ முறையைச் செயற்கை முறைக் கருவுறல் (artificial insemination) என்பர். சூலகத்திலிருந்து முட்டை வெளிப்படும் அன்று புணர்ந்து, விந்தணுக்கள் கருப் பையின் உட்சென்று முட்டையுடன் இணைவதையே பொலிவுறுதல் என்பர். இதைத் தொடர்ந்து சூல் உண்டாகிறது. ஆணின் விந்தணுவைப் பெறுவது மிக எளிது. ஆனால், அது பெண்ணின் முட்டையை அடைவது கடினமானது. அண்டநாள அடைப்பின் போது, சூலகத்தில் உள்ள முதிர்ந்த முட்டை கருப் பையை அடைய முடியாது. லாபராஸ்க்கோபியின் மூலம் முதிர்ந்த முட்டையை வெளியில் எடுத்து, ஆணின் விந்தணுவுடன் சேர்த்துப் பொலிவுறச் செய்வதையே ஆய்வகப் பொலிவுறல் (in-vitro fertilisation–IVF) என்பர். இதற்கு முன்னதாக, உரிய மருந்துகள் கொடுத்துப் பெண்ணிடமிருந்து குறைந்தது 8 முட்டைகளைப் பெற்று, விந்தணுவுடன் சேர்த்துப் பொலிவுறச் செய்கின்றனர். இங்கு பெட்ரி தட்டில் விந்தணுவையும், லாபராஸ்க்கோபி மூலம் எடுக்கப் பட்ட முட்டையையும், உடலியங்கியல் சார்ந்த சூழ்நிலையில் இணையச் செய்து கருவை உண்டாக்குகின்றனர். இதற்கு, அடைகாப்புக் கருவி பயன் படுகிறது. இதைக் கருப் பையில் பொதியச் செய்து கருச் சிசுவை வளரச் செய்யலாம். பின்னர் 10–15 நாள்களுக்குப் பிறகு செய்யப்படும் வேதி ஆய்வு மூலம் பொலிவுற்ற முட்டை, கருப் பையில் நன்கு பதிந்து விட்டதைத் தெரிந்து கொள்கின்றனர். பிற முறையில், பெண்ணின் சூலகத்திலிருந்து முட்டை இயல்பாக வெளிப் படுகிறது. ஆனால், வேறு பல காரணங்களால், விந்தணு அதை அடைய முடியவில்லை. இந்நிலையில், விந்தணுவை எடுத்துப் பீச்சுங் குழல் கொண்டு, கருப்பையின் கழுத்து வழியாக உட் செலுத்துகின்றனர். பின்னர், உள்ளே சென்ற விந்தணு, தன் விரைவான அசைவால், முட்டையை அடைந்து, அதைப் பொலிவுறச் செய்கிறது. இதை உடலின் உள் பொலிவுறல் என்பர். சில போது, தம்பதிகளில் எந்தக் குறைபாடும் இல்லாத போதும், விந்தணுவும், முட்டையும் கருப் பையின் சரியான இடத்தில் சந்திக்காமையால், பொலிவுறுவதில்லை. இந்நிலையில் முட்டையையும், விந்தணுவையும், செருகு குழல் மூலம் அண்ட நாளத்தினுள் செலுத்திப் பொலிவுறச் செய்யலாம். கருப் பொருளை அண்ட நாளத்தினுள் செலுத்தல் ( gamete intra fallopian transfer-GIFT) என இதைக் குறிப்பிடுவர். தெரிந்தெடுக்கப்படும் விந்தணு கணவனுடையதாக இருக்கலாம். கணவனுக்கு விந்தணுக் குறைபாடு அல்லது இல்லாத நிலை தோன்றும் போது, வேறு ஒருவரின் விந்தணுவைப் பயன் படுத்தலாம். தானமளிப்பவரின் விந்தணு கொண்டு பொலிவுறச் செய்வதைச் செயற்கை முறைக் கருவுறுதல் என்பர். செயற்கை முறைக் கருவுறுதலில், மேலும் பல ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன. உலகின் மிகச் சிறந்த மருத்துவ மையங்களில் கூட, செயற்கை முறைக் கருத்தரிப்பு 30% வெற்றியே பெறுகிறது. செயற்கை முறைகள் மூலம் கருத்தரிக்கா விடில், தம்பதிகளை மரபு நுட்ப அணு இயல் முறைப்படி ஆய்வு செய்திட வேண்டும். —சாரதா கதிரேசன்