நுண் தட்ப வெப்பம்
nuṇ taṭpa veppam
நீர்ப் பரப்பிலிருந்தும், நிலப் பரப்பிலிருந்தும், தாவரப் பரப்பிலிருந்தும், நீர் ஆவியாகி வான வெளியில் மேகமாகிறது.
நீர்ப் பரப்பிலிருந்தும், நிலப் பரப்பிலிருந்தும், தாவரப் பரப்பிலிருந்தும், நீர் ஆவியாகி வான வெளியில் மேகமாகிறது. மேகம்குளிர்ந்து, பதப் பட்டு மழை பொழிந்து செடி, கொடி இடை மறித்த பிறகு நிலத்தையும், நீர் நிலைகளையும் அடைகிறது. மழை நீர் மண்ணுட் சென்று பரவித் தாவரங்களின் வேர்களால் ஈர்க்கப் பட்டு, இலைகளுக்குச் செல்கிறது. நிலப் பரப்பிலிருந்தும், தாவரப் பரப்பிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் மீண்டும் நீர் ஆவியாகி, வான வெளியை அடைகிறது. இடையீடின்றித் தொடர்ந்து நடை பெறும் இந்நிகழ்ச்சி, நீரியல் சுழற்சி (hydrologic cycle) எனப் படும். இச்சுழற்சியின் மூன்று கட்டங்களான நீர் மண்ணினுல் செல்லுதல் (infiltration), நீராவியாதல் (evaporation), இலை நீராவியாதல் (transpiration) என்பவை வேளாண் பிரிவில் குறிப்பிடத் தக்கவை.
நீர் நிலப்பரப்பினுட் செல்வது நீர் ஊடுருவுதலின்றும் (percolation) மாறு பட்டது. நீர்ம வடிவத்திலிருந்து, நீர் ஆவியாகி, வளி மண்டலத்தை அடைவதை, வளி நீராவியாதல் எனலாம். தாவரங்களின் பரப்பிலிருந்து, நீர் ஆவியாவதை, இலை நீராவியாதல் எனலாம். நான்கில் மூன்று பகுதி, வளி நீராவியாகவும், இலை நீராவியாகவும், வளி மண்டலத்தை அடைகிறது. இதன் அளவு, இடத்திற்கு இடம் ஓரளவு மாறு படலாம். எஞ்சிய மழை நீர்ப் பரப்பு, நீராகவும், அடி நீராகவும், கடலை அடைகிறது. வளி நீராவியையும், இலை நீராவியையும் பிரித்தல் அரிதாகையால், இவ்விரு நிகழ்ச்சிகளையும் ஒரு சேர வளி இலை ஆவியாதல் (evapotranspiration) எனலாம்.
வளி இலை நீராவியாதல், மண் பரப்பிலிருந்தும் நீர்ப் பரப்பிலிருந்தும் நிகழ்வதால், நீர் பராமரிப்புப் பணிகளில் இது இன்றியமையாதது. வளி நீராவியாவதைக் குறைத்தால், பயிர்களின் வளர்ச்சிக்கு வேண்டிய நீரைச் சேகரிக்கலாம். பயிர்களின் நீர்த் தேவையை மதிப்பிடவும், பண்ணைக் குட்டைகளில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்ள நீரை முன் கூட்டியே அறியவும், வளி நீராவியாதல் பயன் படும்.
இலை நீராவியாவதன் அளவைக் கொண்டே பயிர்களின் நீர்த் தேவை மதிப்பிடப் படுகிறது. மிகுதியாக, இலை நீராவிப் போக்குள்ள பயிர்களின் நீர்த் தேவை மிகுதி. இந்நீர்த் தேவையைப் பாசனம் செய்தோ, மழை மூலமோ, பயிருக்கு அளிக்க வேண்டும். இலை நீராவி மூலம், நீரை அகற்றுவது வடிகாலுக்கு உதவும்.
பயிர்கள் செழித்து, வளர்ந்துள்ள நிலப் பரப்பில் வேளாண்மைச் செயல்கள் மிகுந்துள்ளன. உழுதல், களை எடுத்தல், பார் அணைத்தல் போன்ற யாவும் நில மட்டத்திலிருந்து 2 மீ. உயரத்திற்குள் நடை பெறுகின்றன. இப்பகுதியில் நிலவும் தட்ப வெப்பத்தைக் குறு தட்ப வெப்பம் (micro climate) எனலாம். நில மட்டத்திருந்து பல கி.மீ. உயரத்தில் உள்ள தட்ப வெப்ப நிலையை, இடைத் தட்ப வெப்பம் (meso climate) என்றும், பரந்து விரிந்த நிலப் பரப்பில் நிலவும் தட்ப வெப்பத்தைப் பெரு தட்ப வெப்பம் (macro climate) என்றும் கூறலாம்.
பயிர் செய்வதில் பயிர்களின் நீர்த் தேவை, மண்ணில் நீர் இறங்கும் அளவு, மண்ணிணுள் நீரின் இயக்கம் ஆகியவை மிகவும் இன்றியமையாதவை. பொதுவாக, நிலப் பரப்பில் உள்ள வெப்பம் நில மட்டத்திலிருந்து 2 மீ. உயரத்திற்கு மேல் வேறு பட்டிருக்கும். எனவே, இப்பகுதியில் தட்ப வெப்பத்தை நோக்கத்திற்கேற்றவாறு, சீராகப் பராமரித்துப் பயிர்களின் நீர்த் தேவைகளையும் பாசனச் செயல்பாட்டையும் சிறப்பாகத் திட்டமிடலாம்.
நிலப் பரப்பில் சூரிய ஆற்றல். புவியின் மீது படும் சூரிய ஒளிக் கதிரின் பெரும் பகுதி வளி மண்டலத்திலேயே மேகம் மற்றும் காற்றில் மிதக்கும் பொருள்களால் மீள எதிர் பலிக்கப் படுகிறது. எஞ்சிய ஆற்றல் நிலப் பரப்பை அடைகிறது. இவ்வாற்றல் ஓரளவு மண்ணை வெப்பமுறச் செய்கிறது. மற்றொரு பகுதி, மீண்டும் வளி மண்டலத்தை அடையவும், மறு பகுதி நீர் ஆவியாவதற்கும், மண்ணுக்கு அருகில் உள்ள காற்றை வெப்பமாக்கவும் பயன் படுகிறது. புவி, இரவில் சூரியனிடமிருந்து கதிரியக்க ஆற்றலைப் பெறுவதில்லை. ஆதலால், ஆற்றல் செலவு நிலப் பரப்பிற்கு எதிர்த் திசையில் அமைகிறது; இதனால் மண் குளிர்ச்சியடைகிறது.
.வெப்ப முகம்.. பகலில் சூரிய வெப்பத்தின் பெரும் பகுதியை நிலப் பரப்பு ஏற்றுக் கொள்கிறது. இதில் ஒரு பகுதி மண்ணின் கீழ்ப் பகுதியை வெம்மைப் படுத்தக் கடத்தப் படுகிறது. ஓரளவு மண்ணைச் சார்ந்துள்ள காற்றை வெப்பமாக்குகிறது. இரவு நேரத்தில், சூரியக் கதிர் புவியை அடைவதில்லை. இதனால், புவியின் பரப்பிலிருந்து ஆற்றல் எதிர் பலிப்பது ஏற்றுக் கொள்ளும் அளவினும் மிகுதியாவதால், மண் பரப்பு குளிர்ச்சி அடைகிறது. மண்ணை அடுத்துள்ள காற்றும், தன்னகத்தே உள்ள வெப்பத்தை மண்ணுக்கு ஈந்துதான் குளிருகிறது. இம்மாற்றத்தினால், மண்ணைச் சார்ந்துள்ள காற்றின் வெப்பம், இதற்கு மேற்பகுதியில் உள்ளதை விடக் குறைந்து, வெப்ப மறுதலிப்பு (temperature inversion) நிகழ்கிறது. மண் பரப்பில் ஏற்படும் வெப்பக் குறைவும், கூடுதலும் குறு தட்ப வெப்ப நிலையைக் குளிராகவும், வெப்பமாகவும் மாற்றுவதால், அன்றாட வெப்பம் மாறுகிறது. இரவில் சூரிய ஒளி இராமையால், ஆற்றல் நிலப் பரப்பிலிருந்து வெளிப் படுகிறது. இதன் பயனாக, இரவில் வெப்பம் குறைந்தும், பிற்பகலில் வெப்பம் மிக உயர்ந்தும், காணப் படும். இத்தகைய சூழலிலேயே இடியுடன் கூடிய மழை பொழிகிறது.
நிலத்தின் உயரம் 300 மீ கூடுதலானால், வெப்பம் 1°C குறைகிறது. வறண்ட காற்று மண்டலத்தைச் சற்று வெப்பமும், ஈரமும் உள்ள காற்று மண்டலம் மீறிச் சேரும் போது, உயரமான பகுதியிலும், வெப்பம் மிகுதியாகலாம். இதுவே, வெப்ப மறுதலிப்பு ஆகும். ஒரு பகுதியின் உயரம், வெப்பம் ஆகிய இரண்டின் வாட்ட நிலைக்கேற்ப, வளி மண்டலத்தின் உறுதிப்பாடு மாறுகிறது. இதனை ஒட்டி மழை பெய்கிறது. வெப்பக் காற்று உயரப் பாய்வதற்கு எளிது; இதனால், உறுதி நிலை குலைகிறது. அதே நேரத்தில், உயரத்துடன் மிகக் குறைந்த வெப்ப மாற்றம் நிகழ்ந்தால், உறுதி நிலை மிகுதியாகும்.
நிலப் பரப்பிலிருந்து, மண்ணுக்குள் வெப்பம் செல்வதற்கும், மண்ணுக்குள் இருந்து, மண் பரப்பிற்குச் செல்வதற்கும், தேவையான காலம் மண் பரப்பிற்கும், அதன் உட்பகுதிக்குமிடையே வெப்பத் தொய்வைத் (temperature lagging) தோற்றுவித்து விடுகிறது. மண், ஆற்றல் ஏற்கும் சூழ்நிலையில் 80 செ.மீ. ஆழத்திற்குக் கீழ் வேறுபாடு எதுவும் ஏற்படுவதில்லை.
நிலப் பரப்புக்கு அண்மையில் காற்றின் இயக்கம் மிகக் குறைவு. இவ்விரண்டுக்குமிடையே உள்ள இழுவை ஆற்றலினால் (drag force), மண்ணை ஒட்டியுள்ள காற்றும் பெரும்பாலும் இயங்குவதில்லை. நிலப் பரப்பின் உயரத்திலுள்ள கிழிப்புத் திறன், காற்றின் வேகத்தை மிகைப் படுத்துகிறது. உயரம் கூடும் போது, இவ்வாற்றல் மறைகிறது. நில மட்டத்திலிருந்து உயரம் கூடும் போது, காற்றின் வேகம் மிகுவதையும், பயிர்களின் உயரத்திற்கும், காற்றின் வேகத்திற்கும் உள்ள தொடர்பையும், கெய்கர் என்பார், ஆராய்ந்து விளக்கியிருக்கிறார்.
பயிர்களின் உயரத்திற்கேற்பச் சொரசொரப்பு (roughness) நிலை மாறுபடுவதால், ஒவ்வொன்றுக்கும் உரிய மதிப்பெண் தரப் பட்டது. சான்றாகக் கோதுமை 1 மீ. உயரம் வளரும் பயிராகையால், இதன் சொரசொரப்புத் தன்மை இவ்வுயரத்திற்குக் கூடுதலாகிறது. இது போலவே, நில மட்டத்திலிருந்து 1.5 மீ. உயரம் வளரும் பீட்கிழங்கிற்கும் 1 மீ. வளரும் புல் தரைக்கும் உரிய சொரசொரப்பு அவற்றின் உயரத்தை ஒத்திருக்கிறது.
குறு தட்ப வெப்பம் வேளாண்மையில் வியத்தகு பங்காற்றுகிறது. இதனைப் பின் வரும் ஆய்வு தெளிவு படுத்தும். சாகுபடியில், பயிர்கள் தனியாகவும், ஊடு பயிராகவும் விதைக்கப் படுகின்றன. பெரும்பாலும், வான்பயிர் (rainfed cropping) முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்கள் விளைவிக்கப் படுகின்றன. இதில், ஒரு பயிர் குறைந்த வயதுடன், தரையுடன் ஒட்டி வளர்ந்து மண்ணின் மேற்பரப்பிலிருந்து ஊட்டத்தைப் பெறுவதாகவும், மற்றது சற்று உயரம் மிகுந்து, நீண்ட வயதும், ஆழமான வேர்களும் கொண்டு, மண்ணின் கீழ்ப் பகுதியிலிருந்து ஊட்டத்தைப் பெறுவதாகவும் இருக்கும். இதனால், முன்னைய பயிர் விரைவிலும், மற்றது சற்றுக் காலம் சென்றும், அறுவடைக்கு வரும். இயற்கையின் மாறுபாட்டினால், ஒரு பயிர் விளைவு குறையினும், மற்ற பயிர் நன்கு விளைந்து, இழப்பை ஈடு கட்டும். நிலத்தில் வீசும் காற்றைப் பயிர்கள் ஓரளவு தடுப்பதால், அதன் விரைவு தணிவதுடன் வெப்பமும், நில ஈரம் ஆவியானதும் குறைகின்றன. எனவே, இப்பகுதியின் குறு தட்ப வெப்ப நிலை சீராகிப் பயிர் வளர்ச்சி மேம்படும். வான் பயிர் முறையின் உறுதியற்ற நிலையைப் போக்க, ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களை விளைவித்தல் மரபு. பாசனப் பயிர் முறையில் போதிய விளைவும் உறுதிப்பாடும் உள்ளமையால், பயிர்கள் தனியாகவே விதைக்கப் படுகின்றன. நீர் வளம் அருகி வரும் சூழ்நிலையில், பாசன நீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதால், நில ஈரம் காத்துப் பாசன நீரைச் சேமிக்கலாம். —கே. ஆர். திருவேங்கடசாமி துணை நூல். Gabom, Shelterbelt, Faber and Faber Ltd, London, 1970.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 87)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g5mrdzkp/
தமிழ்“நுண் தட்ப வெப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g5mrdzkp/APA
Oliyon Research. (2026). நுண் தட்ப வெப்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g5mrdzkp/MLA
"நுண் தட்ப வெப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g5mrdzkp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment