அரிசில்கிழார்
aricilkiḻār
சங்கப் புலவர்களுள் ஒருவர்.
சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர்தம் இயற்பெயர் அறியக் கூடவில்லை. கிழார் என்னும் பெயரை நோக்க இவர் வேளாண் மரபினர் என்பது புலனாகிறது. இப்பெயரிலுள்ள அரிசில் என்பது பற்றிப் பல கருத்துகள் கூறப்பட்டுள்ளன. சோழ நாட்டில் கொள்ளிடத்திற்கு வடபாலுள்ள அரியலூர் என்பதன் மரூஉவெனச் சிலர் கருதுகின்றனர். மைசூர்ப் பகுதியிலுள்ள அரிசிற்கரை என்னும் ஊரே அரிசில் எனக் குறிப்பிடப்பட்டது என்று கூறுவாருமுளர். சோழ நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் காவிரியின் கிளை ஆறாகச் செல்லும் ஓராற்றின் பெயர் அரிசில் என்பதாகும். அவ்வாற்றின் கரையில் இருந்த ஓரூரின் பெயர் அரிசில் என்பதும் அவ்வகையில் இப்புலவர் அரிசில் கிழார் எனப்பட்டார் என்பதும் கூறப்படுகின்றன.
பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவரால் பாடப்பட்டதாகும். இப்பத்தில் இவர் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையினைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்பத்தினைப் பாடியதற்காகப் பெருஞ்சேரலிரும்பொறை தானும் தன் மனைவியும் அரண்மனையினின்றும் புறம்போந்து, தன்பால் உள்ளனவெல்லாம் கொள்ளுங்கள் என்று கூறி, ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் அரசு கட்டிலையும் வழங்கினான். புலவர் வேண்டுகோளை ஏற்றுப் பெருஞ்சேரலிரும்பொறை மீண்டும் தன் ஆட்சியைத் தொடர, இவர் அம்மன்னன்பால் அமைச்சராக விளங்கினார்.
ஏழு பாடல்கள் (146, 230, 281, 285, 300, 304, 342) புறநானூற்றிலும், ஒரு பாடல் (193) குறுந்தொகையிலும் இவர்பெயரில் அமைந்துள்ளன. பேகனால் துறக்கப்பட்ட அவன் மனைவி கண்ணகியை அவன்பால் கூட்டுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கவிதைபாடி வேண்டிக்கொண்ட புலவர்களுள் இவரும் ஒருவர். பிரிந்து வருந்தும் கண்ணகி மகிழ்ந்து மலர் மாலை சூடுமாறு, பேகன் தேர் ஏறி அவள்பால் செல்வதுவே தாம் அவனிடம் பெற விரும்பும் பரிசில் என்று இவர் புறநானூற்றில் பாடியுள்ளார். இவர் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியின் மீது கையறு நிலைச் செய்யுள் இயற்றியுள்ளார். இவருடைய குறுந்தொகைப் பாடல் முல்லைத் திணையில் தலைவி கூற்றாக அமைந்துள்ளது. கபிலர், பரணர், பெருங்குன்றூர்க்கிழார், மருதன் இளநாகனார், ஒளவையார் போன்றோர் இவர் காலத்தில் வாழ்ந்த புலவராவர். தகடூர் யாத்திரை என்னும் நூலில் இவருடைய பாடல்கள் உள்ளன என்னும் செய்தி, தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையினால் தெரிகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 779)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g4ejut4w/
தமிழ்“அரிசில்கிழார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g4ejut4w/APA
Oliyon Research. (2026). அரிசில்கிழார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g4ejut4w/MLA
"அரிசில்கிழார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g4ejut4w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment