செருமானியத் தத்துவ அறிஞரான ஏகல் (Hegal) ‘அயன்மை’ என்னும் கோட்பாட்டை முதன் முதலாக விரிவாகவும் முறையாகவும் விளக்கினார். அவர் ‘அயன்மை’ (Alienation) என்னும் கோட்பாட்டினால் மனிதனின் மகிழ்ச்சியற்ற மனநிலையினைப் பகுத்தாய்ந்து, அதனை விவரிக்கும் ஒரு சிந்தனைப் போக்கைக் குறிப்பிட்டார். அத்தகு மனநிலைக்குச் சமயம் தந்த விளக்கத்தை ஏற்க, எகலின் பகுத்தறிவு மறுத்துவிட்டது. அவர் அதற்குரிய விடையை வரலாற்றுப் போக்கில் காண விழைந்தார். எகலின் சிந்தனையில், ‘அயன்மை’ என்னும் சொல் சமுதாய உறவின் திரிபும் முறிவும் ஆகவும், தன்வயம் இழந்து மனவலியும் நலனும் குன்றுதலாகவும், இவற்றுக்கு மருந்தாக மனமுவந்து செய்யும் உரிமை மாற்றமாகவும் விளக்கம் பெறுகிறது. வரலாற்றின் ஓட்டத்திற்கும் சமுதாய வளர்ச்சிக்கும் அயன்மையை இன்றியமையாததாக எகல் கருதுகிறார். ஒவ்வொரு தனி மனிதனும் தன் வளர்ச்சிப் பருவங்களில் தன் இன வளர்ச்சி நிலைகளைக் கண்டு, கடந்து, இன வரலாற்றில் இன்றைய எல்லைக் கோட்டை அடைந்து, இயைபுற்று, அயன்மைத் தன்மையைக் கடப்பது இயற்கை நியதி என்பது வரலாற்று வழிப் பகுத்தறிவு கண்ட சிந்தனை முடிபு. அயன்மையை விஞ்சும் பணியில் கல்விக்கே முழுப் பங்கும் பொறுப்பும் உண்டு. பிறக்கும் ஒவ்வொரு மனித உயிரையும், இளமைப் பருவம் தொடங்கி, இன வளர்ச்சியின் நிலைகளில் தோய்ந்து, வரலாற்றின் இன்றைய எல்லைக் கோட்டை அடையச் செய்வது கல்வியே. அயன்மையை, வரலாறு அறிந்து உலகத்தோடு ஒட்டி ஒழுக உதவும் சிந்தனை உளியாக எகல் கண்டார். ஆனால், அவர் வழி வந்த, சிந்தனையில் அவரை விஞ்சிய காரல் மார்க்சு (Karl Marks) இதே கருத்தை – அயன்மையை – புரட்சி செய்து புதியதோர் உலகம் சமைக்கத் தூண்டும் வரலாற்று நெம்புகோலாகக் கொண்டார். தாம் விரும்பும் உலகப் புரட்சி மட்டும் நிகழ்ந்து விட்டால், அயன்மையற்ற உலகம் உதித்து விடுமென்று அவர் கனவு கண்டார். அக்கனவை அவர் வரலாற்றுப் போக்கிலும் சான்று கொண்டு நிறுவ முயன்றார். கல்வியாளர்க்குப் புரட்சிக் கனலைத் தூண்டும் புதுக்கல்வி புகட்ட வேண்டுமென்று அவர் கூறினார். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இருத்தல் கொள்கை அறிஞர்கள் (Existentialists) எகலின் அறிவு முதல் வாதம், உலகத்தோடு ஒட்ட ஒழுகி அயன்மையைத் தவிர்த்து விஞ்ச உதவாது என்றும், மார்க்சின் வழி வரலாற்றுப் புரட்சி நிகழ்ந்து சமுதாயங்களிலும் அயன்மை ஒழிக்கப்படவில்லை என்றும் கண்டார்கள். பின், அயன்மையை விஞ்சுவதற்கு வழிதான் என்ன? இதில் கல்வியின் பங்கு என்ன? என்ற கேள்விகள் எழுந்தன. எகல், மார்க்சு, இருத்தல் கொள்கையர் என்னும் இம்முத்திறத்தார் சிந்தனையிலும் குறைபடும் அயன்மை, குறைபடா அயன்மை ஆகிய இரண்டையும் பாகுபடுத்தி, வாழ்விலும், வரலாற்றுப் போக்கிலும் வேறுபடுத்தி அறியும் அறிவு (Discrimination) காணப்படவில்லை. குறைபடும் அயன்மை, சமுதாய மாற்றத்தால் தீர்க்கப்பட வேண்டும். குறைபடா அயன்மை, தனி மனிதன் வலிமை, செம்மை ஆகியன பெறுவதால் உண்டாகவேண்டும். எது குறைபடும் வகை, எது குறைபடா வகை என்பது ஒவ்வொரு தனி மனிதனும் தன் சூழ்நிலையைத் துருவிக் கூர்ந்து பிரித்தறிந்து செயற்பட வேண்டுமேயன்றி, இதற்குக் கொள்கை வாய்பாடுகள் வழிகாட்டியாக முடியா. எத்துணை உயர்ந்த கொள்கையும் சில சமயங்களில் மனிதனை அறிவிழந்தவனாக்கி விடும். அது அயன்மையற்ற கனவுச் சமுதாயத்தை உருவாக்க உதவும் எனக் கொள்ளுதல் கானல் நீரின் பின்னே செல்வது போலாகும். கொள்கை, வரலாற்றுச் சிந்தனை ஆகியவற்றை விடுத்துத் தனிமனிதன் தன் போக்கில் இயங்குவதும் அயன்மையாகும். தேவிடு ரீசுமென் (David Riesman) என்பவர், இவ்வழி அயன்மையுற்ற மனிதர்களை மரபு வழிச் செல்பவர், தம் மைய வழிச் செல்பவர் (Self centred), அண்டை அயலார் வழிச் செல்பவர் என்று மூவகையாகப் பிரித்து விளக்குகிறார். இம்மூவகையினரும் அயன்மை நிலைக்கு உணர்வற்றுச் செயற்படுபவராவர். கொள்கை வழிச் செல்வோரும், உணர்விழந்து செயற்படுவோரும், அயன்மை ஆக்கும் நிலைக்கும், அயன்மை ஆன நிலைக்கும் பாகுபாடு அறியாதவர் ஆவர். இங்கு, கல்லியின் பங்கு அயன்மை ஆக்கும் நிலையை அயன்மை ஆக்கா வண்ணம் எதிர்கொள்ள இளைஞரை உருவாக்குவதாம். வளரும் குழந்தை பெற்றோர் வயமும், பெற்றோர் பொதுவாக மரபு வயமும் உள்ளனர். குழந்தை வளர்ந்து இளைஞனாகும்போது, அவன் மரபு வயமும் தன்வயமும் பெற வேண்டும். தன்வயநிலை தன் மைய நிலையினின்றும் வேறுபட்டது. தன் மைய நிலையில் சிந்தித்துச் செயற்படுவோர், எக்காலத்தும் எச்சமுதாயத்திலிருந்தும் அயன்மையுற்றவர்களே. ஆனால், தன் வயத்தோடு செயல்படுவோர் அவ்வப்போது சமுதாயத்துடன் முரண்பாடு கொண்டாலும், அவர் நாளையச் சமுதாயத்தின் முன்னோடிகளாவர். தேவையான சமூக மாற்றம் இவ்வாறு தன்வயம் பெற்ற தலைவர்களாலேயே நிகழ்கிறது. தன்வயமுற்றவர் மரபுகள் கூறும் நெறிமுறைகளை அறிவைக் கொண்டு பாகுபடுத்தித் தக்கன ஏற்று, தகாதன தவிர்த்துச் செல்வர். இதை விடுத்துக் கண் மூடித்தனமாக மரபுவழித் தடத்தில் செல்வதும், வேரறுந்த புரட்சிப் பாதையில் தறிகெட்டு ஓடுவதும் கல்வியின் தோல்விக்கு அடையாளமாகும். இத்தகைய, தன்வயத்தைத் தூண்டி வளர்க்கும் கல்வி தான் பழையன கழிந்து புதியன புகுதற்கும் சமுதாயம் தேய்ந்து அழியாமல் உடைந்து குலையாமல் தழைத்துவளர்தற்கும், தனி மனிதன் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் பிறவிப் பேறுகளை அடைதற்கும் உதவும். வீடு பேற்றை அடைவது, அயன்மையை உறுதியாகவும் இறுதியாகவும் கடக்கும் வழியாகும். அயன்மை என்னும் கோட்பாடு தமிழுக்குப் புதியதன்று. அயன்மை அனுபவம் மனித இன முழுமைக்கும் பொது. “கூலிக்கு மாரடித்தல்”, “இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன?”, “அழுதாலும், பின்னை அவளே பெறவேண்டும்” என்னும் தமிழ்ப் பழமொழிகள், இந்த அனுபவத்தின் பல்வேறு வகைகளையும் பகுதிகளையும் தமிழர் உணர்ந்திருந்த பான்மைக்குச் சான்றுகளாகும். திருமூலர், மாணிக்க வாசகர், தாயுமானவர், வள்ளலார் போன்ற சமய குரவர்கள் அயன்மை நிலையைக் கடந்து, உலகெலாம் தன்மயமான வீடுபேற்று நிலையை எய்திப்பெற்ற அனுபவத்தைத் தமிழ்மொழியில் அழியாத இலக்கியமாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். சமய குரவர்கள் இன்புற்றுப் பாடி வைத்தவை அயன்மை கடந்த அரிய ஆராய்ச்சிக் கருப்பொருள்கள் ஆகும்.இரா.க.