இலி, திரிக்வி ஆல்வ்தன்
ili, tirikvi ālvtaṉ
நார்வே நாட்டைச் சார்ந்த அரசியலறிஞர்; ஐ.நா.வின் முதல் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர்.
நார்வே நாட்டைச் சார்ந்த அரசியலறிஞர்; ஐ.நா.வின் முதல் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். இவர் ஆசுலோவில் (Oslo) கி.பி. 1896–ஆம் ஆண்டு பிறந்தார். நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன் வழக்குரைஞராக விளங்கினார். இவர் சமதரும மக்களாட்சிக் கட்சியைச் (Social Democrat) சார்ந்தவர். இவர் 1935 முதல் 1939 வரை நார்வே அரசின் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர், 1939–40–ஆம் ஆண்டில் வணிக வளர்ச்சி அமைச்சராகவும் 1940 முதல் 1945 வரை நார்வே அரசின் சார்பாக இலண்டனில் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார். இப்பொறுப்பில் இவர் பெற்ற அனுபவமே இவர் ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர் பதவி ஏற்றபோது இவருக்கு உறுதுணையாய் அமைந்தது. இப்பதவியை இலி (Lie, Trygve Halvdan) மாதம் 1946 ஆம் ஆண்டு சனவரி 29–ஆம் நாள் பெற்றார். அப்போது ஐ.நா. பொது அவைக்கூட்டம் இலண்டன் வெசுட்டுமினிசுட்டரில் (Westminster) கூடியது. இவருடைய பணியாற்றும் செயல் திறமையைக் கண்ட உறுப்பினர்கள். இவரை இரண்டாம் முறையாகவும் 1950–ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். இவரும் அதனை ஏற்றுக்கொண்டார். உலக அமைதிக்காக இருபதாண்டுத் திட்டமொன்றையும் அப்போது இவர் அவையின் முன் வைத்தார். மூன்று வாரங்களுக்குப் பிறகு, தென் கொரியாவின் மீது வட கொரியா தாக்குதல் நடத்தியதையொட்டி, வட கொரியாவின் மீது பன்னாட்டு நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. உறுப்பினர்களால் இவர் வற்புறுத்தப்பட்டார். அப்போது சோவியத்து ஒன்றியம் பாதுகாப்பு அவையைப் புறக்கணித்து வந்தது. அதன் விளைவாகப் பொதுவுடைமைக் கருத்துகளின் அடிப்படையில் உருவாகியிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை இலி இழக்க வேண்டியவரானார். இவர் 1952–ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பதவி விலகப் போவதாக அறிவித்தார். ஐந்து மாதங்களுக்குப் பின்னர், தாக் ஆமர்சோல்டு (Dag Hammarshold) என்பார் ஐ.நா.வின் பொதுச் செயலாளரானார். நார்வே திரும்பிய இலி அந்நாட்டின் அரசியலில் பங்கு கொண்டார். இவர் 1963–64 இல் தொழில் அமைச்சராகவும், 1964–68–இல் கடல் கடந்த வாணிகத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் 1968–ஆம் ஆண்டு திசம்பர் 30–ஆம் நாள் நடு தென் நார்வேயிலுள்ள கியிலோ (Geilo) என்னும் ஊரில் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 408)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g3cysucq/
தமிழ்“இலி, திரிக்வி ஆல்வ்தன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g3cysucq/APA
Oliyon Research. (2026). இலி, திரிக்வி ஆல்வ்தன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g3cysucq/MLA
"இலி, திரிக்வி ஆல்வ்தன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g3cysucq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment