உண்மை வருமானம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட வருமானத்தின் வாங்கும் திறனைக் குறிக்கும். ஒரு நாட்டின் உண்மை வருமானம் (Real Income) அதன் வாங்கும் திறனைக் (Purchasing Power) கொண்டே கணக்கிடப்படும். ஒரு நாட்டுச் செலாவணியின் மதிப்பைப் பொறுத்தும் உற்பத்திக் காரணிகளின் தேவை அளிப்பைப் பொறுத்தும் உண்மை வருமானத்தில் மாற்றங்கள் ஏற்படும். பண வருமானத்தை (Money Income) நுகர் பொருள்களின் விலை மாற்றங்களுடன் ஒப்பிட்டு உண்மை வருமானம் கணக்கீடு (Compute) செய்யப்படுகிறது. விலைக்குறியீடு (Price Index) உயரும் அளவுக்குப் பண வருமானமும் பெருகுமானால் நுகர்வோரின் வாங்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படா. இத்தகைய சூழ்நிலையில் பண வருமானம் உயர்வாகக் காணப்பட்டாலும் உண்மை வருமானம் மாற்றம் ஏதுமின்றியிருக்கும். பண வருமானம் பெருகும் வேகத்தைவிட மிகையான வேகத்தில் விலைகள் உயருமானால் உண்மை வருமானம் கீழிறங்கும். பண வருமானம் பெருகும் வீதத்தைவிடக் குறைவான அளவில் விலைகள் உயருமானால் உண்மை வருமானம் உயரும். பணவீக்கத்தினால் (Inflation) உண்மை வருமானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு ஊதியங்களும் ஆதாயப் பங்குகளும் உயர்ந்து வருமானம் மறு பங்கீடு (Re-distribution) செய்யப்படும். கடன் வாங்கியவரின் உண்மை வருமானம் உயரும். கடன் கொடுத்தவர் இழப்பை ஏற்க நேரிடும். நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள், நிலையான வருமானம் (Fixed Income), ஓய்வூதியம் (Pension), ஆண்டுத்தொகை (Annuities) போன்றவற்றைப் பெறுபவர்கள் ஆகியோரின் உண்மை வருமானத்தில் வீழ்ச்சி காணப்படும். இவர்களுக்குத் தங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் இல்லாததால், உண்மை வருமானம் வீழ்ச்சியுற்றுப் பேரளவில் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன் பெற்ற பணத்தையே பெறுவார்கள். அப்போது அப்பணம் அளித்த வாங்குந்திறன் இப்போது இல்லாததால், தங்கள் செலவுகளைக் குறைத்து ஏழ்மை நிலைக்குள்ளாவார்கள். இவர்களின் சேமிப்பும் பாதிக்கப்படும். பண வருமானத்திற்கும் உண்மை வருமானத்திற்குமுள்ள வேறுபாடுகள் ஒரு நாட்டில் பகுதிக்குப் பகுதி வேறுபாடான தாக்கங்களை உருவாக்கும். அதனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் (Standard of Living) ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். எடுத்துக்காட்டாக, புதுதில்லியில் உரூ. 3000 வருமானம் பெறும் ஓர் ஆசிரியர் தம் வருமானத்தில் 20 விழுக்காட்டை வீட்டு வாடகைக்குச் செலுத்தவேண்டியிருக்கும். பிற செலவுகளுக்கும் கொடுத்த பின்னர்ச் சேமிப்புக்கு அவரிடம் பணம் இருக்காது. அதே காலத்தில் மதுரையில் உரூ. 2000 மட்டுமே வருமானம் பெறும் ஆசிரியர் தம் வருமானத்தில் 10 விழுக்காட்டை மட்டுமே வீட்டு வாடகைக்குச் செலுத்திவிட்டுப் பிற செலவுகளுக்கும் போக எஞ்சியதைச் சேமித்து வைப்பார். மிகுந்த பண வருமானம் ஈட்டக்கூடிய புது தில்லியில் பணத்தின் வாங்கும் திறன் மிகக் குறைவு. எனவே, மதுரையில் வாழ்பவர் குறைந்த பண வருமானம் ஈட்டினாலும் அதன் உண்மை வருமானம் உயர்வாக உள்ளது. எனவே, அதன் மிகுந்த வாங்கும் திறனால் விளையும் நன்மைகளைப் பெற்று உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிப்பார். உற்பத்திக் காரணிகளின் தேவை, அளிப்பு ஆகியவற்றில் ஏற்படும் தொடர் மாற்றங்களினால் (Chain Reactions) உண்மை வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு உற்பத்தி முறை, பதிலீட்டுப் பண்டங்கள், முதலீடு (Capital), வட்டிவீதம் (Interest Rate) ஆசியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் உருவாகும். எடுத்துக்காட்டாக, கைத்தறி ஆடைகளுக்கான தேவை குறைந்து அவற்றின் விலைகள் வீழ்ச்சியுற்றால் ஆலைத் துணிகளின் தேவை மிகும்; பிற செயற்கைத் துணிகளும் பதிலீட்டுப் பொருள்களாக உற்பத்தி செய்யப்படும்; தொழிற்றுறை வளர்ச்சியடையும்; தொழில் முதலீட்டுப் பொருள்களின் தேவையும் பெருகி வட்டிவீதம் உயரும்; கைத்தறித் துணி உற்பத்தியில் ஈடுபட்டிருந்தோரின் உண்மை வருமானத்தில் வீழ்ச்சியும் வேலையின்மையும் ஏற்படும்; கைத்தறி முதலீட்டுப் பொருள்களின் உற்பத்தியில் இழப்பும் அங்காடியில் தேக்கமும் ஏற்படும். இவற்றிற்கு மாறாகத் தொழிற்றுறையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை, ஊதியம் ஆகியவை உயர்ந்து உண்மை வருமானத்திலும் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படும். முதலீட்டுப் பெருக்கம், வட்டிவீத உயர்வு ஆகியன பொருளாதார முன்னேற்றத்திற்கான இணைப்பு விளைவுகளை (Linkage Effects) உண்டாக்கும். துணை நூல் Lewis. C. Solmon, Economics, Addison Wesley Publishing Company, Massachusetts, 1976.