உட்பிணைப்பு மொழிகள்
uṭpiṇaippu moḻikaḷ
மொழிகளை அவற்றின் அமைப்பு அடிப்படையில் தனிநிலை மொழிகள் (Isolating Languages), ஒட்டுநிலை மொழிகள் (Agglutinative Languages), உட்பிணைப்பு மொழிகள் (Inflectional Languages), இணைப்பு நிலை மொழிகள் (Synthetic Langunges), பல்லிணைப்பு நிலை மொழிகள் (Polysynthetic Languages), உள்ளடக்குநிலை மொழிகள் (Incorporating Languages) எனப் பகுத்து ஆராயலாம்.
வேர்ச்சொற்களில் காணும் உயிர்மாற்றத்தினால் இலக்கணப் பொருளை உணர்த்துதல் உட்பிணைப்பு நிலை (Inflection) எனப்படும். இத்தகைய பண்புடைய மொழிகள் உட்பிணைப்புநிலை மொழிகள் எனப்படும். இம்மொழிகளில் இலக்கணக்கூறுகள், ஒட்டுகள் (Affixes) அடிச்சொற்களுடன் மிகப் பிணைந்து இணைவதாலும் வேர்ச்சொற்களில் நடைபெறும் உயிர்மாற்றங்களாலும் காட்டப்பெறுகின்றன. கிரீக்கு, இலத்தீன் போன்ற இந்தோ–ஐரோப்பிய மொழிகளும் செமிட்டிக்கு (Semitic) மொழிகளும் உட்பிணைப்புநிலை மொழிகளாகும். எண்ணிக்கையில் உட்பிணைப்புநிலை மொழிகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இம்மொழிகளே மிகவும் வளர்ச்சியடைந்தவை என்ற தவறான கருத்தும் சில மொழியியல் அறிஞர்களிடம் காணப்பட்டது.
உட்பிணைப்புநிலை மொழிகளாகக் கருதப்படுபவற்றிடையேயும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. செமிட்டிக்கு மொழிகளில் மூன்று மெய்யெழுத்துக்களைத் கொண்ட வேர்ச்சொற்களில் சில உயிரெழுத்துகளை இணைத்து வெவ்வேறு இலக்கணக்கூறுகளைச் சுட்டும் முறைமை காணப்படுகிறது. ஆங்கில மொழியில் அடிச்சொற்களுடன் ஒட்டுகளை இணைப்பதன் வாயிலாகவும் வேர்ச்சொற்களில் உயிரெழுத்துகளை மாற்றியமைப்பதன் வாயிலாகவும் இலக்கணக்கூறுகள் அமைக்கப் பெறுகின்றன. ஆங்கில மொழியில் செமிட்டிக்கு மொழிகளைப் போன்று உட்பிணைப்புப் பண்பு மிகுதியும் காணப்பெறவில்லை.
ஆங்கில மொழியில் ‘பாடுதல்’ என்னும் பொருளைச் சுட்டும் ‘Sing’ என்னும் நிகழ்கால வினைச் சொல்லின் ‘i’ என்னும் உயிரெழுத்தினை ‘a’ என்னும் உயிரெழுத்தால் மாற்றியமைக்கும் நிலையில் ‘Sang’ என இவ்வினைச்சொல் வடிவமாற்றம் பெற்று, இறந்தகால இலக்கணப் பொருள் கிடைக்கப்பெறுகிறது. இதனைப் போன்றே ‘கால்’ என்னும் பொருள்தரும் ‘fut’ (foot) என்னும் ஒருமை வடிவத்தின் ‘u’ என்னும் உயிரெழுத்துக்குப் பதிலாக ‘iy’ என்பதனை அமைக்கும் நிலையில் ‘fiyt’ (feet) என்னும் பன்மை வடிவம் கிடைக்கப் பெறுகிறது. இங்ஙனம் வேர்ச்சொற்களில் உயிர்மாற்றங்கள் செய்வதன் வாயிலாக வெவ்வேறு இலக்கணப் பொருள்கள் சுட்டப் பெறுவதால் ஆங்கில மொழி உட்பிணைப்புநிலை மொழியாகக் கருதப்படுகிறது.ஏ.ஆ.
துணை நூல்கள்
அகத்தியலிங்கம், ச., உலகமொழிகள், தொகுதி–1, அண்ணாமலைப்பலலைக்கழகம், அண்ணாமலை நகர், 1968.
Lehmann, W.P., Historical Linguistics, Oxford & I B H, Publishing Co., New Delhi, 1975.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 762)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g2eygs63/
தமிழ்“உட்பிணைப்பு மொழிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g2eygs63/APA
Oliyon Research. (2026). உட்பிணைப்பு மொழிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g2eygs63/MLA
"உட்பிணைப்பு மொழிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g2eygs63/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment