சிறுநீர்ப் பைக் காயங்கள்
ciṟunīrp paik kāyaṅkaḷ
சிறுநீர்ப் பை, உதர உறைக்குள்ளும் வெளியேயும் அமைந்துள்ளது.
சிறுநீர்ப் பை, உதர உறைக்குள்ளும் வெளியேயும் அமைந்துள்ளது. ஆகவே, சிறுநீர்ப் பை கிழிந்தாலோ, காயங்கள் ஏற்பட்டாலோ, அதிலுள்ள சிறுநீர் உதர உறைக்கு உள்ளும், வெளியுமாகக் கசியும். அடி விழுவதாலோ, மிதிபடுவதாலோ, கீழே விழுவதாலோ உதரவுறை உள் காயங்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும், பெண்களை விட ஆண்களிடமே இது மிகுதியாகக் காணப்படுகிறது. கூபக எலும்பு முறிவாலோ, சாலை விபத்துகளாலோ உதரவுறை வெளிக் கிழிசல் ஏற்படுகிறது. துப்பாக்கிக் குண்டுக் காயங்கள், குத்துக் காயங்கள், கருவிகள் உட்செலுத்தப்படுதல், உள்நோக்கி மூலம் அறுவை மருத்துவம், சிறுநீர்ப் பைக் கட்டிகளைப் பொசுக்கி, உறைய வைத்தல் ஆகியவையும் சிறுநீர்ப் பைக் கிழிசலை உண்டாக்கலாம்.
உதரவுறை உள் கிழிசல் (intraperitoneal rupture). அடி வயிற்றில் திடீரென்று தாங்க முடியாத வலியும், அதிர்ச்சியும், மயக்க நிலையும் உண்டாகின்றன. போதையுள்ள மனிதனுக்கு இந்நிலை உண்டானால், சிறிது நேரத்தில் அதிர்ச்சியும், வலியும் குறைந்து விடும். ஆனால், வயிறு உப்புசமடையும். நோயாளிக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வே இருப்பதில்லை. ஆய்ந்து பார்க்கும் போது, வயிறு இறுக்கமாக உப்பு சத்துடன் காணப்படும். விபத்து ஏற்பட்டதிலிருந்து நோயாளி சிறுநீர் கழிக்காமல் இருக்கும் போது, உப்புசமடைந்த சிறுநீர்ப் பையின் மீது தட்டினால் மந்த ஒலி (shifting dullness) கேட்பதில்லை. உதர உறைக் குழிவினுள் போதுமான அளவு சிறுநீர் தேங்கியிருந்தால், மாறுபடும் மந்த ஒலி கேட்கும். மலக் குடல் வழியே ஆய்வு செய்தால், மலக் குடல் சிறுநீர்ப் பைக் குழியில் ஒரு வீக்கம் காணப்படும். சிறுநீர் தூய்மையாக இருந்தால், உதரவுறை அழற்சி தோன்ற நேரமாகலாம்.உதரவுறை வெளிக்கிழிசல் (extra peritoneal rupture). இந்நிலையைச் சிறுநீர்ப் புறவ ழிக் கிழிசலிவிருந்து பிரித்தறிவது கடினம். குருதி இழப்பும், அதிர்ச்சியும் சீர்பட்டவுடன், அறுவை செய்வது நல்லது. நோய்க் காரணமறிய, வயிற்றின் எக்ஸ் கதிர்ப் படம் எடுக்கப்படுகிறது. கீழ் வயிற்றில் நீர்மம் தேங்கியிருப்பது தெரிகிறது. சிரை வழிச் சிறுநீரக வரைபடம் மூலம், சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர்க் கசிவைக்கண்டு பிடிக்கலாம். மிகவும் கவனத்துடன் சிறிய கதீட்டரை உட்செலுத்தி, குருதி கலந்த சிறுநீரை அகற்றலாம். வேறுபடுத்திக் காட்டும் ஊடக மருந்தை 120 மி.லி. உப்பு நீரில் கலந்து சிரை வழியாகச் செலுத்திச் சிறுநீர்ப்பையின் படங்களை எடுக்கலாம்.
மருத்துவம். உடனடியாக அறுவை மருத்துவம் செய்ய வேண்டும். வயிற்றைத் திறந்து, சிறுநீரை அகற்றி, நோயாளியைத் தலை கீழ் நிலையில் இருக்கும் படிச் செய்ய வேண்டும். கிழிபட்ட சிறுநீர்ப் பையின் ஓரங்களை நன்கு வெட்டித் தையல் போட வேண்டும். இத்துடன் ஒரு மலிகாட் கதீட்டரையும் சேர்த்துத் தைத்து விட்டால், சிறுநீர்ப் பையுள் அழுத்தம் குறைவாக இருக்கும். பின்னர் வயிற்றுச் சுவரையும் தைத்து விட்டு, நுண்ணுயிர் எதிர் மருந்துகளை 8—10 நாள் கொடுக்க வேண்டும். விபத்து நடந்த 12 மணி நேரத்தில் அறுவை செய்தால், 11% மரணம் நேருகிறது. 24 மணி நேரம் கழித்துச் செய்தால், 55% மரணம் நிகழ்கிறது.
குடல் பிதுக்க அறுவை, விந்தக அறுவை, சிறுநீர்ப்பைக் கட்டிகளை அகற்றும் அறுவை போன்ற சூழ்நிலைகளில் சிறுநீர்ப் பை சேதமடைகிறது. இதைத் தவிர்க்க உடனடியாக அறுவை செய்ய வேண்டும். —சாரதா கதிரேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 359)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fz9d5kz3/
தமிழ்“சிறுநீர்ப் பைக் காயங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fz9d5kz3/APA
Oliyon Research. (2026). சிறுநீர்ப் பைக் காயங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fz9d5kz3/MLA
"சிறுநீர்ப் பைக் காயங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fz9d5kz3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment