தேவகிரியைத் தலைநகராகக் கொண்டு, ஆட்சிபுரிந்த சேவுணர் (யாதவர்) அரசர் வரிசையில் புகழ்மிக்கவர்களுள் ஒருவர் ஆவார். மன்னர் மகாதேவரின் இறப்பிற்குப் பின்னர், மகாதேவரின் புதல்வரான அம்மனா சில மாதங்கள் ஆட்சி புரிந்தார். அம்மனாவை அடுத்து இராமச்சந்திரர் கி.பி. 1271–இல் அரிவணையேறினார். கந்தரரின் புதல்வரான இராமச்சந்திரர் இசுலாமிய வரலாற்றாசிரியர்களால் இராமதேவர் எனக் குறிக்கப்பெறுகிறார். இவரது ஆட்சியின் தொடக்க காலத்தில் சேவுணர்களின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் தாவண்கரேக்கு அருகில் உள்ள பெட்டூரில் (Bettur) இருந்தது. இராமச்சத்திரர் தமது ஆட்சிக்காலத்தில் எதிரிகளின் படையெடுப்பை அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. ஓய்சாளர்களும், குசராத்தை ஆண்டு வந்த சாளுக்கியர்களும், மாளவ வேந்தர்களும் இவர்தம் பகைவர்களாகத் திகழ்ந்தனர். மாளவ வேந்தரான இரண்டாம் துர்சனவர்மனை இவர் வென்று அடிமைப்படுத்திய போதிலும் ஒய்சாளரையும் சாளுக்கியரையும் இவரால் வெல்ல இயலவில்லை. இவ்வேந்தனது ஆட்டிக்காலத்தில்தான் இசுலாமியப் படையெழுச்சி என்னும் சூறைக்காற்றும் சுழன்று அடித்தது. காராவின் ஆளுநராக இருந்த அல்லாவுதீன் தேவகிரியின்மீது கி.பி. 1274–இல் படையெடுத்தார். எதிர்பாராத தருணத்தில் நிகழ்ந்த இப்படையெழுச்சியைச் சமாளிக்க இராமச்சந்திரர் ஆயத்தமாக இருக்கவில்லை. தம் மகனான சங்கரதேவனோ பெரும்படையுடன் தெற்கு நோக்கிச் சென்றிருந்தான். இந்நிலையில் தம்மிடம் உள்ள படையுடன் யாதவ மன்னன், அல்லாவுதீன் கில்சியின் படையுடன் மோதித் தோல்வியைத் தழுவியதால், தேவகிரிக் கோட்டையில் பாதுகாப்பாக ஒளிந்து கொண்டார். கோட்டை அல்லாவுதீனால் முற்றுகையிடப்பட்டது. யாதவ வேந்தனும் அல்லாவுதீனுக்குப் பெருமளவில் பொன்னையும் தம் பெண்ணையும் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டார். அல்லாவுதீன் தேவகிரியை விட்டு வேளியேறு முன்பே இச்செய்தி அறிந்த சங்கரதேவன் பெரும் படையுடன் தேவகிரிக்கு வந்தான். தன் தந்தையின் அறிவுரையைக் கேளாமல் இசுலாமியப் படைகளுடன் போரிட்டான்; தோல்விதான் கிடைத்தது. கோபம் கொண்ட அல்லாவுதின் இப்போது இரண்டு மடங்கு பொன்னும் பொருளும் கேட்டான். ஆண்டுதோறும் கப்பம் கட்ட வேண்டுமென்றும் விதித்தான். 600 மாண்டு முத்துகளும், 2 மாண்டு நகைகளும், 1000 மாண்டு வெள்ளியும், 4000 பட்டுச் சேலைகளும் கொடுப்பதாகச் சங்கரதேவன் ஒப்புக்கொண்டான். தேதவகிரி வேந்தன் தில்லிச் சுல்தானுக்கு முறையாகக் கப்பம் செலுத்தவில்லை. மேலும், அல்லாவுதீனின் படைகளால் குசராத்து தாக்கப்பட்ட போது, குசராத்திலிருந்து ஓடி வந்த மன்னன் கர்ண தேவனுக்கும், அவன் இளவரசி தேவாள தேவிக்கும் தனது அரண்மனையில் அடைக்கலம் தந்தான். இவற்றால் சினம் கொண்ட தில்லிச் சுல்தான் அல்லாவுதீன் கில்சி தன் படைத் தலைவனான மாலிக்காபூரைத் தேவகிரி மீது படையெடுக்க ஆணையிட்டான். சங்கரதேவனும் இராமச்சந்திரரும் தோற்கடிக்கப்பட்டனர். இராமச்சந்திரர் கைது செய்யப்பட்டு, தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அல்லாவுதீன் கில்சி இராமச்சந்திரரை அன்புடன் வரவேற்று ஆறு மாத காலம் தில்லியில் விருந்தினராக வைத்திருந்து, தேவகிரிக்கு அனுப்பினான். அவரது நாடு அவருக்குத் திருப்பித் தரப்பட்டது. கி.பி. 1310–இல் தான் இறக்கும் வரையில் இராமச்சந்திரர் தில்லிச் சுல்தானுக்கு உண்மையுள்ளவராக நடத்து கொண்டார். இவருக்குப் பின் இவர் மைந்தன் சங்கரதேவன் ஆட்சிப் பொறுப்பேற்றான்.