சந்தர்ப்ப வயத்தால் வாழ்வில் இடறி விழுந்த பதினாறு வயதுக்குக் கீழ்ப்பட்ட இளையோர்களுக்கு வாழ்வில் வளம் சேர்க்கவும், வழிகாட்டவும் தமிழகத்தில் உருவான அரசுத் துறையைச் சார்ந்தவை சீர்திருத்தப்பள்ளிகள், மகளிர் ஒழுக்கக் கண்காணிப்புத்துறை ஆகியவையாகும். இந்திய நாட்டில் தமிழகத்தில் 1920–ஆம் ஆண்டு முதன் முதலாகத் ‘தமிழ்நாடு குழந்தைகள் சட்டம்’ இயற்றப்பட்டது. அதன்படியே இத்துறை செயற்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் இயங்கும் சீர்திருத்தப் பள்ளிகள் பரவலாகப் பொதுமக்களால் சிறுவர் சிறைச்சாலை என்றும் தவறுதலாகச் சொல்லப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அனுமதிக்கப்படும் மாணவர்களுள் பெரும்பாலோர் காவலர்களால் பிடிபட்டு நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களானாலும், விடுதியில் தங்கிப் பள்ளியில் பயிலும் சாதாரண மாணவர்களைப் போன்றே பயின்று வருகின்றனர். இளநிலைச் சீர்திருத்தப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் ‘ஆதரவில்லாமல் சுற்றித்திரிதல்’ என்னும் வழக்கின் கீழ் விசாரணைக்குப் பின் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள். இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும் களவு, பிற குற்றங்கள் காரணமாகப் பிடிபடும் இளங்குற்றவாளிகள் முதுநிலைச் சீர்திருத்தப் பள்ளிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கென எட்டுப் பள்ளிகளும் மாணவிகளுக்கென ஒரு பள்ளியும் ஆக ஒன்பது சீர்திருத்தப் பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் முதலில் தோன்றிய சீர்திருத்தப் பள்ளி அரசினர் செங்கற்பட்டு முதுநிலைச் சீர்திருத்தப் பள்ளியேயாகும். இப்பள்ளிகளை இயக்கும் தலைமையகம் சென்னையில் ‘சீர்திருத்தப் பள்ளிகள், மகளிர் ஒழுக்கக் கண்காணிப்புத்துறை இயக்குநர் அலுவலகம்’ என்னும் பெயரில் இயங்கி வருகிறது. சந்தர்ப்பவயத்தாலும் பிற காரணங்களாலும் திசைமாறிய மகளிர் குற்றத்திற்கு (நடத்தை தவறுதல்) ஆளாகும்போது, இளைஞர்களுக்குக் கொடுக்கும் அதே மறுவாழ்வு மகளிர்க்கும் கொடுக்கப்பட வேண்டியிருப்பதாலும், அவர்களையும் சீர்திருத்திச் சமுதாயத்தில் நன்மக்களாக உருவாக்க வேண்டியிருப்பதாலும் மகளிர் ஒழுக்கக் கண்காணிப்புத் துறையும் இளையோர் சீர்திருத்தப் பள்ளியோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் சிறுவர் சிறுமியருக்கென விசாரணைக்கால வரவேற்பில்லங்களும் நீதிமன்ற விசாரணைகள் முடிவுற்றபின் பயிற்சிக்கு ஆணையிடப்பட்ட மாணவர்களுக்கென முதுநிலைச் சீர்திருத்தப் பள்ளிகள் (Senior Approved Schools), இளநிலைச் சீர்திருத்தப் பள்ளிகள் (Junior Approved Schools), சிறுமியர் சீர்திருத்தப் பள்ளிகள் (Girls Approved Schools), மாணவர் பிற்காப்பில்லங்கள், மகளிர் பிற்காப்பில்லங்கள், மகளிர் காப்பகங்கள், மகளிர் விழிப்புப்பணி இல்லங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் செவ்வனே செயற்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதற்கும் உள்ள சீர்திருத்தப் பள்ளிகளில் ஏறக்குறைய 2,500 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். மகளிர்க்கெனத் தனியாகச் சென்னையில் மட்டும் எட்டாம் வகுப்பு வரை ஒரு சீர்திருத்தப் பள்ளி இயங்கி வருகின்றது. செங்கற்பட்டுப் பள்ளியில் மட்டும் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. மற்ற எல்லாப் பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் ஏறக்குறை 20 அல்லது 30 மாணவர்கள் இருப்பார்கள். உறவினர்களும் பெற்றோர்களும் கண்காணிப்பாளர் அனுமதி பெற்றுப் பார்த்துச் செல்வதற்கான வழக்கம் நடைமுறையில் உள்ளது. இங்குத் தவறு செய்யும் மாணவர்களுக்குக் கௌரவ நீதிமன்றம் (Court of Honour) என்னும் அமைப்புச் செயற்பட்டு வருகிறது. இல்லத்தாசிரியர் (House master) ஒருவர் தலைமையில், 5 மாணவர்கள் உறுப்பினர்களாக விளங்க, வழக்கு விசாரிக்கப்பட்டு, அம்மாணவர்களின் ஆலோசனைப்படி தண்டனை வழங்கப்படுகிறது. தண்டனைகள் பெரும்பாலும் 400 அல்லது 500 தோப்புக்கரணங்கள் போடுதல், அவன் தங்கியுள்ள இல்லத்தைச் சுற்றிச் சுத்தம் செய்தல் போன்றவையாகும். பொதுவாக இங்குக் கற்பிக்கப்படும் கல்வி வெறும் ஏட்டளவில் அமைந்துவிடாமல் அவர்களது வாழ்விற்குத் தேவையான அடிப்படைக் கல்வியாக அமைந்துள்ளது. பாடநூல் கல்வியோடு வாழ்க்கைத் தொழிற்கல்வியும் (Vocational Education) ஒருசேரக் கற்பிக்கப்பட்டு வருகிறது. எட்டாம் வகுப்புப் படித்து முடித்து இப்பள்ளியைவிட்டு ஒரு மாணவன் வெளியேறும் போது, ஏதாவது ஒரு தொழிற்கல்வியில் முறையான பயிற்சி பெற்று அதற்கான சான்றிதழையும் பெற்றுச் செல்கிறான். அரசு நடத்தும் தொழிற் கல்வித் தேர்வுகளிலும் இம்மாணவர்கல் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றுச் சான்றிதழ் பெறுகின்றனர். குறிப்பாக, புத்தகக் கட்டுத் தேர்வு, தையல் தொழில் தேர்வு, ஓவியம் வரைதல் தேர்வு போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்றனர். இவ்வாறு தகுதிபெற்றுச் செல்லும் மாணவர்கள் வாய்ப்புகளின் அடிப்படையில் இத்துறையிலும் பணிபுரிய அரசு உரிய வழிவகை செய்துள்ளது. இதன்படியே இப்பள்ளியின் பல முன்னாள் மாணவர்கள் இத்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் மாவட்டந் தோறும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இவர்கள் வேலைவாய்ப்புப் பெறத் தகுதிக்- கேற்பத் தனியான இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் பட்டதாரிகள். மாணவர்கள் தொழிற்கல்வி கற்பதற்கு வசதியாகப் பல தொழிற்கூடங்கள் உள்ளன. மாணவர்களின் ஊர்ச்சூழலில் உள்ள தொழிலின் தன்மைக்கேற்பவும், மாணவர்கள் தொழிலின்மேல் உள்ள நாட்டத்திற்கேற்பவும் மாதம் ஒரு முறை நடைபெறும் உளநூல் கல்விமையத்தின் (Psychology Study Circle) மூலம், மாணவர்கள் உரிய தொழிற்கூடங்களுக்குப் பிரித்து அனுப்பப் பெறுகின்றனர். இப்பள்ளியில் புத்தகம் கட்டும் தொழிற்கூடம், தச்சுத் தொழிற்கூடம், மின்தச்சுத் தொழிற்கூடம், தையல் தொழிற்கூடம், மின்தையல் தொழிற்கூடம், கருமார் தொழிற்கூடம், நெசவுத் தொழிற்கூடம், பாய் நெசவுத் தொழிற்கூடம், வாத்தியத் தொழிற்கூடம் போன்ற தொழிற் கூடங்களும் உள்ளன. தோட்ட வேலை, கொத்துவேலை போன்ற பணிகளையும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தருதிபெற்ற தொழிலாசிரியர்கள் மூலம் இவர்கள் இங்குப் பயிற்று விக்கப்படுகின்றனர். இம்மாணவர்களின் உளநலத்தை வளர்ப்பது போலவே உடல்நலத்தைப் பேணவும் இப்பள்ளிக்கு என முழுநேர மருத்துவ அதிகாரி ஒருவர் பணிபுரிகிறார். இம்மாணவர்களை முழுப் பொறுப்பேற்றுப் பாதுகாத்திடக் கண்காணிப்பாளர், உதவிக் கண்காணிப்பாளர், பல தரப்பட்ட நிருவாகப் பணியாளர்கள் ஆகியோர் பணிபுரிகின்றனர். மனத்தில் குற்றவாளிகள் என்ற எண்ணம் எழாதிருக்கக் காவலாளிகள் காவலர் உடையில் இருப்பதில்லை. மேலும் சனிக்கிழமைகளில் அந்தந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்தச் சமயத் தலைவர்கள் இப்பள்ளிக்கு வந்து சமயத் தொடர்பான கருத்துகளை எடுத்துரைக்கின்றனர். இந்து சமய மாணவர்கள் வியாழனன்று இந்துக்கோவிலுக்கும், முகமதியர்கள் வெள்ளியன்று பள்ளிவாசலுக்கும், கிறித்தவர்கள் ஞாயிறன்று கிறித்தவக் கோவிலுக்கும் சென்று வருகின்றனர். இங்கு மாணவர்கள் சாதி, சமய இன வேறுபாடின்றி ஒற்றுமையாகப் பயின்று வருகின்றனர். மாணவர்கள் ஒவ்வொரு வரும் ‘இந்தியன்’ என்ற உணர்வுடனும் இந்நாட்டுக் குடிமகன் என்ற உள்ளார்ந்த தேசிய பாட்டு உயர் நோக்குடனும் வளர்க்கப்படுகின்றனர். மாணவர்கள் நன்னெறியில் நடக்க வாரம் தோறும் திங்களன்று ‘திருக்குறள் வகுப்பு’ என்னும் நிகழ்ச்சி பள்ளிக் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் நடைபெற்று வருகிறது. இதில் 1 முதல் 5 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு ஆத்திசூடி, உலக நீதி, கொன்றைவேந்தன், மூதுரை போன்ற பாடல்களையும் அவற்றின் பொருள்களையும் கூறுவர். ஆறு, ஏழு, எட்டு ஆகிய வகுப்பு மாணவர்கள் திருக்குறள் பாடலொன்றைக் கூறி அதன் பொருளை எடுத்து விளக்குவர். மாதம் ஒருமுறை நடைபெறும் இலக்கிய மன்றக் கூட்டங்கள் மூலம் வெளியிலிருந்து உரையாற்ற வரும் அறிஞர்களின் உயரிய கருத்துகளை இம்மாணவர்கள் பெறுவதோடு, தங்களது பேச்சாற்றலையும் வளர்த்துக் கொள்கின்றனர். வெளியில் நடக்கும் பேச்சுப் போட்டி கட்டுரைப்போட்டி, குறள் ஒப்பித்தல் போட்டி போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுச் சிறக்கின்றனர். இளநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீதிமன்றத்தின் மூலம் ஆணையிடப்பட்ட பயிற்சிக் காலம் முடியாதிருப்பின், தொடர்ந்து உயர் கல்வி பெறச் செங்கற்பட்டு முதுநிலைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர். பயிற்சிக் காலம் முடிந்த பின்னரும் படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் ஆதரவற்றவர்களாக இருப்பின், இயக்குநர் அவர்களின் ஆணையின்படி கல்லூரி, தொழிற்சாலைசார் பயிற்சி நிறுவனம் (I.T.I.) போன்றவற்றில் சேர்ந்து கல்விபெறும் வாய்ப்பையும் பெற்று வருகின்றனர். செங்கற்பட்டு, தஞ்சாவூர், மதுரை, சென்னை ஆகிய நகர்களில் உள்ள தொழிற்பயிற்சிக் கூடங்களில் இம்மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு அரசினரால் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவை வளர்ப்பதுபோலவே உடல் வலுவை வளர்க்க உடற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பள்ளிகளில் நூலகம் ஒன்றும் உண்டு. இந்நூலகம் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. பொழுதுபோக்கிற்காக மாதம் ஒரு முறை திரைப்படத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆண்டு விடுமுறையில் சிறு அளவிலான சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மு.இரா.