பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்ட மேற்படிப்புக் கல்வியையும் ஆராய்ச்சியையும் மேம்படுத்துவ- தற்காக இந்தியப் பல்கலைக் கழக நிதி ஆணையம் (University Grants Commisson) 1963–ஆம் ஆண்டில், உயராய்வு மையங்கள் (Centres for Advanced Study) என்னும் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின்படி, சில பல்கலைக்கழகத் துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு துறையும், ஒரு குறிப்பிட்ட புலத்தின் கல்வி மேம்பாட்டுக்கான உயராய்வு மையம் என்ற சிறப்பு நிலையைப் பெற்றது. இன்று இந்தியாவில் 28 உயராய்வுக் கல்வி மையங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களில் இயங்கி வருகின்றன. ஒரு குறிப்பிட்ட புலத்தில் ஒரு துறை செய்துள்ள ஆராய்ச்சிகளின் தரம், பயன், முயற்சி, வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையிலேயேதான், அத்துறையானது உயராய்வு மையம் என்னும் சிறப்பு நிலைக்குந் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு மையமும் தன்னுடைய புலத்தில் தகைமை மிக்க (Excellence) கல்விப் பணியையும் உயராராய்ச்சியையும் மேற்கொள்ள, பல்கலைக்கழக நிதி ஆணையம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இம்மையங்களின் தலையாய நோக்கம் இங்கு மேற்கொள்ளப்படும் உயர்கல்வியும் ஆராய்ச்சியும் உலகநாடுகள் சுட்டிக் காட்டும் அளவுக்கு உயர்தரமுடையாக இருக்க வேண்டும் என்பதேயாம். உயராய்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை இந்தியாவின் எந்த மூலையிலுள்ள ஆராய்ச்சி மாணவரும் ஆசிரியரும் அங்குச் சென்று பயன்படுத்திக் கொள்ளலாம். இம்மையங்களில் தத்தம் துறைகளில் மிகவும் அனுபவமிக்க மூத்த பேராசிரியர்கள் பலரும் ஆராய்ச்சி மாணவர்களும் உயராய்வில் ஈடுபடுகின்றனர். இம்மையங்களில் பிறநாட்டுப் பல்கலைக் கழகங்களிலும், இந்திய நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் புகழ்மிக்க ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் வருகைப் பேராசிரியர்களாகப் (Visiting Professor) பணிபுரிகின்றனர். இம்மையங்களின் ஆராய்ச்சிப் பணிகள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மதிப்பீடு செய்யப்படுகின்றன. சிறப்பான ஆராய்ச்சிப் பணிகளைச் செய்த மையங்களே தொடர்ந்து உயராய்வு மையம் என்னும் சிறப்பு நிலையுடன் இருக்க இயலும். புனே பல்கலைக்கழகம் பொருளியல், சமசுகிருத இலக்கியம் ஆகிய புலங்களுக்கும்; தில்லிப் பல்கலைக் கழகம் பொதுநிதியும் தொழிற்சாலையும் சார்ந்த பொருளியல், சமூகவியல், பொருளியல் ஆகிய புலங்களுக்கும் பம்பாய்ப் பல்கலைக்கழகம் பொருளியல் புலத்திற்கும்; பரோடாப் பல்கலைக்கழகம் கல்வியியற் புலத்திற்கும்; அலிகார் முசுலிம் பல்கலைக் கழகம் வரலாற்றுப் புலத்திற்கும்; அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மொழியியல், கடலியற் புலங்களுக்கும்; சென்னைப் பல்கலைக்கழகம் தத்துவப் புலத்திற்கும்; உட்கல் பல்கலைக்கழகம் உளவியல் புலத்திற்கும் உயராய்வு மையங்களாக இயங்குகின்றன. வான்கோளியலில் உசுமானியப் பல்கலைக்கழகமும்; தாவரவியலில் பனாரசு இந்துப் பல்கலைக்கழகம், கல்கத்தாப் பல்கலைக் கழகம், தில்லிப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியனவும்; கணிதவியலில் பம்பாய்ப் பல்கலைக்கழகம், பஞ்சாபுப் பல்கலைக்கழகம். சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியனவும்; இயற்பியலில் கல்கத்தாப் பல்கலைக்கழகம், தில்லிப் பல்கலைக்கழகம் ஆகியனவும்; விலங்கியலில் தில்லிப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியனவும் உயராய்வுக் கல்வி மையங்களாக விளங்குகின்றன. மேலும், வேதியியல், உயிர் வேதியியல் (Bio–Chemistry) ஆகியவற்றின் உயராய்வுக்கல்வி மையமாகப் பெங்ளூரிலுள்ள இந்திய அறிவியல் கழகம் செயற்படுகிறது. பிற வேதியியல் உயராய்வுக் கல்வி மையங்கள் தில்லிப் பல்கலைக் கழகத்திலும், பம்பாய்ப் பல்கலைக்கழகத்திலும் உள்ளன. பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்திலும் பஞ்சாபு பல்கலைக்கழகத்திலும் முறையே, உலோகத் தொழில்சார் பொறியியல், மண்ணியல் ஆகியவற்றிற்கான உயராய்வுக் கல்விமையங்கள் உள்ளன.