கருமையாக்கப்பட்ட கண்ணாடி வழியாகச் சூரியனைப் பார்க்கும் போதோ, ஒளிப் படத்தைப் பார்க்கும் போதோ, அதன் பரப்பில் தெரியும் கரும் புள்ளி. சூரியக் கரும் புள்ளி (sun spot) எனப்படும். சூரியனின் மிக இருளான மையப் பகுதி அக நிழல் எனவும், இருள் சற்றுக் குறைந்த விளிம்புப் பகுதி புற நிழல் எனவும் பெயர் பெறும். சூரியனின் ஒளி மண்டலத்தில் உள்ள குளிர்வான பகுதிகளே இப்புள்ளிகள். சூரியக் காந்தப் புலத்தின் வட, தென் துருவங்களில் 5-40° வரையான குறுக்குக் கோட்டுக் கோணத்தில் ஏற்படும் மாறுபாடுகளால் இவை ஏற்படுகின்றன. சூரியக் கரும் புள்ளிகள் 150-1000000 கி. மீ. விட்டம் கொண்டவை. இவை ஒரு குறிப்பிட்ட சுழற்சியில் தோன்றுகின்றன. இவற்றின் சுழற்சிக் காலம் 11.2 ஆண்டுகளாகும். இதனுடன் வட, தென் துருவ மாற்றத்தையும் எடுத்துக் கொண்டால், முழுச் சூரியப் புள்ளியின் சுழற்சிக் காலம் 22.5 ஆண்டு ஆகும். சூரியப் புள்ளிகளின் சராசரி வாழ் காலம் நாளாக இருப்பினும், அவற்றில் சில 18 மாதங்கள் வரை நிலைத்திருக்கும். ஒரு சுழற்சியில் உண்டாகும் சூரியப் புள்ளிகளின் எண்ணிக்கை, படத்தில் காட்டியவாறு வேறுபடும். சிறும மதிப்பிலிருந்து பெரும மதிப்பிற்குச் சூரியப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க எடுத்துக் கொள்ளும் காலம், பெரும மதிப்பிலிருந்து சிறும மதிப்பிற்குக் குறைய எடுத்துக் கொள்ளும் காலத்தை விட மிகக் குறைவு. சூரியப் புள்ளிகளின் சுழற்சி, நீண்ட வாழ் நாள் கொண்ட மாறு விண் மீன் ஒளிச் செறிவின் மாறுபாட்டுச் சுழற்சியைப் போன்றதாகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூரியக் கரும் புள்ளிகள் இரட்டையாகத் தோன்றுகின்றன. ஒரு குறிப்பிட்ட சுழற்சியில், முதன்மையாக உள்ள புள்ளிகள் ஒரே துருவத் தன்மையுடன் இருக்கும். முதலில் உள்ள புள்ளி, வட துருவம் நோக்கியும், பின்னர் உள்ள புள்ளி தென் துருவம் நோக்கியும் இருக்கும். வட அரைக் கோளத்தில் உள்ள அனைத்துச் சுழற்சி இரட்டைகளுக்கும் இது பொருந்தும். தென் அரைக் கோளத்தில் இது எதிராக இருக்கும். ஒரு சுழற்சி முடியும் போது, புதிய சுழற்சி தோன்றும்.வட, தென் அரைக் கோளங்களில் புதிய சுழற்சியின் துருவம், முந்தைய சுழற்சிக்கு எதிராக இருக்கும். சூரியப் பரப்பிலுள்ள குறைந்த காந்தப் புலத்தை ஒப்பிடும் போது, இப்புள்ளிகளில் காந்தப் புல வலிமை 2000 காஸ் மிகுதியாக இருக்கும். சூரியக் கரும் புள்ளிச் சுழற்சியில் சூரியப் புள்ளிகளின் உருவாக்கம், வளர்ச்சி, சிதைவு பற்றிய கொள்கை முழுமையாக இல்லாவிடினும், கடந்த ஆண்டுகளில் இவ்வாய்வு நன்கு முன்னேறியுள்ளது. வலிமை குறைந்த சூரியக் காந்தப் புலம் சிறிது சிறிதாகப் பெருக்கமடைந்து, சூரியப் பிளாஸ்மாவிற்குக் காந்தச் சம நிலை தரும் மாறு நிலை மதிப்பை அடையும் போது, இப்புள்ளிகள் உண்டாகும் என்று தற்காலக் கொள்கை கூறுகிறது. மாறு நிலைப் புள்ளியின் நிலைப்பாடின்மையால், சூரியனில் உள்ள பொருள்கள் பெருகி, விரிவடைந்து குளிர்வடைவதால், சூரியப் புள்ளிகளில் வெப்ப நிலை குறைகிறது. இக்கொள்கை இரு துருவப் புலங்களை விளக்குவதுடன், சூரியப் புள்ளிப் பெருமத்திலிருந்து சிறுமத்திற்கு மாறும் போது, ஏற்படும் துருவ மாறுபாட்டையும் விளக்குகிறது. —வெ. ராதாகிருஷ்ணன்