இராலே சர் வால்ட்டர்
irālē car vālṭṭar
ஆங்கிலக் குடியேற்றங்களை நிலைநாட்டியவர்; எழுத்தாளர்; அரசவையாளர்.
ஆங்கிலக் குடியேற்றங்களை நிலைநாட்டியவர்; எழுத்தாளர்; அரசவையாளர். இவர் வட அமெரிக்காவில் முதல ஆங்கிலக் குடியேற்றப் பகுதிகளை நிலைநாட்டும் திட்டத்தைத் தீட்டியவரும், அதனை ஊக்குவித்தவருமாவார்.
இராலே (Raleigh Sir Walter) இங்கிலாந்திலுள்ள தெவன்சயரில் (Devonshire) ஏய்சு பார்ட்டன் (IIayes Barton) என்னும் ஊரில் கி.பி. 1552–ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஆக்சுபோர்டு ஓரியல் (Oriel) கல்லூரியில் கல்வி கற்றார். இவர் பிரெஞ்சு மறுப்புரைவாதிகளான ‘இயூகனட்டு’களின் (Haguenots) படையில் கி.பி. 1569–ஆம் ஆண்டில் பணிபுரிந்தார். இவர் மன்கண்டூர் (Moncontour) என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் ஈடுபட்டார் எனத் தெரிகிறது. இவருக்கு இங்கிலாந்து அரசவையொடு கி.பி. 1579–ஆம் ஆண்டளவில் நெருங்கிய தொடர்பேற்பட்டது. இரண்டாண்டுகளுக்குள் இவர் இங்கிலாந்தின் அரசி முதலாம் எலிசபெத்துக்கு மிக வேண்டியவரானார். சாராய வாணிகம், துணிமணி வாணிகம் போன்றவற்றை மேற்கொள்ள முற்றுரிமை கிடைத்தமையால் இவருக்குப் பெரும் பொருள் கிட்டியது. அடுத்தடுத்துக் கிடைத்த கொடைகளாலும் அரண்மனையிலேயே பெருஞ்செல்வந்தர்களுள் ஒருவராக இவர் கருதப்பட்டார். இவர் கி.பி. 1584–இல் வீரப்பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டில் இங்கிலாந்திலுள்ள தெவன் (Devon), கார்ன்வால் (Cornwall) பகுதிகளிலுள்ள தகரச் சுரங்கங்களின் காப்பாளராக இவர் அமர்த்தப்பட்டார். கார்ன்வாலின் இணைப் பிரபுவாகவும் கார்ன்வால், தெவன் பகுதிகளில் துணைக் கப்பற்படை அதிகாரியாகவும் எலிசபெத்து இவரை அமர்த்தினார். இவர் கி.பி. 1587–இல் இராணியாரின் மெய்க் காவற்படைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
வட அமெரிக்காவைக் கண்டறிந்து அங்குக் குடியேற்றங்களை நிலைநாட்டும் பொறுப்பை இராலே பெற்றதும் இச்சமயத்தில்தான். வட அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருக்கும் வர்சீனியாவைக் கண்டறிய கி.பி. 1584, 1585, 1586, 1587, 1589 ஆகிய ஆண்டுகளில் இவர் அதற்கான பயணங்களை மேற்கொண்டார். இவற்றில் இவர் நேரிடையாக ஈடுபடக் கூடாது என்று அரசியார் தடுத்திருந்த போதிலும் இவர் பயணம் செய்தார்.
இங்கிலாந்தில் நிலப்படைகளை கி.பி. 1588–ஆம் ஆண்டில் அமைத்து, இசுபானியரின் படையெடுப்பு அச்சத்தைப் போக்கியதில் இராலேயின் பங்கு பாராட்டுதற்குரியது. கடலில் நடைபெற்ற ஆர்மடாப் போரில் இவர் ஈடுபட்டார் என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இசுபெயினுக்கு எதிராகப் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் இவர், கி.பி. 1591–இலும் 1592–இலும் பெருங்கப்பற்படையொன்றைத் திரட்டிப் பெரும் புகழ் பெற்றார். தம் அரண்மணை ஊழியத்தில் ஈடுபட்டிருந்த நல்லொழுக்கம் வாய்ந்த எலிசபெத்து திராகு மார்ட்டன் (Elizabeth Throgmorton) என்னும் பெண்ணொருத்தியுடன் இவருக்கிருந்த தொடர்புணர்ந்து சினமுற்ற அரசியார், இவர் மேற்கொள்ளவிருந்த பயணத்தைத் தடுத்து விட்டார். சிறிதுகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் விடுதலை செய்யப்பட்டு, எலிசபெத்து திராகு மார்ட்டனையே மணந்துகொள்ள வேண்டியவரானார். மீண்டும் கி.பி. 1597–ஆம் ஆண்டுவரை, இராலேவுக்கு அரசியாருடன் நல்லுறவேற்படவில்லை.
இதனிடையில் புத்துலக நாடுகளை ஆய்வு செய்யும் திட்டமொன்றை இராலே நிறைவேற்ற முனைந்தார். அமெரிக்காவிலிருப்பதாகக் கருதப்பட்ட மனோவா (Manoa) என்னும் ஊரை நோக்கிப் பயணம் செய்யத் திட்டமிடப்பட்டது. அது செல்வங்கொழிக்கும் இடமென்று கருதப்பட்டது. இவர் ஐந்து கப்பல்களுடன் கி.பி. 1595–இல் புறப்பட்டுச் சென்று, மேற்கிந்தியத் தீவுகளுள் ஒன்றான திரினிடாடு (Trinidad) என்றும் தீவிலிருந்த சான் சோசபு (San Josef) என்ற இடத்தைக் கைப்பற்றிக் கொண்டு, 644 கி.மீ. நீளமுள்ள ஆரினாக்கோ (Orinoco) என்ற ஆற்றினையும் ஆராய்ந்தார். எனினும், மனோவாவை இவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. பின்னர், இவர் ஆங்கிலத் தாக்குதல் மூலம் கோடீசையும் (Codiz) பாயல் (Fayal) என்னும் இடத்தையும் முறையே கி.பி. 1596, 1597–ஆம் ஆண்டுகளில் கைப்பற்றி, அரசியாரின் ஆதரவை மீண்டும் பெற்றார். இவர் கி.பி. 1597–ஆம் ஆண்டு தோர்செட்டு (Dorset) நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக்கப்பட்டார். கார்ன்வாலின் (Cornwall) உறுப்பினராக, கி.பி. 1501–ஆம் ஆண்டில் பதவியேற்றார். செர்சி தீவின் (Jersey Island) ஆளுநராக இவர் கி.பி. 1600–ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்டார்.
முதலாம் எலிசபெத்து அரசியார் கி.பி. 1603–ஆம் ஆண்டில் காலமானார். இராலேயின் செல்வாக்கிலும் மாறுதலேற்பட்டது. இவர் முதலாம் சேம்சு மன்னர் பதவியேற்பதை எதிர்க்கிறார் என்று இவர்தம் பகைவர்கள் பொய்ச் செய்தியைப் பரப்பினர். மன்னன் உடனடியாக இராலேயின் பதவிகள் அனைத்தையும் பறித்துக் கொண்டதுடன், கி.பி. 1603–சூலை 17–ஆம் நாள் இவரை இலண்டன் சிறையிலும் அடைத்தார் இவர் மீது துரோகக் குற்றம் சாட்டப்பட்டது. கி.பி 1603–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17–ஆம் நாள் துரோகக் குற்ற விசாரணை நடைபெற்றது. போதுமான சான்றுகள் இல்லாதபோதும் இராலே குற்றவாளி என்று கருதப்பட்டு, திசம்பர் 11-ஆம் நாள் தூக்கிலிடப் படவேண்டுமெனத் தீர்ப்புக் கூறப்பட்டது. எனினும், திசம்பர் 11–ஆம் நாள் இவர் தூக்கிலிடப்படாமல் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, தவர் (Tower) சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு அனைத்து வசதிகளும் கிட்டின. பதின்மூன்று ஆண்டுகள் இவர் அங்கு வாழ வேண்டியவரானார். மனைவி, மகன், பணியாட்கள் போன்றவர்கள் இவருடன் தங்க அனுமதிக்கப்பட்டார்கள். இவர் அறிவியல் பரிசோதனைகளைச் கற்றுப் பணியாற்றிக் கொண்டு வாழ்ந்தார். அரசு வாரிசாகக் கருதப்பட்ட இளவரசர் என்றியின் (Prince Henry) வேண்டுகோளின்படி, இராலே ‘உலக வரலாறு’ என்னும் தம் இலக்கிய நூலை எழுதத் தொடங்கினார். ஆங்கில மொழியில் முதன்முதல் உலக வரலாறு எழுதியவர் இவரே.
இறுதியாக, இராலே கி.பி. 1616–ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார். ஆரினாக்கோ ஆற்றுப் படுகையில் தங்கச் சுரங்கங்கள் உள்ளன என்று கூறியிருந்த இவருடைய கூற்றுக்கான சான்றுகளைக் கண்டுபிடித்து வரும் நோக்கத்தோடு, புதிய பயணம் ஒன்றை இவர் மேற்கொள்ள வேண்டும் என்று இவருக்குக் கட்டளை விதிக்கப்பட்டது. இசுபானியத் தூதர் இப்பயணத் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டார். எனினும், முதலாம் சேம்சு (James I) மன்னர் பயணம் மேற்கொள்ள இவரைப் பணித்தார்.
இராலே சான் தாமசு என்னும் இசுபானிய நகரத்தைக் கைப்பற்றினாலும், இவரால் சுரங்கத்தைச் சென்றடைய முடியவில்லை. இவருடைய துணை ஊழியர்களும் இதைக் கைப்பற்றும் ஆர்வம் காட்டவில்லை. இராலே இங்கிலாந்து திரும்பிவந்த போது, இசுபானிய தூதர் நடவடிக்கை எடுத்து இவரைத் தூக்கிலிட வேண்டுமென வேண்டினார். அவ்வாறே இவர் கி.பி. 1618-ஆம் ஆண்டு அக்டோபர் 29–ஆம் நாள் பழைய மாளிகை முற்றத்தில் தூக்கிலிடப்பட்டார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 165)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fwphad94/
தமிழ்“இராலே சர் வால்ட்டர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fwphad94/APA
Oliyon Research. (2026). இராலே சர் வால்ட்டர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fwphad94/MLA
"இராலே சர் வால்ட்டர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fwphad94/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment