நெப்டியூன்
nepṭiyūṉ
சூரியனைச் சுற்றி இயங்கும் ஒன்பது கோள்களுள் புவியும் ஒன்றாகும்.
சூரியனைச் சுற்றி இயங்கும் ஒன்பது கோள்களுள் புவியும் ஒன்றாகும். ஏனைய எட்டுக் கோளங்களில் ரோமானியர்களின் கடல் தெய்வத்தின் பெயரை நெப்டியூன் பெற்றுள்ளது. உட்கோள், புறக் கோள் எனக் கோள், இரு பிரிவாகப் பிரிக்கப் படுகிறது. ஒவ்வொரு கோளும் சூரியனை, நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும். புவியின் இயங்கு பாதைக்கு உட்புறப் பாதை பெற்றிருப்பவை உள்கோள் எனவும், ஏனையவை புறக் கோள் எனவும் குறிப்பிடப் படும்.
நெப்டியூன் ஒரு புறக் கோளாகும். கோள்களைச் சூரியனிலிருந்து, அவற்றிற்குள்ள தொலைவிற்கேற்ப ஏறு வரிசையில் வரிசைப் படுத்தினால், நெப்டியூன் எட்டாம் இடத்தைப் பெறுகிறது. புவிக்கும், சூரியனுக்கும் உள்ள தொலைவை S எனக் கொண்டால், நெப்டியூனுக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு 30S ஆகும். சூரியனிலிருந்து இக்கோள் ஏறத்தாழ 4, 486,100,000 கி.மீ. தொலைவில் உள்ளது. அதாவது புவியைப் போல் நான்கு மடங்காகும். இது புவியைப் போல் அடர்த்தியாக இராவிடினும், இதன் நிறை புவியைப் போல் 17 மடங்கு ஆகும். இது சூரியனைச் சுற்றி வருவதோடு, தன் மையத்தின் வழியே செல்லும் ஒரு கற்பனை அச்சைப் பொறுத்துச் சுழலவும் செய்கிறது.
புவி, சூரியனை ஒரு முறை முழுமையாகச் சுற்றி வர ஓர் ஆண்டு ஆகிறது. ஆனால், நெப்டியூன் சூரியனை ஒரு முறை முழுவதுமாகச் சுற்றி வர 165 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இதன் அச்சு, சூரியனைச் சுற்றி வரும் இதன் பாதைக்குச் செங்குத்தாக அமையாமல், 30° சாய்ந்திருப்பதால், இதன் வட, தென் பாதிகள் சம வெப்பத்தைச் சூரியனிலிருந்து பெறுவதில்லை. இதன் விளைவாகப் பருவ காலங்களும், தட்ப வெப்ப மாற்றங்களும் ஏற்படுகின்றன.
நெப்டியூன் புவியை விடத் தட்ப வெப்பம் மிகக் குறைவாக உள்ளமையாலும், ஆக்சிஜன் இன்மையாலும், தாவரங்களோ, விலங்குகளோ இக்கோளில் வாழ்வது மிகக் கடினமாகும். இதன் மீது வளி மண்டலம் 3,200 கி.மீ. பரவியுள்ளது. இதில் மீதேன், ஹைட்ரஜன், ஈதேன் ஆகிய வளிமங்களும் இருக்கலாம் எனக் கருதப் படுகிறது.
புவியின் துணைக் கோள் சந்திரன் ஆகும். இதே போன்று, நெப்டியூனுக்கு ஆறு துணைக் கோள்கள் உள்ளன. நெப்டியூனின் டிரிட்டன் (Triton) எனும் துணைக்கோள் 1844 ஆம் ஆண்டிலும், நீரியட் (Nereid) எனும் துணைக் கோள் 1949 ஆம் ஆண்டிலும் கண்டு பிடிக்கப் பட்டன. நெப்டியூனின் பிறிதொரு துணைக் கோளை வாயேஜர்–2 எனும் விண் கலம் 1989 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் கண்டு பிடித்தது. வாயேஜர்–2 விண் கலம் நெப்டியூனுக்கு 3,40,00000 கி.மீ. தொலைவில் இருந்த போது, அக்கோளுக்கு மேற்கொண்டு 3 துணைக் கோள்கள் உள்ளமையைக் கண்டு பிடித்தது. வாயேஜர்–2 அனுப்பி வைத்த படங்களில், சற்றுப் பிரகாசமான திட்டுகள் காணப் பட்டன. ஏறக் குறைய 5 நாள்களுக்கு இவற்றை ஆராய்ந்த பின்னரே, இவை நெப்டியூனின் துணைக் கோள்கள் என்று அறிவியலார் உறுதி செய்தனர். வாயேஜர்–2 விண் கலம் கண்டு பிடித்துள்ள நான்கு துணைக் கோள்களும், நெப்டியூனின் பழைய இரு துணைக் கோள்களை விட அந்தக் கோளுக்கு நெருக்கமாக உள்ளன.
டிரிடன் நெப்டியூனிலிருந்து 320,000 கி.மீ. தொலைவில் உள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள துணைக் கோள்களிலேயே மிகப் பெரியது டிரிடன் ஆகும். இது கிழக்கிலிருந்து மேற்காக, வட்டமான பாதையில் நெப்டியூனைச் சுற்றி வருகிறது. ஒரு முறை நெப்டியூனைச் சுற்றி வர, இது ஆறு நாள்கள் எடுத்துக் கொள்கிறது. நீரிய்ட், நெப்டியூனிலிருந்து 5.6 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் விட்டம் 241 கி.மீ. ஆகும். இத்துணைக் கோள் நீள் வட்டப் பாதையில், 360 நாள்களுக்கு ஒரு முறை நெப்டியூனைச் சுற்றி வருகிறது. சனிக் கோளைச் சுற்றி வளையங்கள் இருப்பதைப் போல், நெப்டியூனைச் சுற்றியும் இரு வளையங்கள் இருப்பதை, 1982 இல் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
வாயேஜர்–2 விண் கலம் நெப்டியூன் கோள்களுக்குப் பல லட்சம் கி.மீ. தொலைவில் இருக்கும் நிலையிலேயே, புதிய துணைக் கோள்கள் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதால், இந்த விண் கலம் அக்கோளை நெருங்க மேலும் பல துணைக் கோள்கள் கண்டு பிடிக்கப் படலாம் என அறிவியலார் கருதுகின்றனர். 1979 ஆம் ஆண்டு வியாழன் கோளை நெருங்கிப் படம் பிடித்ததுடன், 1981 ஆம் ஆண்டில் சனியை எட்டிப் பிடித்து, அதனையும் படம் பிடித்தது. 1986ஆம் ஆண்டில், யுரேனஸ் கோளைப்படமெடுத்துப் புவிக்கு அனுப்பியது. இக்கோள் இந்த அளவுக்கு நெருக்கமாகப் படமெடுக்கப் பட்டது இதுவே முதல் முறையாகும். நெப்டியூன் கோளை எட்டுகின்ற முதலாம் விண் கலம் எனும் பெருமையையும் வாயேஜர் பெற்றுள்ளது.
நெப்டியூனின் இரு வளையங்களும் முழுமையற்றே உள்ளன. ஒரு வளையம் 48,270 கி.மீ. நீளம் கொண்டதாகவும், மற்றொரு வளையம் 9,655 கி.மீ. நீளம் கொண்டதாகவும் உள்ளன. இவ்வளையங்களில் அடங்கிய பொருள்கள் தூசு வடிவில் உள்ளவையா அல்லது சிறு கற்கள் வடிவில் உள்ளவையா அல்லது பெரிய பாறாங்கற்கள் வடிவில் உள்ளவையா என்பது தெரியவில்லை. வாயேஜர்–2 ஆய்வுக் கலம் அனுப்பிய தகவல்களிலிருந்து நெப்டியூன் வளையங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. நியூட்டனின் இயக்க விதிகளையும், வானவியல் கொள்கைகளையும் பயன் படுத்தி, 1843ஆம் ஆண்டு ஜான் ஆடம்ஸ் என்னும் ஆங்கிலக் கணக்கியல் வான அறிஞரும், 1846ஆம் ஆண்டு ஜே.ஜே. லெவர்ரியர் என்னும் பிரஞ்சுக் கணித அறிஞரும் தனித் தனியே கண்டுபிடித்த நெப்டியூன் எனும் கோள் அறிவியலாரின் ஆய்வுக்குப் பெரிதும் பயன் படுகிறது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> —எம். அரவாண்டி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 175)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fvadycpr/
தமிழ்“நெப்டியூன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fvadycpr/APA
Oliyon Research. (2026). நெப்டியூன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fvadycpr/MLA
"நெப்டியூன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fvadycpr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment