கடலில் ஒலியைச் சிதறல் அடையச் செய்து, எதிரொலியை உண்டாக்கும் உயிர்ப் பொருள்களின் அடுக்கு, சிதறும் அடுக்கு (scattering layer) எனப்படும். சிதறல் அடைந்த எதிரொலியை, ஒலியியல் கருவிகளில் பதிவு செய்து ஆராய்ந்தால், இச்சிதறல் உண்டாக்கும் உயிர்ப் பொருள்கள் நீரின் அடிப் பகுதிக்கு மிகு உயரத்தில் இடைத்தள அடுக்குகளாக அமைந்துள்ளன என்று தெரிய வரும். இவ்வடுக்குகள் ஆழம் குறைந்த, ஆழம் மிக்க நீர்ப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஆழம் குறைந்த அடுக்குகள் 200 மீ ஆழத்திற்குக் குறைந்த நீரில் சிதறல் உண்டாக்கும். சிதறல் ஊட்டும் அடுக்குகளும், எதிரொலிகளும் சீரற்றுப் பரவியிருப்பதால், அந்த அடுக்குகள் கடல் விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றால் ஆனவை என்று தெரிகிறது. 200 மீட்டருக்கு மேல் ஆழம் மிகுந்த பகுதிகளில் ஒன்று அல்லது மேற்பட்ட நன்கு வரையறுக்கப்பட்ட அடுக்குகள் உள்ளன என்று தெரிகிறது. அவை நன்கு பரவியுள்ளன. 3—60 கிலோ ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண்ணுள்ள எதிரொலி அளக்கும் கருவிகளை ஆராயும் போது, ஒவ்வோர் அடுக்கின் ஒலியியல் நிற மாலையும், அதே இடத்தில் உள்ள ஏனைய அடுக்குகளை விட மாறுபட்ட அதிர்வெண்ணில் பெருமச் சிதறலை உண்டாக்குகின்றது என அறியலாம். இயற்கை ஒளியின் செறிவுக்கேற்ப, ஆழநீர் அடுக்குகள் செங்குத்தாக இடம் பெயர்கின்றன. நாள் தோறும் நடைபெறும் சுழற்சி நிகழ்வில், இரவில் அடுக்குகள் மேற்பரப்பு வரை உயர்ந்தும், பகலில் அடி மட்டம் வரை தாழ்ந்தும் காணப்படுகின்றன. பகல் நேர அடுக்குகளின் பொதுவான ஆழம் 200—800 மீ ஆகும். ஆழப் பகுதிகளில் விலங்குகள், தாவரங்கள் ஆகியன கடல் நீருக்கு மாறுபட்ட முறையில் ஒலியியல் சிதறலை உண்டாக்குகின்றன. அவற்றின் வளிமம் நிரம்பிய மிதக்கும் உறுப்புகள் மிகுதியான ஒலிச் சிதறலை உண்டாக்குகின்றன. 1946 இல் எம். டபிள்யூ. ஜான்சன் என்னும் ஆய்வாளர், வெவ்வேறு ஆழத்தில் நீந்தும் விலங்குகள் எதிரொலிப்புப் படலங்களாக உள்ளன என்று கூறினார். 1953இல் ஆன்டர்சன் என்பார், ஆழ நீர்ப் பகுதியில் சிதறல் உண்டாக்கும் பொருள்கள் கடல் நீரை விடக் குறைந்த ஒலியியல் மறுப்புக் கொண்டவை என நிறுவினார். டபிள்யூ.பி. மார்ஷல் என்னும் ஆய்வாளர் 1951 இல் இச்சிதறல் அடுக்குகள் காற்று நிரம்பிய நீந்தும் மீன்களால் ஆனவை என்று கூறினார். அமெரிக்கக் கடல் ஆய்வுகள் மார்ஷலின் கூற்றை நிறுவும் வகையில் அமைந்துள்ளன. —வெ. ராதாகிருஷ்ணன்