இருமொழி இலக்கணம்
irumoḻi ilakkaṇam
இருமொழிகளை ஒருவர் மாறிமாறிப் பயன்படுத்தும் மொழிப் பயன்பாட்டு முறையினை ‘இருமொழியம்’ எனலாம்.
இருமொழிகளை ஒருவர் மாறிமாறிப் பயன்படுத்தும் மொழிப் பயன்பாட்டு முறையினை ‘இருமொழியம்’ எனலாம். இரு மொழிகளை ஒருவர் பயன்படுத்தும் குழலில் அவருடைய பேச்சில், ஒரு மொழியின் கூறுகள் மற்றொரு மொழியில் கலந்து வழங்குகின்றன. அவ்வாறு வந்து வழங்கும் பிறமொழிக் கூறுகளை ‘மொழிக் குறுக்கீடு’ (Interference) என்பர். இரு மொழிகளுக்கிடையே தொடர்பு நீண்டகாலம் நிலைத்திருந்தால் அம்மொழிகளுள் ஒன்று மற்றொன்றால் அல்லது இரு மொழிகளுமே தாக்கத்திற்குட்படலாம். அவ்வாறு தாக்கம் நிகழும்போது, பிறமொழிக் கூறுகள் குறுக்கீடாக அல்லது கடனாக (Borrowing) மொழிப் பயன்பாட்டில் இடம்பெறும். அவற்றை மொழி அமைப்பின் அடிப்படையிலும் சமுதாய நிலையிலும் விளக்கலாம்.
மொழி அடிப்படையில் விளக்கத் தொடர்பு கொள்ளும் மொழிகள் இரண்டிற்கும் ‘இருமொழி இலக்கணம்’ எழுதப்பட வேண்டும். இவ்விலக்கணம் விளக்க மொழியியல் அடிப்படையில் (Descriptive Linguistics), ஒப்பிலக்கணமாகவோ (Comparative Grammar) உறழ்ச்சி இலக்கணமாகவோ (Contrastive Grammar) அமையும். மொழித் தொடர்பில் இடம் பெறும் மொழிகள் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தால், அவற்றை ஒப்பிட்டு, அதன் வாயிலாக மொழிக் கூறுகள் எவ்வாறெல்லாம் ஒத்தும், வேறுபட்டும் பயன்பாட்டில் அமைந்துள்ளன என்பதை விளக்க முடியும். மாறாக, இருமொழிகளும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தனவாக இருப்பின், உறழ்ச்சி இலக்கணமே அம்மொழிகளுக்குள் உள்ள வேற்றுமைகளை எளிதில் வெளிக் கொணரும் வகையில் அமையும். எடுத்துக்காட்டாக, தமிழையும் ஆங்கிலத்தையும் கூறலாம், தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலம் இந்தோ–ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில், செருமன் உட்பிரிவைச் சேர்ந்தது.
தமிழ் ஆங்கில இருமொழியத்தில் உறழ்ச்சி இலக்கணமே வகுக்க வேண்டும். இவ்விலக்கணம் இம்மொழிகளில் ஒலியியல், ஒலியனியல், உருபொலியனியல், உருபனியல், சொற்றொடரியல், சொல்லடைவு ஆகிய பகுதிகளை முறையாக ஒப்பிட்டு, அவை எவ்வாறு முரண்படுகின்றன; எங்கெல்லாம் மொழிக் குறுக்கீடு ஏற்படுவதற்கு ஏற்ற அமைப்பு இடைவெளி உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டும். எடுத்துக்காட்டாக, ஒலியியல் பகுதியை எடுத்துக்கொண்டால், தமிழ் - ஆங்கில உறழ்ச்சி இலக்கணம் இம்மொழிகளில் வழங்கும் ஒலிகள், அலை ஒலியன்களாக அமையும் முறை, சொல்லில் அடுத்து வரும் முறை, ஒலிப்புமுறை ஆகியவற்றை அட்டவணைகள் மூலம் விளக்கியபின், இரண்டிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் யாவை; ஒற்றுமையிருப்பின் அவை யாவை என்பதையும் விளக்கும். மேலும், அமைப்பு – வெற்றிடத்தைக் காட்டி அங்கு ஏற்படவிருக்கும் குறுக்கீடுகள் எத்தன்மையன; முறையாகக் கற்காவிட்டால் அதனால் நிகழும் கேடுகள் யாவை ஆகியவற்றையும் விளக்கும்.
தமிழ் மெய்யொலியன்கள்
க், ச், ட், த், ப் தடையொலியன்கள், இவற்றிற்கு மாற்றொலிகளாக இவை வருமிடத்திற்கேற்பக் குரல் ஒலிப்புடைய ஒலிகளும் (Voiced Sounds), உரசொலிகளும் (Fricatives) வரும். ஆங்கில மொழியில் உள்ள உரசொலிகளான f, h, s, x, z போல்வன தமிழில் இல்லை. தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் இவ்வொலிகளை முறையாகக் கற்றால் தவறு ஏற்படாது. இல்லையெனில், இவற்றை ஒலிப்பதற்கு ஈடாகத் தம் தாய்மொழியிலுள்ள (அமைப்பு வெற்றிடமாக இருப்பதால்) பிற ஒலிகளை ஒலித்து ஈடு செய்ய முயல்வர்.
‘Father’ (fa: z) என்ற ஒலிப்பிற்குத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர் (fa: d ∧ r) என ஒலிப்பார். (ɚ) என்ற ஒலி தமிழில் இல்லை; ஆனால், /த்/ ஒலியனுக்கும் மாற்றொலியாக (d) (மெல்லினத்தை அடுத்து வந்து வழங்கும்) இருப்பதால் அதனை ஈடாக ஒலிக்க முயல்கின்றனர். மேலும், அச்சொல்லில் இறுதியில் உள்ள ‘r’ என்ற எழுத்தை மனத்தில் கொண்டு அதனையும் ஒலிக்கிறார். தமிழ் வரிவடிவில் ஒலிக்கப்படாத எழுத்து இல்லை. ஆகவே, அதன் அடிப்படையில் ஆங்கிலத்தையும் ஒலிக்கிறார். இவ்வேறுபாடுகளை உறழ்ச்சி இலக்கணம் (இருமொழி இலக்கணம்) விளக்குகிறது. மேலும், நாமடி ஒலியான டகரம் ṭ ஆங்கிலத்தில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ள முன் அண்ண ஒலி (t) தமிழில் இல்லை. இந்த அமைப்பு வெற்றிடம் காரணமாக மொழிக் குறுக்கீடு ஏற்பட்டு ஒலியமைப்பில் தாக்கம் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் butter என்ற சொல்லின் ஒலிப்பு [b∧tɚ] என்பதாகும். இதன் தமிழ் ஒலிப்பு b∧t ṭ∧r ஆகும். (t) என்ற ஆங்கில ஒலிக்கு ஈடாகத் தமிழில் டகரம் (ṭ) ஒலிக்கப்படுகிறது. இவை ஒரு சில எடுத்துக்காட்டுகளே. இவ்வடிப்படையில் எல்லா ஒலிகட்கும் விளக்கம் இருமொழி இலக்கணத்தில் இடம் பெற்றிருக்கும்; எல்லா இயல்களுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆதலால், இருமொழி இலக்கணத்தின்மூலம் தொடர்பு கொண்ட மொழிகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தாக்கத்திற்குட்படுகின்றன என்பதை நன்கு அறியலாம். மேலும், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எவ்வெச் சொற்கள் அல்லது மொழிக்கூறுகள் கடனாக வந்து வழங்குகின்றன என்பதையும் கண்டறிய முடியும்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் பலசொற்கள் கடன் வாங்கப்பட்ட சொற்களாக வந்து வழங்குகின்றன. தாக்கத்தின் காரணமாகப் புதுச் சொற்களும், கருத்துகளும் கூடத் தோன்றிவிடுகின்றன. சுற்றுலா, சுற்றறிக்கை, கலைக் களஞ்சியம் போன்ற சொற்கள் உருவாக ஆங்கில மொழியின் தொடர்பால் ஏற்பட்ட பின் விளைவுகளே காரணமாகும். பழந்தமிழ்ச் சொற்கள் புதிய பொருளைப் பெற்று வழங்குவதையும் காணலாம்.
‘ஊசி’ என்ற சொல் துணியைத் தைக்கப் பயன்படும் கருவியைக் குறித்துப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பொழுது நோயுற்றவர்க்கு மருந்தை உடம்பில் உட்செலுத்தப் பயன்படுத்தும் கருவியையும் ‘ஊசி’ என்றே குறிக்கிறார்கள். ‘ஒரு ஊசி போட்டுக் கொண்டேன்’ என்ற சொற்றொடரில் உள்ள ஊசி குறிக்கும் பொருள் ‘மாரியம்மனுக்குச் செடல் ஊசி’ போடுவதினின்றும் வேறல்லவா! இவ்வாறே ‘முள்’ என்ற சொல்லும் புதிய பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கடிகாரத்தில் நேரம் காட்டும் கைகளைப் ‘பெரியமுள், சிறியமுள்’ என்று கூறும்பொழுது அதில் உள்ள பொருள் புதியதல்லவா! ஆதலால், இருமொழி இலக்கணம், அமைப்பிலும் தன்மையிலும் வேறுபட்டதாகும். வழக்கமான ஒரு மொழியின் இலக்கணத்திற்கும், இத்தகைய இலக்கணத்திற்கும் அடிப்படை அமைப்பிலும், அவை உருவாக்கப்படும் நோக்கத்திலும் முறையிலும் வேறுபாடுகள் உள்ளன என்பதைக் காணலாம். கோ.சீ.
துணை நூல்கள்
Einer Hangen, Bilingualism in the Americas, Pub. American Dialect Society, 1956.
Kelly (Ed.), Description and Measurement Bilingualism, Toronto, 1969.
Weinreich, Uriel, Languages in Contact, Mouton & Co., The Hague, 1960.
இருமொழியம்
கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் சமூகத்தோடு இனங்காட்டி இணைத்துக் கொள்வதற்காகவும் மொழி ஒரு கருவியாக மக்களுக்குப் பயன்படுகிறது. இரு வேறு மொழி பேசுவோர் சந்திக்கும்போது அவர்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் நிகழ வேண்டுமானால் ஒருவரின் மொழியை மற்றவர் அறிந்திருக்க வேண்டும். அல்லது பொதுவான ஒரு மொழியினை இருவரும் அறிந்திருக்க வேண்டும். ஒரு மொழியினை மட்டும் அறிந்துள்ளவர்களைத் தனிமொழியாளர் (Monolinguals) என்றும் இருமொழிகளை அறிந்து, பேசும் சூழலுக்கு ஏற்ப அவற்றைத் தனித்தனியே பயன்படுத்துவோரை இருமொழியாளர் (Bilinguals) என்றும் குறிப்பர். இரண்டு மொழிகளும் பயன்படும் சமுதாய–மொழியற் சூழலை இருமொழிச்சூழல் (Bilingual Situation) என்றும், இது பற்றிய ஆய்வினை இருமொழியம் (Bilingualism) என்றும் குறிப்பிடுவர். பொதுவாக, இரண்டிற்கு மேற்பட்ட மொழிகள் வழக்கில் பயன்பட்டு வரும் நிலையினைப் பன்மொழி நிலை (Multilingual–situation) என்று கூறுவர். ஆயினும், இருமொழியம் என்னும் பொதுத் தலைப்பின்கீழ், பெரும்பாலும் கோட்பாட்டளவில் ஒத்துப் போகும் இருமொழி நிலையையும் பன்மொழி நிலையையும் இணைத்து மொழியியலார் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வர்.
இந்திய நாட்டில் பல்வேறு மொழிபேசுவோர் வாழ்கின்றனர். இங்கு, 1961–ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 1951 தாய் மொழிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் தமிழ் மொழி பரவலாக எல்லோராலும் பேசப்பட்டாலும், பிற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் பலர் வாழ்கின்றனர். வேற்றுமொழி பேசும் அரசர்களின் ஆட்சி மாற்றங்களும், ஒரு மொழிபேசுவோர் வேறுமொழி பேசும் இடத்திற்குக் குடிபெயர்ந்து சென்று தங்கி விடுதலும் பன்மொழி பேசும் சூழலுக்கான சில காரணங்களாகும்.
தமிழ் நாட்டில் உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, சௌராட்டிரம், மராத்தி போன்ற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்கள் வட்டார மொழியான (Regional Language) தமிழ்மொழியினைக் கற்றுத் தேறித் தாய்மொழி போலத் தமிழிலும் பேசும் திறன் படைத்தவர்களாகவும் உள்ளனர் இத்தகைய இருமொழிநிலையோடு ஆங்கிலம் கற்ற தமிழர்கள் ஆங்கிலத்தையும் தமிழையும் சூழலுக்குத் தக்கவாறு பயன்படுத்துகிற இருமொழிநிலையும் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் எல்லையோரப் பகுதிகளிலும் இத்தகைய இருமொழி நிலை காணப்படுகிறது. தமிழ்நாடு– கருநாடக மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள ஓசூர் போன்ற இடங்களில் கன்னடம்–தமிழ் இருமொழிநிலை நிலவுகிறது. அவ்வாறே தெலுங்கு–தமிழ், மலையாளம்–தமிழ் ஆகிய இருமொழிநிலை தமிழ்நாட்டின் மற்ற எல்லையோரப் பகுதிகளில் உள்ளன. எல்லையோரப் பகுதிகளில் தமிழர்கள் மற்ற மொழிகளான கன்னடம் தெலுங்கு ஆகியவற்றையும் அங்கு வாழும் கன்னடியரும் தெலுங்கரும் தமிழ் மொழியையும் கற்றறிந்து ஒருவருக்கொருவர் ஏதேனும் ஒரு மொழியில் சூழலுக்கு ஏற்றவாறு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். ஆனால், உள்நாட்டுப் பகுதிகளில் வாழும் தெலுங்கர்கள் வீட்டுச் சூழலில் தெலுங்கு மொழியினையும் மற்றவர்களுடன் தமிழையும் பயன்படுத்துகின்றனர். தமிழர்கள் கன்னடமும் தெலுங்கும் கற்று அவர்களுடன் பேசுவதில்லை. இதனால், நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் நிலவும் இருமொழி நிலைக்கும் (Border Bilingualism), உட்பகுதிகளில் நிலவும் இருமொழி நிலைக்கும் (Inland–Bilingualism) மிகுந்த வேறுபாடு உள்ளது.
தாய்மொழி அல்லாது பிற மொழியினை இரண்டாம் மொழியாக ஒருவர் தம் குழந்தைப் பருவத்திலிருந்து அல்லது பள்ளிப்பருவம் தொடங்கியதிலிருந்து அல்லது வயதான பிறகு கற்றுக்கொண்டு இருமொழியாளராகலாம். சான்றாக, தமிழகத்தின் உட்பகுதிகளில் வாழும் தெலுங்குமொழி பேசும் குடும்பத்தினரின் குழந்தை வீட்டுச் சூழலில் தெலுங்கையும் வெளிப்புறச் சூழலில் தமிழையும் கற்றுக் கொள்ளும். இதனை மழலை தொடங்கிய இருமொழி நிலை (Infant Bilingualism) என்பர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிள்ளைகள் பள்ளியில் ஆங்கிலம் கற்றுப் பின்னர்த் தமிழைப் போலவே ஆங்கிலத்தில் எழுதவும் படிக்கவும் பேசவும் திறன் படைத்தவர்களாக விளங்குகிற நிலை சிறுவயது தொடங்கிய இருமொழிநிலை (Childhood Bilingualism) எனப்படும். வயதான பின்னர் வேற்று மாநிலங்களுக்குச் சென்று தாய்மொழியல்லாத அம்மாநிலத்து மொழியினைக் கற்றுக் கொண்டு, பின்னர் அதில் பேசும் திறன் பெற்று விளங்கும் நிலை வயது தொடங்கிய இருமொழிநிலை (Adolescent–Bilingualism) எனப்படும். இலேம்பர்ட்டு (Lambert), இசுடார்க்கு (Starck) போன்ற அறிஞர்கள் இம்மூன்று வேறுபாடுகளையும் விரிவாக ஆய்ந்துள்ளனர்.
ஒருவர் தம் தாய் மொழி தவிர்த்து, இரண்டாம் மொழியில் தாய்மொழிக்கு நிகரான மொழித் திறன் (Language Competence) பெற்றிருக்கலாம், அல்லது ஓரளவு கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுமளவு மட்டும் பேசும்திறன் பெற்றிருக்கலாம். புளும்பீல்டு (Bloomfield) போன்த அறிஞர்கள் தாய் மொழிக்கு நிகரான மொழித்திறனை இரண்டாம் மொழியில் பெற்றிருப்பவரே இருமொழியாளர் எனக் கருதலாம் என்று குறிப்பிடுகிறார்கள். ஆரன்பி (Hornby) முதலியோர் இருமொழிகளைச் சூழலுக்குத் தக்கவாறு பயன்படுத்துகின்றவர்களே இருமொழியாளர்கள் என விளக்கம் தருகிறார்கள். இது போன்ற கருத்து வேறுபாடுகள் இருமொழியாளர்களிடம் நிலவும் மொழித்திதன் அளவினைக் (Scale–of language competence) குறித்து எழுந்தனவேயன்றி ஒருவர் இருமொழியாளராக இல்லையா என்ற அடிப்படைப் பண்பினைத் தீர்மானிக்க எழுந்தனவாகக் கருத வாய்ப்பில்லை.
இருமொழியாளர்களிடம் நிலவும் இருமொழி நிலையினை வெயின்ரிச்சு (Weinrich) என்னும் அறிஞர் இணைந்த இரு மொழியம் (Compound Bilingualism) என்றும், கூட்டு (சேர்ந்த) இருமொழியம் (Co–ordinate Bilingualism) என்றும் வகைப்படுத்தியுள்ளார். இருமொழிகளிலும் பொருளியல் (Semantics) அடிப்படையில் சொற்களைப் பயன்படுத்தும் முறையால் இத்தகைய வகைபாடு எழுந்துள்ளது. ஒரு பொருளைக் குறிக்க இரண்டு சொற்கள் (இரு மொழிகளிலிருந்தும்) மாற்றிணைகளாக வருவதைக் கூட்டு இருமொழியம் என்பர். ஆங்கிலத்தில் ‘House’ என்றும், தமிழில் ‘வீடு’ என்றும் மாற்றிணைகளாக மக்களின் குடியிருப்பு இடத்தினைக் குறிப்பதை இதற்குச் சான்றாகக் கூறலாம். மாறாக, மொழி வாரியாகச் சொல்லையும் அது குறிக்கும் பொருளையும் பிரித்து வேறுபடுத்திப் பயன்படுத்துவதைக் கூட்டு இருமொழியம் எனக் கருதலாம். ஆசுகுடு (Oosgood) என்னும் அறிஞர் இணைந்த இருமொழியாளர்களை விடக் (Compound Bilinguals) கூட்டு இருமொழியாளர்களிடையே மொழிக் குறுக்கீடு சிறிது குறைவாக உள்ளது என்று கருதுகிறார். மழலைப்பருவத்தில் ஒரே சமயத்தில் இருமொழிகளையும் ஒன்றாகக் கற்கும் சூழல் இணைந்த இருமொழிநிலையினை உருவாக்கும் என்றும் ஒரே நேரத்தில் இருமொழிகளை ஒன்றாகக் கற்காது வீட்டில் தமிழும் பள்ளியில் ஆங்கிலமும் கற்பது போன்ற நிலை கூட்டு இருமொழி நிலைக்கு வழிவகுக்கும் என்றும் தைலர் (Taylor) என்னும் அறிஞர் கருதுகிறார்.
ஒரு தமிழர் இரண்டாம் மொழியாகக் கன்னடத்தை அறிந்து கொள்கிறார். பின்னர் வேலை செய்யும் குழல் காரணமாகத் தெலுங்கு கற்க வேண்டி வருவதாக வைத்துக் கொண்டால், அந்தச் சூழலில் அவர் கன்னடமொழியினை மறக்காது, அதனையும் தக்கவைத்துக் கொண்டு, தெலுங்கு மொழியினைக் கற்றுக் கொள்ளலாம், அல்லது கன்னட மொழியினை நாளடைவில் மறந்த வண்ணம் தெலுங்கினைக் கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு உருவாவதே முன்னர்க் கூறிய நிலைக்குக் கூட்டு இருமொழியம் (Additive Bilingualism) என்றும், பின்னர்க் கூறிய நிலைக்குக் கழிவு இருமொழியம் (Substractive Bilingualism) என்றும் கூறுவர். ஆனால், இவ்விரு நிலைகளும் இரண்டாவது மொழி எது என்பதில் வேறுபடுகிறதேயன்றி இருமொழி நிலையில் வேறுபடாது நிலைபெற்ற இருமொழி நிலைக்குச் (Stable Bilingual situation) சான்றாக விளங்குகின்றன.
இருமொழி நிலையில், இரண்டு மொழிகளையும் ஒருவர் அறிந்திருப்பதால் மொழியாளர்களின் பேச்சில் ‘மொழிக்குறுக்கீடு’ நிகழ்கிறது. குறுக்கீடு என்பது ஒரு மொழியில் பேசும்போது அம்மொழிக்குரிய இலக்கண வரம்பிலிருந்து விலகி, அயல் மொழிக்கூறுகள் வந்து கலந்து வழங்குவதாகும். இக்குறுக்கீடுகள் பேச்சு மொழியிலும் எழுத்து மொழியிலும் ஏற்படும். மேலும், அத்தகைய குறுக்கீடுகள் மொழியின் ஒலியியலிலும், உருபனியியலிலும் தொடரியலிலும் சொற்களிலும் காணப்படும். தொடக்கத்தில் குறுக்கீடுகளாகக் கலந்த பிற மொழிக்கூறுகள் காலப்போக்கில் தனிமொழியாளர்களாலும் பயன்படுத்தப்பட்டு, பின்னர் மொழியில் நிலைபேற்றாக்கம் கொள்ளும் நிலையில் இவற்றைத் தனி மொழியாளர்கள் தம் மொழிக் கூறுகளாகவே எண்ணிப் பிரித்தறிய முடியாமல் மயங்குவர். வாசனை என்னும் வடசொல் பேச்சு மற்றும் எழுத்துத் தமிழில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு, மணம் என்னும் தமிழ்ச்சொல்லின் பயன்பாட்டினை அருகிடச் செய்துள்ள நிலையினை இதற்குச் சான்று காட்டலாம்.
இருமொழியாளர்களிடையே ஒரு மொழி பேசும் போது மற்ற மொழியின் ஒலிக்குறுக்கீடு (Phonetic Interference) மிகவும் அதிகமாக ஏற்படுகிறது என்று வெயின்ரிக்குரி என்னும் அறிஞர் கருதுகிறார். ஆங்கில ஒலியனியல் அமைப்பில் உள்ள மெய்யொலியன்களான f,h,s,x,z போன்ற உரசொலியன்களை ஒலிப்பது சற்றுக் கடினமாகும். நாம் /θ/ என்னும் ஒலியனைத் தமிழில் உள்ள /t/ என்னும் ஒலியாக ஒலித்துவிடுகிறோம். (எடுத்துக்காட்டு: (θ/In) (tIn) ‘thin’) மொழிக்குறுக்கீடு தொடரியல் (syntax) நிலையிலும் ஏற்படுவதுண்டு. ஆங்கிலத்தில் ‘have’, ‘known’ என்னும் வினைகள் தொடர் நிகழ்காலத்தில் வருவதவில்லை. ஆயினும், நாம் பேசும் போது, ‘என்னிடம் இரண்டு ரூபாய் உள்ளது’ என்னும் பொருளில் ‘I am having two rupees now’ என்று கூறுவது தமிழ் மொழியின் குறுக்கீட்டால் எனக் கருத வாய்ப்புண்டு, மொழித் தொடர்பால் ஏற்படும் எல்லாக் குறுக்கீடுகளிலும் மிக எளிதாக அறியக் கூடியதும் நன்கு புலப்படக் கூடியதும் சொல் குறுக்கீடேயாகும். மொழிக் கலப்பு நேரும் போது மொழியின் எல்லா நிலைகளும் ஒரே மாதிரியாகப் பாதிக்கப்படுவதில்லை. மொழிக் குறுக்கீடுகள் முதலில் சொற்களிலும், பின்னர் ஒலியியல் நிலையிலும் பின்னர்த் தொடரியலிலும் ஏற்படுகின்றன. மொழியின் அரணாக விளங்கும் உருபனியலில் மொழிக் குறுக்கீடு இறுதியாக அமைந்துள்ளது என்று தௌசத்து (Dauzat) கருதுகிறார். பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்களும் சொற்களே மிக எளிதாக வெளிச் செல்வாக்குகளுக்கு வளைந்து கொடுக்கும் பரப்பாகும் எனக் குறிப்பிடுகிறார். ‘லாட்டரி’, ‘லிட்டர்’, ‘கிலோ’, ‘மீட்டர்’ முதலியன இன்று தமிழில் மிகவும் எளிதாகப் பயன்பட்டு வரும் சொற்களாகும். முள் என்னும் சொல் கால வளர்ச்சிக்கு ஏற்ப இன்று பேனாமுள், கடிகாரமுள் என்னும் பொருளில் பயன்படுகிற நிலையும் பிற மொழிக் குறுக்கீட்டின் காரணமாக நிகழ்ந்ததாகும்.
இருமொழி நிலை சமுதாயம் தழுவிய நிலையில் மட்டுமல்லாது நாடு தழுவியதாகவும் விளங்கலாம். தமிழ்நாட்டில் சிறுபான்மை மொழியாக உள்ள கன்னடம், கருநாடக நாட்டின் பெரும்பான்மை மொழியாக விளங்குகிறது. இங்குக் கன்னடம், தமிழ் இருமொழியாளர்கள் உள்ளது போலவே, கருநாடகத்தில் தமிழர்கள் இருமொழியாளர்களாகவும் இருக்கின்றனர். ஒரு சமுதாயத்தில் இருமொழியம் நிலையானதாகவோ அடிக்கடி மாறும் தன்மையுடையதாகவோ அமைந்திருக்கலாம். கனடா நாட்டில் ஆங்கிலம்–பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளும் நிலையான இருமொழியத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் காலத்திற்குக் காலம் இருமொழியம் மாறிக் கொண்டே வந்துள்ளது. தமிழ் நாட்டில் முன்னர் வடமொழியும், பின்னர் (மொகலாயர் ஆட்சி காலத்தில்) உருது மொழியும், அதற்குப் பின்னர்த் (நாயக்கர் காலத்தில்) தெலுங்கும், (மராத்தியர் காலத்தில்) மராத்தியும், (ஆங்கிலேயர் காலத்தில்) ஆங்கிலமும் என அயல் மொழிகள் இரண்டாம் மொழியாக வழங்கி இருமொழியம் நிலைபெற வகை செய்தன என்று சீனிவாசவர்மா குறிப்பிடுகிறார்.
மொழி ஒரு குறிப்பிட்ட பண்பாட்டில் குறியீடாக (Symbol) விளங்குகிறது. அவ்வாறாயின் இருமொழி பேசுவோர், இருமொழிகளுக்கும் உரியு பண்பாட்டினை ஓரளவு பெற்றிருப்பர் என்பதில் ஐயமில்லை. ஆங்கிலம் கற்ற தமிழர்கள் ஆங்கிலேயர் போன்று உடை உடுத்தலும், ஒருவரையொருவர் சந்திக்கும்போது கைகுலுக்கிக் கொள்வதும் ஆங்கிலப் பண்பாட்டுத் தாக்கத்தினை உணர்த்துகிறது அல்லவா? அவ்வாறே, தஞ்சாவூரில் வாழும் மராத்தியர்கள் தங்கள் மராத்தியப் பண்பாட்டுடன் தமிழ்ப் பண்பாடுகளைவும் பின்பற்றுகின்றனர்.
இருமொழிநிலை தொடர்ந்து நீடிக்கும் இருமொழி பேசுவோரிடையே காணும் மொழித்திறமை, மொழிப்பயன்பாட்டு முறைகள், மொழிகளைக் கற்றுக் கொண்ட காலம், சுற்போரின் வயது, கருத்துப் பரிமாற்றத்திற்கு அவற்றைப் பயன்படுத்தும் முறை, மொழி பேசுவோருக்கு அம்மொழியின், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு மற்றும் அரசியல் சமூகச் சூழல்கள் முதலியன காரணிகளாக அமைகின்றன. தமிழ் மராத்தி மொழியாளர்கள் தம் தாய் மொழியான மராத்தியை வீட்டுச் சூழலிலும், குடும்பத்தினரிடையேயும், நெருங்கிய உறவினர்களுடனும், தமிழ் மொழியை வெளிப்புறச் சூழலில் நண்பர்களுடனும், பொது இடங்களிலும் பயன்படுத்துவதோடு ஆங்கிலம் கற்றவராக இருப்பின், ஆங்கிலத்தை அலுவலகச் சூழலில் பயன்படுத்துபவர்களாகவும் உள்ளனர். தமிழ் மொழியில் இருவழக்கு நிலை (Diglossia) இருப்பதனைப் பர்கூசன் (Ferguson) என்னும் அறிஞர் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். தமிழ்மக்கள் கல்விக் கூடங்கள், மேடைப்பேச்சு முதலிய குழல்களில் பேசும்போதும் எழுதும்போதும் செம்மொழியைப் பயன்படுத்துகின்றனர். மாறாக வீட்டுச் சூழலிலும் நண்பர்களிடமும் சிறுவர்களிடமும் பேசும்போது பேச்சுத் தமிழினைப் (Spoken Tamil) பயன்படுத்துகின்றனர். இத்தகைய இருவகைப்படுத்தப்பட்ட மொழி வழக்கு ஒரே, மொழிக்குள் அடங்கியது என்றும், இருமொழியம் போன்று கொள்கையளவில் உள்ளது என்றும் பிசுமன் (Fishman) கருதுகிறார். அவர் இருமொழியம் மற்றும் மொழியின் இருநிலை வழக்கு ஆகியவற்றை நன்கு ஆய்ந்து அவற்றிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைப் புலப்படுத்தியுள்ளார்.
இருமொழியாளர்கள் இருவேறு பண்புகளுள்ள சமுதாயங்களுடன் உறவாடவும், அவற்றை அறிந்து பயன்படுத்தவும், தம் கருத்தை இருமொழிகளின் மூலம் எடுத்துரைக்கவும் முடிவதால் பெரும் நன்மையே ஏற்படுகிறது. இது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பெருமளவு உதவுகிறது. வளர்ந்து வரும் செய்தித் தொடர்பு, போக்குவரத்து, பன்மொழிக் கல்வி, வெளிநாட்டுத் தொடர்பு முதலியன நாளுக்கு நாள் இருமொழியத்திற்குப் பெரும்பான்மையான மக்களை உட்படுத்துகின்றன. இருமொழியம் பெருகிட அதன் வழி நன்மைகளும் பெருமளவு பெருகி வருவதைக் காணலாம்.
இருமொழி வழிக் கல்விமுறை
இரண்டு மொழிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பித்தல் இருமொழி வழிக் கல்வி முறை (Bilingual Education) எனச் சொல்லப்படும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 238)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fs2pq56b/
தமிழ்“இருமொழி இலக்கணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fs2pq56b/APA
Oliyon Research. (2026). இருமொழி இலக்கணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fs2pq56b/MLA
"இருமொழி இலக்கணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fs2pq56b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment