உத்தான துவாதசி
uttāṉa tuvātaci
உத்தான துவாதசி என்பது கார்த்திகை மாதத்தில் வரும் வளர் பிறையின் பன்னிரண்டாம் நாளைக் குறிக்கும்.
உத்தான துவாதசி என்பது கார்த்திகை மாதத்தில் வரும் வளர் பிறையின் பன்னிரண்டாம் நாளைக் குறிக்கும். மாதந்தோறும் அமையும் ஏகாதசி, துவாதசி ஆகிய இரு நாட்களும் திருமாலுக்குகந்த நாட்களாகக் கருதப்படுகின்றமையால், அவற்றில் வைணவர்கள் நோன்பு மேற்கொள்வர்.
சந்திரன் இயக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணிக்கும் முறை இந்தியாவில் முற்காலத்தில் இருந்துவந்தது. சந்திரன் எனப்பொருள்படும் மதி, திங்கள் என்னும் சொற்களின் அடிப்படையில் தமிழில் மாதம் என்றும் திங்கள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இப்பெயர்கள் நான்கு வாரங்கள் கொண்ட காலப்பகுதியைக் குறிப்பன. அமாவாசைக்கு அடுத்த முதற்பிறைநாளை முதல் நாளாகக் கொண்டு எண்ணுங்கால், பன்னிரண்டாம் நாள் துவாதசி எனப்படும். அவ்வாறே, பௌர்ணமியினை அடுத்த நாளை முதலாகக் கொண்டு எண்ணப்படும் பன்னிரண்டாம் நாளும் துவாதசி எனப்படும்.
ஆடிமாத வளர்பிறைத் துவாதசியன்று திருமால் உறங்கத் தொடங்குவார் என்றும், கார்த்திகை மாத வளர்பிறைத் துவாதசி அன்று அவர் துயிலெழுந்து, தம் படைப்புத் தொழிலில் முனைந்து ஈடுபடுவார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அதனால் ஆடி மாத வளர்பிறைத் துவாதசி ‘சயன துவாதசி’ என்றும், கார்த்திகை மாத வளர்பிறைத் துவாதசி ‘உத்தான துவாதசி’ என்றும் கூறப்படுகின்றன. உத்தானம் என்பது துயில் எழுதல் என்று பொருள்படும்.
வைதிகச் சமயத் துறவியர் ஆடி மாத ஏகாதசியன்று தாம் மேற்கொள்ளும் சாதுர் மாச நோன்பினைத் தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறைத் துவாதசியில் நிறைவு செய்வர். அக்காலம் மழைக் காலமாதலின் அவர்கள் இடம்பெயராது ஓரிடத்தே தங்கியிருந்து, வேதம் ஓதுதல் முதலியவற்றை மேற்கொண்டு நோன்பியற்றுவர்.
உத்தான துவரதசியன்று திருமாலை நினைந்து நோன்பியற்றுவோர் அவரைத் தாமோதரன் என்னும் திருநாமத்தால் வழிபடுவது சிறப்பாகும். திருமால் துளசியிலும் நெல்லியிலும் உகந்து உறைவார் என்று கூறப்படுகின்றமையால், உத்தான துவாதசி நோன்பியற்றுவோர் பிருந்தாவனம் எனப்படும் துளசி மாடத்தில் நெல்லிக் கொம்பினை வைத்து, அதன் அடியில் கண்ணன் திருவுருவினை அமைத்து வழிபாடு செய்வர். வைணவர்கள் தங்கள் இல்லங்களில் துளசிமாடம் அமைத்துத் திருமாலை நாள்தோறும் வழிபடுவது முறையாகும். அங்ஙனம் துளசி, நெல்லி அமைத்து நாடோறும் வழிபட இயலாதவர்கள் உத்தான துவாதசி நாளில் அவ்வாறு வழிபடுவார்களாயின் நற்பயன் அடைவார்கள் என்பது மரபுவழி அமைந்த நம்பிக்கையாகும். உத்தான துவாதசிக்கு முதல் நாள் உத்தான ஏகாதசி எனப்படும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 891)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fq2tqcu6/
தமிழ்“உத்தான துவாதசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fq2tqcu6/APA
Oliyon Research. (2026). உத்தான துவாதசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fq2tqcu6/MLA
"உத்தான துவாதசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fq2tqcu6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment