அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த அரசியல் வித்தகர். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் துரூமன் (Truman) என்பாரின் ஆட்சியின்போது (1949-1953) இவர் (Acheson, Dean Gooderham) அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்தவர். இவர் 11-4-1893-இல் கனக்டிகட்டு மாநிலத்தில் உள்ள மிடில்டவுன் என்னும் ஊரில் பிறந்தார். ஏல் (Yale) பல்கலைக்கழகத்திலும், ஆர்வர்டு (Harward) சட்டக்கல்லூரியிலும் மூன்றாண்டுகள் பயின்று (1915-1918) பட்டங்கள் பெற்றார். பின்னர், வாசிங்டனில் உலூயி தி. பிராண்டிசு (Louis D. Brandeis) என்பாரின் தனிச் செயலராகப் பதவியேற்றார். இவர் பண்பாட்டுச் சட்டத்துறையில் வல்லுநர். பிராங்லின் தி. உரூசுவெல்ட்டு (Franklin D. Roosevelt) குடியரசுத் தலைவராக இருந்தபோது (1933) அவருடைய சார்புச் செயலராகப் (Under Secretary) பணியாற்றினார். ஆனால் சிறிது காலத்துக்குப் பின் அப்பதவியைத் துறந்துவிட்டு வழக்குரைஞரானார். மீண்டும் இவர் அரசு ஊழியராகி (1941-45) இணைச் செயலரானார். ஐ.நா. அவையின் உதவி மற்றும் மறுவாழ்வு நிருவாகக் குழுவில் 1943-இல் உறுப்பினரானார். வெளியுறவுக் கொள்கையை உருவாக்கிச் செயல்படுத்துவதில் மார்சலுக்கு (Marshall) உறுதுணையாக நின்றார் அக்கீசன். உருசியாவின் செல்வாக்கு வளர்வதைத் தடுக்க, அமெரிக்காவின் செல்வாக்கைப் பெருக்குவது ஒன்றே வழி என்பதை இருவரும் ஏற்றுக்கொண்டனர். கிரீசு நாட்டிலும், துருக்கியிலும் ஏற்பட்ட உள்நாட்டு நெருக்கடியின் போது (1947) மாபெரும் பொருளாதார உதவியின்மூலம் அமெரிக்கா தலையிடவேண்டுமென இருவரும் கருதினர். அதன் விளைவுதான் ‘துருமன் கோட்பாடு’ (Truman Doctrine) ஆகும். மார்சல் திட்டத்தின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்னும் கருத்தினை உருவாக்கியதிலும் அக்கீசனுக்குப் பங்குண்டு, மீண்டும் சிறிது காலம் வழக்குரைஞராகப் பணி செய்த பின்னர் அக்கீசன் 1949-இல் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப் பெற்றார். உருசியாவின் முன்னேற்ற வேகத்தைச் சமாளிக்க வடஅட்லாண்டிக் ஒப்பந்த நிறுவனத்தை (NATO) அமைக்க வேண்டுமென அக்கீசன் பெரிதும் வலியுறுத்தினார். தேசிய சீனாவில் சியாங்கேசேக் என்பாரின் ஆட்சி 1949–இல் வீழ்ச்சியுற்றபோது, குடியரசுக் கட்சியினர் அவரைக் கடுமையாகக் குறை கூறினர். கொரியாப் போரில் ஏற்பட்ட இழுபழியே இக்குற்றச்சாட்டுகளுக்குக் காரணமாகும். அக்கீசன் பதவியைத் துறந்த பின்னரும் குடியரசுத் தலைவர்கள் பலருக்குக் கருத்துரை வழங்- கித் துணைபுரிந்தார். பல நூல்களை எழுதியுள்ள இவர் 12–10–1971 இல் காலமானார்.