நூல் மூலப் பொருள்கள்
nūl mūlap poruḷkaḷ
பல வகை இழைகள் மூலப் பொருள்களாக, நெசவுத் தொழிலில் பயன் படுத்தப் படுகின்றன.
பல வகை இழைகள் மூலப் பொருள்களாக, நெசவுத் தொழிலில் பயன் படுத்தப் படுகின்றன. இவற்றுள், சில மனித நாகரீகத்தின் தொடக்க காலத்திலிருந்து பயன் பட்டு வருகின்றன. ஏனையவை அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப் பட்டவை. இவ்விழைகளின் வளர்ச்சியும், பயன்களும், அவற்றின் நூற்புத் திறன், தேவையான அளவில் கிடைத்தல், தயாரிப்புச் செலவும், சிக்கனமும், நுகர்வோருக்கு அவ்விழைகளின் இயல்பினால் தோன்றும் நிறைவு ஆகிய காரணிகளால் வரையறுக்கப் படுகின்றன.
புதுப் புது இழைகள் தோன்றும் போது, நெசவுத் தொழிலில் இழைகளுக்குப் பெயரிடுதல், கண்டறிதல், வகையீடு செய்தல் ஆகிய பணிகள் சிக்கலாயின. தாங்கள் தயாரிக்கும் இழைகளுக்குத் தனிப் பெயர் அல்லது வணிகக் குறியீடு இட வேண்டும் என்னும் தனி நபர் விருப்பினால், இச்சிக்கல் உருவெடுத்தது. இப்பெயர்கள் நுகர்வோரைக் குழப்பத்திலாழ்த்தி, தாம் வாங்கும் துணியில் அடங்கியுள்ள இழைகளின் தன்மைகளோ, தனித்துவமோ தெரியாத நிலை உருவாகியது. இக்குழப்பத்திலிருந்து விடுபடும் பொருட்டு, எத்துணியாயினும், அதில் இடம் பெற்றுள்ள (5%க்கு மேலாக) இழைகளின் ஏற்கப்பட்ட பெயர்களைத் தயாரிப்பாளர் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும் என்று அமெரிக்க அரசு ஆணை பிறப்பித்தது. இதனால், இழைகளை வகை, பெயர், தோற்றுவாய், இயைபு ஆகியவற்றின் அடிப்படையில் வகையீடு செய்தல் எளிதாயிற்று (அட்டவணை).
பருத்தி. பருத்திக் காயில் உருவாகும் இழை பஞ்சாகும். ஒவ்வோர் இழையும், உள்ளீடற்ற முறுக்கப் பட்ட, தட்டையான ஒற்றைச் செல்லாகும். இவ்விழையால் 90% செல்லுலோசும், 6% ஈரமும், 4% இயல்பான மாசுப் பொருள்களும் உள்ளன. இழைகளின் வெளிப் பரப்பில், மெழுகு போன்ற பூச்சு பஞ்சுக்கு ஒட்டும் தன்மையை அளிக்கிறது. இவ்வியல்பும், இயல்பான முறுக்கும் நூலாக நூற்பதற்கு ஏற்ற இழையாகப் பருத்தியை விளங்கச் செய்கின்றன.
அட்டவணை
இவ்விழையில் 70% செல்லுலோசும், ஈரமும், மரத் திசுக்களும் உள்ளன. லினன் மென்மையான, பளபளப்பான நேரிழையாகும். இது பருத்தியை விட எளிதில் உடையக் கூடிய இழையாதலால், நூற்பதற்கு எளிதன்று.
கம்பளி. ஆட்டின் தோலிலிருந்து வளரும் கரடு முரடான இந்த இழை கரோட்டின் என்னும் புரதத்தினாலானது. அலைவு மிக்க, செதில்களுடைய இழையான கம்பளியில் இரு வகை உள்ளன. இது ஆட்டின் இனத்திற்குத் தகுந்தாற் போல் அலைவு கூடுதலாகவும், சிறு நுண்ணிய செதில்கள் கொண்டதாகவும்; அலைவு குறைந்தும், பெரு செதில்கள் கொண்டதாகவும் அமையலாம். பெரிய எண்ணிக்கையிலான நுண் செதில்களினால், கம்பளியின் கதகதப்பு கூடுகிறது. இக்கம்பளியின் தோற்றம் மங்கலானது. செதில்களுக்கு அடியில் நிறப் பொருளின் இருப்பிடமான செல்கள், இழைக்கு வலிமையையும், நீட்சியையும் அளிக்கின்றன. இழையின் மையப் பகுதியில், காற்றால் நிரப்பப் பட்ட கழற் சுருள் வடிவிலான செல்கள் (மென்மையம் = Medulla) உள்ளன. இவற்றில், கொழுப்புப் பொருள் மிகுந்துள்ளமையால், சாய நாட்டம் (dye affinity) குறைவாக உள்ளது. மென்மையமற்ற, நுண்மையான கம்பளிகளுக்குச் சாய நாட்டம் கூடுதலாகும். வெப்பத்தால் பாதிக்கப் படும் தன்மையும், பின்னல் தன்மையும் (felting) கம்பளியின் இரு சிறப்பியல்புகளாகும்.
பட்டு. இது பட்டுப் பூச்சி எனும் ஒரு வகைக் கம்பளிப் புழுவின் கூட்டிலிருந்து பிரித்தெடுக்கப் படும் சன்னமான நீளிழை. புரத வகை இழையான பட்டு பெரும்பாலும் முசுக்கட்டைச் செடிப் பண்ணைகளில் பட்டுப் பூச்சிகள் கட்டுப் படுத்தப் பட்ட சூழ்நிலைகளில் வளர்க்கப் பட்டுத் தயாரிக்கப் படுகின்றது. காட்டுச் சிற்றினமாகத் தோன்றும் டஸ்ஸா (Tussah) எனும் பட்டு கடினமானதாகும். பளபளப்பு, மென்மை, எடைகுறைவு, வளமை, நீட்சி ஆகிய இயல்புகள் கூடுதலாக அமையப் பெற்றமையால், பட்டு வனப்பு மிக்க இழையாக விளங்குகிறது. பெரிதும் விரும்பப் படும் இழையாகையால், செயற்கை முறையிலும் பட்டை ஒத்த இழைகளைத் தயாரிக்கும் முயற்சிகள், வெற்றிகரமாக நிகழ்த்தப் பட்டுள்ளன.
கல் நார். இது பாறைகளில் கால்சியம் சிலிக்கேட்டையும், மக்னீசியம் சிலிக்கேட்டையும் உள்ளடக்கியதாகக் கிடைக்கும் நார்ப் பொருள். அமிலம், தீச்சுடர் ஆகியவற்றினால் பாதிப்புறாத இவ்விழை துருப் பிடிக்காது. எனினும், கல் நார் தூள் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றில் கலந்தால், நுரையீரலை அடைந்து, புற்று நோயைத் தோற்றுவிக்கக் கூடுமாதலால், பெரிதும் பயன் படுத்தப் படுவதில்லை.
ரேயான். இது பருத்தி விதைப் பிசிரிழைகளிலிருந்தோ, சில வகை மரங்களிலிருந்தோ செல்லுலோசைப் பிரித்து, தக்க கரைப்பானில் கரைத்து, மீண்டும் இழை வடிவாக்கிப் பெறப் படுகிறது. தயாரிப்பு முறைகளுக்குத் தகுந்தாற் போல், விசுகோஸ் ரேயான், குப்ரமோனியம் ரேயான், அசெட்டேட் ரேயான் என வகையிடப் படுகின்றன. இவை யாவுமே செயற்கைப் பட்டு என்னும் பொதுப் பெயரில் குறிப்பிடப் பட்டாலும், அசெட்டேட் ரேயான் வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் வடிவமைக்கத் தக்கது.
நைலான். இது டைகார்பாசிலிக் அமிலங்களையும், டைஅமீன்களையும் குறுக்க வினைக்குட் படுத்திப் பெறப் படும் இழை. பாலிஅமைடுகளான இவ்விழைகள் அமிலப் பகுதியிலுள்ள கார்பன் அணு எண்ணிக்கையும் அமீன் பகுதியிலுள்ள கார்பன் அணு எண்ணிக்கையும் பொறுத்து வகையிடப் படுகின்றன. நைலான் 4.6; 6.6; 6,10; 6,12; 8,10; 8,10;11 நைலான் 6.6 என்றால் அமிலம், அமீன் இரு தொகுதிகளும் ஒரே எண்ணிக்கையில், அதாவது 6 கார்பன் அணுக்கள் உள்ளன என்று பொருள். நைலான் 6.10 என்றால் அமிலப் பகுதியில் 6, அமீன் பகுதியில் 10 கார்பன் அணுக்களாகும். நைலான் 6 என ஒற்றை எண்ணாக இருந்தால், ஒரே தொகுதியில் தலைப் பகுதியில் அமிலமும், வால் பகுதியில் அமீனும் (அல்லது தலை கீழாக) உள்ள அமினோ அமிலத்தின் தன் குறுக்கு வினை விளை பொருளாகும். ஒரு நைலானில் 85%க்கும் கூடுதலான அளவில் அமைடு தொகுதிகள் அரோமாட்டிக் வளையங்களுக்கிடையே அமைந்திருந்தால், அதனை அரமிடு என்பர். நைலான் ஒரு வலிமை மிக்க, நீட்சித் தன்மை கொண்ட இழையாகும்.
பாலி எஸ்டர். இங்கு இழைப் பொருளில் குறைந்தது 85% எடை டெரிப்தாலிக் அல்லது அதன் தொடர்புடைய அரோமாட்டிக் அமிலத்தின் எஸ்ட்டர் இடம் பெறுகிறது. பல்வேறு தயாரிப்பாளர்கள், வெவ்வேறு வணிகப் பெயர்களுடன் பாலி எஸ்டரைத் தயாரிக்கின்றனர். வெப்ப நிகழ்வும், வலிவும் பொருந்திய இவ்விழை நீரை எளிதில் உறிஞ்சுவதில்லை.
அக்ரிலிக். குறைந்தது 85% அக்ரிலோநைட்ரைல் தொகுதிகளை உள்ளடக்கிய இவ்விழை, கம்பளியை ஒத்த துணிகளைத் தயாரிக்க ஏற்றது. அக்ரிலிக் இழையில், அக்ரிலோநைட்ரைல் தொகுதிகள் 35–85% இருக்கக் கூடுமானால், அதற்கு மோடாக்ரிலிக் எனப் பெயர். அக்ரிலோ நைட்ரைலுடன், வினைல் குளோரைடு, வினிலிடீன் குளோரைடு, வினைலிடீன் டைசயனைடு ஆகியவற்றை இணைப்பல்லுறுப்பாக்கம் செய்து, தயாரிக்கப் படும் மோடக்ரிலிக் இழைகள் தீ எதிர்ப்புத் தன்மை மிக்கவை.
ஸ்பாண்டக்ஸ். குறைந்தது 85% பாலியூரித்தேன் தொகுதிகளைக் கொண்ட ஸ்பாண்டக்ஸ் இழை நீட்சி மிக்கது. நீச்சல் உடை, பனியன் போன்ற ஆண் உள்ளுடைத் தயாரிப்பில் இவ்விழை பயன் படுகிறது.
பாலி ஒலிஃபீன். கார்பன், ஹைட்ரஜன் ஆகிய இரு தனிம அணுக்களை மட்டுமே கொண்ட இவ்வகையில் பாலிபுரோப்பிலீன் பயன் மிக்கதாகும்.
வின்யான். குறைந்தது 85% எடை வினைல் குளோரைடு தொகுதிகளைக் கொண்ட தொகுப்பு நீளிழையான இதன் உருகு நிலை குறைவாக இருப்பதால், இது பயன் குன்றியதாகும்.
சரண். 85%க்கு மேல் வினைலிடீன் தொகுதிகளைக் கொண்ட நீண்ட சங்கிலித் தொகுப்பு பல்லுறுப்பு சரண் என்னும் வணிகப் பெயரில் பயன் படுகிறது. இது உடைத் தயாரிப்புக்கு ஏற்றதன்று.
நோவோலாய்டு. 85%க்கு மேலாகக் குறுக்குப் பிணைப்புக் கொண்ட நோவோலக் எனும் ஃபீனால் ஃபார்மால்டிஹைடு வகை ரெசினைக் கொண்ட இவ்விழை சீருடைத் தயாரிப்புக்கும், தொழிலகத் துணித் தயாரிப்புக்கும் பயன் படுகிறது.
பாலிகார்போனேட். பாலிபென்சிமிடசோல், அல்கினேட், டெஃப்லான் ஆகியன ஆடையில்லாத பயன்களில் ஈடுபடுத்தப் படும் இழைகளுள் சிலவாகும்.
தள இழைகள். இரு வேறு வேதி வகை இழைகளை, ஒன்றாகப் பிழிந்து வார்த்தலால், இவை (எடுத்துக் காட்டாகக் கார்டிலான் எனும் 50% வின்யான், 50% வினால் இழைக் கலப்பு) புது நயத் துணிகள் தயாரிக்க ஏற்றவை. இரு வேறு பல்லுறுப்புச் சங்கிலிகளை ஒட்டாக (graft) ஒரு சங்கிலி முதன்மை பெற்றதாகவும், மற்றொன்று கிளைச் சங்கிலியாகவும் அமைந்த, ஒட்டு இழை (graft fibre) தள இழையிலிருந்து குறிப்பிடத் தக்க வகையில் மாறு படுகிறது. தள இழையின் உட்கூறுகளைப் பிரிப்பது போன்று, ஒட்டு இழையின் உட்கூறுகளை எளிதாகப் பிரிக்க முடியாது. புரத இழை, ரப்பர் இழை, உலோக இழை, கண்ணாடி இழை ஆகியனவும், சில தனி வகைத் துணிகளைத் தயாரிக்க உதவுகின்றன. —மே.ரா.பாலசுப்பிரமணியன் துணை நூல். B.P.Corbman, Textiles–Fiber to Fabric, Sixth Edition, Mcgraw–hill Kogakusha, Ltd, Singapore, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 147)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fmqm7whv/
தமிழ்“நூல் மூலப் பொருள்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fmqm7whv/APA
Oliyon Research. (2026). நூல் மூலப் பொருள்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fmqm7whv/MLA
"நூல் மூலப் பொருள்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fmqm7whv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment