பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள் (Policies), செயல் திட்டங்கள் பற்றி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் (Authority) உயர்கல்வி ஆளுகை (Governance of Higher Education) எனச் சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாசு, உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை, அமைவிடம், அவற்றின் நோக்கம், மாணவர்கள் சேர்க்கை அளவு, மாணவர்களுக்கு வழங்கும் கற்பித்தல் முறை, பட்டம் வழங்குவதற்கான கல்வித் தகுதிகள், மாணவர்களின் கல்வித்தரம், ஆராய்ச்சிகளின் தரம், ஆசிரியர்களின் கற்பித்தல் சுதந்திரம், ஆசிரியர் பணியமர்த்தம், பல்கலைக் கழகங்களின் உள்ளமைப்பு, நிதியுதவி போன்ற தலையாய செயற்பாடுகளில் எடுக்கப்படும் அதிகார எல்லைகள் உயர்கல்வி ஆளுகையில் இடம்பெறுகின்றன. உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம் (International Council for Educational Development – ICED) ஆசுத்திரேலியா, கனடா, செருமானியக் கூட்டாட்சிக் குடியரசு, பிரான்சு, ஈரான், சப்பான், மெக்சிகோ, போலந்து, சுவீடன், தாய்லாந்து, இங்கிலாந்து (UK), ஐக்கிய அமெரிக்க நாடு ஆகிய 12 நாடுகளில் கல்விமுறை பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்நாடுகளிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் காணப்படும் அரசு நிதியுதவி, திட்டமிடல், ஒருங்கிணைப்பு, கல்விச் சுதந்திரம் ஆகிய உயர்கல்வி ஆளுகையின் எல்லைகள் பற்றி அவ்வறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மேலும் அந்நாடுகளில் உயர் கல்விக்கு அரசின் அதிக நிதியுதவி, உயர் கல்வியில் மைய அரசின் அதிகமான கட்டுப்பாடு, பல்வகை உயர் கல்வி நிலையங்களின் வளர்ச்சி, பல்கலைக் கழகத் தன்னாட்சி போன்றவை குறித்து ஈரிக்கு (Eurich, 1981) என்பவர் எழுதியுள்ளார். உயர்கல்வி வளர்ச்சி குறித்து ஈரிக்கு எழுதும்போது, உயர்கல்வியின் தரம் உயர்த்தப்படுதலும், உயர்கல்வியில் பல்வகைப் பிரிவுகள் (Diversity in Higher Eductiaon) புகுத்தப்படுதலோடு அவை பலப்படுத்தப்படுதலும் அவசியமானவை எனக் குறிப்பிடுகிறார். அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் உயர் கல்வி ஆளுகையானது ஆளுகை மன்றங்கள் (Governing Boards), செயற்குழு, துறையாசிரியர்கள், துணைப் பணியாளர்கள் (Support Staffs), மாணவர்கள், பழைய மாணவர்கள் (Alumni) ஆகியோரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு உயர்கல்வி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக, இந்தியப் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி ஆளுகையானது வேந்தர் (Chancellor), துணைவேந்தர் (Vice–Chancellor), பதிவாளர் (Registrar) ஆகிய மூவரிடம் உள்ளது. மேலும், பேரவை (Senate), ஆட்சிக்குழு (Syndicate) இவ்விரண்டோடு புலத் தலைவர்களும் (Deans) உயர் கல்வி ஆளுகையில் இடம் பெறுகின்றனர். தில்லி, அலிகார், பனாரசு, விசுவபாரதி, சவகர்லால் நேரு (புதுதில்லி), ஐதராபாது போன்ற பெரும்பாலான மையப் பல்கலைக் கழகங்களின் (Central Universities) உயர்கல்வி ஆளுகையில் இந்திய அரசின் குடியரசுத் தலைவரே கடமை வேந்தராக (Visiter) உள்ளார். மையப் பல்கலைக்கழக நிருவாகம் துணை வேந்தர், வேந்தர் ஆகியோரின் பொறுப்பில் உள்ளது. ஆயினும், தில்லி, ஐதராபாது மையப் பல்கலைக்கழகங்களுக்கு இந்திய அரசின் துணைக் குடியரசுத் தலைவரே (Vice–President) வேந்தராக உள்ளார். மாநில ஆளுநரே மையப் பல்கலைக்கழக முதல்வர் (Rector) பொறுப்பில் உள்ளார். துணைவேந்தரே பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் நிருவாகப் (Academic and Administrative) பணிகளின் தலைவராவர். பதிவாளர் முதன்மைச் செயல் அலுவலராக (Chief Executive Officer) உள்ளார். பல்கலைக்கழகப் பேரவை (Senate) தான் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரக் குழு (Supreme Body) எனக் கருதப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்திற்கு ஒப்புதலளித்தல், பல்கலைக்கழக நிருவாகத்திற்கான சட்டமியற்றுதல், பல்கலைக்கழகப் பொது நிருவாகத்தை மேற்பார்வையிடுதல் போன்றவற்றைப் பல்கலைக்கழகப் பேரவை செய்து வருகிறது. பல்கலைக்கழக ஆட்சிக் குழுவானது நிதி நிருவாகம், பணி நியமனம், மேற்பார்வை போன்ற பணிகளில் துணைவேந்தருக்குத் துணையாக உள்ளது. பல்கலைக்கழகப் பாடக்குழுவானது (Board of Studies) பாடத்திட்டம், பாடநூல் தேர்வு போன்ற கல்விசார் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இந்தியப் பல்கலைக்கழக உயர்கல்வி ஆளுகையில் மாணவர்களின் பங்கேற்பு பொதுவாக இல்லையெனினும், அவர்களின் பங்கேற்பின் அவசியம் குறித்துக் கல்வியாளர்களின் ஆதரவு இருந்து வருகிறது. துணை நூல்கள் Baldridge, J.V., Academic Governance, McCutcheon Berkeley, California, 1971. Eurich, N.P., Systems of Higher Education in Twelve Countries: A Comparative View, Praeger, New York, 1981. The Association of Indian Universities, The Universities of India, A I U, New Delhi, 1981.