சிறிய படகை நீரின் ஊடே செலுத்துதல், சிறு படகு செலுத்தல் (small boat propulsion) எனப்படுகிறது. சிறு படகு என்பது பொதுவாக ஓர் எந்திரம், செலுத்தி விசிறி (propeller), ஓட்டுங் கருவிகள் கொண்டதாக இருக்கும். எந்திரம் பொதுவாக உட்கனற் பொறி வகையாகவே இருக்கும். பெட்ரோல், டீசல் அல்லது வளிமச் சுழலி வகையாகவும் இருக்கலாம். உல்லாசப் பயணத்திற்கான படகுகள் பெட்ரோல் எரிபொருளால் இயங்குகின்றன. போக்குவரத்திற்கும்,, சரக்குகள் ஏற்றுவதற்கும் டீசல் படகுகள் பயன்படுகின்றன. பெட்ரோல் எந்திரங்கள். இவை படகின் உள் அமைந்தவை, வெளியிலமைந்தவை என இரு வகைப்படும். வெளியில் அமைந்த வகையில் எந்திரம், செலுத்தி விசிறி, செங்குத்து நிலையில் உள்ள ஓட்டுந்தண்டு (drive shaft) ஆகியவை இருக்கின்றன. 1—100 குதிரை ஆற்றல் வரை பல்வேறு திறன்களில் இவை அமைக்கப்படுகின்றன. இவற்றில் மிகச் சிறியவை ஒரே உருளையும்,, மிகப் பெரியவை ஆறு உருளையும் கொண்டுள்ளன. பெரும்பாலும் இரு வீச்சு (two-stroke) வகை எந்திரங்களே பயன்படுகின்றன. இவை படகிற்கு வெளியே பொருத்தப்படுவதால், படகின் உள்ளே மிகுதியான இடம் கிடைக்கிறது. எந்திரங்கள் படகின் உள்ளே இடத்தை அடைப்பதில்லை. பெரும்பான்மையாகப் பயன்படும் தரைப் போக்குவரத்து ஊர்திகளில் உள்ள எந்திரம் போன்ற அமைப்பிலேயே, படகின் உள் அமைந்த எந்திரங்கள் செயல்படுகின்றன. இவை மிகச் சிறியவையாகவும், எடையும், விலையும் குறைந்தவையாகவும் இருக்கின்றன. எந்திரத்தின் அடிப்படை அறிவு இல்லாதோரும், இவற்றை எளிதில் இயக்கலாம். எனவே, இவை உல்லாசப் படகுகளில் மிகுதியாகப் பயன்படுகின்றன. கடல் நீரின் உப்புத் தன்மையால் பாதிக்கப்படும் பகுதிகள் உடனடியாக மாற்றப்படுகின்றன. கடல் நீர் உள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக, எந்திரங்களின் வெளியிடும் பாதை சற்று உயர்வாக அமைக்கப்படுகிறது. பாதுகாப்புக் கருதிப் பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன. வெளி வரும் பெட்ரோல் வளிமம் எந்திரத்தைச் சுற்றிக் காற்றுப் போக்கினால் இழுத்து வரப்படுகிறது. இவ்வளிமம், வெளி வரும் வளிமச் சூடாலோ, சிறு தீப்பொறியாலோ எளிதில் பற்றி வெடிக்கும் தன்மை வாய்ந்ததாகும். இதைத் தவிர்க்கும் பொருட்டு வெளி வரும் வளிமத்தை, வெளியேற்றுங் குழாய் (exhaust manifold) நீர்ப் பைகளின் மூலம் குளிர்விக்கப்பட வேண்டும். மேலும், பெட்ரோல் ஒழுகா வண்ணம் குழாய்கள் செம்மையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> டீசல் எந்திரம். பொதுவாக டீசல் எந்திரம் பெட்ரோல் எந்திரத்தை விட விலை மிகுந்ததாகவும், பெரிய அளவினதாகவும் இருக்கும். ஆனால், ஒரு குறிப்பிட்ட திறனை உருவாக்க, குறைவான எரி பொருளையே பயன்படுத்துகிறது. ஆகவே, நீண்ட தொலைவுக்குச் செல்லும் போது (சரக்கு ஏற்றிச் செல்லல், பாதுகாப்புப் பணி போன்றவற்றிற்கு) டீசல் எந்திரங்களே விரும்பப்படுன்றன. எரி பொருள் சேமிப்பால், இதன் போக்குவரத்துச் செலவு பெரிதும் குறைகிறது. இவற்றில் இரு வீச்சு, நான்கு வீச்சு வகைகளும் பயன்படுகின்றன. தீப்பற்று வெப்ப நிலை மிக உயர்வாக இருப்பதால், பெட்ரோல் எந்திரங்களில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் டீசல் எந்திரங்களுக்குத் தேவை இல்லை. வளிமச் சுழலி. சிறு படகுகளில் உள்ள வளிமச் சுழலி சிறு விமானத்தின் பீச்சும் பொறியை (jet engine) ஒத்தது. இது எடை குறைந்ததாகவும், மிகு இடத்தை அடைக்காததாகவும் இருப்பதால், மிக விரைவாகச் செல்லும் திறன் வாய்ந்த படகுகளில் பயன்படுகிறது. ஆனால், விலை குறைவாகவும் எரி பொருள் சிக்கனமற்றும் உள்ளது. படம் 1இல் படகில் பொருத்தப்பட்டுள்ள வளிமச் சுழலியைக் காணலாம். இதில் வெளிப்போக்கி அளவும், திவலைகள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் மறைமுக வழியும் குறிப்பிடத் தக்கவை. இயங்கும் விதம். அனைத்து வகை எந்திரங்களிலும் சுழலும் வேகம் மிகுதியாக இருப்பதால், குறைப்பு முறைப் பற்சக்கரங்களின் (reduction gears) மூலம் எந்திரத்தின் வேகம் 1½-5 மடங்கு குறைக்கப் பட்டு, பின்னரே செலுத்தும் விசிறியுடன் இணைக்கப் படுகிறது. இப்பற்சக்கரத் தொகுப்பு, பொறியின் சுழலும் கனச் சக்கரப் பகுதியுடன் நேரடியாகப் பொருத்தப்படுகிறது. இதில் பின் நகர்த்தும் பற் சக்கரங்களும் அடங்கும். ஒரு நீர்ப் பீச்சும் இரைப்பான் (water jet pump) சில சமயங்களில் செலுத்திக்கு மாற்றாகப் பயன்படுகிறது. இது செலுத்தியை விடச் செயல் திறன் குறைவாகக் கொண்டிருப்பினும், படகில் பொருத்தும் போது பருமனாக இருப்பினும், நீருக்கு அடியில் ஏற்படும் ஆபத்துக்களால் உடைந்து, பழுது பட வாய்ப்பில்லை. மேலும் நீரில் நீந்திக் கொண்டிருப்போரின் அருகில் பாதுகாப்பாகவும் இதை இயக்கலாம். —தி. இந்திரன்