குழந்தை பெறாத பெண்களில் சூல் பை முன்னோக்கித் திரும்பியும், வளைந்தும் இருக்கும். இதனால் சூல் பையின் உடல், கழுத்துப் பக்கத்தில் முன்னோக்கி வளைந்திருக்கும். இயல்பான கூபகத்தில் சூல் பை ஒரே நிலையில் இருப்பதில்லை. சிறுநீர்ப் பை நிரம்பி இருந்தால், சூல் பை ஒரு பக்கமாகத் தள்ளப்படும். இயல்பான நிலையில் கருப் பை இருக்கும் போது, யோனி ஆய்வின் மூலம் புற வாயில் கீழ் நோக்கியும், பின்னோக்கியும் இருப்பது தெரிய வரும். அப்போது, முதலில் தொடப்படும் பகுதி கருப் பைக் கழுத்தின் முன் உதடாகும். கருப் பைக் கழுத்து 90° திரும்பியிருந்தால், புற வாயில் கீழ் நோக்கி முன்னோக்கி அமைய, முதலில் தென்படும் பகுதி பின் உதடாகும். அப்போது, சூல் பைக் கழுத்து மேல் நோக்கியும், பின்னோக்கியும் இருக்கும். மேலும், கருப்பை பின் திரும்பி இருப்பதாகக் கருதப்படும். இங்கு, திருப்பம் என்பது சூல் பைக் கழுத்துக் கால்வாயின் திசையே ஆகும். வளைவு எனும் போது, சூல் பை உடல், கழுத்தை நோக்கி இருப்பதாகக் கொள்ள வேண்டும். சூல் பை முன் புறமாகத் திரும்பி, பின் புறமாக வளைந்திருந்தால், சூல் பை கூபகத்தில் மிகவும் பின் புறமாக உள்ளது எனக் கொள்ளலாம். சூல் பையும், சூல் பைக் கழுத்தும், எந்நிலையில் இருந்தாலும், கோளாறு எவ்விதம் இருந்தாலும், மருத்துவம் சிக்கலானது. சிலருக்குக் கோளாறுகள் இல்லையெனில், பின் முதுகு வலி, புணர்ச்சியின் போது, வலி முதலியவை இருக்கலாம். அப்போது சூல் பையின் இடப் பெயர்ச்சியைச் சரி செய்ய வேண்டும். சூல் பை எந்நிலையில் இருந்தாலும், அது நகரக் கூடியதாக இருக்க வேண்டும். ஒரே நிலையில் இறுக்கமாக இருக்கக் கூடாது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பின் திரும்பிய நிலை. ஒல்லியான பெண்களில், வயிற்று உறுப்புகள் அனைத்தும் முன்னோக்கி இருக்கும் போது, இந்நிலை உண்டாகிறது. இது கருப்பையகத்தின் (myometrium) கோளாறாகக் கருதப் படுகிறது. சிலருக்குக் குழந்தை பிறந்தவுடன் கருப் பை. பின் திரும்பிய நிலையை அடைகிறது. சில போது, தசைப் புத்தும், சூலகக் கட்டிகளும் இருக்கும் போது, இந்நிலை ஏற்படலாம். இதனால், சிலருக்கு மாத விடாயின் போது, வலி, மிகையான குருதிப் பெருக்கு, சீழற்ற வெள்ளை படுதல், உடல் கனத்துப் போன உணர்வு, புணர்ச்சியின் போது வலி, மலட்டுத் தன்மை, மிகவும் அரிதாகக் கருச் சிதைவு, சிறுநீர்த் தேக்கம் ஆகியவை தோன்றலாம். கை விரல்கள் கொண்டே நிலையைச் சரிப்படுத்தலாம். பின் திரும்பிய நிலை அசையாது இறுக்கமாக இருந்தால், கருக் குழல் சூலக அழற்சியும், கூபக உதரவுறை அழற்சியும், கூபகக் கட்டிகளும் காரணமாக இருக்கலாம். அப்போது தேவையிருந்தால், பின் திரும்பிய நிலையை, அறுவை முறையால் சரி செய்யலாம். பின் திரும்பிய நிலையில் பெண் கருத்தரித்தால், சிறுநீர்த் தேக்கம் ஏற்படும். மெதுவாகச் சிறுநீரை வெளியேற்றினாலே, சூல் பை இயல் நிலை அடையும். சூல் பையின் முன்னோக்கிய வளைவு. இந்நிலையை ஈஸ்ட்ரோஜன் போன்ற மருந்துகள் கொடுத்துச் சீர் செய்யலாம். இந்த வளைவின் போது ஏற்படும் தீட்டு வலி, மணமான பின்போ, குழந்தை பிறந்த பின்போ, சரியாகி விடும். கருப் பைக் கழுத்தை விரிவடையச் செய்து, மருத்துவம் அளிப்பர். அரிதாகப் பரிவு நரம்புத் துண்டிப்பு, சூல் பை அகற்றல் போன்றவற்றைக் கையாண்டு தீட்டுக் கால வலியைப் போக்கலாம். கருப் பையின் பக்கவாட்டுத் திருப்பம். இது பெரும்பாலும் பிறவியிலேயே உண்டாகிறது. உதரவுறை ஒட்டும் பொருள்கள், கருக் குழல்–சூலக அழற்சி, சூலகக் கட்டி ஆகியவற்றால் இத்திருப்பம் உண்டாகிறது. கருப் பையின் உள் நோக்கிய திருப்பம். இது திடீரென்றோ, நாட்பட்டோ நிகழலாம். பெரும்பாலும், மகப் பேற்றிற்குப் பின் நிகழும் இதைக் கை கொண்டே சரி செய்து விடலாம். நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, தூய ஒரு காலன் சுடுநீரை 3–4 அடி உயரத்திலிருந்து, அழுத்த நிலையில் யோனியின் உட் செலுத்த வேண்டும். நீர் செலுத்தப்பட்ட பின்னர், கருப் பையின் நிலை சீரடைகிறது. இதுவும் தவறி விட்டால், ஆழ்ந்த உணர்வகற்றலின் பின், கையால் சரி செய்யலாம். இறுதியாக வயிற்றைத் திறந்து, கருப் பையை இயல் நிலைக்குக் கொண்டு வர வேண்டும். வயது முதிர்ந்த பல மகவு ஈன்ற பெண்ணாக இருந்தால், சூல் பையையே அகற்றி விடலாம். —மு.கி. ராஜாசுப்பிரமணியம் நூலோதி. Gordon Bourne et. al., Shaw's Text Book of Gyanecology, Ninth Edition, Churchill Livingstone, 1971. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->