ஓர் எலும்புத் தண்டு முறியும் போது, எலும்பின் மஜ்ஜை, எலும்புறை, எலும்பு உள் உறை, அங்குள்ள குருதி நாளங்கள், அருகே உள்ள மெல்லிய திசுக்கள் அனைத்தும் சீர்குலைகின்றன. எலும்பு மஜ்ஜையைத் தவிர எலும்புச் செல்களும் முறிந்த எலும்பு சீரடைவதில் துணை புரிகின்றன. ஒரு வகையான முறிவில் தோலிலோ, சிவேட்டுமப் படத்திலோ சிராய்ப்பு ஏற்படுவதுடன், எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள குருதி உறை கட்டியுடன் தொடர்பும் கொண்டு, பல சிக்கல்களை உண்டாக்கும். இதனால், நுண்ணுயிர்கள் உட்புக வாய்ப்புண்டு. முறிந்த எலும்புத் துண்டுகளால் சிராய்ப்பு உண்டாகும். இதை உள்ளிருந்து உண்டாகும் சிராய்ப்பு எனலாம். வெளியிலிருந்து உண்டாகும் சிராய்ப்புக்கு ஊர்தியோ, விலங்கோ காரணமாக இருக்கலாம். ஆகவே, சிராய்ப்பு ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டால், சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்பு உண்டு. நோயாளியைப் பராமரிப்பதும், எலும்பு முறிவைச் சீர் செய்வதும், மருத்துவத்தில் அடங்கும். நோயாளிக்கு உண்டாகும் வலியை நீக்க, மார்ஃபியா மற்றும் பெத்தடீன்,பாராசிட்டமால், சாலிசிலேட்டுகள் போன்ற வலி நீக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். குருதி இழப்பு. எல்லா முறிவுகளிலும் ஓரளவான குருதி இழப்பு இருக்கும். பெரிய நீண்ட எலும்புகள், முதுகெலும்பு, கூபகம் ஆகியவை முறியும் போது, ஏற்படும் குருதி இழப்பை ஈடு செய்ய வேண்டும். சான்றாக, தொடை எலும்போ, கூபக எலும்போ முறியும் போது சுமார் 2 லிட்டர் குருதி இழக்கப் படலாம். எலும்பு முறிவுகளுடன் அருகிலுள்ள உறுப்புகளும் (சிறுநீர்ப் பை, குருதி நாளங்கள், நரம்புகள்) சேதமடையலாம். எக்ஸ் கதிர்ப் படம் எடுத்துச் சரியாக உறுதி செய்த பின், உடைந்த எலும்பை ஒன்று சேர்க்க வேண்டும். ஒன்று சேர்ந்த எலும்புகள் அசையாமல் இருக்க வேண்டும். எலும்பைச் சேர்ப்பது மூடிய வகையாகவோ, திறந்த முறையாகவோ இருக்கலாம். இரண்டு முறைகளிலும் உணர்வு நீக்கு முறை தேவைப்படுகிறது. தப்பைகள் போட்டுக் கட்டி, பாரிஸ் காரைச் சாந்து போட்டுக் கட்டுப் போட வேண்டும். இத்தகைய கட்டுப் போடுவதில் உள்ள சிக்கல்களையும், தீய விளைவுகளையும் மனத்தில் கொள்ள வேண்டும். சில எலும்பு முறிவுகளுக்கு இழுப்பு முறை (traction) மேற்கொள்ளப்படுகிறது. அண்மைக் காலமாக, எலும்புகளை நிலைப்படுத்துவதில் பல கருவிகள் கையாளப்படுகின்றன. கம்பி, இரும்புத் தகடு, உலோகக் கலவையாலான தகடு, ஆணி கொண்டு பொருத்துதல் போன்ற பல முறைகள் பயன்படுகின்றன. காயத்திற்கான மருத்துவமும் எதிர் உயிர் மருந்துகளும், இசிவு நோய் தடை செய்ய டெட்டனஸ் டாக்சாய்டும் கொடுக்க வேண்டும். —சாரதா கதிரேசன் நூலோதி. A.J. Harding, Bailey & Love's Short Practise of Surgery, Seventeenth Edition, ELBS and H.K.Lewis Ltd, London, 1979.