அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமூகப் பணிக் கல்வியை ஒரு தனித்துறையாக ஆக்கியவர்களுள் முன்னோடியாகக் கருதப்படுபவர். கார்னல் பல்கலைக்கழகத்தில் (Cornell University) கல்வி கற்கும் காலத்தில் இலீ போர்ட்டர் (Lee, Porter Raymond) சமூகப் பணியில் ஈடுபாடு கொண்டார். அக்காலத்தில் இந்நிறுவனம் ஒன்றுதான் மாணவர்களுக்குச் சமூகப் பணியில் தனிப்பட்ட பயிற்சி கொடுத்து வந்தது. இவர் கல்வியாளராக இருந்ததோடு சமூகப் பணியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் அமெரிக்காவிலுள்ள அறக்கட்டளை நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணி செய்து வந்தார். இவர் மற்றக் கல்வித்துறைகளுக்கும் சமூகப் பணித் துறைக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, சமூகப்பணிக் கல்வியின் வளர்ச்சியில் ஈடுபட்டார். அமெரிக்கச் சமூகப்பணிக் கல்வி நிறுவனம் 1919–ஆம் ஆண்டில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர். தனியாள் சமூகப் பணி (Social Case Work) என்னும் துறை பற்றிய கோட்பாடுகளையும் செய்முறையையும் உருவாக்கியவர் இவரேயாவர். இவர் இயற்றிய ‘சமூகப்பணி: காரணிகளும் செயல் முறையும்’ (Social Work: Causes and Function) என்னும் நூல் சமூக மறுவாழ்விற்கும் சமூகப் பணிக்குமுள்ள தொடர்புகளையும் வேறுபாடுகளையும் விளக்குகிறது. பொதுநலநாட்டு நிதித்திட்டத்தின் உதவியுடன் குழந்தைகள் வழி காட்டு நிலையத்தை (Child Guidance Bureau) ஏற்படுத்தினார். இந்நிலையம் இளங்குற்ற நடத்தையைத் தவிர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனப் பணி தனியார் சமூகப் பணிமுறையைப் பயன்படுத்துகிறது. இந்நிலையத்தில் தனியாள் உளமருத்துவ முறை, சமூகப் பணிப்பயிற்சி பெற்றவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. சமூகப் பணிக் கல்வியில் இவர் புதிய மாறுதலைக் கொண்டுவந்தார். சமூகப் பணியில் எந்தக் குறிப்பிட்ட துறைக்கோ பணிக்கோ பயிற்சி கொடுத்தாலும் சமூகப்பணிக் கோட்பாடுகள் பொதுவானவையே என்று வலியுறுத்தினார். இதன் காரணமாகவே முதலாண்டில் பொதுவான சமூகப் பணி முறைகளையும், அடுத்த ஆண்டில் குறிப்பிட்ட துறைக்குத் தனிப்பயிற்சி முறையையும் சமூகப் பணிக் கல்வியில் புகுத்தினார்.