நேர் குடல் மற்றும் பெருங்குடல் புற்று
nēr kuṭal maṟṟum peruṅkuṭal puṟṟu
இப்புற்று நோயின் அடிப்படைக் காரணம் புலனாகவில்லை.
இப்புற்று நோயின் அடிப்படைக் காரணம் புலனாகவில்லை. ஆயினும், இதனை ஏற்படுத்த வல்ல காரணிகளாகச் சில நோய்களையும், தொடர்பு நிலைகளையும் கூறலாம். அவை பெருங்குடல் அடினோமேட்டஸ் தண்டுக் ௧ழலைகள் (adenomatous polyps of the colon) கருப்பை அல்லது மார்பகப் புற்று நோய், குரோன் நோய் போன்றவையாகும். மேலை நாடடவர்களுக்கு, இப்புற்று நோய் பெருமளவில் ஏற்படுவதற்கு, அவர்கள் மிகையாக விலங்குக் கொழுப்பை உண்பதே காரணம் எனக் கருதப் படுகிறது.
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, பொதுவாக இப்புற்று நோய் ஏற்படுகிறது. இது 75% இறங்கு பெருங்குடல் நேர் குடல்–வளை குடல் ஆகியவற்றிலும், 10% குறுக்குப் பெருங்குடலிலும், 15% சீக்கம் மற்றும் ஏறு பெருங்குடலிலும் ஏற்படுகிறது. இது கழலையாகவோ, அல்லது வட்டமான இறுக்கும் கழலையாகவோ (annular constricting tumour) தோற்றமளிக்கலாம்.
சீக்கம் முதல் குறுக்குப் பெருங்குடலின் பெரும் பகுதி வரை வலப் பெருங்குடல் எனவும், எஞ்சிய பகுதி இடப் பெருங்குடல் எனவும் கொள்ளலாம். வலப் பெருங்குடல், கரு வளச்சியின் போது தோன்றும் மையக் குடற்பகுதியிலிருந்து தோன்றி, அதற்குண்டான குருதித் தேவையையே பெறுகிறது. வலப் பெருங்குடலின் பெரும் பணி, நீரை உட்கவர்வதாகும். எனவே, அங்குள்ள மலப் பொருள் நீர்மமாக இருக்கும். இடப் பெருங்குடல் ௧ரு வளர்ச்சியின் போது தோன்றும் பின் குடல் பகுதியில் தோன்றி, அதற்குண்டான குருதித் தேவையைப் பெறுகிறது. இதன் இன்றியமையாப் பணி சேமிப்பும், கழிவும் ஆதலால், இங்குள்ள மலப் பொருள் கெட்டியாக இருக்கும்.
வலப் பெருங்குடல் புற்று நோய், பெரும்பாலும் கழலையாகிப் புண்ணுடன் குடல் குழலுக்கு துருத்தியிருக்கும். குருதிப் போக்கு மிகுந்திருப்பதுடன், குருதிச் சோகையும், நோயாளிக்கு வலிமையின்மையும் காணப் படும். ஆனால், குருதி, மறை குருதியாக (occult blood) மலத்துடன் கலந்து, நோயாளியின் பார்வைக்குத் தெரியாதவாறு இருக்கும்.
இடப் பெருங்குடலில் தோன்றும் புற்று நோய் பெரும்பாலும், குடலைச் சுற்றி வட்டமாகக் குடல் அடைக்கும் வண்ணம் இறுகிக் காணப் படும். எனவே, பெரும்பாலும் மலச் சிக்கலும், சில வேளைகளில் பேதியும், மாறி, மாறி இருப்பதுடன், நோயாளிக்கு விட்டு, விட்டு உதர விதானம் வலிக்கும்.
அறிகுறி. வழக்கத்திற்கு மாறான மலக் கழிப்பு, வயிற்று வலி, குருதிச் சோகை ஆகியன அறிகுறிகளாகும். இந்நோயால் ஏற்படும் சிக்கல்களாகக் குடல் சுவர் துளையுறுதல், அதனால், விளையும் உதரவுறை அழற்சி, குருதி நாளப் பாதிப்பால் ஏற்படும் பெருமளவு குருதிப் போக்கு, குடல் அடைப்பு, குடல் முறுக்கல் (volvulus), புற்றுக் கழலை வளர்ச்சியால் அருகிலுள்ள கருப்பை, சிறுநீரகம் குழாய் ஆகியவை அழுந்துதல் போன்றவை உள்ளன.
குடல் காசநோய், பெருங்குடல் புண்ணுடை அழற்சி, தீவிரமற்ற தொங்கு கழலை, பால் வினை நோயான லிம்போக்ரானுலோமா வெனிரம் (Lymphogranuloma venerum) சாதாரண பெருங்குடல் புண் போன்றவையும், புற்று நோய் போன்று தோற்றமளிக்க வாய்ப்பு இருப்பதால், இவற்றை வேறுபாட்டு நோய் அறுதியிடலின் போது, நன்கு ஆராய வேண்டும். பெருங்குடல் புற்று நோய்க்கு, அறுவையே சிறந்ததாகும். குடல் சுவரில் புற்றுக் கழலையுடையோர், மருத்துவத்திற்குப் பின் ஏறத் தாழ 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ இயலும். புற்று நோய்த் திசுக்கள் குடல் சுவரை மட்டுமன்றி, அண்மையிலுள்ள நிண நீர் முடிச்சு, கல்லீரல், எலும்பு போன்றவற்றையும் பாதித்திருந்தால், நலமடைய வாய்ப்பு இல்லை. ஆனால், குருதிப் போக்கு, குடல் அடைப்புப் போன்றவற்றைக் குறைக்க வழி செய்யலாம். அறுவை மேற்கொள்ள முடியாத நிலையில், 5 ஃபுளூரோயுரேசில் போன்ற மருந்துகளைக் கொண்டு வேதி மருத்துவமோ, எக்ஸ்–கதிர் மருத்துவமோ செய்து, நோயை ஓரளவு தணிக்கலாம். —கு. சிவஞானம் துணை நூல். D.C.Sabiston, Text book of Surgery, Thirteenth Edition, W.B. Saunders,Co., Philadelphia, 1986; Maxwell M. Wintrobe et. al., Harrison’s Principles of Internal Medicine, Eleventh Edition, McGraw-Hill Book Company, Newyork, 1987.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 219)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f92mkynf/
தமிழ்“நேர் குடல் மற்றும் பெருங்குடல் புற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f92mkynf/APA
Oliyon Research. (2026). நேர் குடல் மற்றும் பெருங்குடல் புற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f92mkynf/MLA
"நேர் குடல் மற்றும் பெருங்குடல் புற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f92mkynf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment