கணித, புள்ளியியல் அறிஞரான பாஃப்னட்டி லிவோவிச் செபிஷேவ் (Pafnuty Lvovich, Chebyshev) சோவியத் ஒன்றியக் குடியரசிலுள்ள ஒக்டோவா என்னுமிடத்தில் 1821ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் நாள் பிறந்தார். செபிஷேவ் கல்வி நிறுவனம் எனப்படும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கணிதக் கல்வி நிறுவனம், இவரால் நிறுவப்பட்டதாகும். 1847ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பல்கலைக் கழகத்தில் கணித உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1860ஆம் ஆண்டு தாளாளர் ஆனார். நிகழ்தகவுக் கோட்பாட்டில் மிகவும் அடிப்படைச் சமனிலியான செபிஷேவ் சமனிலியை (Chebyshev inequality) உருவாக்கினார். இதன் பொதுமைப் படுத்தப்பட்ட (generalised) அமைப்பு பைனாமி செபிஷேவ் சமனிலி (Brienayme Chebshev inequality) எனப்படும். பெரிய எண்களின் விதியை (law of large numbers) விவரிக்கும் போது, எளிய, தெளிவான விளக்கம் பெறுவதற்கு இச்சமன்பாடு பயன்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்குக் குறைவாக உள்ள பகா எண்களின் (prime numbers) எண்ணிக்கைகளைக் கண்டறிவது உட்பட, பல கருத்துகளைப் பகா எண் கோட்பாட்டில் கண்டறிந்தார். கோட்பாட்டு இயக்கவியலில் (theortical mechanics) பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் கண்டறிந்த இணை இயக்கம் (parallel motion) மூன்று பட்டை இணைப்புடையது (three bar linkage) ஆகும். இது பொருத்தமான செங்கோட்டு இயக்கத்திற்கு (exact rectilinear motions) மிகவும் நெருங்கிய தோராயம் (approximation) ஆகும். இந்த இயக்கத்திற்குச் செபிஷேவ் இணை இயக்கம் (Chebyshev parallel motion) எனப் பெயர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இவருடைய கணித ஆய்வுகள் மிகவும் பரவலாக அமைந்திருந்தன. அவற்றுள் நிகழ் தகவுக் கோட்பாடு, இரு படி அமைப்புகள் (quadratic forms) செங்கோணச் சார்புகள் (orthogonal functions), நிலவியல் வரைபடங்கள் உருவாக்குதல், செபிஷேவ் பல்லுறுப்புக் கோவை (Chebyshev polynomial) போன்றவை குறிப்பிடத் தக்கவை. 1849ஆம் ஆண்டு வெளியிட்ட முற்றிசைவுக் கோட்பாடு (theory of congruences) என்னும் நூல் இவரை, கணிதவியலார் என்னும் நிலைக்கு உயர்த்தியது. இந்நூல் ரஷ்யப் பல்கலைக் கழகத்தில், பல ஆண்டுகளுக்குப் பாடமாக இருந்தது. செபிஷேவ் 1894ஆம் ஆண்டு டிசம்பர் எட்டாம் நாள் லெனின்கிரேடு என்னுமிடத்தில் இறந்தார். —பெ. வடிவேல்