இவர் தமிழகத்துத் தலைசிறந்த நாதசுரக் கலைஞராவார். தஞ்சை மாவட்டத் திருமருகல் என்னும் ஊரில் இவர் கி.பி. 1897–ஆம் ஆண்டு பிறந்தார். அவ்வூர் நடேச பிள்ளை என்பவர் இவர்தம் வளர்ப்புத் தந்தை ஆவார். தம் வளர்ப்புத் தந்தை நடேசபிள்ளை திருவாவடுதுறைச்சைவ மடத்தில் நாதசுர வித்துவானாக இருந்த காரணத்தினால் தம் ஒன்பதாம் வயதிலேயே திருவாவடுதுறை வந்துவிட்டார். அங்கு மார்க்கண்டம் பிள்ளை என்பவரிடம் தம் பத்தாம் வயதில் நாதசுரப் பயிற்சி பெறத் தொடங்கினார். தம் சிந்தனைத் திறத்தால் விரைந்து முன்னேறினார். தஞ்சையில் நடந்த ஒரு திருமணத்தின் போது துணைநாதசுரக்காரராக வாசித்துத் தம் நாதசுர வாழ்வைத் தொடங்கினார். இராசரத்தினம் பிள்ளை, டி.என். திருக்குவளை அருணாசல, திருவிடைமருதூர் டி.எசு. வீராசாமிபிள்ளை, கக்கா நடராச சுந்தரம் பிள்ளை ஆகியோர் டி.என். இராசரத்தினம் பிள்ளையுடன் இணைந்து நாதசுரம் வாசித்துள்ளனர். இவருக்கு ஐந்து மனைவியர் இருந்தனர். குழந்தைப் பேறில்லை. கர்ணன் என்ற பெயருள்ள குழந்தையை மகனாகவும் கிரிசா என்ற குழந்தையை மகளாகவும் ஏற்று வளர்த்தார். பிற்காலத்தில் தம் முக்கிய மாணவராகக் காருகுறிச்சி அருணாசலத்தைத் தேர்ந்தெடுத்து, தம் கற்பனை நுணுக்கங்களைப் பயிற்றுவித்தார். இவர் 1952–ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும், இலங்கைக்கும் சென்று, தம் கலைத் திறமையைப் புலப்படுத்தினார். அமெரிக்காவிற்குச் செல்லப் பயணம் உறுதியாக்கப்பட்டது; ஆனால் போகும் முன்பு மறைந்துவிட்டார். தம் வளர்ப்புத் தந்தை நடேசபிள்ளை மறைந்த பிறகு இவர் திருவாவடுதுறை ஆதீன நாதசுர வித்துவானாக இருந்துவந்தார். இவர் 1950–ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து விலகிச் சென்னை அடையாற்றில் குடியேறினார். ‘அகில உலக நாதசுரச் சக்கரவர்த்தி’ என்று பட்டம் பெற்ற இவர், ‘தோடி’ இராகம் வாசிப்பதில் சிறப்புற்று விளங்கியமையால், ‘தோடிஇராசரத்தினம்’ என்று புகழப் பெற்றார். இவர் காலத்தில் நாதசுரக் கலைஞர்களுக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. சட்டை அணியாது துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு நாதசுரம் வாசிப்பது மரபென்றாலும், இவர் அதனை மீறிச் சட்டையணிந்தே வாசித்தார். தம்புரா சுருதியோடு நாதசுரம் வாசித்த கலைஞர் இவர் ஒருவரே. பெரிய நாதசுரமான பாரி (Bhari) நாயனத்தையே வாசிப்பதற்குப் பயன்படுத்தினார். வாய்ப்பாட்டிலும் வீணைவாசிப்பதிலும் கை தேர்ந்தவராக விளங்கிய இவர், வெளியிடங்களில் இக்கலைகளை மேற்கொள்ளவில்லை. இசைச் சிந்தனை மிகுதியாகவுள்ள இவர் இரவு நேரத்திலேதான் பயிற்சி செய்வார். திருவாவடுதுறையில் உள்ள தம் வீட்டு மாடியில் இவர் பயிற்சி செய்யும்பொழுது பொது மக்கள் ஆர்வத்துடன் சாலையில் நின்று கேட்பார்கள். ‘கவி காள மேகம்’ என்னும் திரைப்படத்தில் கவி காள மேகமாக நடித்துள்ளார். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் தில்லி சென்று சுதந்திர தின விழாவில் வாசித்து, நேரு அவர்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார். இவர், 1954–ஆம் ஆண்டு வாதநோயால் பீடிக்கப்பட்டார். அமெரிக்க மருத்துவர்கள் இலவசமாக மருத்துவம் செய்து குணப்படுத்தினார்கள். சென்னை தாசப்பிரகாசு உணவு விடுதி உரிமையாளர்கள் இவருக்கு எல்லாவித உதவிகளும் செய்து வந்தனர். புகைவண்டிப் பயணத்தின்போது தம் வைரக்கடுக்கனைப் பாதுகாக்க ஒரு வேலையாளை அமர்த்தியிருந்தார். நாதசுவரம் வாசிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியும் கேளாமல், 1956–ஆம் ஆண்டு ஆலப்புழை சென்று, விடியற்காலை சென்னையைச் சேர்ந்தவுடன் காலை ஒன்பது மணியளவில் இதயக் கோளாறு நோயால் திடீரென உயிர் துறந்தார். ஐம்பத்து ஒன்பதாம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்த டி.என். இராசரத்தினம் பிள்ளையின் இறுதி ஊர்வலம் கலைவாணர் என்.எசு. கிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. இரா.கு.