சிறுநீர் நாளம்
ciṟunīr nāḷam
சிறுநீரகத்தினின்று சிறுநீர்ப் பைக்குள் சிறுநீரைக் கொண்டு செல்லும் குழாய் வடிவ உறுப்பு, சிறுநீர் நாளம் ஆகும்.
சிறுநீரகத்தினின்று சிறுநீர்ப் பைக்குள் சிறுநீரைக் கொண்டு செல்லும் குழாய் வடிவ உறுப்பு, சிறுநீர் நாளம் ஆகும். வலப் புறச் சிறுநீரகத்தினின்று ஒன்றும், இடப் புறச் சிறுநீரகத்தினின்று ஒன்றுமாக இரு சிறுநீர் நாளங்கள் சிறுநீர்ப் பையை அடைகின்றன. மனித உடலில், ஒவ்வொரு சிறுநீர் நாளமும், ஏறத்தாழ 30 செ.மீ. நீளமுடையது. இந்நாளம், சிறுநீரகக் கிண்ணத்தின் தொடர்ச்சியாகச் சிறுநீரகத்தை விட்டு நுழை வாயில் வழியாக வெளி வருகிறது. தொடர்ந்து, வயிற்றுப் பின் சுவர் வழியாகக் கூபகத்துள் நுழைந்து, சிறுநீர்ப் பையைத் துளைத்து உட்செல்கிறது.
சிறுநீர் நாளத்தின் சுவர் மூன்றடுக்குகளால் ஆனது. அவை வெளியிலிருந்து உள்ளாக, இழையுறை (fibrous coat), தசை உறை (muscular coat), சிலேட்டும உறை (mucous coat) எனப்படும். இழையுறை இணைப்புத் திசுவாலானது. தசையுறை ஈரடுக்குகள் கொண்டது. வெளியடுக்கு வட்டத் தசை நார்களையும் (circular muscles), உள்ளடுக்கு நீள் தசை நார்களையும் (longitudinal muscles) கொண்டிருக்கும். வட்டத் தசைகள் செயல்படும் போது, நாளத்தில் சுருக்கலைவு (persistalsis) ஏற்படும். இவ்வலைவுகளே சிறுநீரைச் சிறுநீர் நாளத்தின் வழியே சிறுநீர்ப் பைக்குள் சேர்ப்பவை. சிலேட்டும உறையோ திரிநிலைப் புறத் திசுவால் (transitional epithelium) ஆனது.
சிறுநீர்ப் பைக்குள் நுழையும் சிறுநீர் நாளம், சிறுநீர்ப் பையின் சுவரைச் செங்குத்தாகத் துளைக்காது, சாய்வாகச் செல்கிறது. இதனால், சிறுநீர்ப் பை விரியும் போதெல்லாம், நாளத்தின் சுவர்கள் முன்னும், பின்னுமாய் ஒட்டிக் கொள்கின்றன. சிறுநீர்ப் பையினின்று சிறுநீர் நாளத்திற்குள் எதிர்த் திசையில் சிறுநீர் பாய்வது இதன் மூலம் தடுக்கப்படுகிறது.
சிறுநீர் நாளத்தில் உண்டாகும் கட்டிகளாலோ, புற்றுகளாலோ சிறுநீர் நாளக் கற்கள் இருந்தால், சிறுநீர் ஓட்டம் தடைப்படும். தடைபட்ட சிறுநீர், சிறுநீரகத்தில் தேங்கத் தேங்கச் சிறுநீரகமும், தடைக்கு மேலுள்ள நாளப் பகுதியும் அகன்று பருத்து விடும். இந்நிலையால், நீர் விரிநாளமும் (hydroureter), விரி நீரகமும் (hydronephrosis)தோற்றுவிக்கப்படுகின்றன. சிறுநீர்த் தேக்கம் அதிகரித்தால், பின்னழுத்தத்தின் விளைவாகச் சிறுநீரகச் செயல் கூறுகளில் ஒவ்வொன்றும் திறனிழந்து செயலற்று விடும். —சுதா சேஷய்யன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 353)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f6hhcexx/
தமிழ்“சிறுநீர் நாளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f6hhcexx/APA
Oliyon Research. (2026). சிறுநீர் நாளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f6hhcexx/MLA
"சிறுநீர் நாளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f6hhcexx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment