அளபெடை
aḷapeṭai
அளபெடை என்பது யாதானுமொரு காரணம் பற்றி எழுத்து, தனக்குரிய மாத்திரையின் நீண்டு ஒலிப்பதனைக் குறிக்கும் பெயராகும்.
அளபெடை என்பது யாதானுமொரு காரணம் பற்றி எழுத்து, தனக்குரிய மாத்திரையின் நீண்டு ஒலிப்பதனைக் குறிக்கும் பெயராகும். தமிழ் உயிரெழுத்துகளுல் குறிலின் அளவு ஒரு மாத்திரை; நெடிலின் அளவு இரண்டு மாத்திரை; மெய்யெழுத்தின் அளவு அரை மாத்திரை. தொல்காப்பியர் கருத்துப்படி இரண்டு மாத்திரைக்குமேல் ஒலிக்கும் எழுத்து தமிழில் இல்லை, “மூவள பிசைத்தல் ஓரெழுத்தின்றே” என்பது தொல்காப்பியம். இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையிலும் மிகுதியாக ஒலித்தலை விரும்புவாராயின், தாம் கருதிய மாத்திரையைத் தருவதற்குரிய எழுத்துகளைக் கூட்டி, அம்மாத்திரைகளை எழுப்பிக் கொள்ள வேண்டும் இவ்வாறு விரும்பிய மாத்திரை அளவுக்கேற்ப எழுத்துகளை நெட்டெழுத்தோடு சேர்த்து ஒலியை எழுப்பிக் கொள்வது அளபெடையாகும். இது தொல்காப்பியர் உயிரளபெடைக்கு வகுக்கும் இலக்கணம்.
‘குன்றிய ஓசையுடைய சொல்லினிடத்தே நெட்டெழுத்தின் பின்னர் அவற்றின் இனமொத்த குற்றெழுத்துகள் அவ்வோசையை நிறைவிக்கும்’ எனப் பொருள்படும் நூற்பாவால் தொல்காப்பியர் அளபெடை இலக்கணத்தை உணர்த்தியுள்ளார். இதனால் அளபெடையில் நெட்டெழுத்திற்குரிய இரண்டு மாத்தி- ரைக்கு மேற்பட்ட ஓசையினை நிறைப்பன, அவ்வெழுத்தின் பின்னர்ச் சுட்டிய குற்றெழுத்துகளை என்பது தொல்காப்பியக் கருத்தென்பது தெளிவாகிறது. எடுத்துக்காட்டு: ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ.
நெட்டெழுத்துகள் ஒவ்வொன்றும் ஓரெழுத்தொரு மொழியாம். ஆ என்பது பசு; ஈ–ஈதல்; ஊ–தசை; ஏ–அம்பு; ஐ–பெருமை; ஓ–மதகு நீர் தாங்கும் பலகை. ஓரெழுத்தொரு மொழியாகிய நெட்டெழுத்தோடு ஒத்த குற்றெழுத்துச் சேர்ந்து மூன்று மாத்திரையாய் அளபெடுத்துள்ளது. இரண்டு மாத்திரை கொண்ட நெட்டெழுத்தே நீண்டு, மூன்று மாத்திரையாகவில்லை என்பது ஈண்டு உணரத்தத்கது.
‘நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய, கூட்டி எழூஉதலென்மனார் புலவர்’ என்ற நூற்பாவிலுள்ள எழூஉதல் என்பது அளபெடைச் சொல்லாம். எழுதல் என்பது தன்வினை; “எழூஉதல்” என்பது பிறவினை. எழூஉதல் என்பது ‘எழுப்புதல்’ எனப் பொருள்படும். நெட்டெழுத்து நீட்சி பெற்று மூன்று மாத்திரையாகவில்லை என்றும், அதற்கொத்த குற்றெழுத்துச் சேர்க்கப்பெற்றே அங்ஙனம் ஆகியுள்ளது என்றும் ‘எழூஉதல்’ என்ற சொல் உணர்த்துகிறது.
‘அவ்வளபுடைய’ எனப் பன்மையாற் கூறியதனால் மூன்றுக்கு மேற்பட்ட மாத்திரைகளும் அளபெடையாக வருதலுண்டு என்பது தெரிகிறது. “செறாஅஅய் வாழிய நெஞ்சு” (குறள் 1200). இதில் அளபெடை நான்கு மாத்திரை பெற்றுள்ளது. செய்யுளில் சீரின்கண் அளபெடை ஓர் அசையாக வருதலுண்டு.
:“கடா அ உருவொடு கண்ணஞ்சாதி யாண்டும் :உகாஅமை வல்லதே ஒற்று”
இக்குறளில் ‘கடாஅ’ என்ற சீர் ஈற்று அகரம் தனி நேரசையாகிப் புளிமா வாய்பாடாகவும், ‘உகாஅமை’ என்னும் சீர் அகரம் தனி நேரசையாகி புளி மாங்காய் என்னும் வாய்பாடாகவும் நின்றன. ‘செறாஅஅய் வாழிய நெஞ்சு’ என்பதில் ‘செறாஅஅய்’ என்பது புளிமாங்காய் என்னும் வாய்பாடாக நின்று வெண்சீர் வெண்டளையாக அமைந்துள்ளது. இதனாலும் அளபெடை தனி எழுத்துகளின் கூட்டொலி என்பதும், அது நெடிலின் நீட்சி அன்று என்பதும் வலியுறுகின்றன.
தொல்காப்பியர் உயிரளபெடையை எழுத்தாக எழுத்ததிகாரத்தில் கூறியது போல், ஒற்றளபெடையை இவ்வதிகாரத்தில் கூறவில்லை. ‘ஒற்றளபெடை செய்யுட்கே வருதலின் ஈண்டுக் கூறாராயினர்’ என நச்சினார்க்கினியர் இதற்குக் காரணங் கூறுவர். இதனால் உயிரளபெடை உரைநடையிலும் வரும் என்பது புலனாகிறது. ஆடூஉ, மகடூஉ, மரூஉ, ‘என வரூஉம்’ போன்றவைகளை உரைநடையில் வரும் அளபெடைகளாகக் கொள்ளலாம். விலை கூறுதலில் ‘உப்போஒஒஒ உப்பு’ போன்றவை உலக வழக்கில் அளபிறந்து ஒலிக்கும் அளபெடை. உரைநடையில் ஓசை இன்பத்தின் பொருட்டும் உலக வழக்கில் விலை கூறுகல், புலம்பல் முதலியவற்றின் பொருட்டும் அளபிறந்து உயிரளபெடை வருதலுண்டு. தொல்காப்பியர் உயிரளபெடைக்கு இரண்டு நூற்பாக்கள் கூறிய தன் நோக்கம் உய்த்துணர்தற்பாலது. “நீட்டம் வேண்டின்” என்னும் நூற்பா உரைநடையிலும் உலக வழக்கிலும் உயிரளபெடைகளையும், “குன்றிசை மொழிவயின்” என்னும் நூற்பா, உயிரளபெடைக்கு மேலும் விளக்கந் தருதலோடு செய்யுளில் வரும் அளபெடைகளையும் குறிப்பனவாகக் கொள்ளலாம்.
விலை கூறலிலும் புலம்பலிலும் இசையிலும் விளியிலும் அளபெடை மூன்று மாத்திரையினும் மிக்கொலிக்கும். இவ்வுலக வழக்கு அளபெடைகளை இயற்கை அளபெடை என்பர் நச்சினார்க்கினியர். செய்யுளில் வரும் அளபெடையைச் செயற்கை அளபெடை என்பர்.
பாணினியின் இலக்கணம், மூன்று அல்லது நான்கு மாத்திரைகள் கொண்ட எழுத்தைப் ‘புலுதம்’ என்று கூறுகிறது. வீரசோழியம் பாணினீயத்தைப் பின்பற்றி அளபெடையை மூன்று மாத்திரை கொண்ட ஓர் எழுத்தாகக் கொள்கிறது. வீரசோழியத்திற்குப் பின் தோன்றிய நன்னூல், நேமிநாதம், இலக்கண விளக்கம், தொன்னூல் ஆகிய நூல்களும் அளபெடையை மூன்று மாத்திரைகள் கொண்ட ஓரெழுத்தாகவே கூறுகின்றன. ஆனால் நன்னூலும் இலக்கண விளக்கமும் அளபெடைச் சொற்களின் ஈற்றில் நிற்கும் குற்றுயிர்கள் அளபெடைகளின் பகுதியாய் இருந்தும், அவை தனித்து நிற்க வல்லவை எனக் குறிப்பிடுகின்றன.
செய்யுட்களில் இசை குன்றுமாயின் சொல்லின் முதலிலும் இடையிலும் கடையிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் ஏழும் குன்றிய அவ்விசையை நிறைத்தற்குத் தம் மாத்திரையின் மிக்கொலிக்கும். அவ்வாறு அளபெடுத்தமையை அந்தந்த நெடிலுக்கு இனமான குறில் அடுத்து நின்று அறிவுறுத்தும். இவ்வாறு உயிரளபெடையின் இலக்கணத்தை நன்னூல் (91) விளக்குகிறது. “ஆஅ அளிய அலவன்”, “உறாஅர்க் குறுநோயுரைப்பாய்”, “நல்ல படாஅ பறை” என்னும் இச்செய்யுட் பகுதிகள் முறையே மொழி முதல், இடை, இறுதி ஆகிய அளபெடைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
இவற்றில் உள்ள அளபெடைகள் குன்றிய இசையை நிறைத்து நிற்கின்றன. இத்தகைய அள- பெடைகளைச் செய்யுளிசை நிறைக்க வந்த அளபெடைகள் என்பர்.
இவற்றோடு உரையாசிரியர் சங்கர நமச்சிவாயர் இன்னிசை அளபெடை என்றும், சொல்லிசை அளபெடை என்றும் அளபெடைகளை வகைப்படுத்திக் கூறியுள்ளார். “கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே, எடுப்பதூஉ மெல்லா மழை” என்னும் குறளில் ‘கெடுப்பதும்’ ‘எடுப்பதும்’ என நிற்பினும் வெண்பாவிற்குரிய செப்பலோசை குன்றாதாயினும், இன்னிசை நிறைத்தற் பொருட்டே குறில் நெடிலாகி அளபெடுத்துள்ளமையால் இதனை இன்னிசை அளபெடை என்பர்.
:“உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் :வரனசைஇ யின்னு முளேன்” (குறள். 1263)
என்னும் குறளில், ‘உரனசை’ ‘வரனசை’ என நிற்பினும் செய்யுளோசை குன்றாதாயினும், ‘விருப்பம்’ எனப் பொருள்படும் ‘நசை’ என்னும் பெயர்ச்சொல், ‘விரும்பி’ எனப் பொருள்படும் வினையெச்சச் சொல்லாதற்கு ‘நசைஇ’ என அளபெடுத்தமையால் இதனைச் சொல்லிசை அளபெடை என்பர்.
சிவஞானமுனிவரும் அளபெடையை ஓரெழுத்தாகவே கருதுகிறார். இவர் ‘நீரும்நீரும்’ சேர்ந்தாற் போல நெட்டெழுத்தோடு குற்றெழுத்து ஒத்து நின்று நீண்டிசைப்பதே அளபெடை என்கிறார்.
நெட்டெழுத்து ஏழும் அளபெடுத்தலால் எழுத்து நோக்க அளபெடை ஏழாகும். அவை மொழி முதல், இடை, கடை ஆகிய இடங்களில் நின்று அளபெடுக்குங்கால், ஔகாரம் மொழியிடை கடைகளில் வரப் பெறாமையால் அவ்விரண்டிடங்களும் நீங்க அமையும் அளபெடை பத்தொன்பதோடு, இன்னிசை நிறைக்கவும் சொல்லிசை நிறைக்கவும் அளபெடுக்கும் அளபெடை இரண்டும் கூடி உயிரளபெடை எழுமூன்று, அதாவது இருபத்தொன்று எனக் கணக்கிடுவர் சிவஞான முனிவர்.
வீரசோழியம், நன்னூல், நேமிநாதம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் ஆகியவை உயிரும் மெய்யுமாகிய முப்பது மெய்யெழுத்துகள் அல்லாதவைகளைச் சார்பெழுத்துகளாகக் கொள்கின்றன. இவ்வகையில் அளபெடையை, அந்நூல்கள் சார்பெழுத்துகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன.
உயிரளபெடை பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ள இலக்கணமே தமிழ் மொழியின் இயல்புக்குப் பொருத்தமுடையதாகும். வீரசோழியம் நன்னூல் போன்ற பிற்கால இலக்கண நூல்கள் வடமொழியில் உள்ள ‘புலுதம்’ என்ற மூன்று மாத்திரைகள் கொண்ட எழுத்தினையொட்டி உயிரளபெடையினை மூன்று மாத்திரையுடைய ஓரெழுத்தாகக் கொண்டன எனலாம்.
ஒற்றளபெடை
தொல்காப்பியர் செய்யுளியலில் ‘அளபெடை யசைநிலை யாகலு முரித்தே’ (செய். 16) என்னும் நூற்பாவால் அளபெடை அசையாக நிற்கவும் பெறும் என்று கூறி, அடுத்து, ஒற்று அளபெடுத்து வரினும் அசையாகவும் வரும் என்பதனை “ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப” (செய். 17) என்னும் நூற்பாவால் உணர்த்துகிறார். செய்யுளில் ஓசையை நிறைப்பதற்கு ஒரு மெய்யெழுத்தோடு இன்னொரு அதே மெய்யெழுத்து சேர்த்து அளபெடுக்கும் என்பது, இந்நூற்பாவின் பொருள். எந்தெந்த மெய்யெழுத்துகள் எவ்வெவ்விடங்களில் அளபெடுக்கும் என்பதை அவர் விளக்கவில்லை.
செய்யுளில் இசை குன்றிய இடங்களில் இரு குறில்களையடுத்தும் தனிக்குறிலையடுத்தும் மொழி இடையிலும் ஈற்றிலும் நின்ற ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் என்ற இப்பத்து ஒற்றெழுத்துகளும் ஆய்தமும் குன்றிய அவ்விசையை நிறைத்தற்குத் தமக்குரிய அரை மாத்திரையிலும் மிக்கு ஒலிக்கும். அவ்வாறு அளபெடுத்தன என்பதை அறிதற்கு அவற்றின் பின் அவ்வெழுத்துகளே வரிவடிவில் வேறு அறிகுறியாய் வரும்.
ஆய்தம் ஒற்றெழுத்தன்றேனும், ஒற்றெழுத்துப் போல அளபெடுத்தலின் இங்குக் கூறப்பட்டது எனலாம். பத்து ஒற்றெழுத்துகளும் ஆய்தமும் ஆகிய பதினோர் எழுத்துகளும் குறிலிணைக் கீழும், தனிக் குறிற் கீழும், மொழியிடையிலும் கடையிலும் அளபெடுத்தலால் ஒற்றளபெடை நாற்பத்து நான்கு ஆதல் வேண்டும். ஆனால் ஆய்தம் குறிலிணைக் கீழோ குறிற் கீழோ மொழி ஈற்றில் வருவதில்லை. இவ்விரண்டும் நீங்க ஒற்றளபெடை நாற்பத்திரண்டு ஆகும் என நன்னூல் உரையாசிரியர் கணக்கிடுவர்.
அளபெடை தொடையாகவும் பயின்று வருகிறது. யாப்பிற்குரிய தொடை வகைகளுள் அளபெடைத் தொடையும் ஒன்றாகும். “அளபெடை தலைப்பெய வைந்து மாகும்” (தொல்.செய்.85) என்பது தொல்காப்பியம். இவ்வளபெடைத் தொடை அடிதோறும் வரும்.தா.ஏ.ஞா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 936)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f5wh5dzr/
தமிழ்“அளபெடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f5wh5dzr/APA
Oliyon Research. (2026). அளபெடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f5wh5dzr/MLA
"அளபெடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f5wh5dzr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment