ஐம்பெரும் வேளிர்களுள் ஒருவன்; சங்க காலத்தில் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சிற்றரசன். துவாரசமுத்திரம் மைசூர் நாட்டில் அளபீடு (Halabid) என இக்காலத்தில் வழங்கும் இடமாகும். இவனுக்குப் புலிகடிமால் என்னும் வேறுபெயரும் உண்டு. இவன் முன்னோர் வடபகுதி முனிவன் ஒருவனின் வேள்வித் தீயில் தோன்றியோர் என்பதும், இவன் துவாரசமுத்திரத்தை ஆண்ட வேளிர் அரசருள் 49–ஆம் அரசன் என்பதும் கபிலர் பாடியுள்ள பாடலில் (புறம் 201) வரும். ‘வடபான் முனிவன் றடவினுட் டோன்றி, உவரா வீகைத் துவரை யாண்டு, நாற்பத்தொன்பது வழிமுறை வந்த’ என்னும் பகுதியால் தெரியவருகின்றன. பாரி இறந்தபின் அவர்தம் இரண்டுமகளையும் அழைத்து வந்து ஒப்புக்கொள்ளுமாறு கபிலர் இவனிடம் வேண்டினார். ஆனால், இவன் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. கபிலர் இவனைத் தாம் பாடிய இரண்டு பாடல்களிலும் (புறம் 201, 202) புலி கடிமால் என்று குறிப்பிட்டுள்ளார். துவரையை ஆண்டு வந்த ஒய்சளர் (Hoysalar) என்னும் அரச மரபினைப் புலிகடிமால் என்னும் பெயர் குறித்தது. அம்மரபு இப்பெயர் பெற்றமைக்குப் பின்வரும் வரலாறு கூறப்படுகிறது. தபங்கர் முனிவர் காட்டில் தவம் செய்யும்போது புவியொன்று அவர்மேல் பாய்வதற்கு வந்தது. அதனைக் கண்ட அம்முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளன் என்னும் யாதவ அரசனைப் பார்த்து ‘ஒய்சள’ (புலியினை அடி) என்று கூறினார். அவன் அப்புலியைத் தன் அம்பால் எய்து கடிந்தமையால் ‘ஒய்சளன்’ எனப்பட்டான். அப்பெயரே தமிழில் புலிகடிமால் என்று கூறப்பட்டுள்ளது. அதனால், இவன் மரபிற்கும் இப்பெயர் வந்தது. இம்மரபினர் கி.பி. 14–ஆம் நூற்றாண்டு வரை சிறப்புற்றிருந்தனர். இவர்கள் கட்டிய கோயில் சிற்பக்கலை உயர்விற்குச் சிறப்புமிக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. துவாரசமுத்திரத்தில் பதினெண்மரும் பதினெண் குடி வேளிரும் இருந்தனர் என்றும் அவர்களை அகத்திய முனிவர் அழைத்துச் சென்று பல இடங்களிலும் நிலைப்பித்தார் என்றும் நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பியவுரையில் குறிப்பிட்டுள்ளார்.