சூலகம்
cūlakam
பூக்கும் தாவரங்களின் இனப் பெருக்க உறுப்பான பூவிலுள்ள பெண் உறுப்பே சூலகம் (gynoecium) ஆகும்.
பூக்கும் தாவரங்களின் இனப் பெருக்க உறுப்பான பூவிலுள்ள பெண் உறுப்பே சூலகம் (gynoecium) ஆகும். இது மலரின் நான்காம் உறுப்பாகும். மலர் என்பது தடைப் பட்ட வளர்ச்சியைக் கொண்ட இனப் பெருக்கமாகிய செயலில் ஈடுபடும் கிளையாகும். மலரின் பகுதிகள் பூத்தளம் மீது அமைந்திருக்கும். இவற்றில், சூலகம் மலரின் நுனி உறுப்பாக அமைகிறது.
பெரும்பாலும், சூலக அலகுகள் சேர்ந்தே காணப் படினும், மொனிமியேசி (Monimiaceae) குடும்பத்தில் பூத்தளம் கிண்ணம் போல் அமைந்து, கிண்ணத்தின் உட்புறம் முழுதும் சூலக அலகுகள் (carpels) பரவிக் காணப்படும். குடுவை வடிவத்திலுள்ள சூலகத்திற்குப் பொதுவாக மூன்று பகுதிகளுண்டு. பருத்த அடிப் பகுதியைச் சூல் பை (ovary) என்றும், உருளையான நடுப் பகுதியைச் சூலகத் தண்டு (style) என்றும், சூலகத் தண்டின் நுனிப் பகுதியைச் சூலக முடி (stigma) என்றும் குறிப்பிடுவர். சூலக முடிப் பகுதி சற்று அகன்று பசையோடு இருக்கும்.
மலர்களைஇனங் கண்டு கொள்வதற்கும், அவற்றை விவரிப்பதற்கும், சூலகம், சூலகத்தின் பகுதிகளைச் சார்ந்த பண்புகள் பெரிதும் பயன் படுகின்றன. குலகத்தைத் தவிர, பிற உறுப்புகள் மலரில் எவ்வாறு இணைந்துள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டு, மலர்களை 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை ஹைபோகைனஸ் (hypogynous), பெரிகைனஸ் (perigynous). எபிகைனஸ் (epigynous) ஆகும். ஹைபோகைனஸ் நிலையில், மலரின் பிற உறுப்புகளான அல்லி, புல்லி, மகரந்தத் தாள் ஆகியன சூலகத்திற்குக் கீழே உள்ளமையால், இம்மலரின் சூலகத்தை மேல் மட்டச் சூல் பை (superior ovary) என்பர். எ-டு. எலுமிச்சை, பூவரசு, செம்பருத்தி முதலியன.
எபிகைனஸ் மலரில் சூல் பைக்கு மேலே மலரின் பிற உறுப்புகள் அமைந்துள்ளமையால், இதைக் கீழ் மட்டச் சூல் பை (inferior ovary) என்பர். எ.டு. பூசணி, கொய்யா, மாதுளை முதலியன. பெரிகைனஸ் மலரில் பூத்தளம் கிண்ணம் போல் காணப் படும். கிண்ணத்தின் விளிம்பில் அல்லி, புல்லி, மகரந்தத் தாள்கள் அமைந்திருக்கும். கிண்ணத்தின் மையப்
பகுதியில் சூலகம் அமைந்திருக்கும். எ-டு. ரோஜா, அவரை முதலியன.
பெரும்பாலும், சூலகம் காம்பற்றுக் காணப்படும். ஆதண்டை, கடலை போன்ற மலர்களின் சூலகத்திற்குக் கீழே காம்பு இருக்கும். இதைச் சூலகக் காம்பு (gynophore) என்பர். சூலகத்தின் அலகுகள் தனித்தோ, இணைந்தோ காணப்படலாம். தனித்த நிலையை, இணையாச் சூல் (apocarpous) என்றும், சூலிலைகள் ஒன்றோடொன்று சேர்ந்து ஒரு சூலகமாக இருந்தால், அதை இணைச் சூல் (syncarpous) என்றும் கூறுவர்.
சூலிலைகள் ஒன்றோடொன்று இணைவதென்பது வெவ்வேறு மட்டத்தில் நடைபெறலாம். லேமியேசி (Lamiaceae) என்னும் துளசிக் குடும்பத்தில் சூல் பைகளின் அடிப் பகுதி மட்டும் இணைந்திருக்கும்.
புளியாரையில் (oxalis) சூல் பைகள் மட்டுமே இணைந்திருக்கும். சூலகத் தண்டுகள் தனித்திருக்கும்; செம்பருத்தியில் சூல் பை, சூலகத் தண்டுகள் இணைந்தும், சூலக முடிகள் தனித்தும் காணப்படும். எருக்கு மலரில் சூல் பைகளும் சூலகத் தண்டுகளும் தனித்தும், சூலக முடி மட்டும் இணைந்தும் காணப்படும். அரளிக் குடும்ப மலர்களில் சூல் பைகள் மட்டுமே தனித்தும், சூலகத் தண்டு, சூலக முடிகள் இணைந்த நிலையிலும், இருக்கும். பல சூலிலைகள் இணைந்த சூலகத்தைக் கூட்டுச் சூல் பை (compound ovary) என்று கூறலாம். கூட்டுச் சூல் பை இரு நிலைகளில் அமைந்திருக்கலாம். சூலிலைகள் இணைவதால், சூல் பையில் தடுப்புச் சுவர்கள் (septa) தோன்றிச் சூலிலைகளின் எண்ணிக்கையை ஒத்த அறைகள் (locule) தோன்றும். இதைச் சீனோகார்பஸ் (coenocarpus) என்பர். எ-டு. பருத்தி, வெண்டை, கத்தரி.
சில மலர்களின் சூல் பை பல சூலிலைகளான போதும், தடுப்புச் சுவரின்றி ஒரே அறையைக் கொண்டிருக்கும். இதைப் பேராகார்பஸ்(paracarpous) என்பர். எ-டு. கடுகு, வெள்ளரி, விளா.
பூக்கும் தாவரங்களில் ஒரு சூலிலையைக் கொண்ட நிலையைப் படி மலர்ச்சியால் உயர்ந்தது என்றும், பல சூலிலைகள் கொண்ட நிலை பின் தங்கியது என்றும் கருதுவதுண்டு. படி மலர்ச்சியில், பின் தங்கிய குடும்பங்களில் சூலகம் இணையாச் சூலிலைகளைக் கொண்டிருக்கும். இங்கு, சூலிலைகள் இணையாமல் தனித்தே காணப்படும்.
பொதுவாக, இக்குடும்பங்களில் தனித்துள்ள சூலிலைகள் மேடிட்ட பூத்தளத்தில் சுழல் முறையில் அமைந்திருப்பதைக் காணலாம். எ-டு. அன்னோனேசி, ரெனன்குலேசி. மெக்னோலியேசி. பல சூலிலைகள் கொண்ட உயர் குடும்பங்களில் சூலிலைகள் இணைந்த நிலையில் காணப்படும். இதையே, இணைச் சூல் பை (syncarpous) என்பர். பொதுவாக, இவ்வகை மலர்களில், சூலிலைகள் ஒரே சுற்றிலிருக்கும். ஆனால், அரிதாக மாதுளை போன்ற இனங்களில் அவை இரு சுற்றிலும் இருப்பதைக் காணலாம்.
ஒரே மலரில் காணப்படும் சூலிலைகளின் எண்ணிக்கை பொதுவாக, அம்மலரிலுள்ள அல்லி, புல்லிகளின் அடிப்படையிலிருக்கும். அடுக்கு வட்டமான (cyclic) மலர்களில், சூலிலைகளின் எண்ணிக்கை குறைவாகவும், குறைந்த வேறுபாட்டுடனும் அமையும். ஆனால், திருகு (spiral) மலர்களில், சூலிலைகள் மிகுதியாகவும், வேறுபாட்டுடனும் காணப்படுகின்றன. சூலிலைகளின் எண்ணிக்கையைப் பொறுத்துச் சூலகத்தைப் பல வகையாகப் பிரிக்கலாம்.
ஒரு சூலிலைச் (monocarpallary) சூல்பை எ-டு. அவரை, ஆவாரை முதலியன; இரு சூலிலை (bicarpallary) சூல் பை எ-டு. கத்தரி, முள்ளங்கி முதலியன; மூன்று சூலிலைச் (tricarpallary) சூல் பை எ-டு. வெங்காயம், பருத்தி, வெள்ளரி; ஐந்து சூலிலை சூல் பை (pentacarpallary) எ-டு. வெண்டை, விளா.
சூல் பையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் காணலாம். இவ்வறைகளின் எண்ணிக்கையும், சூலக விளக்கத்திற்குப் பயன்படுவதுண்டு. ஒரு சூலறைச் (unilocular) சூல் பை - எ-டு. அவரை, முள்ளங்கி, விளா முதலியன. இரு சூலறைச் சூல் பை எ-டு. கத்தரி, தக்காளி, முதலியன. மூன்று சூலறைச் சூல் பை எ-டு. வெங்காயம், பருத்தி முதலியன. ஐந்து சூலறைச் சூல் பை எ-டு. வெண்டை.
முள்ளங்கி, வெள்ளரி, விளா முதலியவற்றில் சூலிலைகளின் எண்ணிக்கை ஒன்றுக்கு மேற்பட்ட போதும், அவற்றில் சூலறைகள் ஒன்றே. இதற்குக் காரணம் அவை பாராகார்பஸ் அமைப்பைக் கொண்டவை.
சூலகத்தின் அலகு சூலிலைகள் என்று கருதிய போதும், சூலிலை என்பது ஒரு கற்பித (hypothetical) உறுப்பாகவே கொள்ளப்படுகிறது. சூலிலை என்பதை ஓர் இலை போன்ற உறுப்பாகவும், அதன் விளிம்புகளில் சூல்கள் அமைந்திருப்பதாகவும், தாவரப் புறவியலார் கருதுவர். இந்த இலை போன்ற உறுப்பு நடு நரம்பு, பக்க நரம்புகளுடன் காணப்படும். விதை மூடாத் தாவரங்களில், சூல்களைக் கொண்ட இவ்விலை போன்ற பகுதி மூடாத நிலையிலிருக்கும். பூக்கும் தாவரங்களில் பொதுவாக, இந்தச் சூலிலைகள் மூடி, சூல்கள் உள்ளடங்கிய நிலையிலிருக்கும். அரிதாகச் சில இனங்களில், சூலிலைகள் முழுதும் மூடாத நிலையிலிருப்பதுண்டு. எ.டு. ட்ரமிஸ் (Drimys). சூலிலை என்ற கற்பித உறுப்பு, உட்புறம் மடங்கிய இலையின் விளிம்புகள் ஒன்றோடொன்று சேர்வதால், தோன்றக் கூடும் என்று கதே என்ற பழம் பெரும் தாவரவியலர் கூறியுள்ளார். சூலக இலையின் உருமாற்றமே சூலகம் என்ற அந்நாளைய கொள்கையைத் தற்காலத் தாவரவியலர் ஒத்துக் கொள்வதில்லை. மலர் என்பது வளர்ச்சி தடைப்பட்ட ஓர் இனப் பெருக்கக் கிளை என்று தாவரவியலர் கூறுகின்றனர். அதனால், மலரின் உறுப்புகளான புல்லி, அல்லி, மகரந்தத் தாள்கள், சூலிலைகள் ஆகியன இலையின் உரு மாற்றங்களேயாகும். எவ்வாறு இலை சூலிலையாக உருமாறியது என்பதைத் தெளிவாக்கப் பல கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பி. ஜி. எல். ஸ்வாமி என்பாரின் கான்டூப்லிகேட் கார்பெல் (conduplicate carbel) கொள்கையும், பூரி என்பாரின் கொள்கையும் குறிப்பிடத் தக்கவை.
சூலக இலைக் கொள்கையின் கூற்றுப்படி, பசுமையான இலையும், சூலிலையும் ஒத்த அமைப்புக் கொண்டவை; இரண்டுமே பசுமையானவை; நரம்புகள் இலைத் துளைகள் கொண்டவை; மேலும், நீட்சிகள், சுரப்பிகள் இரண்டிலுமே ஒன்று போல் காணப் படும். சூலிலைக்கு 3 நரம்புகளுண்டு; இவை மூன்றுமே சூலிலையின் அடிப் பகுதியிலிருந்து தோன்றுகின்றன. தொன்மையான சூலகங்களில் 5 நரம்புகள் கொண்ட சூலிலைகளைக் காணலாம். சூலிலையின் நடு நரம்பு, பூத்தளத்தின் கீழ் மட்டத்திலிருந்து புறப்பட்டுச் சூலிலையின் வெளிப் பக்கத்தில் வரியிட்டது போல் அமைந்திருக்கும். இதை மேல் வடு (dorsal suture) என்பர். ஏனைய இரண்டு நரம்புகள், இலையின் ஓரத்தை அணுகிப் போவதுண்டு. இவற்றிலிருந்து பிரிந்து செல்லும் நரம்புகள் சூல்களை அடையும்.
சூல்கள் கொண்ட சூலக இலையின் ஓரங்களை வளமான பகுதி (fertile region) என்று கூறுவர். இந்த ஓரங்கள் இணைவதாலேயே, கீழ் வடு (ventral suture) தோன்றியிருக்கக் கூடும் என்பது பலருடைய கருத்து. தொன்மையான தாவரங்களில், கீழ் வடு என்பது சூலிலையின் நுனியிலிருந்து அடி வரை நீள் வாக்கில் அமைந்திருப்பதைக் காணலாம். நாளடைவில் சிறந்த முறையில், மகரந்தச் சேர்க்கை நடக்க வேண்டி, சூலக முடி என்ற வளமான பகுதி, சூலிலையின் நுனியில் மட்டுமே அமைந்து செயற்படுவதை யும் காணலாம். இந்த வளர் பகுதி சிறிது சிறிதாகக் குறைந்து, இன்றைய நிலையை அடைந்துள்ளதையும் காணலாம்.
ஒரு சூலகத்தில் ஒன்றோ, அதற்கு மேற்பட்டோ சூல்கள் காணப்படலாம். அவை சூல் பையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்திருக்கும். சூல்கள் சூல் பையோடு இணைந்துள்ள வளமான பகுதியைச் சூல் ஒட்டு (placenta) என்று கூறுவர். சூலகத்தில் சூல்கள் அமைந்துள்ள முறைக்குச் சூலமைவு (placentation) என்று பெயர். சூல் இலைகள் சூலறைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்துச் சூல் அமைவு மாறுதலடையலாம்.
விளிம்பொட்டு முறை (marginal placentation). பொதுவாக ஒரு சூலிலை கொண்ட மலர்களில், சூல்கள் கீழ் வடுவை அடுத்துள்ள சூலமைவில் வரிசையாக அமைந்திருப்பதைக் காணலாம். எ-டு. அவரைக் குடும்பம்.
அச்சொட்டு முறை (axial placentation). சூலகம் பல சூலிலைகள் கொண்ட நிலையில், சூல்கள் சூல் பையின் நடுவே அமைந்திருக்கும். எ-டு. கத்திரி, தக்காளி, வெங்காயம்.
புற ஒட்டு முறை (parietal placentation). இவ்வகையைப் பேராகார்பஸ் சூல் பையில் காணலாம். பல சூலிலைகளாலான ஒரு சூலறை மட்டும் கொண்ட சூல் பைகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட சூலமைவுத் தொகுப்புகள் சூல் பையின் புறத்தே அமைந்திருக்கும். எ-டு. கடுகு, வெள்ளரி, விளா,
கீழ் ஒட்டு முறை (basal). ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூல்கள், சூல் பையின் அடியிலுள்ள சூலமைவில் அமைந்திருக்கும். எ-டு. சூரியகாந்தி, நெல்.
மேல் ஒட்டு முறை (pendulous). ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூல்கள், சூல் பையின் மேற் பகுதியிலுள்ள சூலமைவிலிருந்து தொங்கு நிலையிலுள்ளதைக் காணலாம். எ-டு. கொத்துமல்லி, ஆமணக்கு,
தனித்த மைய ஒட்டு முறை (free central). சூல் பையினுள், சூலமைவு உருண்டையாகக் காணப் படும். அது சூல் பையின் மேற் பகுதி அல்லது கீழ்ப் பகுதியுடன் மட்டுமே இணைந்திருக்கும். இந்த சூலமைவு மேற்பரப்பில் சூல்கள் காணப்படும். எ-டு. காரனேஷன் (carnation).
மேல் போக்கு முறை (superficial), அல்லி மலரின் சூல் பை பல அறைகள் கொண்டது. இதில் சூல்கள் தடுப்புச் சுவர்களிலும், வெளிச் சுவரை அடுத்தும் இருப்பதைக் காணலாம். —தி. ஸ்ரீகணேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 673)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f55ddem5/
தமிழ்“சூலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f55ddem5/APA
Oliyon Research. (2026). சூலகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f55ddem5/MLA
"சூலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f55ddem5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment