உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு
uṇmai iruppu viḷaivuk kōṭpāṭu
பணவீக்கத்தைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளினால் வட்டிவீதம் குறைந்து, மக்களின் வாங்கும் திறனும் மொத்தச் செலவும் உயருகின்றன என்பதை விளக்கும் பொருளியற் பகுப்பாய்வாகும்.
பணவீக்கத்தைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளினால் வட்டிவீதம் குறைந்து, மக்களின் வாங்கும் திறனும் மொத்தச் செலவும் உயருகின்றன என்பதை விளக்கும் பொருளியற் பகுப்பாய்வாகும். உண்மைப் பண இருப்பில் மாற்றங்கள் ஏற்படும் பொழுது, அம்மாற்றங்கள் பொருள்கள், பணிகள் ஆகியவற்றின் தேவையில் நேரிடை விளைவுகளை உண்டாக்குதலை உண்மை இருப்பு விளைவு (Real Balance Effect) என்கின்றனர். இக்கருத்தை உருவாக்கிய பொருளியல் அறிஞர் பெயரில் இது ‘பிகு விளைவு’ (Pigou Effect) என்னும் கூறப்படுகிறது. ‘சொத்து விளைவு’ (Wealth Effect) என இதனைக் குறிப்பிடுவாரும் உளர்.
மொத்தப் பண அளிப்பிலோ (Supply of Money) பொது விலை நிலையிலோ (Price Level) மாற்றங்கள் ஏற்படும் பொழுது கையிலிருக்கும் உண்மைப் பணத்தில் (Real Cash Balance) மாற்றங்கள் நிகழ்கின்றன. கையிருப்புப் பணம் மிகையானால் மொத்தத் தேவை (Aggregate Demand) அதிகமாகும். கையிருப்புப் பணம் குறைந்தால் மொத்தத் தேவை கீழிறங்கும். மக்கள் தங்களிடமிருக்கும் பணத்தையும் பொருள்கள் பணிகள் ஆகியவற்றிற்காகத் தேவைப்படும் செலவுகளையும் ஒப்புவீதத் தொடர்பு முறையில் (Proportional Relationship) பங்கிட்டுச் சொத்தினைப் பணமாகவோ பொருளாகவோ இருப்பாக வைத்துக்கொள்ள விரும்புவர். பண அளிப்பில் ஏற்படும் மாற்றங்களினாலோ விலையில் ஏற்படும் மாற்றங்களினாலோ பொருளின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, சொத்தை எவ்வகையில் (பணமாகவா பொருளாகவா) இருப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதனைச் சுட்டிக்காட்டும். எனவே உண்மை இருப்பு விளைவு என்பது ‘சொத்து விளைவுக்’ கோட்பாடேயாகும்.
பொருளாதாரத்தில் விலைகள் குறையும்போது மக்கள் கையிலிருக்கும் பணத்தின் உண்மை மதிப்பு (Real Value) உயர்ந்து, அது பெறக்கூடிய பொருள்களும் பணிகளும் மிகையாகின்றன. பணத்தின் வாங்கும் திறன் (Purchasing Power} உயருகிறது. எனவே பணவீக்கம் குறையும்; பணவாட்ட நிலையில் (Recession) வட்டிவீதம் குறைந்து மூலதனச் செழிப்பு ஏற்படும். மூலதன அங்காடி நடவடிக்கைகள் பெருகிக் கடனுறுதிச் சீட்டுகள், ஆவணங்கள் பங்குகள் முதலியன விரைவில் மாற்றப்படும். பணவாட்ட நிலையில் கையிருப்புச் (நீர்மைச்) சொத்தின் (Liquid Assets) உண்மை மதிப்பைப் பாதுகாக்க மக்கள் தங்கள் வருவாயில் சிறு பகுதியைச் சேமித்தல் போதுமானதாகும். எனவே, தாங்கள் செல்வர்கள் என்ற நினைப்பில் மிகுதியாகத் தங்களிடம் எஞ்சியிருக்கும் உபரிப்பணத்தைப் பொருள்கள், பணிகள் ஆகியவற்றிற்காகச் செலவு செய்வர். அதனால், அவற்றிற்கான தேவை மிகையாகி அவற்றை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் வேலைவாய்ப்புகளும் பெருகுகின்றன.
உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு, உண்மை உலகப் பொருளாதாரச் சிக்கல்களில் எத்தகைய அளவில் பயனுள்ளதாயிருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. உண்மை இருப்பு விளைவையும் விலைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும் சீராக அளவிட இயலாதிருப்பதால், நடைமுறை உலகில் எதிர்பாராத நடவடிக்கைகளும் விளைவுகளும் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பணவீக்கக் காலத்தில் விலைகள் உயரும்போது, மேலும் விலைகள் உயரும் என எதிர்பார்த்து மக்கள் தங்கள் செலவினை மிகுதிப்படுத்துகின்றனர். ஆனால், இக்கோட்பாட்டின்படி விலை உயரும்போது மக்கள் செலவினைக் குறைத்து இருப்பையும் குறைத்து வைத்திருப்பர் எனினும், 1960–ஆம் ஆண்டுவாக்கில் இக்கோட்பாடு நடைமுறையில் செயற்பட்டது எனலாம். அதற்குப் பிந்திய 1970–ஆம் ஆண்டுவாக்கில் பொருளாதாரச் சிக்கல்களில் பணவீக்கம் மேலும் பெருகியதே தவிரப் பணவாட்ட நிலைக்குத் திரும்பவில்லை. எனவே, அதன் பின்னர் வந்த பேரினப் பொருளியல் (Macro Economics) ஆய்வுகளில் எதிர்பார்க்கப்படும் விலை உயர்வுக்குத் தனிச் சிறப்பிடம் அளித்தனர். எனவே, 1980–ஆம் ஆண்டு வாக்கில் பின்பற்றப்படும் கொள்கையினால், பண இருப்புக்கும் செலவுகளுக்குமிடையேயிருந்த ஒப்பு வீதத் தொடர்பு நிலை கலைக்கப்பட்டுக் கையிருப்புப் பணம் (Liquid cash) தனி ஆட்கள் கையில் மிகையாகிறது. இப்பணத்தின் ஒரு பகுதியைப் பணிகளுக்கும் பொருள்களுக்கும் செலவு செய்வர். அதனால் நுகர்வும், பொருள்கள், பணிகள் ஆகியவற்றிற்கான தேவையும் மிகுதியாகும். எஞ்சிய பணத்தின் ஒரு பகுதியைப் பண அங்காடியில் கடனுக்கு அளிக்க விரும்புவர். அவ்வாறு கடனுக்கு அளிக்கப்படும் பணம் மிகையாவதால் மொத்தப் பண அளிப்பு மிகையாகிப் பண அங்காடியில் வட்டிவீதம் குறையும். வட்டிவீதம் குறையும் போது முதலீட்டு நடவடிக்கைகளுக்கான (Investment Activities) நாட்டங்கள் மிகுந்து முதலீடு உயருகிறது. இவ்வாறு உண்மை இருப்பு விளைவு நுகர்வையும் முதலீட்டையும் உயர்த்துகிறது. முதலீடு உயரும் அளவுக்கு விளைவுகள் ஏற்படும்பொழுது, பொருளாதாரத்தில் முழுமையான மாற்றங்கள் ஏற்பட்டு, வேலைநிறைவு (Full Employment) நிலைக்கான சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எ.சி.பிகு 1943–இல் வெளியிட்ட உண்மை இருப்பு நிறைவுக் கோட்பாடு பிற்காலத்தில் சே.எம். கீன்சு (J.M. Keynes), தான் பேட்டின்கின் (Don Patinkin) போன்றோரால் விரிவுபடுத்தப்பட்டது. பொருள்களுக்கும் பணிகளுக்குமுள்ள தேவை மாற்றம் அன்றாட விலை நிலையில் சிறிது ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கினாலும், பணவியல் துறையினால் பொது விலை நிலை (General Price level) வரையறுக்கப்படுகிறது. தொன்மைப் பொருளியல் கருத்தை உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு மறுக்கிறது. தான் பேட்டின்கின் இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். பொருள்களுக்கும் பணிகளுக்கும் தேவை குறையும் போது அல்லது தேவை உயரும் போது அதற்கேற்ற வகையில் பண இருப்பிலும் திட்டவட்டமான மாற்றங்கள் ஏற்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் அதன் தாக்கம் வெளிப்படும். பொருளாதாரப் பணவியல் சிக்கல்களுக்கு நிலையான நடைமுறைக்குகந்த கோட்பாடுகளை வகுக்க அரசுகளும் பொருளியல் வல்லுநர்களும் முயன்று வருகிறார்கள்.
துணை நூல்கள்
Patinkin, Don, Money Interest and Prices, Harper & Row, New York, 1965.
Friedman Milton, Money and Economy, Harcourt Brace Jovanovich, New York, 1978.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 842)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f54mzrh3/
தமிழ்“உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f54mzrh3/APA
Oliyon Research. (2026). உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f54mzrh3/MLA
"உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f54mzrh3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment